Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம்
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | முன்னோடி | Events Calendar | பொது | நலம்வாழ | எனக்கு பிடித்தது | புதினம் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
புதினம்
ஆத்ம சாந்தி (அத்தியாயம் 24)
- சந்திரமௌலி|மே 2016|
Share:
Click Here Enlarge"ஆமாம் நான்தான் இவங்களை இங்க கட்டாயப்படுத்தி கூட்டிவந்தேன். இவங்களை நான் போயி பார்த்து, இவங்களோட கதையைக் கேக்காம இருந்திருந்தா மறுபடி இங்க நான் வந்தே இருக்கமாட்டேன். என்னை நீங்க பாத்தே இருக்கமுடியாது. தன்னோட கதையை மட்டும் அவங்க எனக்கு சொல்லலை, நான் இனிமே என்ன செய்யணும், எது என்னோட கடமைன்னு எனக்கு தெளிவா புரியவெச்சிட்டாங்க. அம்மா, அப்பா உங்க வளர்ச்சிக்கு அவங்க தடையா இருந்தாங்க, உங்களுக்கு கெடைக்க வேண்டிய வசதிய தடுத்தாங்கனு இவங்கமேல கோபமா நீங்க இருக்கிறது நியாயமில்லை. நீங்க உதறித்தள்ளின இவங்க ஊருக்கே வழிகாட்டி, ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்துட்டிருக்காங்க. இவங்கள உதாசீனப்படுத்தின நீங்க என்ன சாதிச்சீங்க?"

"பரத் பெத்தவங்களை இப்படி, அதுவும் மத்தவங்க முன்னாடி, மரியாதையில்லாம பேசாதே" குறுக்கே பாய்ந்தாள் வள்ளியம்மாள்.

"பேசட்டும் ஆத்தா, பேசட்டும். பரத் இப்படி பேசுறதுல எனக்கு வருத்தமில்லை. பெருமையாத்தான் இருக்கு. நானும் கஸ்தூரியும் இப்பகூட இதைச் சரி பண்ணிக்கலைனா எங்க வாழ்க்கைக்கே அர்த்தமில்லை. பரத் சொல்ற எல்லாம் சரிதான்" என்று சொல்லி மோகன், தன் சுபாவத்துக்கேற்றாற்போல கஸ்தூரியின் முகத்தைப் பார்த்தார். அவள் பொங்கி வெடிப்பாள் என்று எதிர்பார்த்தவருக்கு, மாறாக அவள் எந்தச் சலனமும் காட்டாமல் அமைதியாக இருந்தது, அவளும் பரத் சொன்னதை யோசிக்கிறாள் என்பதைக் காட்டியது.

பரத் கஸ்தூரியின் அருகேபோய் அவள் கைகளைப் பிடித்துக்கொண்டு, "அம்மா எனக்காகவாவது உங்களுக்கு என்ன கோபம் இருந்தாலும் அதை மறந்துடுங்க. வசதியா வாழறதோ, நம்ம குடும்பத்தைமட்டும் பாத்துக்கறதோ மட்டும் வாழ்க்கை இல்லை. என் வாழ்க்கைல நான் எனக்குப் பிடிச்ச மோட்டார் எஞ்சினீயரிங்குல பெரிய சாதனை செய்யணும், இந்த உலகத்துக்கே அது பெரிய பிரயோஜனமாகணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, அதுக்கு ஏத்த படிப்பு படிக்கமுடியலை. நாம ஆழமா மனசுல விரும்பறதை நாம எப்படியும் அடைஞ்சுருவோம்கிறது உண்மை. அப்படி ஒரு வாய்ப்பு தற்செயலா எனக்கு கேந்திரா மோட்டார்ஸ்ல கெடச்சது. உன்ன மாதிரியே, சாதனை பண்ண கெடச்ச நல்ல வாய்ப்பை, அல்ப காரணங்களுக்காக ஒதறிட்டு ஊரைவிட்டே ஓடினேன். பாட்டியை பாத்து, அவங்க கஷ்டங்களை எல்லாம் தாண்டி எப்படி ஒரு லட்சிய வாழ்க்கை வாழறாங்கனு புரிஞ்சிக்கிட்டதும், தெளிவாயிட்டேன். இப்ப நான் மறுபடி நிம்மதியா என் லட்சியத்தை நோக்கிப்போக நீங்க உங்க பகையைக் கைவிடணும். உங்களுக்கு வேண்டிய வசதி, பணம் எல்லாம் நான் சம்பாதிச்சுத் தரேன்" மறுபடி அவள் கைகளை ஆறுதலாகப் பற்றி வள்ளியம்மாளின் அருகே அழைத்து வந்து நிறுத்தி, "எனக்காகவாவது ப்ளீஸ், எனக்கு அதிக நேரமில்லை, இன்னும் 24 மணி நேரத்துல எங்க புது எஞ்சினக் கொண்டுவரணும். எதிரிங்க சதியை அம்பலப்படுத்தணும்" என்று அவசரமாகச் சொன்னான் பரத்.

"ஆத்தா எங்கள மன்னிச்சிருங்க, எங்க பரத்தை எங்களுக்கு மீட்டுக்கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி. உங்கள உதாசீனப்படுத்தின நாங்க இன்னும் கூட்டுப்புழுக்களா சாப்பிடுறது, தூங்கறதுனு இந்த ஒண்டுக்குடுத்தனத்துல உழலறோம். நீங்க ஊரே மெச்சற அர்த்தமுள்ள வாழ்க்கை வாழறீங்க. ரத்தம் சூடாயிருந்த இளமைப்பருவத்துல இதெல்லாம் புரியலை. வயசாக, ஆக ஒண்ணும் சாதிக்கலையேங்கற வெறுமை முகத்துல அறையுது. உங்க பெருமை புரியுது. எங்க தப்பை மறந்து, மன்னிச்சு உள்ள வாங்க" கஸ்தூரியின் குரலில் உண்மை தெறித்தது. கண்களில் நீர் முட்டியது.

வள்ளியம்மை அவளை வாரி அணைத்துக்கொண்டு, "பெரிய வார்த்தையெல்லாம் பேசாதே கஸ்தூரி. ஏன் நீ எதுவும் சாதிக்கலைனு சொல்லறே? இப்படி ஒரு பொறுப்பான பிள்ளையை பெத்து, நல்லா வளத்துருக்கியே, இது பெரிய சாதனையில்லையா?" என்றாள்.

"அந்த விதத்துல நான் உங்களவிட பெரிய சாதனை நிச்சயம் பண்ணியிருக்கேன்" என்று மோகனை ஓரக்கண்ணால் பார்த்து பதில் சொன்னாள் கஸ்தூரி. "அடிப்பாவி, ஆத்தாவோட முறுக்கிட்டிருந்த நீ, சட்டுனு இணக்கமான ஒடனே என்னை தத்தினு ஜாடையா சொல்ற! பாரு ஆத்தா, நீயும் கேட்டுக்கிட்டிருக்க?"

"நான் என்ன சொல்றது. அவ உண்மையப் பேசுறா. நான் எப்படி மறுக்கறது?" என்று வள்ளியம்மையும் வாரிவிட, இறுக்கமான அந்தச் சூழல் கலகலவென ஆனது.

"நான் உடனே மனோகரோட போலீஸ் ஸ்டேஷன் போகணும், நம்ம கனகராஜ் அங்கிளை யாரு கொலை பண்ணக் காரணம்னு வீடியோ ஆதாரத்தோட கெடச்சிருச்சு. தாமதிக்காம கொலையாளிகளை அரெஸ்ட் பண்ணவெக்கணும். இல்லைன்னா அவங்க எங்க புது எஞ்சின் நாளைக்கி வெளிவரவிடாம இன்னும் சதி செய்யலாம். என் கேந்திராவோட உயிருக்கும் ஆபத்து இருக்கு. இப்பவே கெளம்பறோம்" என்றான் பரத்.

அவன் சொன்ன மற்ற எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு, "உன் கேந்திராவா? யாரு அந்தக் கம்பெனி மொதலாளி பொண்ணா? நம்ம வீட்டுக்கு வந்தபோதே நெனச்சேன். இந்த மகாலஷ்மி எனக்கு மருமகளா வந்தா எப்படி இருக்கும்னு. ஆனா ரொம்ப பெரிய எடமாச்சேனு அப்படியே மறந்துட்டேன். வேலைக்குப் போறேன்னு சொல்லிட்டு காதலா?" என்றாள் கஸ்தூரி.

"சரி உடு, எனக்குதான் சரியா அமையலை. ஏதோ அவனுக்காவது அவனுக்கு பிடிச்சமாதிரி நல்ல பொண்ணா கெடைக்கட்டுமே. சரி நீ கெளம்பு" என்று மோகன் தன்னை கொஞ்சநேரம்முன் வாரிவிட்ட கஸ்தூரிக்கு பதிலடி கொடுத்தார். இதற்குள் கதிரேசன் வீட்டிற்குப் போய் சிரமபரிகாரம் செய்துவிட்டு, வண்டி எடுத்துக்கொண்டு பரத் வீட்டுக்கு வந்துவிட்டார். பரத் சற்றும் நேரத்தைக் கடத்தாமல் மனோகரோடு அவர் காரில் ஏறி, போலீஸ் ஸ்டேஷனுக்கு விரைந்தான்.
அந்தக் காலை நேரத்தில் போலீஸ் ஸ்டேஷன், ரயில்வே ஸ்டேஷனைப் போல் பரபரப்பாக இருந்தது. பரத் அவசர அவசரமாக சக்கரவர்த்தியின் மீது கம்ப்ளெயிண்ட் கொடுத்துவிட்டு கேந்திராவைப் பார்க்கப்போகும் அவசரத்தில் இருந்தான். அவளது செல்ஃபோன் இன்னும் "சப்ஸ்க்ரைபர் நாட் ரீச்சபிள்" என்ற வசனத்தையே துப்பிக்கொண்டிருந்தது அவனது கவலையை அதிகமாக்கியது. அவன் அவசரம் புரியாமல், ரைட்டர் நிதானமாக குற்றத்தை அவனை விவரிக்கச்சொல்லி தன் கட்டைப் பேனாவால் எழுதிக்கொண்டே, தன் இன்னபிற முக்கிய அலுவல்களான, "ஏய் டீ ஏன் சூடாயில்லை, வேற கொண்டா, என்ன பஜ்ஜி? நாலு எடுத்தா" என்று டீக்கடை பையனை விரட்டுதல், "320 என் டேபிள்லருந்து பேனாவை எடுக்காதென்னு எத்தினி தடவை சொல்றது?", "முத்து வா, வந்து கையெளுத்து போடு, இன்னும் ஒரு மாசம் தெனம் டேசனுக்கு வந்து இந்த ரிஜிஸ்டர்ல ப்ரசண்ட் குடுத்துரணும்" என்று சகபோலீசையும், குற்றவாளியையும் ஒரே நேரத்தில் பைசல் செய்துகொண்டிருந்தார். பரத் பொறுமையிழந்து இன்ஸ்பெக்டரிடம் குற்றப்பத்திரிகையை சீக்கிரம் தாக்கல் செய்து, தான் கொடுத்த வீடியோ ஆதாரத்தின் பேரில் சக்கரவர்த்தியையும், கைலாஷையும் உடனே கைது செய்ய வலியுறுத்தினான். "உங்க அவசரம் புரியுது சார். ஆனா, இது ரொம்ப பெரிய எடம். சரியா விவரம், ஆதாரமெல்லாம் சரிபாத்து குறிச்சிக்காம நாங்களும் அவசரப்பட்டா காரியம் கெட்டுரும். ஏ தனபால் சட்டுபுட்டுனு முடிச்சிட்டு, எஃப் ஐஆரை குடு, ரெண்டு பெரிய மனுஷாள இன்னிக்கு இந்த செல்லுல வச்சு சில்லபேத்துருவம்" என்று நம்பிக்கை தருமாறு பேசியது பரத்துக்கு ஆறுதலாயிருந்தது.

"சார் அப்ப நான் கெளம்பறேன், அவசரமா நான் என் ஆபீசுக்கு போகணும். அந்த சக்கரவர்த்தி பெரிய கைகாரன், நாங்க கேஸ் குடுத்த விஷயம் தெரிஞ்சா தலைமறைவாயிருவான், இல்லன்னா பெயில் மூவ் பண்ணிருவான். அப்படி அவன் இன்னும் ரெண்டு நாள் தப்பிச்சு வெளியே இருந்தா எங்க புது எஞ்சின் வெளிவராம இருக்க எதுவும் செய்வான். நீங்க அவனை அரெஸ்ட் பண்ணினீங்கன்னா நம்ம நாட்டுக்கு ஒரு பெரிய சேவைய பண்ணின புண்ணியம் உங்களுக்குக் கெடைக்கும்."

"எந்த கொம்பனாயிருந்தாலும் என் கடமைய கரெக்டா முடிச்சிருவேன். நீங்க ரொம்ப ஸ்ட்ராங்க் எவிடன்ஸ் குடுத்திருக்கீங்க. கவலைப்படாம போங்க."

"ரொம்ப தேங்க்ஸ் சார். டேய் மனோகர் நான் ஆபீஸ் போறேன். கேந்திராவை உடனே பாக்கணும். நீ இங்க எல்லா ஃபார்மாலிடீசும் முடிச்சிட்டு நேரா எங்க ஆபீசுக்கு வந்துரு. கதிரேசன் அண்ணே கெளம்புங்க… டேய் மனோகரா பாத்துடா. உன் அப்பாவைக் கொன்னவனுங்கள இன்னிக்கு உள்ள வச்சிரணும். தப்பித்தவறி ஆத்திரப்பட்டு ஏதாவது செஞ்சு அவனுங்கள தப்பிக்க விட்டுறாதே. நான் வரேன்."

பரத் கிளம்பிய சில நிமிடங்களில் மனோகரின் செல்பேசி சிணுங்கியது. வீட்டிலிருந்து அம்மா கூப்பிடுகிறார்கள் என்று நினைத்து, இயந்திரத்தனமாக பேசும் பொத்தானை ஒத்தி, "ஹலோ... என்னம்மா அதுக்குள்ள அவசரம். கொஞ்ச நேரம் கழிச்சு கூப்பிடுங்க. எல்லாம் ஃபார்மாலிடி முடிச்சாச்சு" என்று சிடுசிடுத்தான்.

"மனோ என்ன டென்ஷனாயிருக்க? ஏன் ஆஃபீஸ் வரலை. உடம்பு ஏதாவது சரியில்லையா?" தேன் தடவிய சக்கரவர்த்தியின் குரல் மனோகருக்கு தேள்கொடுக்காக வெடுக்கென கொட்டியது. தன் அப்பாவைக் கொன்ற அயோக்கியன் என்ற எண்ணம் அவன் மூளையில் சுர்ரென்று ஏறியதில் வந்த ஆத்திரத்துக்கு கோபமாக பேச எத்தனித்த மனோகருக்கு பரத்தின் உபதேசம் சுடும் பாலில் நீரை வார்த்ததுபோல் நினைவுக்கு வந்து, கட்டுப்படுத்தியது.

"இல்லை சார், இன்னிக்கு லீவு, வீட்ல ஒரு ப்ரச்சனை. பெருசா ஒண்ணுமில்லை. ஆனா இன்னிக்கே தீக்கவேண்டிய மேட்டர்." ஆத்திரத்தில் அவன் முகம் சிவந்து, கண்களில் நீர் கோர்த்தது.

"முடிஞ்சது, எஃப்.ஐ.ஆர். போட்டாச்சு. இந்தாங்க சார், ஒரு கையெளுத்து போட்டுட்டு கெளம்புங்க" ஃபைலை மனோகரிடம் தள்ளி, விரல்களை நெட்டி முறித்து, அலுப்பாக எழுந்தார் எழுத்தர் தனபால். ஃபோனில் இது சக்கரவர்த்திக்கு தெளிவாகக் கேட்டது. செல்பேசியை பொத்தியவாறு, பதறிய மனோகர், "சார் இவ்வளவு நேரம் நான் காத்திருந்தேன் இல்லை. ஒரு ரெண்டு நிமிஷம் எனக்கு குடுங்க. இந்தக் காலை முடிச்சிட்டு வரேன்" என்று சொல்லிவிட்டு, "சார் என்னை கூப்பிடுறாங்க. நான் அப்புறம் உங்களுக்கு ஃபோன் பண்றேன்" என்று சக்கரவர்த்தியிடம் சொல்லிவிட்டு செல்பேசியை வைக்கப்பார்த்தான் மனோகர். "என்னப்பா பிரச்சனை? பதட்டமாயிருக்க? பின்னால ஏதோ எஃப்.ஐ.ஆர். அது இதுன்னு கேக்குது. எங்கிட்ட சொல்லு" துருவினார் சக்கரவர்த்தி.

"இல்லை சார். அதெல்லாம் ஒண்ணுமில்லை. நேத்து நைட் எங்க வீட்டுக்கு திருடன் வந்து எங்க வீட்டு நகை, வெள்ளிப்பாத்திரமெல்லாம் திருடிட்டு போயிட்டான். அதான் கம்ப்லெயிண்ட் குடுக்க வந்தேன். ஒண்ணும் பெரிய பிரச்சனையெல்லாம் இல்லை."

"ம்ம்.. சரி. எதாவது ஹெல்ப் வேணும்னா கேளு. டேக் கேர்" என்று தொடர்பைத் துண்டித்தார்.

தன் ஆத்திரத்தையெல்லாம் சேர்த்து தன் முஷ்டியால் அந்த மேசையை ஓங்கிக்குத்தி விட்டு, கையெழுத்தைப் போட்டான் மனோகர். இவனை விசித்திரமாகப் பார்த்த தனபால் தலையில் அடித்துக்கொண்டு, இன்ஸ்பெக்டரிடம் கத்தைக் காகிதங்களை நீட்டினார். அவற்றை வேகமாகச் சரிபார்த்துவிட்டு, "பதினொரு மணிக்கு கெளம்பணும். கூட நாலு கான்ஸ்டபிள் வரணும். ம்ம்.. மனோகர்தான உங்க பேரு. உங்களுக்கு இந்த அக்யூஸ்ட் இருக்கிற எடம் தெரியுமில்லை. நீங்களும் எங்ககூட வாங்க. இன்னும் ஒன் அவர்ல கெளம்பலாம்" என்றார்.

*****


"கைலாஷ் சம்திங் இஸ் ராங்க். மனோகர் இப்படிச் சொல்லாம கொள்ளாம லீவு போட்டது கிடையாது. அவன் குரல்ல இப்படி ஒரு பதட்டத்தை நான் கேட்டதில்லை. அதுல ஒரு விரோதம் வெளிப்பட்டது. அவன் போலிஸ் ஸ்டேஷன்ல இருக்கான். நேத்து வெல்டிங் மணி செத்துப்போயிட்டான். கேந்திரா எடுத்த வீடியோ சிக்கக்கூடாத எடத்துல சிக்கியிருக்குமோனு டவுட்டாயிருக்கு. மே பி இது எல்லாமே என்னோட பிரமையாகூட இருக்கலாம்" சக்கரவர்த்தியின் ஆளுமையான முகத்தில் கவலை ரேகைகள் கீறல் போட்டன.

"தே கெனாட் டச் அஸ். தேவையில்லாம கவலைப்படறீங்க சக்கி. நாளையோட கேந்திரா மோட்டார்ஸ் ஆட்டம் க்ளோஸ். வீணா கவலைப்படாதீங்க. நம்மளோட கடசி ஆயுதத்தை இப்பதான் ஏவிவிட்டுட்டு வரேன். இது பிரம்மாஸ்திரம். நானே நெனச்சாகூட திரும்ப எடுத்துக்கமுடியாது" என்றான் கைலாஷ்.

"எப்ப தாக்கும்?"

"ஏவிவிட்டு அரைமணி ஆவுது. இப்பதான் ஃபோன் பண்ணினேன். இருபது காட்டானுங்க, கேந்திரா மோட்டார்ஸ் அசெம்ப்ளிங்க் செக்‌ஷன்ல விஷ்வனாத்துக்காக பாசக்கயித்தோட ரெடியா இருக்கானுங்க. இன்னிக்கு மதியம் பனிரண்டு மணிக்குள்ள அவன் கதை முடியும். தப்பித்தவறி அவன் உயிர் தப்பினாலும், அவன் எழுந்து நடமாட முடியாம பண்ணிருவாங்க. எய்தர் வே நாளைக்கு டெட்லைனுக்குள்ள அந்த புது எஞ்சின் வெளிவராது. கம்பெனி நம்ம கைக்கு வந்துரும்."

"வெரிகுட். குட். நாம ஜெயிச்சே ஆகணும். என் எதிர்காலத்தையே இதுல பணயம் வச்சிருக்கேன்" சக்கரவர்த்தி வலிய ஒரு புன்னகையை உதட்டோரத்தில் ஒட்ட வைத்தாலும், அது பசைபோன காகிதமாய் உதிர்ந்து கவலைச்சுவரை வெளிக்காட்டியது.

*****


அந்தத் தொழிற்சாலையின் ஒவ்வொரு வாயிலிலும் இருந்த துவாரபாலகர்கள், சிலிகான் சில்லு ஒட்டிய அனுமதி அட்டைகளின் தேய்மானங்கள் என்று எல்லாவற்றையும் தாண்டி கேந்திராவையும், விஷ்வனாத்தையும் தேடி அசெம்பிளிங்க் பிரிவின் மையத்தில் இருந்த தனி அலுவலகத்துக்குள் நுழைந்தான் பரத்.

"கேந்திரா, திஸ் இஸ் இட். இப்ப இந்த அசெம்பிளிங்க் செக்‌ஷன்ல நம்ம ப்ரோடோடைப் கொண்டுவரச் சொல்லியாச்சு. இட் வில் டேக் த்ரீ அவர்ஸ் ஃபார் மீ டு அசெம்பிள். நம்ம எதிரிகள் சுதாரிக்கிறதுக்குள்ள அவங்களுக்கு, ஏன் உனக்கேகூட ஒரு சர்ப்ரைசா இருக்கட்டும்னு, டெஸ்ட்ரன்னை இன்னிக்கு மதியமே செய்ய ஏற்பாடு பண்ணிட்டேன்"

"என்ன டாடி சொல்றீங்க?"

"யெஸ், நாம இனிமே தாமதிக்கக்கூடாது. எனக்கு நம்பிக்கையான மீடியா ஆட்களை மட்டும் கூப்பிட்டுருக்கேன். இன்னும், ஒருமணி நேரத்துல அவங்க இங்க வந்துருவாங்க. இட் இஸ் அவர் பிக் டே மை டியர்" என்று பெருமையும், கர்வமுமாக மகளிடம் சொன்ன விஷ்வனாத், "பரத் இப்ப இருந்தா என் வேலை ரொம்ப ஈஸி. இப்ப எல்லாம் என் ஒருத்தனை மட்டுமே நம்பி இருக்கு" இதை அவர் சொல்லிமுடிக்கவும், பரத் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.

ஒருசில வினாடிகள் உலக இயக்கம் நின்றதுபோல அந்த அறையில் நிசப்தமும், நிச்சலனமும் குடிகொண்டன. கேந்திரா பரத்திடம் ஓடிவந்து அவனது முகத்தில் தன் மலர்கொத்துக் கரங்களால் மாறி மாறி அறைந்து, "ஏண்டா இப்படி பண்ணின? ஏண்டா பைத்தியம் புடிக்க வச்சிட்டியே. ஐ ஹேட் யூ, ஐ ஹேட் யூ" என்று ஆதங்கத்தைக் காட்டி, அவன் மார்பில் வேகமாகக் குத்தி ஓய்ந்துபோய், இறுதியில் அவன் மார்பில் சாய்ந்து, கண்ணீர் சிந்தினாள். அது அலுவலக அறை, அருகில் தன் அப்பா இருக்கிறார், தான் ஒரு பெரிய நிறுவனத்தின் பொறுப்பான அதிகாரி என்ற பிரக்ஞையெல்லாம் இழந்தவளாகத் தன் ஆற்றாமையைக் கொட்டினாள் கேந்திரா.

பரத்தின் கண்களிலும் இப்போது குளம்கட்டிய கண்ணீர், பிரிந்தவளைக் கூடிய சந்தோஷத்தில் சிரிப்பு வடிகாலிட்டு அவளது ஆற்றாமையை அரவணைத்தது. "என் அவசரபுத்தியை மன்னிச்சுரு கேந்திரா. உன் உண்மையான காதலை நான் புரிஞ்சுக்காம, ஏதேதோ நெனச்சு பிரச்சனைய பெரிசாக்கிட்டேன். உனக்கு எந்த ஆபத்தும் இல்லைனு தெரிஞ்சதும்தான் என் மனசு அமைதி ஆச்சு. இப்பதான் அந்த சக்கரவர்த்தி மேல கம்ப்ளெயிண்ட் குடுத்துட்டு, நீ அனுப்பின வீடியோ ஆதாரத்தையும் காட்டிட்டு வந்தேன். ஹீ வில் பி இன் ஜெயில் வெரி சூன். சார் நீங்களும் என்னை மன்னிச்சிருங்க. நான் ரெடி, அசெம்ப்ளிங்குக்கு நான் ஹெல்ப் பண்றேன். எனக்கு இன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் மேனுவல், சர்கிட் சார்ட் காட்டுங்க" காதலிலிருந்து கடமைக்குத் தாவினான் பரத்.

"பரத் நீ திரும்பி வந்தது, அதுலயும் சரியான நேரத்துக்கு வந்தது சந்தோஷம். இந்த இன்ஸ்ட்ரக்‌ஷன் மேனுவலும் நான் தயார் பண்ணலை. எதிரிங்க திருடிருவாங்கனு, எல்லாம் இதோ இந்த சேஃப் வால்ட்ல இருக்கு" என்று தன் தலையைத் தட்டிக்காட்டினார். "ஆனா, நான் உனக்கு அந்த இன்ஸ்ட்ரக்‌ஷன்சை சொல்லமுடியும். அசெம்பிளிங்க்ல எனக்கு நீ ஹெல்ப் பண்ணினா, நாம சாதிச்சிரலாம். இன் ஃபேக்ட் உனக்கு மெயின் சர்கிட்டைத் தவிர எல்லாம் தெரியும். மெயின் சர்கிட்ல ஆயிரத்துக்கும் மேல பெர்முடேஷன்ஸ் இருக்கு. அதுல சரியான காம்பினேஷனை உனக்குக்கூட நான் சொல்லலை."

"அதைப்பத்தி நான் யோசிக்காத நாளே இல்லை சார். எனக்கு இன்னும் அதுக்கு விடை கெடைக்கலை. எப்படியும் இன்னும் 2 மணி நேரத்துல நீங்க எனக்கு சொல்லப்போறீங்க. ஆனா, எனக்கு இப்ப ஒரு க்ளூ குடுங்க. லெட் மீ ஸீ இஃப் ஐ கேன் பிரேக் இட்" பரத்துக்கே உரிய சவால் மனப்பான்மை வெளிப்பட்டது.

"கேந்திரா, இதனாலதான் எனக்கு பரத்தை ரொம்ப புடிக்குது," புளகாங்கிதத்தோடு சொன்னார் விஷ்வனாத். "க்ளூ.. க்ளூ.. ம்ம்.. தலைகீழா நின்னாலும் இவன் இல்லாம இந்த உலகத்துல எதுவும் இயங்கமுடியாது. என் புது ப்ராடக்டும் அப்படித்தான் 'V09+tblos' Technologically brilliant oil saver."

"இன்னும் கன்ஃப்யூஸ் பண்ணிட்டீங்க" என்று சொல்லி முடிப்பதற்குள், "ஓகே பரத் நான் மொதல்ல அசெம்பிளிங் செக்‌ஷனுக்கு போயி எல்லாம் தயாராயிருக்கானு பாக்கறேன். மீடியா வில் பீ ஹியர் சூன். நீயும், கேந்திராவும் இன்னும் அரைமணி நேரத்துல அசெம்பிளிங்க் செக்‌ஷனுக்கு வந்துருங்க" என்று சொல்லி அவர்கள் பதிலுக்குக் காத்திராமல் விரைந்தார் விஷ்வனாத். போகும்போது கேந்திராவை ஓரக்கண்ணால் பார்த்துக் கண்ணடிக்கத் தவறவில்லை, அந்த இங்கிதம் தெரிந்த பெரிய மனிதர்.

அவருக்குப் பின்னால் கதவு சாத்தப்பட்டதும், பரத் கேந்திராவைத் தழுவி, "ப்ராமிஸ் இனி எதுவும் நம்மைப் பிரிக்கமுடியாது. நான் போனதிலயும் ஒரு நன்மை, என் பாட்டி வள்ளியம்மையை சந்திச்சு, ஒரு பெரிய தெளிவு கெடச்சது. தேங்க்ஸ் டு யூ" என்று சமாதானம் பேசினான். அப்போது அவன் செல்பேசி சமயம் தெரியாமல் அலறியது. வெறுப்பாக, யார் இன்னேரம் அழைப்பது என்று பார்த்த பரத், அழைப்பு மனோகரிடமிருந்து என்று அறிந்து, கேந்திராவை தன் பிடியிலிருந்து விலக்கி, "என்ன மனோ இஸ் எவ்ரிதிங் ஓகே?" என்றான்.

மறுமுனையில் மனோகர், "டேய் அந்த சக்கரவர்த்தி நாம நெனச்சதுக்கு மேல அயோக்கியன். அவனை அரெஸ்ட் பண்ணியாச்சு. அவனை அரெஸ்ட் பண்ணும்போது அவன் கூட இருந்த கைலாஷுக்கு ஒரு கால் வந்தது. அதுமூலமா இப்பதான் ஒரு விஷயம் இன்ஸ்பெக்டருக்கு தெரியவந்தது. உங்க புது எஞ்சின் வெளிவரக்கூடாதுனு, கேந்திரா மோட்டார்ஸ் அசெம்ப்ளிங்க் செக்‌ஷன்ல இருபது குண்டர்கள் தொழிலாளர்கள்ங்கிற போர்வைல விஷ்வனாத்தை போட்டுத்தள்ள தயாரா வந்துருக்காங்க. நீ உடனே உன் மொதலாளிய பாதுகாப்பான எடத்துக்கு போகச்சொல்லு. போலீஸ் உன் ஃபேக்டரிக்கு வந்துட்டிருக்கு. எச்சரிக்கத்தான் ஃபோன் பண்ணினேன். நானும் அங்க வரேன். நீ ஜாக்கிரதையா இரு" பதிலுக்குக்கூட காத்திராமல் தொடர்பைத் துண்டித்தான்.

பரத் உடனே கதவைத் திறந்து அசெம்ப்ளிங் செக்‌ஷனை நோக்கி ஓடினான். கேந்திரா பின்தொடர்ந்தாள். இதோ விஷ்வனாத் அந்தக் கடைசி வாயிலைக் கடந்து மையப்பகுதிக்கு வந்துவிட்டார். அவருக்கு ஐந்து அடி தொலைவில் தயாராக தொழிலாளர்கள் போர்வையில் இருந்த கைக்கூலிகள் சைகை காட்டி தாங்கள் மறைத்து வைத்த ஆயுதங்களை எடுத்துத் தாக்குதலுக்குத் தயாரானார்கள். இதை அறியாத விஷ்வனாத் தன் வாழ்நாள் சாதனையை அடையப்போகும் மகிழ்ச்சியில் தன் நடையை நிறுத்தி புது எஞ்சினின் பாகங்களை வாஞ்சையோடு வருடினார்.

அப்போது எதிர்பாராமல் 'சொத்' என்று ஒரு உருட்டுக்கட்டை அவர் தோளில் இறங்கியது.

(அடுத்த இதழில் முற்றும்)

சந்திரமௌலி,
ஹூஸ்டன்
Share: 
© Copyright 2020 Tamilonline