Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம்
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | முன்னோடி | Events Calendar | பொது | நலம்வாழ | எனக்கு பிடித்தது | புதினம் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | Sudoku | சதுரங்கப் புலி |
Tamil Unicode / English Search
இளந்தென்றல்
எர்தாம்டனின் சுடர் (புத்தகம் – 1 / அத்தியாயம் – 7)
- ராஜேஷ், Anh Tran|மே 2016|
Share:
அன்றைய இரவு, எப்பொழுதும்போல அம்மா அருணைத் தூங்கப்போகுமுன்பு கட்டிலில் படுக்கச் சொல்லி, போர்வையைப் போர்த்தி, கதை படிக்க உட்கார்ந்தார். எப்போதும் ஆர்வத்தோடு கதை கேட்பவன், அன்று ஏதோ பிரமை பிடித்தவன்போலச் சுவற்றில் மாட்டியிருந்த பக்கரூவின் படத்தைக் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

"அருண்…" அம்மாவின் அழைப்பிற்கு அவனிடமிருந்து பதில்வரவில்லை.

"கண்ணா, என்னம்மா யோசிக்கற?"

சற்றுத் தாமதமாக, "அம்மா, விதையை நம்மவீட்டுக்கு பின்னாலயே ஏன் விதைக்கக்கூடாது? அதுக்கு யார்கிட்டயும் அனுமதி கேக்க வேண்டாமே?" என்றான்.

மகனின் கேள்வி மிகவும் நியாயமாகப் பட்டது. தன் மகன் அப்படிக் கேள்வி கேட்பதை அவர் மிகவும் விரும்பினார். "சட்டத்தை நாம மதிக்கணும்," என்று பதில் கொடுத்தார்.

"ஹோர்ஷியானாவே அனுமதி கொடுத்திருச்சுன்னா?"

"அப்பக்கூட, நம்ம வீட்டுப் பின்னாலே இருக்கும் மண் செழிப்பானதல்ல. செடி நல்லா வராது."

"அம்மா, அப்ப நாம என் ஃப்ரண்டு நேதன் வீட்டுல நடலாமே? நம்ம வீட்டு மண் வளமில்லைனா நேதன் வீட்டுல முயற்சி பண்ணலாமே?"

"இல்லை கண்ணா, நேதன் வீட்டு மண்ணும் அப்படித்தான்."

"எப்படிம்மா உங்களுக்குத் தெரியும்? மண் நல்லதா கெட்டதான்னு எப்படிக் கண்டுபிடிப்பீங்க?"

"டெஸ்ட் பண்ணினா தெரிஞ்சுடும்."

"டெஸ்டா?"

கீதா மண்வள ஆராய்ச்சிபற்றி விளக்கம் கொடுத்தார். கண் இமைக்காமல் கேட்டான் அருண்.

"இவ்வளவு பண்ணனுமா அம்மா?" வியப்பாகக் கேட்டான்.

"ஆமாம் கண்ணா. அம்மா மாதிரி விஞ்ஞானிகள்தான் அந்தமாதிரி டெஸ்ட்டெல்லாம் பண்ணுவாங்க."

"அது எப்படி அம்மா, ஹோர்ஷியானாகிட்ட மட்டும் மண் நல்ல வளமா இருக்கு?"

கீதாவிற்குத் தங்கள் ஊரைப்பற்றி, அந்த ஊரில் ஹோர்ஷியானாவின் ஆதிக்கம்பற்றி எல்லாம் சொல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது. தன் மகனிடம் பலவிதமான அச்சம் தரும் உண்மைகளைச் சொல்வதற்குத் தனது மனதைத் திடப்படுத்திக் கொண்டார்.

"கண்ணா, நம்ம ஊர்ல ஹோர்ஷியானா கேம்பஸ் தவிர எல்லா இடத்திலும் கரிசல் மண்தான் கண்ணா."

"Wow! How come?" வியப்போடு கேட்டான்.

"அதுவா… முதல்லயே எல்லா நல்ல மண் இருக்கிற இடங்களை அவங்க வாங்கிட்டாங்க. அதுவுமில்லாம, நம்ம ஊர்ல என்ன செடி, கொடி, மரம் நடணும்னாலும் அவங்க அனுமதி இல்லாம பண்ணமுடியாது."
மிகவும் தாழ்வான குரலில் பேசிய கீதா, அருணைக் கவனித்தார். அவன் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான். "நம்ம ஊர்ல ஹோர்ஷியானா அனுமதி இல்லாம ஒரு சின்னச் செடிகூட நடமுடியாதா? எதுக்கம்மா அந்த மாதிரி பண்ணறாங்க?"

உணவு முற்றுரிமை கொள்ளுதல் (Food Monopolization) பற்றி மிக அருமையாக, ஒரு எட்டுவயதுப் பையனுக்கு விளக்கினார் கீதா.

"இவ்வளவு இருக்கா ஹோர்ஷியானா விஷயம்!" தலையை ஆட்டி ஆமாம் என்றார் கீதா.

"யாருமே எதிர்த்து கேக்க முடியாதாம்மா?"

அருணை விட்டால் நேரம் போவது தெரியாமல் கேள்விமேல் கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பான் எனத் தெரியும் கீதாவுக்கு. "போதும்பா. நேரம் ஆச்சு. நாளைக்கு சீக்கிரம் எழுந்துக்கணும்."

அன்றைய தினத்தின் அயர்வு அவரைத் தூங்கச் சொல்லி வற்புறுத்தியது. அடக்க முடியாமல் கொட்டாவி விட்டார். "அருண், இன்னிக்கு ரொம்ப அலைஞ்சாச்சு. போதும்பா."

"ப்ளீஸ்… இன்னும் ஒரே ஒரு கேள்வி?"

"சரி!"

"நான் கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே, அம்மா?"

அயர்வு, தூக்கம், அவை எல்லாம் சேர்ந்ததில் கீதாவிற்கு சட்டென்று கோபம் வந்தது. "சீக்கரம் கேளேன். ஏன் இப்படித் தூங்கவிடாம படுத்தற" என்று சத்தம் போட்டார்.

அம்மாவின் கோபம் அருணுக்கு புரிந்தது. இருந்தாலும், அவன்கேட்க நினைத்ததைக் கேட்டான். "இவ்வளவு கொடுமை பண்ணற ஹோர்ஷியானாவில் ஏன் நீங்களும் அப்பாவும் வேலை செய்யறீங்க? தப்பான காரியம் பண்றவங்களோட சேரக்கூடாதுன்னு சொல்வீங்களே அம்மா?"

கீதா ஸ்தம்பித்துப் போனார். பதில் கூறமுடியாமல் மகனுக்கு ஒரு முத்தம் கொடுத்து, "குட்நைட்" சொல்லி, "நாளைக்கு நாம ஹோர்ஷியானா முதலாளிகிட்ட பேசிப் பார்க்கலாம், சரியா? சீக்கிரம் எழுந்துக்கணும் அதுக்கு" என்றார்.

"சரி அம்மா."

கீதா விளக்கை அணைத்துவிட்டுச் சென்றார்.

(தொடரும்)

கதை: ராஜேஷ்
படம்: Anh Tran
Share: 
© Copyright 2020 Tamilonline