Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம் | சமயம்
கவிதைப்பந்தல் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | முன்னோடி | Events Calendar | பொது | நலம்வாழ | சாதனையாளர் | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | முன்னோட்டம்
Tamil Unicode / English Search
சிறுகதை
ஆனந்தாசனம்
பொறையார் கஃபே
- எல்லே சுவாமிநாதன்|ஏப்ரல் 2016||(4 Comments)
Share:
ஞாயிறு காலைகளில் என்னோடு படித்த நண்பர்களுடன் டெலிஃபோனில் அரட்டையடிப்பது பழக்கமாகிவிட்டது. அன்று ஃப்ளோரிடாவில் இருக்கும் மூர்த்தி சொன்னான், "விஷயம் தெரியுமா, நம்ம பொறையார் பொன்னையன் இப்ப லாஸ் ஏஞ்சலிஸ்ல பொறையார் கஃபேன்னு ஓட்டல் தொடங்கியிருக்கானாமே. போய்ப் பார்த்துட்டு வந்து சொல்லு."

உலகம் எப்படி சுருங்கிவிட்டது பாருங்கள். நான் வசிக்கிற ஊர்ல உள்ள ஓட்டல்பத்தி மூவாயிரம் மைல் தள்ளி ஃப்ளோரிடாவில இருக்கிறவனுக்குத் தெரிஞ்சிருக்கு.

ஓகோ, பொன்னையன் இப்ப அமெரிக்கா வந்தாச்சா!

மயிலாடுதுறையில் அவன் என்னோடு ஹைஸ்கூல்வரை படித்தான். அவன் அப்பாவுக்குச் சொந்தஊர் பொறையார். பொறையார் ஓட்டல் என்ற பெயரில் உணவகம் ஒன்று நடத்திக் கொண்டிருந்தார். பள்ளியில் அவனை "பொ.பொ." (பொறையார் பொன்னையன்) என்று அழைப்போம்.

பள்ளியில் ஒரு நிகழ்ச்சி எனக்கு மறக்கவே மறக்காது. வினாடிவினா போல, ஒருமுறை கணக்கு வாத்தியார் கேட்டார், "ஒரு பஜ்ஜி இருவத்தி அஞ்சு காசு. அஞ்சு ரூவாய்க்கு எத்தனை பஜ்ஜி?"

"இருவத்திரெண்டு சார்" என்று உடனே சொன்னான் பொன்னையன்.

"என்னடா சொல்ற. ஒரு ரூவாய்க்கு நாலு பஜ்ஜி. அஞ்சு ரூவாய்க்கு இருவதுதானே?"

"எங்க ஓட்டல்ல அஞ்சு ருவாய்க்கு வாங்கினா கூட ரெண்டு பஜ்ஜி சேத்து இருவத்திரெண்டாத் தருவோம் சார்".

பியூசிக்கு வந்துசேர்ந்த சில மாதங்களில், அவன் அப்பா காலமாகிவிட படிப்பைத் துறந்து அப்பாவின் ஓட்டலை நிர்வகிக்கப் போய்விட்டான்.

அவர்கள் ஓட்டல் கடைத்தெருக் கோடியில் மைதானத்து அருகே இருந்தது. அவர்கள் தயாரிப்புகளில் பிரபலமானது வாழைக்காய் பஜ்ஜியும் தயிர்சாதமும்தான். சுவர் முழுக்க எச்சரிப்புப் பலகைகள் தொங்கும். "வியாதிஸ்தர்கள் உள்ளே வரக்கூடாது", "சட்டினி, சாம்பார், இரண்டாம் முறை கேட்கக்கூடாது", "கடன் சொல்லாதீர்", "சாப்பிட்ட பின் உங்கள் இலையை நீங்களே சுருட்டித் தொட்டியில் போடவேண்டும்", "பண்டங்கள் சுத்தமான நெய்யில் தயாரிக்கப்பட்டவை அல்ல", "பீடி, சுருட்டு, சிகரெட் குடிக்கக்கூடாது" என்ற வாசகங்கள் இருக்கும்.

அந்த ஓட்டலுக்கென்று ஒரு கூட்டம் வரத்தான் வந்தது. திங்கள்கிழமை மைதானத்தில் மாட்டுச்சந்தை நடக்கும்போது வெளியூரிலிருந்து வரும் வணிகர்கள் அந்த ஓட்டலில் உண்பார்கள். அன்று மாடுகளும் மனிதர்களுமாய் குழுமியிருக்க உள்ளே நுழைவதே கடினம்.

நான் சென்னையில் கல்லூரியில் படிக்கும்போதும் ஊருக்குப் போனால் அவனைப் போய்ப் பார்ப்பதுண்டு. "உங்க ஓட்டல் பஜ்ஜியை சாப்பிட்டுப் பார்க்கலாமா" என்று கேட்டால் "இது எல்லாம் உனக்கு வேண்டாம்" என்று சொல்லிவிடுவான். ஒரு வேலையாளை அழைத்து, சன்னமான குரலில், "ஓடிப்போயி கமலா லாட்ஜில ரெண்டு மசால் தோசை பார்சல் வாங்கிட்டு வா. இந்தா சில்லறை. யாருக்குடா வாங்கிட்டுப் போறேன்னு கேட்டா, பொறையார் ஓட்டல் பொன்னையன் கேட்டார்னு சொல்லித் தொலைக்காத" என்று சொல்லித் தருவித்து என்னோடு சேர்ந்து சாப்பிடுவான்.

நான் அமெரிக்கா வந்து பல வருடங்கள் கழித்து ஊருக்குப் போனபோது, அவனைச் சந்தித்தேன். அப்போது அவனுக்கு என்னைச் சந்திப்பதில் அவ்வளவு விருப்பம் இல்லையென்று தோன்றியது. ஒரு தன்னிரக்கமும், தாழ்வு மனப்பான்மையும் அவனிடம் குடிகொண்டிருந்தன.

"நீங்களெல்லாம் படிச்சு வெளிநாடு போய்ட்டீங்க. நான் இந்த ஓட்டலை விட்டா கதியில்லைனு கிடக்கேன். நானும் அமெரிக்கா வரமுடியுமாடா. நீ ஏற்பாடு பண்ணுவியா?" என்று கேட்டான். எனக்குத் தெரிந்ததெல்லாம் படித்துத் தேறி முட்டிமோதி முழிபிதுங்கி வேலைதேடி வருகிற முறைதான். அவனுக்கு இது எப்படி சாத்தியமாகும் என்று சொல்லத் தெரியவில்லை.

எப்படியோ இப்ப வந்துவிட்டான். பிசினெஸ் விசா ஏதாவது வாங்கியிருப்பானோ? கூகிள் மேப்பில் தேடி அவன் ஓட்டல் இருப்பிடம் கண்டுபிடித்தேன். அது இருந்த இடம் அவ்வளவு பாதுகாப்பான ஏரியா இல்லை. பழைய கட்டிடங்கள், சின்னக்கடைகள் நிறைந்த நெருக்கடியான இடம்.

அங்கே காரில் போய் 'பொறையார் கஃபே' என்ற பலகை இருந்த கடைக்கு அருகே நிறுத்தினேன். கடைக்குப் புதிதாக வண்ணம் பூசப்பட்டிருந்தது. ஓட்டலுக்குள் நுழைந்தவுடன் மேற்கொண்டு உள்ளே போகமுடியாமல் ஒரு ரெஃப்ரிஜரேட்டர் குப்புறக்கிடக்க அதிலிருந்து, ஏகப்பட்ட வயர்கள் துருத்திக் கொண்டிருந்தன. பைஜாமா குர்த்தா போட்ட இருவர் அதை ரிப்பேர் செய்து கொண்டிருந்தார்கள்.

என்னைப் பார்த்ததும் "ஓட்டல் பந்த் ஹை" என்றார்கள். நான் புரியாமல் விழிக்க "இந்தி மாலும் ஹை?" என்றார்கள். நானும்தான் பள்ளியில் கொஞ்சம் இந்தி படித்தேன்: துமாரா நாம் க்யா ஹை, கிதாப் மேஜ் பர் ஹை. இந்தி ஒழிப்பு போராட்டத்தால் பாதியில் நின்று போய்விட்டது..

எனக்குத் தெரிந்த அரைகுறை இந்தியில் நான் பொன்னையனைப் பார்க்க வந்ததைச் சொன்னேன். அவர்கள் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டதில், "பொன்னாஜி", "மதராஸி", "காலா ஆத்மி" என்ற வார்த்தைகள் மட்டும் தெளிவாகக் கேட்டன. ஒருவன் உள்ளே போனான்.

மேஜைமேலே ஒரு அட்டையில் "கேலா பகோரா, இஸ்பெசாலிட்டி ஹமாரா" என்று இந்தியில் எழுதியிருந்தது. சுவரில் ஒரு படம் மாட்டியிருந்தது. அதில் ஒபாமா பொன்னையனுக்கு பெரிய மலர்மாலை போட்டு வரவேற்று "பொறையார் பொன்னையா அமெரிக்கா வருக, பொன்முறுகலாய் பஜ்ஜி தருக" என்று சொல்வது போன்ற வாசகங்கள் இருந்தன.

உள்ளே போனவன் திரும்பி வந்து "அபி ஆத்தா ஹை, பாஞ்ச் மினிட் வெயிட் கரோ" என்றான்.

சிறிது நேரத்தில் பொன்னையன் வந்தான். என்னைப் பார்த்ததும் முகமலர்ச்சியோடு "அடேடே, நீயா? வா வா. நானே உன்னைக் கூப்பிடணும்னு இருந்தேன். உன் ஃபோன் நம்பரை மூர்த்திகிட்ட வாங்கி வெச்சிருக்கேன். ரொம்ப சந்தோஷம்" என்றவன் வழியில் நந்திபோல கிடந்த ரெஃப்ரிஜரேட்டரை எப்படித் தாண்டுவது என்று யோசித்தான்.

"ஜம்ப் கரோ பையா, ஜம்ப் கரோ" என்று அந்த மெகானிக் சொல்ல, கஷ்டப்பட்டு அதன்மேலேறித் தாண்டி வெளியே வந்தான்.

"ஓட்டல் திறந்திருக்கபோல இருக்கு. சாப்பிட என்ன கிடைக்கும்?" என்றேன்.

"இன்னும் ஓட்டல் முழுசாத் தொடங்கல. இங்க ரிப்பேர் வேலை நடக்குது. வா வெளியில போயி சாப்பிடலாம். ஏதோ ஸ்டார் பக்ஸாமே, அங்க காஃபி நல்லா இருக்குமாமே பக்கத்துத் தெருவுல இருக்காம் போலாம் வா" என்று அழைத்தான். என் காரிலேயே போனோம்.

காஃபியும் கேக்கும் சாப்பிட்டோம். "எப்படிடா உன்னால இங்க வரமுடிஞ்சிது" என்றேன்.

"அது பெரிய கதைடா. ரெண்டு வருசம் முன்னால டெல்லிக்குப் போனேன். அங்க பாபி ஷர்மானு ஒருத்தனைப் பார்த்தேன். லாஸ் ஏஞ்சலிஸ்ல ரெஸ்டாரண்ட் நடத்தறானாம். அமெரிக்கா வரது சுலபம், ஓட்டல் வெச்சு காசு பார்க்கறது ரொம்ப ரொம்ப சுலபம்னான். என்னை அழைச்சிட்டுப் போறேன்னான். விலாசம் கொடுத்தான்.

"நான் வீடு, ஓட்டல், நிலம் எல்லாத்து மேலேயும் கடன் வாங்கி டாலரா மாத்தி பிசினெஸ் விசால வந்திருக்கேன். இப்பல்லாம் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு தர முன்வரும் தொழில்முனைவோர்க்கு சுலபமா விசா தராங்க. ஓட்டல் இருக்கிற கட்டிடத்தை லீசுக்கு எடுத்திருக்கேன். அதிலேயே பின்னால ஒரு ரூம்ல குடியிருக்கேன். இன்னும் ஒரு வாரத்தில ஓட்டல் வேலைசெய்ய ஆரம்பிக்கும். பணம் வர வர ஊருல கடனை அடைக்கணும்."

தொழில்நுட்ப அறிவால் பிசினெசில் வெற்றிபெற்ற பல இளைஞர்கள் கதை படித்திருக்கிறேன். வியாபார நுணுக்கத்தால் ஓட்டல் தொழிலில் உயர்ந்தோரும் உண்டு. ஆனால் இவன்மாதிரி ஒருத்தன் வாழைக்காய் பஜ்ஜி டெக்னாலஜியை வைத்து வெற்றிபெறுவது எளிதாக எனக்குத் தெரியவில்லை. தவிரவும் இவன் கூட்டாளி ஷர்மாபத்தி நான் கேள்விப்பட்டது அவ்வளவு நன்றாக இல்லை. ஷர்மா தொடங்காத ஓட்டல் இல்லை. சின்ன இடத்தை வாடகைக்கு பிடிப்பான், விளம்பரம் அமர்க்களமாக இருக்கும், மெனு அசத்தலா இருக்கும். முதல்நாள் இலவசமாய் ஜிலேபி தருவான்.

மூணே மாசத்தில் கடை மூடப்படும். வேற எங்காவது வேறு பெயரில் மீண்டும் தொடங்குவான். அவன் கடையில் சாப்பிட்டவர்கள் மோசமான உணவுத்தரத்தை திட்டித் தீர்ப்பார்கள். எனக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. பாவம் பொன்னையன், மிகவும் அப்பாவியாக இருக்கிறான்!

"வெற்றிபெற வாழ்த்துகள். ஓட்டல் பிசினெஸ்ல ஜாக்கிரதையா இரு. பணம் மெதுவாத்தான் வரும்" என்றுதான் சொல்ல முடிந்தது.

"பணம் பண்ணாம நான் போகமுடியாது. பண்ணியாகணும்டா" என்றான் ஒரு வெறியோடு.

"ஆமா. ஏன் ஒரு உடைசல் ரெஃப்ரிஜரேட்டரைக் கட்டிகிட்டு அழற? புதிசா ஓட்டல் தொடங்கறவன் டக்குனு புதிசா வாங்கிப் போட வேண்டாமா?"
"இதெல்லாம் பாபி ஷர்மாவோட ஏற்பாடு. ஓட்டல்ல வேலை செஞ்சாங்களே அவங்க அவன் ஆளுங்கதான். முன்னபின்ன தெரியாத ஷர்மா எனக்கு ஹெல்ப் பண்றான். நல்ல மனசு. தெரிஞ்சவங்ககூட இவ்ளோ செய்வாங்களாங்கறது சந்தேகம்தான்."

அவன் என்னைக் குத்திக் காட்டுகிறானோ என்றுகூட லேசாக எனக்கு ஒரு ஐயம் வந்தது. "கவலைப்படாதே. வெரி குட். எல்லாம் சரியா வரும். ஆமா. ஒபாமா எப்ப இங்க வந்தார்? ஓட்டல்ல உனக்கு மாலை போடறாப்பல படம் மாட்டியிருக்கே" என்றேன்.

"அது சும்மா பப்ளிசிட்டிக்கு. பாபி ஷர்மா ஐடியா. கட் அண்ட் பேஸ்ட் படம். ஹாலிவுட் ஆக்டர் ஆக்ட்ரெஸ் படமெல்லாம் கூட வெச்சிருக்கான். ஏடாகூடமா டிரெஸ் போட்டிருக்கிற ஒரு நடிகைக்கு நான் போளி தரமாதிரி ஒரு படம் காட்டினான். 'ஏஞ்சலினா ஜோலி எடுத்துக்க ஏலக்காய் போளி'ன்னு தலைப்பு."

"அட!"

"அது வேண்டான்னுட்டேன். என் ஓட்டல்ல போளி கிடையாது. தவிர என் பெண்டாட்டிக்குத் தெரிஞ்சா ஊரைக்கூட்டி கத்தி ரகளை பண்ணுவா"

ஒருவாரம் கழித்து எனக்கு அஞ்சலில் ஒரு கடிதம் வந்தது. பொறையார் கஃபேயின் திறப்புவிழாவுக்கான அழைப்பிதழ். ஓட்டல் திறக்கும் நாளில் வரும் அனைவருக்கும் இலவச ஜிலேபி என்று அறிவித்தது. அதைப் படித்த என் மனைவி உடனே அதைக் கிழித்துப் போட்டாள். "உங்களுக்கு சர்க்கரைப் பண்டம் தேவையேயில்லை. காசு கொடுத்து வாங்கினாலே கண்டபடி திம்பீங்க. அதுவும் இலவசம்னா கேக்கவே வேண்டாம்" என்று விளக்கமும் கொடுத்தாள்.

நான் பதில் சொல்லுமுன் "அன்னிக்கு இர்வைன்ல பத்மா வீட்டில லலிதா சகஸ்ரநாம பூஜை. நாம் போகணும்" என்றாள். இந்த விஷயங்களில் அவள் எடுக்கும் முடிவுகளுக்கு ஆய்வு, மறுபரிசீலனை, திருத்தம், மேல்முறையீடு எதுவுமே கிடையாது. "கார்ல போறமா இல்ல, வேன்ல போறமா" என்று மட்டுமே என்னால் கேட்கமுடிந்தது.

ஒரு மாதம் கழித்து என் மனைவிக்குப் பிறந்தநாள் வந்தது. வழக்கமாக ஒரு ஓட்டல் தேர்ந்தெடுத்து டின்னருக்குப் போய் அவள் பிறந்தநாளைக் கொண்டாடுவோம். இந்தத்தடவை நான் அவளைப் பொறையார் கஃபேக்கு அழைத்துப் போக முடிவுசெய்தேன்.

பிறந்தநாளன்று மாலை "சீக்கிரம் டிரஸ் பண்ணிக்க, டின்னருக்குப் போகலாம்" என்றேன். அவள் தேடி எடுத்து ஒரு புடவையை அணிந்து சீவி சிங்காரித்துக் கிளம்பவே மாலை ஆறுமணி ஆகிவிட்டது.

"எங்கே சாப்பிடப் போகிறோம்?" என்றாள்.

"ஒரு புது ஓட்டல். நானே இதுவரை போனதில்லை. உன்னோடுதான் போகணும்னு காத்திருந்தேன்" என்று சொன்னதும் மிகவும் மகிழ்ந்தாள்.

போகும் வழியில் கடைகளில் நிறுத்தச் சொல்லி கத்தரிக்காய், கிராம்பு, காரடையான் நோன்பு சாமான்கள் என்று பலசரக்குகள் வாங்கிக்கொண்டு போக வேண்டியிருந்ததால் பொறையார் கஃபே தெருவுக்குப் போகும்போது எட்டுமணி ஆகிவிட்டது.

தெருவில் பொறையார் கஃபேயைக் காணோம். விளம்பரப் பலகையைத் தேடி இரண்டு தடவை அந்தக் கோடியிலிருந்து இந்தக் கோடிவரை போனேன். கண்டுபிடிக்க முடியவில்லை.

"இங்கதான் இருக்கணும். இப்ப எங்க போச்சு" என்று நான் சொல்ல, என் மனைவிக்கு அசாத்தியக் கோபம் வந்தது. "ரிசர்வ் பண்ணறச்சே சரியா விலாசம் கேட்டுக்கலியா" என்றாள். 'நான் ரிசர்வேஷனே செய்யவில்லை' என்று இப்போ போய்ச் சொல்ல எனக்குப் பயமாக இருந்தது.

உத்தேசமாய் முன்பு பொறையார் கஃபே இருந்த இடத்தில் காரை நிறுத்திவிட்டு கடையருகில் போனேன். வாசல் மூடப்பட்டு சன்னல்கள் மரப்பலகையால் மூடப்பட்டிருந்தன. "பல்லடுக்குக் குடியிருப்பு கட்டுமான வேலை விரைவில் தொடங்கும் - டேவிட் பில்டர்ஸ்" என்ற அறிவிப்பு ஒட்டியிருந்தது.

"பேஷ், ஓட்டலே இன்னும் கட்டலியா" என்றாள் மனைவி.

"ஓட்டலை மூடிட்டாங்கபோல. ரெசிடென்ஷியல் ஃப்ளாட்ஸ் கட்டப் போறாங்களாம்."

"அப்ப இப்படியே நடைபாதைல படுத்துக்கலாமா. ஃப்ளாட் கட்டி முடிச்சப்பறம் ஒண்ணு வாங்கி வாடகைக்கு விடலாமா?" அவள் குசும்பு எனக்கு முதலில் பிடிபடவில்லை. புரியாமல் "முதல்ல ஃப்ளாட் வரட்டும். வெலை என்ன எப்படி இருக்குன்னு தெரிஞ்சிண்டு.." என்று சொல்லப்போக, "ஏதாவது ஓட்டலை கூப்பிட்டுத் தொலைங்க எனக்குப் பசி உயிர் போகிறது" என்று கத்தினாள்.

எந்த ஓட்டலைக் கூப்பிட்டாலும் இடமில்லை, வெயிட்டிங் டைம் இரண்டுமணி நேரம் என்றார்கள்.

கடைசியில் 'டாக்கோ பெல்' விரைவுணவுக் கடையில் வெஜ்ஜி பரிட்டோ வாங்கி சாப்பிட்டோம். "பிரமாதம். அமெரிக்கால மனைவியோட பிறந்தநாளை மூணு டாலர் பரிட்டோவில் கொண்டாடி முடித்த ஒரே ஆள் நீங்கதான். இதைத் தின்னு தொலைக்கணும்னு நான் ஜிகுஜிகுன்னு பட்டுப்புடவை வேற கட்டிண்டு வந்து தொலைச்சேன்" என்ற என் மனைவியின் புலம்பலைப் பொறுத்துக்கொண்டேன்.

பொறையார் கஃபே மறைந்த மாயம் எனக்கு புலப்படவில்லை. சில வாரங்கள் கழித்து அமெரிக்காவில் வெளியாகும் ஒரு இந்தியப் பத்திரிக்கையில் பாபி ஷர்மா மீது இன்சூரன்ஸ் கம்பெனி தொடர்ந்த வழக்கு பற்றின விவரம் கண்டேன். தாஜ் ஓட்டல், காஷ்மீரி ஹவுஸ், டார்ஜிலிங் டாபா, பாம்பே பகோரா, பொறையார் கபே என்று பல பெயர்களில் ஓட்டல் நடத்தி ரெஃப்ரிஜரேட்டர் ஒயர்களில் நெருப்புப் பிடித்துவிட்டதால் தீ விபத்து என்று அடிக்கடி நஷ்டஈடு கேட்டுப் போலி கிளெய்ம்கள் போட்டதற்கான வழக்கு அது.

மூர்த்தியிடம் பேசினபோது பொன்னையன் ஊருக்குத் திரும்பிவிட்டதாகவும் அங்கே புதிசாய் வீடு கட்டியிருப்பதாயும் சொன்னான். போலி கிளெய்ம் போட்டு காசு சம்பாதித்துவிட்டான் என்று எனக்குப் பொன்னையன் மேல் ஒரு வெறுப்பு எழுந்தது.

ஒரு வருடம் கழித்து இந்தியா போனபோது நானே அவனைப் பார்க்கவும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. சீர்காழியில் ஒரு கல்யாணத்தில் அவனைச் சந்தித்தேன். "அவசியம் வீட்டுக்கு வரணும்" என்று விடாப்பிடியாய் என்னைக் காரில் அழைத்துப் போனான். போகும் வழியில் தன் வீட்டைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தான். "அமெரிக்காலேருந்து வரச்சே ஒரு வாக்வம் கிளீனர் வாங்கிட்டு வர மறந்துட்டேன். வீட்ல கார்ப்பெட் போட்டிருக்கேன் அஞ்சு லச்சம் ஆயிடுச்சு."

வீடு பார்க்க நன்றாகத்தான் இருந்தது. வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.

"அமெரிக்கால சம்பாதிச்சுக் கட்டினதுடா" என்றான்.

"இன்சூரன்ஸ்ல சுருட்டின பணம்தானே" என்றேன், இகழ்ச்சிக் குரலில். அவன் முகம் மாறியது.

"இல்லடா. நடந்தது உனக்கு தெரிஞ்சிருக்க நியாயமில்ல. பொறையார் கஃபே தொடங்கி ஒரு வாரம் கூட்டமே வரலை. சிட்டி ஹெல்த் இன்ஸ்பெக்டர் ஒருத்தன் வந்து, எண்ணை பாத்திரத்துக்கு மூடி இல்லை, பஜ்ஜியைத் திறந்த தட்டுல வெச்சது தப்பு, பாத்ரூம்ல சோப் இல்லைன்னு ஏகப்பட்ட புகார் சொல்லி லைசென்ஸ் கேன்சலாயிடும்னு பயமுறுத்தினான். பாபி ஷர்மாகிட்ட சொன்னேன். 'கவலைப்படாதே. கொஞ்சநாள்தான். ரெஃப்ரிஜரேட்டர் வயரிங்ல தீ விபத்துன்னு காசு வாங்கிடலாம்'னு சொன்னான். அப்பத்தான் அவன் செய்யவிருந்த மோசடி வேலை முழுசாத் தெரிஞ்சிது. எனக்கு அது சுத்தமா புடிக்கல. அதுமாதிரி வர காசு நிலைக்காது. மனிசன் நேர்மையா உழைச்சு வர காசிலதான் வாழணும்னு எங்கப்பா சொல்லியிருக்கார்.

"அந்த சமயம் பில்டிங்கை லீசுக்கு விட்டவன் 'இடத்தை ஒரு அபார்ட்மெண்ட் பில்டருக்கு விற்கப் போறேன், உன் லீசைக் கான்சல் பண்ண ஒப்புக்கொண்டா, கணிசமாக் காசு தரேன்'னான். செஞ்சேன். ஷர்மா திட்டம் எனக்கு புடிக்கலன்னு தெரிஞ்சதும், ஓட்டலைத் தனக்கு விலைக்கு கேட்டான். அவன் கொடுத்ததையும் வாங்கிகிட்டு ஓட்டலை அவன் பேர்ல மாத்திக் கொடுத்திட்டு ஊருக்கு வந்துட்டேன். அந்தக் காசுல கட்டின வீடுதான் இது. பொறையார் கஃபே அங்க இன்னும் நடக்குதா? போனியா அங்க? திரும்பறதுக்கு முன்னால உன் வீட்டுக்கு ஒரு தடவை டாக்சில வந்தேன். அப்ப நீ அங்க இல்ல. ஹவாய்க்கு வெகேஷன் போயிருக்கிறதா பக்கத்து வீட்டுல சொன்னாங்க."

பொறையார் ஓட்டல் மூடப்பட்டதையும் ஷர்மா மேலுள்ள வழக்கைப் பற்றியும் சொன்னேன்.

"நல்லவேளை நான் தப்பு செஞ்சு மாட்டிக்கல. காசு சம்பாதிச்சாச்சு. ஓகோன்னு இல்லாட்டாலும் பொறையார் ஓட்டல் இங்கே ஒழுங்கா ஓடுது. முன்னைப்போல மாட்டுச்சந்தை இல்லை. ஆனா உழவர்சந்தை நடக்கிற அன்னிக்கு நல்ல கூட்டம் வருது. இங்கயும் அப்பப்ப லோக்கல் ஹெல்த் இன்ஸ்பெக்டர் தொல்லை இருக்குதான். ஆனா நாலு பஜ்ஜியை ஃப்ரீயாக் கொடுத்து வாயை அடைச்சிட்டால், நாம பஜ்ஜியைத் திறந்து வெச்சமா, தரையில வெச்சமா, தலையில வெச்சமான்னு கண்டுக்க மாட்டானுக."

எல்லே சுவாமிநாதன்
More

ஆனந்தாசனம்
Share: 
© Copyright 2020 Tamilonline