Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம் | சமயம்
கவிதைப்பந்தல் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | முன்னோடி | Events Calendar | பொது | நலம்வாழ | சாதனையாளர் | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | முன்னோட்டம்
Tamil Unicode / English Search
நேர்காணல்
வா.மணிகண்டன்
ராஜ் சீலம்
- வெங்கட்ராமன் சி.கே., மீனாட்சி கணபதி|ஏப்ரல் 2016||(1 Comment)
Share:
ஆந்திரப் பிரதேசத்தின் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த திரு. ராஜ் சீலம், இன்றைக்கு ஆர்கானிக் உணவுப்பொருட்களைப் பயிரிடுதல், விற்பனை செய்தல், புதிய பயிர்களை உருவாக்குதல் ஆகியவற்றில் முன்னணியில் இருக்கும் சிரேஷ்டா ஆர்கானிக் பயோப்ராடக்ட்ஸ் பி.லிட். (www.sresta.com) நிறுவனத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர். இந்தியாவின் பாரம்பரியப் பயிர்கள் மற்றும் சிறுதானியங்களை மீட்டெடுப்பதிலும் மிகுந்த ஆர்வத்தோடு செயல்பட்டு வருகிறார். 24Mantra என்ற வணிகப்பெயரில் இவற்றைச் சந்தைப்படுத்துகிறார். சிரேஷ்டா, இந்தியாவின் 15 மாநிலங்களில் 25,000 விவசாயிகளை மீண்டும் வேளாண்மையில் நம்பிக்கைகொள்ள வைத்துள்ளது. சிரேஷ்டாவின் வழிகாட்டலில் அவர்கள் 160,000 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்கிறார்கள். அதே நேரத்தில் நச்சுப்பொருளற்ற, உடலுக்கு வலுச்சேர்க்கும், சுவையான உணவுப் பண்டங்களை நுகர்வோருக்கு வழங்குவதில் சிரேஷ்டா பெருமைகொள்கிறது. விவசாயிகள் தற்கொலை, ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் என்று இன்றைக்குப் பெரிதும் விவாதிக்கப்படும் பலவற்றைப்பற்றி முக்கியமான கருத்துக்களை ராஜ் சீலம் நம்மோடு பகிர்ந்துகொண்டார். அதிலிருந்து.....

*****


சி.கே.: விவசாயத்தில் உங்கள் பின்புலம் என்ன?
ராஜ்சீலம்: என் தந்தை ஒரு விவசாயி. இன்றைக்கும் நான் பகுதிநேர விவசாயிதான். நான் ஹைதாராபாதில் படித்தேன். விடுமுறையில் கிராமத்திற்குச் செல்லும்போது தினமும் வயலுக்குச் செல்வோம். அப்பா அந்தப் பழக்கத்தை ஏற்படுத்தியிருந்தார்.

விவசாயத்தில் பட்டப்படிப்பு படித்தேன். பின்பு அஹமதாபாத் IIMல் மேற்படிப்பு. நான் கற்ற விவசாயத்துறையிலேயே தொடர விரும்பினேன். முருகப்பா குழுமத்தின் 'பாரி நிறுவனம்' விவசாய சம்பந்தப்பட்டது. கல்லூரியில் படிக்கும்போதே அதில் வேலை கிடைத்தது. 2000மாவது ஆண்டுவரை வேலை செய்தேன். நல்ல நிறுவனம். ஆனால் அங்கு என் வேலை உரங்கள், பூச்சி மருந்துகள் விற்பனை செய்வது. அது அத்தனை நல்லகாரியம் இல்லை என உணர்ந்தேன்.

சி.கே.:ஏன்?
ராஜ்: நான் 1988ல் அந்த நிறுவனத்தில் சேர்ந்தபோது பாசிப்பயறு போன்ற அறுபதுநாள் பயிருக்கு, விவசாயிகள் பூச்சிக்கொல்லி அடிக்கும் பழக்கம் இருக்கவில்லை. நான் 2000த்தில் வேலையை விட்டபோது அதற்கு மூன்றுமுறை பூச்சி மருந்து அடிக்கும் பழக்கம் வந்துவிட்டது. எனக்கும் இந்தத் தவறில் பங்குண்டு என்று தோன்றியது.

பூச்சிக்கொல்லிகளைத் கட்டுப்பாடில்லாமல் அதிகம் உபயோகப்படுத்தும் போக்கு இருப்பதை அறிந்தேன். விவசாயிகள் சந்தைக்கோ, குளிர்பதன அறைகளுக்கோ அனுப்புமுன் உருளைக்கிழங்கு போன்றவற்றை பூச்சிக்கொல்லியில் அமிழ்த்தியெடுப்பதைக் கண்ணால் பார்த்திருக்கிறேன். அவற்றில் பூச்சி இருந்தால் நல்ல விலை கிடைக்காது என்பதே முக்கியமான காரணம். அவர்கள் ஒன்று அல்லது இரண்டு ஏக்கரில் பயிரிடும் சிறு விவசாயிகள். அவர்களைக் குறைகூற முடியாது. இது என்னுள் பாதிப்பை ஏற்படுத்தியது. நான் முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் போன்றவற்றைச் சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன், குறிப்பாக 1992ம் ஆண்டுமுதல்.

காலம் கடப்பதற்குள் ஏதாவது செய்தாக வேண்டும் என்று அப்போது நினைத்தேன். 90களின் ஆரம்பத்தில் என நினைக்கிறேன், விவசாயிகள் தற்கொலை ஆரம்பமானது. ஆந்திராவில் தொடங்கி, மஹாராஷ்டிரம் பின்னர் வேறு மாநிலங்கள் எனப் பரவியது. இவை ஏன் நிகழ்கின்றன என்ற ஆராய்ச்சியில் இறங்கினேன். இந்தியாவில் விவசாயம் லாபகரமான தொழில் அல்ல என்பதை உணர்ந்தேன்.சி.கே.: விவாசாயிகள் தற்கொலைக்குக் காரணம் என்ன?
ராஜ்: பெரும்பாலும் விவசாய வருமானம், அவர்கள் செலவழித்ததைக்கூடத் திருப்பித் தரவில்லை. அரசாங்கம் உட்பட எல்லோரும் விளைச்சலை அதிகரிக்க ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லிகளும்தான் சிறந்த வழி என சிபாரிசு செய்கின்றனர். விவசாயிகள் மிக அதிக வட்டிக்குக் கடன்வாங்கி இவற்றைப் பயன்படுத்துகின்றனர். அதற்குத் தகுந்த விளைச்சலும், வருமானமும் இல்லை. இந்தியாவோ, அமெரிக்காவோ எங்கானாலும் விவசாயம் ஒரு சூதாட்டம்தான். இயற்கைசார்ந்த தொழில். மழை இல்லாவிட்டாலும் பிரச்சனை, அதிகமானாலும் பிரச்சனை.

இந்தத்தொழிலில், குறிப்பாக இந்தியாவில், பெரிய விவசாயிகள்தான் ஓரளவு தாக்குப்பிடிக்க முடியும். சிறுவிவசாயிகளுக்கு - இரண்டு, மூன்று, ஐந்து ஏக்கர் வைத்திருப்பவர்களுக்கு - மிகவும் கடின வாழ்க்கைதான். மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் ஒரு விளைச்சல் பொய்த்தாலும் எல்லாம் போய்விடும். கடன்சுமை ஆண்டுக்கு ஆண்டு ஏறிக்கொண்டே போவதுதான் விவசாயிகளின் தற்கொலைக்குக் காரணம் என நினைக்கிறேன்.

இரண்டாவது விஷயம், செலவழித்த பணத்தைச் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசரத்தில் அவர்கள் சில அடிப்படை விஷயங்களை காலப்போக்கில் மறந்துவிட்டனர். ஒவ்வொரு பயிரையும் விதைக்க ஒரு காலம் அதற்கான மண்வகை என்று உள்ளது. அனுபவம் வாய்ந்த கிராமத்துப் பெரியவர்களிடம் கேட்டால் சொல்வார்கள். விஞ்ஞானமும் இதைத்தான் சொல்கிறது. பருத்தியை எடுத்துக்கொண்டால் கரிசல் மண்ணில் அது நன்கு வளரும். பருத்தி நல்ல வருமானம் கொடுக்கும் என்பதால் செம்மண்ணிலும் அதைப் பயிர்செய்ய முயல்கின்றனர். இதில் இழப்பு ஏற்படும் அபாயம் மிகமிக அதிகம்.

நம்மிடம் இருப்பதைத்தான் சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும். அதை வேறொன்றாகத் திடீரென மாற்றிவிட முடியாது. அதிகம் சம்பாதிக்கும் முயற்சியில் விவசாயிகள் இதை மறந்துவிடுகின்றனர்.

என் மனமாற்றத்திற்கு மூன்றாவது காரணம், 1999ல் என் தந்தைக்குப் புற்றுநோய் இருப்பது தெரிந்தது. குடும்பத்தை கவனிப்பதற்காக வேலையை விட்டுவிட்டேன். தந்தையின் நோய் குறித்து மேலும் தோண்டித் துருவியபோது, இந்தியாவில் புற்றுநோய் விபரீதமாக அதிகரித்துள்ளதை அறிந்தேன்.

பூச்சிக்கொல்லிகள் இதற்கு முக்கியக் காரணம். சுற்றுச்சூழல் மாசுபடுதலும் காரணம். அதனால், எனக்கு வாய்ப்பும், போதிய பணமும் கிடைக்கும்போது இதற்கு ஏதாவது செய்யத் தீர்மானித்தேன்.கே: சிரேஷ்டாவை எப்போது தொடங்கினீர்கள்?
ராஜ்: வேலையை விட்டபின், சொந்தமாகச் சில தொழில்கள் தொடங்கினேன். அவற்றை விற்றபோது கொஞ்சம் பணம் கிடைத்தது. அப்போது நான் கனவு வாழ்க்கையை வாழ முடிவுசெய்தேன்.

2004ல் நானும், என் சக ஊழியர் பிரசாத் என்பவரும் சேர்ந்து 'சிரேஷ்டா' கம்பெனியைத் தொடங்கினோம். நிறைய மார்க்கெட் ரிசர்ச் செய்தோம். அப்போது இந்தியாவில் யாருக்கும் இயற்கை விவசாயம் பற்றித் தெரிந்திருக்கவில்லை. அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்பவர்களுக்கு ஓரளவு தெரிந்திருந்தது. ஆனால் தேயிலை, காஃபி மற்றும் சில மசாலாப் பொருட்கள் மட்டுமே ஏற்றுமதி செய்தார்கள்.

விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் பலன்பெற, உள்ளூர்ச் சந்தையை மேம்படுத்துவது அவசியம் என உணர்ந்தோம். பருப்பு, அரிசி, மசாலா, எண்ணை என நாம் தினசரி உண்ணும் உணவுகளுக்கானதை நான் 'உள்ளூர்ச் சந்தை' என்று குறிப்பிடுகிறேன். மேற்கத்திய சந்தை ஏற்றுமதிக்கானது. எங்கள் சந்தை ஆராய்ச்சி (market research) முடிவுகள் சாதகமாக இல்லாதபோதும், ஒரு நம்பிக்கையின் அடிப்படையில்தான் இதில் இறங்கினோம்.

'பொதுமக்களும் சுகாதாரத்தில் அக்கறை காட்டத் தொடங்கியுள்ளனர். நாம் தொடங்குவோம்' என்று சொல்லி இதில் இறங்கினேன். எங்களது முதல் திட்டம் ராஜஸ்தானின் நாவல்கர் என்னும் இடத்தில் தொடங்கியது. அங்கு இன்னும் 15,000 ஏக்கர் நிலம் எங்களுக்கு உள்ளது.

கே: ராஜஸ்தானை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?
ப: ஏற்கனவே இயற்கை விவசாயம் எங்கெல்லாம் நடைபெறுகின்றது எனப் பார்த்தோம். ராஜஸ்தான், மஹாராஷ்டிரா போன்றவற்றில் சில இடங்களில் நடப்பதை அறிந்தோம். நான் பலரை அதற்காகச் சந்தித்தேன். ஆனால் நம்மாழ்வாரைச் சந்தித்ததில்லை. இயற்கை விவசாயத்தில் அவர் குறிப்பிடத்தக்கவர். ஆனால் அவரைப் பின்பற்றிய பலரைச் சந்தித்திருக்கிறேன். உத்தராகண்ட் மாநிலத்தில் பல விவசாயிகளைச் சந்தித்து அவர்களது வழிமுறைகளை அறிந்தேன்.
கே: அவை உங்களது நிறுவனத்தின் தொடக்ககாலம் இல்லையா?
ப: ஆமாம். 2003-04 ஆண்டுகளில். கம்பெனி தொடங்குவதற்கு முன்னும், தொடங்கிய பின்னரும், இயற்கை விவசாயிகளின் ஏன் செய்கிறார்கள், எப்படி வெற்றிபெறுகின்றனர் என்பதைக் கற்க முயற்சி செய்தேன். எனக்கு நம்பிக்கை இருந்தது. ஏனென்றால், எங்கள் பகுதியைச் சுற்றிய 150 கி.மீ வட்டாரத்தில் என் தந்தைதான் சிறந்த விவசாயி. மற்றவர்கள் உபயோகிப்பதில் பாதியளவு உரம்தான் உபயோகிப்பார். மூன்று பயிர்களுக்கு ஒருமுறைதான் பூச்சிமருந்து தெளிப்பார். முற்றிலும் அவற்றைத் தவிர்த்துப் பயிர் செய்யமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.

கே: உங்கள் தந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்றீர்களே?
ப: ஆமாம். ஒரு வருடத்தில் இறந்துபோனார். அதற்கு 20 நாள் முன்னால்கூடப் பிடிவாதமாக வயலுக்குச் சென்றார். மிகவும் பலவீனமாக இருந்தார். பின் அவர் மருத்துவமனையில் கடைசிமுறையாக அனுமதிக்கப்பட்டார். பலவீனமான அந்த நிலையில்கூடப் பண்ணையைப் பற்றியும் தொழிலாளிகளைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தார்.

கே: விவசாயத்தைக் கல்லூரியில் படிக்க ஏன் விரும்பினீர்கள்?
ப: அதற்குச் சந்தர்ப்பசூழலும் பாதிக்காரணம். 25, 30 வருடங்களுக்குமுன் எல்லோரும் மருத்துவம், பொறியியல் படிக்கவே விரும்பினர். நானும் மருத்துவ நுழைவுத்தேர்வு எழுதினேன். இரண்டு மதிப்பெண்கள் குறைந்ததால் இடம் கிடைக்கவில்லை. அப்பொழுது மரபியல், வேளாண்கல்வி இரண்டிலும் இடம் கிடைத்தது. சிலர் வேளாண் கல்வி படித்தால் அரசாங்கச் சேவையில் (civil service) நுழைவது எளிது எனக் கூறியதால் இத்துறையைத் தேர்ந்தெடுத்தேன். (புன்னகைக்கிறார்). பட்டப்படிப்பில் சேர்ந்தவுடன் எனக்கு விவசாயத்தில் மிகுந்த ஈடுபாடு வந்துவிட்டது.

சி.கே.: உணவுக்கும், உடலுக்கும் இடையே உள்ள தொடர்பைப் பற்றி உங்கள் எண்ணம் என்ன?
ராஜ்: ஆயுர்வேதம் உணவே மருந்து என்கிறது. சரியான உணவைச் சரியான விகிதத்தில் உண்டால் அதற்கே நோய்தீர்க்கும் சக்தி உண்டு. உணவு வாழ்க்கையின் முக்கியமான பங்கு. மேலும் சாப்பிடும் நேரம் குடும்பத்தினரிடம் பிணைப்பை ஏற்படுத்தும் நேரம். உண்பது ஒரு மகிழ்ச்சியான விஷயமாக இருக்க வேண்டுமே தவிர தண்டனையாக இருக்கக் கூடாது. உண்ணும்போது எந்தக் குற்றவுணர்வும் இருக்கக் கூடாது.சி.கே.: சரி, 'சிரேஷ்டா' பயணத்தைத் தொடருவோமா?
ராஜ்: அது தொடங்கிய பன்னிரண்டு வருடங்கள் ஒரு தேடலாகவே இருக்கிறது. ஏனென்றால், இதைச் செய்தால் இந்தப் பலன் கிட்டும் என்று எங்கும் எழுதி வைக்கப்பட்டிருக்கவில்லை.

ராஜஸ்தானின் நாவல்கர் பகுதியில் கோதுமை பயிர் செய்வார்கள். அங்கே ஒரு கிராமத்தில் ஒரு விவசாயி எங்களை வீட்டுக்கு அழைத்துச் சப்பாத்தி பரிமாறினார். அத்தனை சுவை! நான் எப்படிச் செய்தீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் சிறிது கோதுமை மணிகளைக் கொண்டுவந்து காண்பித்து “இது அபூர்வமான வகை. சொந்த உபயோகத்துக்கு மட்டுமே பயிரிடுகிறோம். இவை விளைய நாள் எடுக்கும், மகசூலும் சற்றுக் குறைவு” என்றார். ஆனால் அதன் சுவையோ சூப்பர். நாங்கள் அவரிடம் எங்களுக்கு இதைப் பயிரிட்டுத் தரமுடியுமா எனக் கேட்டோம். லாபம் பெற முடியுமானால் செய்வதாகக் கூறினார். நாங்கள் அதிகப்பணம் கொடுக்க ஒப்புக்கொண்டதால் அந்தப்பகுதியில் எல்லா விவசாயிகளும் இதைப் பயிர்செய்து கொடுக்கின்றனர்.

எங்களது துவரம்பருப்பு மஹாராஷ்டிராவின் விதர்பா பகுதியிலிருந்து வருகிறது. விதர்பாவின் தட்பவெப்பம் அந்தவகை பருப்புக்கு அதிகச் சுவையைக் கொடுக்கிறது. ஒவ்வொரு உணவுப் பொருளுக்குப் பின்னும் ஒரு கதை இருக்கிறது. சிலவற்றின் சுவையைச் சாப்பிட்டவுடனேயே உணரமுடியும். சிலவற்றை ஒரிரு மாதங்கள் உபயோகித்துவிட்டால், பின்னர் நாம் முன்பு சாப்பிட்ட வகைகளுக்குத் திரும்புவது கடினம். இது ஒரு பெரிய கண்டுபிடிப்பு. எங்களது சீரகம் ராஜஸ்தானின் பாலைவனப் பகுதியில் விளைகிறது. ஒவ்வொரு நாளும் புதியதாக ஏதாவது கற்கிறோம். இது ஒரு வசீகரமான அனுபவம். தற்சமயம் 15 மாநிலங்களில் பயிர் செய்கிறோம். வெவ்வேறு பயிர்களுக்கு, ஒவ்வொரு மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகள்!

கே: நீங்கள் இந்த விவசாய சமுதாயங்களை எவ்வாறு கண்டுபிடித்தீர்கள்? தற்செயலாகவா அல்லது திட்டமிட்ட தேடுதலின் விளைவாகவா?
ப: தேடுதல்தான். பல ஊர்களுக்குச் சென்று, பலரைச் சந்தித்துப் பேசித் தெரிந்து கொண்டோம். இப்பொழுது அதிகம் பயணம் செய்வதில்லை. இப்போது எது எங்கு பயிராகிறது என்கிற வரைபடம் தயாரித்து வைத்திருக்கிறோம்.

எங்களுக்கு எந்தப் பகுதி விவசாயி ஆர்கானிக் சாகுபடியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டுள்ளார் என்பது தெரியும். இவர்கள் முக்கியமானவர்கள். நாங்கள் வேறு இடங்களுக்குச் செல்வதில்லை. ஏனென்றால் நமது கண்காணிப்பெல்லாம் ஓர் எல்லைவரைதான். நாங்கள் தரக்கட்டுப்பாடு வைத்திருந்தாலும் விவசாயிகளிடம் நேர்மை இருப்பது மிக அவசியம்.

கே: ஒரு விவசாயி தன் நிலத்தில் உங்களுக்குத் தேவையானதைப் பயிர் செய்ய விரும்பினால், அவர் என்ன செய்ய வேண்டும்?
ப: நாங்கள் ஒவ்வொன்றையும் ஒரு ப்ராஜெக்டாகப் பிரித்து நடத்துகிறோம். இந்த வருடம் 15 மாநிலங்களில் 160,000 ஏக்கரில் பயிர் செய்கிறோம். கிட்டத்தட்ட 40 திட்டங்கள் நடப்பில் உள்ளன. ஒவ்வொரு திட்டமும் 15-20 கி.மீ. சுற்றுவட்டாரத்தில் நடைபெறுகிறது. நாங்கள் ஒவ்வொரு 200, 250 விவசாயிக்கும், எங்களிடம் பயிற்சிபெற்ற களப்பணியாளர் ஒருவரை நியமிக்கிறோம். பெரும்பாலும் அந்தந்தப் பகுதி ஆட்களையே தேர்ந்தெடுத்துப் பயிற்சி கொடுக்கிறோம். அவர்களில் பலரும் விவசாயப் பின்னணி உள்ளவர்கள். அவர்கள் அங்கேயே தங்கியிருப்பார்.

கே: உள்ளூர் மக்களை இதில் ஈடுபடுத்துவதால் இது இருவழிப்பாதை, அல்லவா?
ப: ஆமாம். எங்கள் பங்களிப்பும் உண்டு. அவர்களும் கற்கிறார்கள். எங்களது ஊழியர் விவசாயிகளுக்குப் பயிற்சி அளிப்பார். தினமும் வயல்களுக்குச் செல்வார். சமீபத்தில் mobile apps அறிமுகம் செய்துள்ளோம். அவர்களுக்கு செல்பேசி கொடுத்துள்ளோம். அவர்கள் செல்லும் வயல்களது GPS location is mapped. ஒரு ஊழியர் செல்ஃபோனுடன் வயலுக்குச் சென்றால், அந்த வயலைப்பற்றிய தகவல், அவர் செல்லும் நேரம் எல்லாம் எங்களுக்கு உடனடியாக வரும் (farm data pop-up). உடனே அந்த வயல்காரருக்குக் குறுந்தகவல் அனுப்புவோம். எங்கள் ஊழியர் பயிரில் நோய் கண்டிருந்தால் படமெடுத்து உடனடியாக அனுப்புவார். பிரச்சனைகளைத் தீர்க்கப் பயிற்சி அளிக்கப்பட்டிருந்தாலும், சில சமயம் எங்களது உதவி தேவைப்படும். எங்கள் மையக்குழுவி விஞ்ஞானிகள் அவர்களுக்கு உதவுவார்கள்.

கே: ஓ! உங்களிடம் ஆராய்ச்சி மையமும் உள்ளதா?
ப: ஆமாம். பண்ணை ஆராய்ச்சி மையம் உள்ளது. ஒரு விவசாயியிடம் போய் இயற்கை விவசாயம்தான் நல்லது என்று சொல்லிவிட முடியாது. அது அவர்களது வயிற்றுப்பிழைப்பு. அவர்கள் ஐந்தாறு ஏக்கர் நிலத்தில் பயிரிட்டு, அந்த வருமானத்தில் அவர்களது தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்யவேண்டும். எல்லாம் சரிவர நடைபெற வேண்டும் என்ற பொறுப்பு எங்களுக்கு உண்டு. அதனால், ஆராய்ச்சி அடிப்படையில் விவசாய வழிமுறைகளை எல்லாவற்றையும் தொகுத்துள்ளோம்.

இயற்கைமுறை விவசாயத்தில் மண்புழுக்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. அவை மண்ணில் நுண் துளைகளை ஏற்படுத்தி, அதை வளமிக்கதாக ஆக்குகிறது. அவற்றை உபயோகித்து நாங்கள் இயற்கை உரங்களைத் (vermi-compost) தயாரிக்கிறோம். உத்தராகண்ட் விவசாயி ஒருவர் மேலே ஒரு பானையில் சிறுதுளையிட்டுத் தண்ணீரை நிரப்பிவிடுகிறார். அதன் அடியில் மற்றொரு பானையில் உரங்களுடன் மண்புழுக்களையும் போடுகிறார். மேலே உள்ள பானையிலிருந்து தண்ணீர் சொட்டுச் சொட்டாக இதில் விழுந்து மண்புழுக்களைக் கழுவுகின்றன. அந்த நீரை இன்னோரு பானையில் சேகரித்து செடிகளுக்குத் தெளிப்பார். இதை வெர்மிவாஷ் என்கிறோம். இப்படி விவசாயிகளின் சுவாரசியமான கண்டுபிடிப்புகளை நாங்கள் தொகுத்துவைக்க முயற்சிக்கிறோம்.

சி.கே.: ஆர்கானிக் விவசாயத்தின் அடிப்படைகள் என்னென்ன?
ராஜ்: இயற்கை விவசாயம் இரு அடிப்படை விதிகளைச் சார்ந்திருக்கிறது. முதலாவது, மண்வளத்தை அதிகரிப்பது. மண்வளம் நன்றாக இருந்தால்தான் நல்ல மகசூல் கிடைக்கும்.

இரண்டாவது, இயற்கையில் நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு. ஒவ்வொரு பூச்சி, புழுவிற்கும் மற்றொரு பூச்சியோ, ஒட்டுண்ணியோ எதிரி; ஒன்று மற்றொன்றை கட்டுக்குள் வைக்கும். எல்லாம் சரிவிகிதத்தில் இருந்தால் பிரச்சனை இல்லை. இந்தச் சமநிலையை உண்டாக்குவதுதான் இயற்கை விவசாயத்தின் அடிப்படை. இதற்குப் பல வழிமுறைகள் உண்டு. சுழற்சி முறையில் பயிர்களை வளர்ப்பது ஒருமுறை. அதாவது ஒருபோகத்தில் நெல் பயிரிட்டால் அடுத்த போகம் முற்றிலும் மாறுபட்ட ஒன்றைப் பயிரிடவேண்டும். ஒருமுறை ஆழமாக வேரோடும் பயிரை விதைத்தால், அடுத்தமுறை அதிகம் வேரோடாத பயிரை விதைக்க வேண்டும். இப்படிப் பல விதிகள் உள்ளன.

அடுத்ததாக இடுகின்ற இயற்கை உரம் நன்கு மக்கியதாக இருக்க வேண்டும். நன்கு மக்கச் செய்வதற்கு அதைக் குவித்து, மூடிவைக்க வேண்டும். வெப்பம் மிக அதிகமாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அடுத்து சுழற்சிமுறை விவசாயத்தில் தானியங்களையும், பருப்பு வகைகளையும் மாற்றி மாற்றிப் பயிர் செய்வோம். பருப்புவகைகள் நிலத்தில் நைட்ரஜனை அதிகரிக்கும். தானியங்கள் நைட்ரஜனை எடுத்துக்கொள்ளும்.
கே: விதைகளின் முக்கியத்துவம் பற்றி சொல்லுங்கள். இதில் உங்கள் நிறுவனத்தின் சித்தாந்தம் என்ன?
விதைகள் மிக முக்கியம். நாங்கள் கூடுமானவரை விவசாயிகளை அவர்கள் வட்டாரத்திலேயே சேமித்து வைக்கப்பட்ட விதைகளையே உபயோகிக்கச் சொல்கிறோம். சில விவசாயிகளைத் தேர்ந்தெடுத்து அப்பகுதியிலுள்ள அனைவருக்கும் விதை உற்பத்தி செய்ய ஊக்குவிக்கிறோம். இதனால் தூய்மை பாதுகாக்கப்படுகிறது. மேலும் பயிர்வகைகள் மிகமுக்கியம். நமது பாரம்பரிய தானியவகைகள் சுவை மிகுந்தவை. ஆரோக்கியமானவையும் கூட. விளைச்சல் சற்றே குறைவாக இருக்கலாம். ஆனால் அவற்றுக்கு நோயெதிர்ப்புத் தன்மை அதிகம். பூச்சிகளும் அதிகம் பாதிக்காது. ஆகவே, பூச்சிமருந்துகள், ரசாயனங்கள் இவற்றின் பயன்பாடும் குறைகிறது.

எங்களது Rice-For-Life திட்டத்தின் கீழ், தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்து, கப்பக்கார், முட்டக்கார் போன்ற தமிழ்நாட்டின் பல பழைய நெல்வகைகளை உயிர்ப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டோம். இவ்வகைகளை மக்கள் மறந்தே போய்விட்டனர். இரண்டு மூன்று வருடங்கள் இவை கடைகளில் கிடைப்பதற்கு வேண்டிய முயற்சிகள் எடுத்தோம். விற்பனை ஆகுமானால் விவசாயிகள் அவற்றைப் பயிரிடுவார்கள்.

கே: தரக்கட்டுப்பாடு பற்றிக் கூறுங்கள்.
ப: இதை இரண்டு பகுதியாகச் செய்கிறோம். முதலாவது, இயற்கையாகப் பயிர்செய்வதில் நேர்மை குன்றாமை; இரண்டாவது உணவுப்பாதுகாப்பு. மக்கள் எங்களது 24Mantra பொருட்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்றால், அவர்களுக்குச் சரியானதைத்தான் செய்கிறோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றே அர்த்தம்.

முதல் கட்டம், சரியான இடம், சரியான விவசாயி இவற்றைத் தேர்ந்தெடுப்பது. பின்னர் 5 கட்ட சோதனை உண்டு. விவசாயிகளைச் சிறு சிறு குழுக்களாகப் பிரித்து, யாரேனும் எங்களது விதிமுறைகளை மீறினால் எங்களுக்குத் தெரிவிக்கச் செய்வோம். விதிமீறலை அந்தக் குழு எங்களுக்குத் தெரிவிக்கத் தவறினால் குழுவினர் அனைவருக்கும் தண்டனை உண்டு. ஏனெனில் இயற்கை விவசாயச் சான்றிதழ் பெற ஒருவர் தொடர்ந்து 4 வருடம் இயற்கை விவசாயம் செய்ய வேண்டும். சான்றிதழ் பெற்றவரிடம்தான் நாங்கள் வாங்குவோம். வயலில் முன்பு தெளிக்கப்பட்டிருந்த பூச்சிக்கொல்லி, ரசாயனம் வெளியேற 4 ஆண்டுகள் ஆகின்றன. அந்த 4 வருடகாலம் மிக முக்கியம். குழுவில் ஒருவர் செய்யும் முட்டாள்தனத்தினால் மற்றவர்கள் தண்டனை பெறகூடாது என அனைவரும் கவனமாக இருப்பார்கள்.

இரண்டாவது கட்ட சோதனை, எங்களது களப்பணியாளர்; அவருக்குக் கீழுள்ள 200 விவசாயிகளையும் அவர் கண்காணிப்பார். ஒவ்வொரு வயலுக்கும் மாதத்தில் ஓரிரு முறை சொல்வார்.

கே: ஓ! எவ்வளவு தூரம் இருந்தாலுமா?
ப: ஆமாம். 200 விவசாயிகளும் 15-20 கி.மீ. சுற்றுவட்டாரத்தில் இருப்பார்கள். தினமும் காலை இருசக்கர வாகனத்தில் வயல்களுக்குச் சென்று, விவசாயிகளுக்குப் பயிற்சி அளிப்பதோடு ஏதாவது பிரச்சனை உள்ளதா எனப் பார்வையிடுவார்கள்.

மூன்றாவது உள்தணிக்கை. நான் உங்களிடம் விவசாயியாகப் பணியாற்றுகிறேன் என வைத்துக் கொள்வோம். நான் உங்களது நண்பனாகிவிட்டால் நான் செய்யும் தவறுகளை நீங்கள் கண்டுகொள்ளாமல் போகலாம். அதனால் கர்நாடகத்தில் வேலை செய்யும் ஊழியர் தமிழ்நாட்டிற்குச் சென்று ஆய்வு செய்வார். தற்சமயம் 25,000 விவசாயிகள் உள்ளனர். அவர்கள் அனைவரும் வருடத்தில் இருமுறை தணிக்கை செய்யப்படுவர். பிறகு சான்றிதழ் வழங்குவார்கள்.

கடைசியாக விவசாயிகளிடமிருந்து பொருட்களை வாங்குமுன், அவர்களிடமிருந்து மாதிரிப் பொருட்களைச் சேகரித்துப் பரிசோதனை செய்வோம். அவற்றில் பூச்சிக்கொல்லிகள் இருக்கின்றனவோ எனப் பரிசோதிப்போம். இந்தியாவில் 182 வகை ரசாயனங்களுக்குப் பரிசோதிப்போம். ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி என்றால் 350 ரசாயனங்களுக்குப் பரிசோதனை செய்யப்படுகிறது.

கே: உங்களது பரிசோதனைக் கூடத்திலா?
ப: இல்லை. பரிசோதனை செய்ய விலையுயர்ந்த கருவிகள் தேவைப்படுகின்றன. அதனால் வெளிப்பரிசோதனைக் கூடங்களில் செய்கிறோம்.

சி.கே.: நீங்கள் தீவிரமாக விரிவாக்கம் செய்யவில்லை என நினைக்கிறேன்.
ராஜ்: உண்மைதான். எங்கள் நிறுவனம் தொடங்கி 12 வருடம் ஆகிறது. முதல் ஆறேழு வருடங்கள் உற்பத்தியாளர்களை உருவாக்குவதில் செலவிட்டோம். பொருட்களில் எந்தவிதமான நச்சுப்பொருளும் கலக்கக்கூடாது என்பதற்காக உணவு வல்லுனர் குழு ஒன்றை நியமித்துள்ளோம். நாங்கள் ISO 22000 என்னும் உணவுத் தரக்கட்டுப்பாட்டு முறையைப் பின்பற்றுகிறோம்.

சி.கே.: லாபமும், விரிவாக்கமும் அடுத்த கட்டம். அதற்கான நீங்கள் உற்பத்திப் பின்புலத்தை உருவாக்குவதில் முனைந்திருக்கிறீர்கள், அல்லவா?
ராஜ்: ஆமாம். எங்களுக்கு விற்பவர்கள் சிறுவிவசாயிகள் என்பதால், அவர்கள் அறுவடை செய்ததுமே நாங்கள் அதை வாங்க வேண்டும். அவர்களுக்கு சேமிப்பு வசதிகள் கிடையாது. ஏதாவது தவறு ஏற்பட்டு, அவர்களிடம் சரக்கு இல்லையென்றால், எங்களிடம் ஓரிரு மாதங்களுக்கு விற்பனைக்குப் பொருட்கள் இருக்காது. ஆனால் நாங்கள் பயனர்களுக்கு எவ்விதச் சமரசமும் இல்லாமல் பொருட்களை வழங்க விரும்புகிறோம். பொருள் தட்டுப்பாடு வரக்கூடும். பரவாயில்லை, அதற்காகச் சமரசம் செய்வதில்லை.

தற்சமயம் ஐரோப்பா, அமெரிக்கா, கனடா, நியூ ஸிலாந்து, ஆஸ்திரேலியா, மத்தியகிழக்கு நாடுகள் என 15-16 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம்.

கே: உங்கள் முயற்சிகளின் பலன் என்பதாக எதைப் பார்க்கிறீர்கள்?
ப: முதலாவதாக விவசாயிகளுக்கு எப்படிச் சிறந்த வழிகளைக் கையாண்டு உற்பத்தியைப் பெருக்குவது; பூச்சிகளையும், நோய்களையும் எவ்வாறு குறைப்பது என்று ஆராய்ச்சிமூலம் கண்டறிந்தவற்றைச் சொல்லிக்கொடுக்கிறோம். இரண்டாவதாக, எங்களது விஞ்ஞானிகள் புதுப்புது பயிர்வகைகளை உற்பத்தி செய்கின்றனர். அவற்றில் விளையும் யாவும் முழுமையானதாகவும் சத்தானதாக இருக்க வேண்டும், எந்த ரசாயனமும் இருக்கக் கூடாது. மூன்றாவதாக அது சுவைமிகுந்ததாக இருக்க வேண்டும். இவை மூன்றும் ஒரு முக்கோணத்தின் மூன்று பக்கங்கள்.

சி.கே.: தொழில்நுட்பத்தை எப்படி விவசாயிகளுக்கு எடுத்துச் செல்கிறீர்கள்?
ப: எங்களது பயிற்சி பெற்ற பணியாளர்கள் விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கின்றனர். செய்முறைகளின் கையேடு ஒன்றையும் பல்வேறு மொழிகளில் தயாரித்துள்ளோம். அதைக் கொடுக்கிறோம். சில இடங்களில், பயிர்களில் பிரச்சனை ஏற்பட்டால் என்ன செய்யவேண்டும் என்பதைச் சுவரில் எழுதிவைத்திருக்கிறோம். அதனால் விவசாயிகள் எந்தப் புத்தகத்தையும் தேடிப் படிக்க வேண்டியதில்லை.

சி.கே.: வேறு குறிப்பிடத்தக்க முயற்சிகள் என்னென்ன?
ராஜ்: எல்லோரும் மறந்துவிட்ட சிறுதானிய வகைகளை பிரபலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். தமிழ்நாட்டில் சாமை, குதிரைவாலி மற்றும் பல சிறுதானியங்கள் பயிர் செய்வார்கள். இவற்றைப் பயிர்செய்யும் பரப்பளவு மிகவும் சுருங்கிவிட்டது. நாங்கள் தென்தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திராவில் இவற்றைப் பயிரிட முயற்சி செய்துவருகிறோம். அதிக விலை கொடுத்து ஊக்குவிக்கும் ஒரு திட்டத்தைச் செயல்படுத்துகிறோம். இந்தச் சிறுதானியங்களில் புரதம், மினரல்கள், விட்டமின் ஆகியவை அதிகம் இருப்பதால் அரிசியைவிடச் சத்துமிகுந்தவை. அரிசியில் வெறும் மாவுப்பொருள்தான் உள்ளது. நம் முன்னோர்கள் இவற்றை உண்டதால் நவீன மருத்துவ வசதிகள் இல்லாதபோதும் நெடுநாள் ஆரோக்கியத்தோடு வாழ்ந்தார்கள். இச்சிறுதானியங்களை சத்துக்கள் வீணாகாமல் புழுக்கும் (parboiling) வழிமுறைகளைக் கண்டுபிடித்துள்ளோம். புழுக்கினால் சத்து அதிகரிப்பதோடு, எளிதில் சீரணம் ஆகின்றது. எளிதில் வெந்துவிடுகின்றது. சாதாரணமாகச் சிறுதானியங்கள் வேக அதிக நேரமாகும். இதைக் கண்டுபிடிக்க ஒன்றரை ஆண்டுகள் ஆயின.

கே: உங்கள் பொருட்கள் 100% ரசாயன உரமற்றவையா?
ப: ஆமாம். 100% உரமோ, பூச்சிமருந்தோ அற்றவை. உரங்கள் ஸ்டீராய்டுகள் போன்றவை. அவை மண்ணின் நுண்ணுயிர்களைக் கொன்றுவிடும். தொடர்ந்து உபயோகித்தால் ஈயம், கேட்மியம், மெர்க்குரி போன்ற உலோகங்கள் மண்ணில் கலந்து விஷத்தன்மை அதிகரிக்கும். அவை நமது உணவுத்தொடரில் கலந்துவிடும். இன்று அரிசியில் ஆர்ஸனிக் அதிகமாக உள்ளது. அதனால் மண்வளத்தை இயற்கை உரங்கள் கொண்டு மெதுவாகச் செறிவூட்ட வேண்டும்.

கே: வருங்காலத்திற்கான உங்கள் திட்டங்கள் என்ன?
ப: விவசாயிகளிடம் நாங்கள் ஏற்படுத்தும் தாக்கம். இன்று எங்களது விவசாயிகளின் வருமானம் 20 முதல் 30 சதவிகிதம் அதிகரித்துள்ளது. உரம், பூச்சிக்கொல்லி செலவில்லை என்பதால் பொருளாதார நெருக்கடி குறைந்துள்ளது. விவசாயிகளின் கட்டமைப்பை விரிவாக்கும் திட்டம் உள்ளது.

மருத்துவ முகாம்கள் நடத்துகிறோம். விவசாயக் குடும்பத்தில் யாராவது நோய்வாய்ப்பட்டால், மருத்துவச் செலவுக்கு அவர்களிடம் பணம் இருக்காது. அதற்காக, இருக்கும் ஒரே சொத்தான நிலத்தை விற்றுவிடுவார்கள். உடல்நலம் தேறிவந்தாலும் நிலம் இருக்காது. அப்போது தினக்கூலியாக வேலை செய்யவேண்டியிருக்கிறது. எங்களது பொருளாதார வசதி அதிகரிக்கும்போது இதைப் பெரிய அளவில் செய்யும் திட்டம் உள்ளது.

அடுத்து பெண்களுக்கான சிறப்புத் திட்டங்கள். அவர்கள் பொருள் ஈட்டினால் வாழ்க்கை மேம்படும். இது எங்களது வருங்காலக் குறிக்கோள். அதிக விவசாயிகளிடம் மாற்றத்தை ஏற்படுத்துவதும், அதிகக் குடும்பங்களுக்கு இயற்கை உணவை அறிமுகப்படுத்துவதும் இப்போது எங்களுக்கு முக்கியமாக உள்ளது. தற்சமயம் 25,000 விவசாயிகள் எங்களுக்கு நேரடியாகப் பயிர் செய்கின்றனர். 300,000 முதல் 400,000 வாடிக்கையாளர்கள் உள்ளனர். விவசாயிகளின் எண்ணிக்கையை 10 லட்சமாக அதிகரிப்பதும், 10-20 மில்லியன் மக்களுக்கு இந்தத் தூய உணவை எடுத்துச் செல்வதும் வருங்காலத் திட்டங்கள்.

இதைச் செய்தால் வரும் லாபத்தை மறுபடியும் தொழிலில் முதலீடு செய்தால் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தமுடியும் என நம்புகிறோம்.

கே: சிக்கிம் மாநிலத்தில் 100% இயற்கை விவசாயம் நடைபெறுகிறது என்றீர்கள். அதில் உங்கள் பங்கு என்ன?
ப: அதன் முதல்வர் திரு. ஷாம்ப்லிங் (Mr. Shambling) ஒரு தீர்க்கதரிசி எனச் சொல்லவேண்டும். 14 வருடங்களுக்கு முன்னரே முழு மாநிலத்தையும் இயற்கை விவசாயத்தின்கீழ்க் கொண்டுவர முடிவுசெய்தார். நாங்கள் அதற்கு உதவினோம். எங்களது வழிமுறைகளைச் சொல்லிக் கொடுத்தோம். 20-25% நிலத்தை இயற்கை விவசாயத்தில் கொண்டுவர உதவினோம். இதில் எங்களுக்கு மிகவும் பெருமை. நாடே இதற்குப் பெருமைப்பட வேண்டும். சிக்கிம் ஒரு சிறிய மாநிலம். 14 வருடங்கள் அயராது முயன்று இதைச் சாதித்திருக்கிறார்கள். பிரதமர் திரு. மோதி அங்கு இருந்தார். நானும் சென்றிருந்தேன். அந்த அரசாங்கத்துடன் சேர்ந்து பொருட்களின் மதிப்பையும், விவசாயிகளின் வருமானத்தையும் அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

கே: ஆர்கானிக் உணவுபற்றித் தெரிந்த, படித்த மக்கள், தாங்களும் ஒருநாள் விவசாயம் செய்யவேண்டும் எனக் கனவு காண்கிறார்கள். அவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
ப: பலர் என்னை அணுகியுள்ளனர். நான் அவர்களுக்குச் சொல்வதெல்லாம் இதுதான். முதலாவது, விவசாயம் ஒரு முழுநேரத் தொழில். இரண்டாவது, இத்தொழிலில் சில வரையறைகள் உண்டு. கோடீஸ்வர விவசாயியை அரிதாகவே காணமுடியும். முழு ஈடுபாட்டோடு, புத்திசாலித்தனமாக வேலை செய்தால் நல்ல வருமானம் ஈட்டமுடியும். ஆனால் பெரும்பணக்காரர் ஆகமுடியாது. அதிகச் சம்பளம் கிடைக்கும் கணினித்துறை வேலைக்கு இது கண்டிப்பாக மாற்றல்ல. ஆனால் இயற்கையுடன் ஒன்றி உழைப்பதால் மனநிறைவும், சந்தோஷமும் கிடைக்கும். வாழ்வின் ஒரு கட்டத்தில் எல்லோரும் இவற்றையே விரும்புகின்றனர்.

இதை முழுநேரத் தொழிலாக, கிராம்த்திலேயே இருந்து செய்தால் வெற்றிபெற வாய்ப்பு உண்டு. இல்லாவிட்டால் வருடம்தோறும் நஷ்டம்தான் கூடிக்கொண்டே போகும். குறைந்த சமயத்தில் அதிக விளைச்சல் காண நினைத்தால், நீங்கள் பூமியை அதிகம் சுரண்டுவீர்கள். அதனால் பொறுமை மிகவும் அவசியம். நிலத்திலிருந்து எவ்வளவு எடுத்துக்கொள்கிறீர்களோ, அதற்கு சமமாகவோ அல்லது அதிகமாகவோ நீங்கள் அதற்குத் திருப்பித் தரவேண்டும். அப்போதுதான் நிலைத்து நிற்கமுடியும்.

உரையாடல்: சி.கே. வெங்கட்ராமன்
தமிழ்வடிவம்: மீனாட்சி கணபதி

*****


மண்ணுக்கு உயிருண்டு
நாம் மண் ஏதோ நாம் நடப்பதற்கு மட்டுமே என நினைக்கிறோம். ஆனால் மண்ணுக்கு உயிருண்டு. ஒருபிடி மண்ணில் பலகோடி நுண்ணுயிர்கள் உள்ளன. இவை ஊட்டச்சத்தை ஈர்த்து பயிர்களுக்கு வழங்குகின்றன. ரசாயன உரம், பூச்சிக் கொல்லி ஆகியவற்றால் நாம் அவற்றைக் கொன்றுவிடுகிறோம். உயிருள்ளதாக இருக்க வேண்டிய மண்ணை ஜடப்பொருள் ஆக்கிவிடுகிறோம். இந்த உண்மையை உள்ளுணர்வில் அறிந்த விவசாயிகளிடம் கொண்டுசெல்வது அவசியம். ஏனென்றால் இது ஒரு கலாசாரம்.

- ராஜ் சீலம்

*****


பொரி என்ற பூச்சிக்கொல்லி!
மஹாராஷ்டிராவில் வயல்களில் எப்போதும் பூச்சித் தொந்தரவு அதிகம். இயற்கை விவசாயமானதால் அவர்களால் பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்கமுடியவில்லை. அதனால் அவர்கள் வயலில் பொரியை இறைத்துவிட்டுச் சிறுசிறு மரக்கட்டைகளையும் ஆங்காங்கே போட்டு வைத்தனர். உயரத்தில் பறக்கும் பறவைகள் வெண்ணிறப் பொரியினால் ஈர்க்கப்பட்டு அதைத் தின்னவரும். அப்போது அங்கிருக்கும் பூச்சிகளையும் கொத்தித் தின்றுவிடும். மரக்கட்டை பறவைகள் நிற்க வசதியாக இருக்கும்.

- ராஜ் சீலம்

*****


இழக்கப்படும் மரபுப் பயிர்கள்
நூறு வருடங்களுக்குமுன் இந்தியாவில் 100,000க்கும் மேற்பட்ட நெல்வகைகள் உற்பத்தி செய்யப்பட்டன. இப்போது சில நூறு வகை நெற்பயிர்களே பயிரிடப்படுகின்றன. அவையும் 5 அல்லது 6 இனத்தைச் சேர்ந்தவையே. அதாவது நூறில் ஒருபங்காகச் சுருங்கிவிட்டது! வருங்காலத்திற்கு அந்த மதிப்புவாய்ந்த மரபுவளம் கிடைக்காமல் போய்க்கொண்டிருக்கிறது. இரண்டாவதாக இதில் பெரிய ஆபத்தும் உள்ளது. ஏதேனும் நோய்கண்டு இருக்கின்ற வகைகள் எல்லாம் ஒட்டுமொத்தமாக அழிந்துவிடலாம். அப்பொழுது உணவுப்பாதுகாப்பு இல்லாமல் போய்விடும்.

- ராஜ் சீலம்

*****


வெள்ளை விஷம்
கடந்த 20 வருடங்களில் மிக வெள்ளையான அரிசி, வெள்ளையான மாவு இவைதான் நல்லவை என நம்பத்தொடங்கிவிட்டனர். உண்மையில் வெள்ளை நிறப் பொருட்கள் கெடுதலானவை. இயற்கையில் தானியங்கள் பழுப்பு நிறமாகவே இருக்கும். அரிசி, கோதுமை மாவு போன்றவை இயற்கையில் பழுப்பாக இருக்கும். கடையில் பருப்புவகைகள் பளபளப்பாக இருக்கின்றன. இயற்கையில் பருப்புகள் பளபளப்பாக, அழகாக இருக்காது.

தீட்டப்படாத தானியங்களை (whole grains) உண்ணவேண்டும். இன்று பல ஆராய்ச்சிகள் நெய் நல்லது என்கின்றன. முட்டையும் நல்ல உணவு. ஏதாவது வியாதி இல்லாவிட்டால் இவற்றை ரசித்து உண்ணுவதில் ஒரு தீங்கும் இல்லை. எல்லாம் மிதமாக இருக்கவேண்டும் அவ்வளவுதான். அந்தந்தப் பருவத்தில் கிடைக்கும் பழங்கள், தானியங்கள் இவற்றை உண்டாலே எல்லாச் சத்துக்களும் சரிவிகிதத்தில் கிடைத்துவிடும். யாரும் விஷத்தை உண்ண விரும்பமாட்டார்கள். பூச்சிக் கொல்லிகள் எல்லாமே விஷம்தான். அவற்றைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

- ராஜ் சீலம்
More

வா.மணிகண்டன்
Share: 
© Copyright 2020 Tamilonline