Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | முன்னோடி | சமயம் | வாசகர் கடிதம்
அஞ்சலி | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது | நலம்வாழ | சாதனையாளர் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | எனக்குப் பிடித்தது
Tamil Unicode / English Search
பொது
மயூரநாதனுக்கு இயல்விருது – 2015
- அ. முத்துலிங்கம்|பிப்ரவரி 2016|
Share:
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் ஆண்டுதோறும் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதான 'இயல்விருது' இம்முறை தமிழ் விக்கிப்பீடியா என்னும் இணையத்தளக் கலைக்களஞ்சிய கூட்டாக்கத் திட்டத்தை தொடங்கி வெற்றிகரமாக இயக்கிவரும் திரு இ.மயூரநாதன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது இவ்வமைப்பு வழங்கும் 17வது இயல்விருது ஆகும்.

இலங்கையில் வண்ணார்பண்ணை என்னுமிடத்தில் பிறந்த மயூரநாதன், கட்டடக்கலையில் முதுநிலை பட்டம் பெற்றபின்னர் கொழும்பில் 17 ஆண்டுகள் பணியாற்றினார். 1993ல் துபாய்க்குப் புலம்பெயர்ந்தபின் தமிழ் அறிவியல் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். 2001ம் ஆண்டு ஆங்கில விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டபோது, அறிவு உருவாக்கத்தில் அதன் மகத்தான பங்களிப்பை உணர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவை 2003ம் ஆண்டிலேயே தொடங்கினார். முதல் 12 மாதங்கள் தனிநபராக அடிப்படை வசதிகளைச் செய்து வலுப்படுத்தினார். பின்னர் திறமையான பங்களிப்பாளர்களை இணைத்துச் சிறப்பாக இயங்கும் கூட்டுக்குழுவாக விரிவாக்கினார்.

தமிழ் விக்கிப்பீடியாவே முதன்முதலாக அனைத்துலக பங்களிப்பாளர்கள் கூட்டாக இயங்கி "Web 2.0" என்னும் முறையில் உருவாக்கப்பட்ட மாபெரும் படைப்பு. கணிசமாகப் பங்களிப்போர் ஏறத்தாழ 100 பேர்தான் எனினும், 88,000 பேருக்கும் அதிகமானவர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் ஏற்றப்பட்ட கட்டுரைகளின் எண்ணிக்கை 83,000. இவற்றில் 80 சதவீதம் கட்டுரைகளை ஒதுக்கிவிட்டாலும்கூட எஞ்சிய 16,600 தரமான கட்டுரைகள் என்பது 24 தொகுதிகள் அடங்கிய அச்சுக் கலைக்களஞ்சியத்திற்குச் சமமானது. மயூரநாதன் மட்டுமே முதல் கட்டுரை தொடங்கி இன்றுவரை 4200க்கும் மேற்பட்ட கட்டுரைகளைப் பதிந்துள்ளார்.

தமிழ் விக்கிப்பீடியாவுக்கு மாதந்தோறும் 3.5 மில்லியன் பார்வையாளர்கள் வருகிறார்கள். 291 உலகமொழி விக்கிப்பீடியாக்களில் தமிழ் மொழியின் இடம் 61. இந்திய மொழிகளில் எண்ணிக்கை அடிப்படையில் தமிழ் இரண்டாவதாக வந்தாலும், தரத்தின் அடிப்படையில் தமிழ் விக்கிப்பீடியா முதலாவதாக நிற்பதாக ஓர் ஆய்வு கூறுகின்றது.
தனியொருவராகத் தொடங்கி இதனை வளர்த்தெடுத்த மயூரநாதன் அவர்களின் பங்களிப்பு பெரும் பாராட்டுதலுக்குரியது. தமிழ் மொழிவளர்ச்சி தொடர்பான மாநாடுகளிலும், தமிழ் இணையத் தொழில்நுட்ப கருத்தரங்குகளிலும், அரசுசார்ந்த சில நிறுவனங்களின் தமிழ் வளர்ச்சிக்கான முன்னெடுப்புக்களிலும் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு முக்கியத்துவம் பெருகிவருகிறது. இந்தப் பங்களிப்பு மரபுவழியான பிற இலக்கிய முயற்சிகளுக்கு ஈடான முக்கியத்துவம் பெற்றுள்ளது. தமிழ் விக்கிப்பீடியா நிறுவுனர் மயூரநாதனுக்கு வாழ்நாள் சாதனயாளர் விருது வழங்கும் விழா ரொறொன்ரோவில் 2016 ஜூன் மாதம் நடைபெறும். அப்போது 'இயல்விருது' கேடயமும் பரிசுத்தொகை 2500 டாலரும் வழங்கப்படும்.

தென்றல் இதழோடு தொடர்புடைய தமிழ் ஆன்லைன் அறக்கட்டளை கனடா தமிழிலக்கியத் தோட்டத்துக்கு நிதியாதரவு தருகிறதென்பதை வாசகர்களுக்குப் பெருமையோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

அ. முத்துலிங்கம்,
கனடா
Share: 




© Copyright 2020 Tamilonline