Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | சமயம் | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அஞ்சலி | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது
Tamil Unicode / English Search
சிறுகதை
ஜில்லுவுக்கு கல்யாணம்
பாலக்கரை வீடு
- எல்லே சுவாமிநாதன்|நவம்பர் 2015|
Share:
பாலு வீட்டு வரவேற்பறையில் ஐந்து நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. அவற்றின்மேல் சீதாராமன், பர்வதம், பாலு, சியாமளா, சீனு என்று எழுதி ஒட்டப்பட்டிருந்தது.

எல்லோரும் பலவருடமாய் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டவர்கள். அப்பா காலமானபிறகு வருடமுடிவில் எல்லோரும் ஒருமுறையாவது ஒருவர் வீட்டில் கூடுவது என்பது பல வருடங்களாக ஒரு சடங்காகி இருந்தது. ஒன்பது மணிக்குத் துவங்குவதாய் ஏற்பாடு. ஒன்பதே காலுக்குள் எல்லாரும் வந்து விட்டார்கள். தத்தம் நாற்காலிகளில் அமர்ந்தார்கள்.

அண்ணா சீதாராமன் "தொடங்கலாமா" என்று கேட்டு, பையிலிருந்த அப்பாவின் பூஜைப் புத்தகத்திலிருந்து சில சுலோகங்கள் வாசித்தார். பர்வதம், சியாமளா, சீனு சின்னக்குரலில் அவரோடு சேர்ந்து கொண்டார்கள். ஸ்லோகம் முடிந்ததும், "பர்வதம் ஒரு பாட்டுப் பாடறியா?" என்றார். இதற்கு காத்திருந்தாற்போல பர்வதம் "அருள்புரிவாய் கருணைக்கடலே, ஆருயிர் அனைத்தும் அமரவாழ்வு பெறவே" என்று பாடினாள். தொடர்ந்து சியாமளியும் சீனுவும் ஒரு விருத்தம் பாடினார்கள்.

"எல்லோரும் எழுந்திருங்கோ" என்று சொல்லி பர்வதம் ஒரு தூக்கிலிருந்து அகல்போல் குழிக்கப்பட்டிருந்த இரண்டு மாவிளக்கு மாவு உருண்டைகளில் நெய்நிரப்பி திரிபோட்டு விளக்கேற்றினாள். சியாமளி, சீனு, அண்ணா எல்லோரும் தாங்கள் கொண்டு வந்திருந்த சுண்டல், பொங்கல் நிவேதனங்களை வைக்க, பாலு தான் வாங்கி வைத்திருந்த பழங்களை எடுத்து வைத்தார்.

ராஜராஜேஸ்வரி சுலோகம் ஒன்று சொல்லிவிட்டு "எங்க குடும்பத்தைக் குறையில்லாம காப்பாத்து" என்று வேண்டிக்கொண்டு முதலில் பர்வதம் நமஸ்கரித்ததைத் தொடர்ந்து அனைவரும் வணங்கினார்கள்.

எல்லோருக்கும் உணவு பறிமாறப்பட்டது. அமைதியாக உண்டு முடித்து ஹாலில் வந்து அமர்ந்தார்கள். பர்வதம் ஏதோ கேட்டாள்.

"என்ன, உரக்கச் சொல்லு. புரியல" என்றார் அண்ணா.

"ஆமாம். கேட்டேன். யாரும் சரியா சொல்லல. அப்பாக்கு பல்லக்கரையா பாலக்காடா அங்கே ஒரு மனைக்கட்டு இருந்துதாம். அதில் சின்னதா ஒரு வீடும் இருந்துதாம். அம்மா சொன்னதா ஞாபகம். அப்பா விவசாயம் பண்ணினப்போ அதுல நெல்லு கொட்டிவைப்பாளாம். அது என்னாச்சு?"

சியாமளி "கங்கைக்கரைத் தோட்டம்" என்று சொல்ல "கன்னிப்பெண்கள் கூட்டம்" என்று சீனு பாட பர்வதத்துக்கு எரிச்சலாய் இருந்தது. அண்ணா கேட்டார். "நான் ஸ்கூல்ல படிக்கறச்சயே அப்பா நிலத்தை எல்லாம் வித்துட்டாரே. பாலு உனக்குத் தெரியுமா... பல்லக்கரையாமே. எங்க இருக்கு?"

"பல்லக்கரையா? தெரியாதுண்ணா கேள்விப்பட்டதில்லை. மந்தக்கரைன்னு ஒரு மைதானம் இருந்துது. அங்க நெல்தாளடி செய்யறதுண்டு. இப்ப அங்கெல்லாம் ஃபிளாட் வந்தாச்சு" என்றார் பாலு.

"அப்பா காலமானப்பறம் பாலுவும் அண்ணாவும் போய்தானே வீட்டை வித்துட்டு வந்தேள். அப்பாக்கு வேற சொத்து ஏதானும் இருக்கானு கேட்கலியா? வெங்கலப் பானை, தவலை அண்டாவெல்லாம் என்னாச்சு? அதையெல்லாம் வேலைக்காரி அன்னம்மா எடுத்துண்டு போயிட்டாளோ?"

"பர்வதத்துக்கு மறதிவியாதி வரது தெரியறது" என்றார் அண்ணா எல்லோரையும் பார்த்து. பிறகு பர்வதத்திடம் "அதான் முன்னமே சொன்னேனே பர்வதம். அண்டா குண்டா எல்லாம் கிராமத்து பள்ளிக்கூட வாத்யாருக்கு கொடுத்துட்டோம். பசங்களுக்கு மதிய உணவு சமைக்கப் பாத்திரம் சரியா இல்லைனு குறைப்பட்டுண்டார். கிராமத்து கணக்குப்பிள்ளைகிட்ட நன்னா விசாரிச்சுட்டோம். அப்பாக்கு வேற சொத்து இல்ல. அப்பாவோட பழய துணிமணி, பெட்ஷீட் படுக்கை எல்லாம் தூக்கிப் போட்டாச்சு. பழய ஃபோட்டோ, சில சுவாமிபடம் மட்டும் எடுத்துண்டு வந்துட்டோம். அப்பா இருந்த வீட்டை வித்து வந்த பணத்தை சமமாப் பங்கிட்டுக் கொடுத்தாச்சு. உனக்கு இதெல்லாம் மறந்து போச்சா, பர்வதம்!"

"ஆங்... ஏதோ சொன்னமாதிரி இருக்கு. ஆமாம்..உம்பேரு என்ன? உனக்கு வெங்கலப்பானை நினைவு இருக்காடி" என்றாள் சியாமளியைப் பார்த்து.

"நான் சியாமளிக்கா. எம்பேரே மறந்து போச்சா உங்களுக்கு? அக்காக்கு அல்ஷைமர் வறது" என்றாள் சியாமளி கண்ணீர் ததும்ப.

"சியாமளி. இது சகஜம்மா. எனக்கே பேரு சமயத்துல தட்டுக்கிட்டு போயிடும். என் புள்ளைகளையே அவனே இவனேன்னு கூப்பிடற மாதிரி ஆயிடும். பர்வதத்துக்கு உடம்புவேற சரியால்ல. மறதி வேற. பேருகூட மறக்கறது" என்றார் அண்ணா.
"பர்வதம் வீட்டுக்காரர்கிட்ட சொல்லணும் அவளைத் தனியா வெளியில எங்கயும் அனுப்பிடாதீங்கன்னு" என்றான் சீனு.

"அண்ணா சுலோகம் சொல்றச்ச சத்யம் வதிஷ்யாமி, ரிதம் வதிஷ்யாமின்னு சொன்னேளே... இரண்டுக்கும் அர்த்தம் உண்மைங்கறதுதானே?" என்று பேச்சை மாற்றினார் பாலு.

அண்ணா, "ரெண்டும் ஒண்ணு இல்ல. சின்ன வித்யாசம் இருக்கு. சூரியன் கிழக்கே உதிக்கிறது, மேற்கே மறையறதுன்னு சொன்னா, இது சரியா தப்பா... மெய்தானே.... தினமும் பார்க்கறமேன்னு சிலர் சொல்லுவா... இன்னும் சிலர் மெய்யா சூரியன் உதிக்கவும் இல்ல மறையவும் இல்ல. அது அண்டத்தில இருக்கு. அதான் ஸத்யம். ஆனால் தானே மேற்கிலிருந்து கிழக்காய்ச் சுழலும் பூமியில இருந்து பார்ப்பதால கிழக்கே சூரியன் உதிச்சு மேற்கே மறையறமாதிரி தோணற ஏற்படற மயக்கம்னு சிலர் சொல்லலாம். ஸத்யமே சூழ்நிலையால மயங்கித் தெரியறதுதான் ரிதம். ஆனால் ரிதம் அஸத்யமில்ல. சில இடத்துல நாம் பொய்னு சொல்ற அஸத்யமும் தப்பில்ல. ராமாயணத்துல அசோகவனத்தில சீதையைப் பாத்துட்டு போறச்சே ஹனுமான் இலங்கைக்கு நெருப்பு வெச்சிடறார். ராட்சசிகள் சீதையைக் கேட்கிறாளாம் நீ ஒரு கொரங்குகிட்ட பேசினயே, அது யாரு? அதுதான் நெருப்பு வெச்சிடுத்தோனு.. சீதை ஹனுமானைக் காப்பாத்தணும்னு "ஏதாவது ராட்சசன்கூட குரங்கு வேஷத்துல இதை செய்துருக்கலாம்னு சொல்றாளாம். ஹனுமாருக்கு கஷ்டம் வராம இருக்க சீதை சொன்னது அஸத்யம் இல்லங்கிறார் வால்மீகி" என்று விளக்கினார்.

"ம்.ம். சீதையா... உம்பெண்ணு சீதாக்கு வரன் பார்க்கறியா? என் சினேகிதிக்குத் தெரிஞ்ச பையன் நல்லவேலையில அயோவால இருக்கான். வேணுன்னா ஜாதகம் வாங்கித் தரேன்" என்றாள் பர்வதம்.

"குழந்தைகள் நாம் சொல்றத எங்க கேக்கறதுகள்? இன்னிக்கி எல்லாரையும் பார்க்கலாம் வான்னா அங்க போகணும் இங்க போகணும் வரலைனு சொல்றதுகள். தன் கல்யாணத்தைத் தானே பார்த்துக்கறேன்னு சொல்றா. சீதா என்ன ஆகப்போறதுன்னுனே தெரியல" என்றார் அண்ணா.

சிறிது நேரம் பேச்சு குழந்தைகளை அமெரிக்காவில் வளர்ப்பதில், திருமணம் செய்துகொடுப்பதில் உள்ள சிரமங்கள் பற்றி இருந்தது.

"பாலு, உன் பெண்டாட்டி அவ அக்காவை பார்க்க நியூ யார்க் போனாளே. எப்ப திரும்பி வரா?" என்றாள் பர்வதம்.

"அக்காக்கு சில விஷயங்கள் இன்னும் நன்னா நினைவு இருக்குபோல" என்றான் சீனு.

"நான் வீட்டுக்கு கிளம்பணும். யார் என்னை அழைச்சிண்டு போகப்போறா" என்றாள் பர்வதம்.

"என் பெண் வந்து அழைச்சிண்டு போக நேரமாகும். பாலு, நீ என்னை வீட்ல கொண்டு விடறியா?" என்றார் சீதாராமன். "பர்வதமும் சியாமளாவும் சீனுவோட போகட்டும்"

*****


பாலு காரை ஓட்ட சீதாராமன் அருகில் அமர்ந்திருந்தார். "என்னண்ணா பேச்சே இல்ல. களைப்பா இருக்கா? நீங்க கொஞ்ச நேரம் படுத்து தூங்கிட்டு சாயங்காலமா கிளம்பி இருக்கலாம்" என்றார் பாலு.

"அதெல்லாம் ஒண்ணுமில்ல பாலு. மனசில ஒரு நெருடல். அதான்."

"என்ன பிரச்னை அண்ணா?"

"நமக்கெல்லாம் வயசாறது. பர்வதத்துக்கு மறதிவியாதி வர ஆரம்பிச்சாச்சு. நம்மை யாரு கடைசிக்காலத்தில கவனிச்சிக்கப் போறா? நம்ம குழந்தைகள் பார்த்துக்குமா? நாமளே நம்ம அப்பாவை பார்த்துக்க முடியல. நினைச்சா பயமா இல்ல?"

"நாமெல்லாம் ஒருத்தருக்கு ஒருத்தர் துணைதான் அண்ணா. அதைப்பத்தி இப்ப நெனச்சி மனத்தை வருத்திக்காதீங்க."

சிறிதுநேரம் சீதாராமன் அமைதியாக இருந்தார். பிறகு, "பர்வதத்துகிட்ட பாலக்கரை வீட்டைப்பத்தி சொல்லியிருக்கலாமோன்னு தோணறது. நீ என்ன நெனைக்கிற?" என்றார்.

"இல்லண்ணா வீணா பிரச்னையை விலைகொடுத்து வாங்கினா மாதிரி ஆயிடும். அதான் நீங்க தெரியாதமாதிரி கேட்டபோது அதைப்பத்தி கேள்விப்பட்டதே இல்லைனு சொல்லிட்டேன்."

"அப்பா இங்க வந்து நம்மோட இருக்க பிரியப்படல. நம்மாலயும் அங்க போய் கிராமத்தில இருக்க முடியல. பாவம் அன்னம்மாதான் அப்பாவை சாகற வரையில் பார்த்துண்டா."

"கிராம கணக்குப்பிள்ளை அன்னம்மா இருக்கிற வீட்டை விற்கப் போறீங்களான்னார். அன்னம்மாகூட வேணுன்னா நான் வீட்டை காலி பண்ணிடறேன்னு நம்மகிட்ட சொன்னாளே?"

"ஆமா. வேலைக்காரியா இருந்தாலும் அப்பாவை ஒரு பெண்ணுபோல பார்த்துண்டா. ஓட்டல்லேருந்து சாப்பாடு, கடையிலேருந்து மருந்துன்னு வாங்கிண்டு வந்து எல்லாம் கவனிச்சிண்டாள். அவள் குடியிருக்க வாடகையில்லாம அப்பா அந்த பாலக்கரை கிராம வீட்டைக் கொடுத்திருந்தார். அது ஒரு லட்சமோ இரண்டு லட்சமோ போயிருக்கும். அந்தக் காசு நமக்கு சொல்பம். எதுக்கு அவளை விரட்டி அந்த வீட்டை விக்கணும்? நாம யாரும் இருந்து அப்பாவைக் கவனிச்சிக்க முடியல. அதை அவள் செஞ்சாள். அதுனால அவளும் ஒரு பொண்ணு மாதிரிதான். அவளே வெச்சிக்கட்டும்னு தோணித்து. சரி, நீயே வெச்சிக்கோனு கொடுத்துட்டேன். அவளுக்குக் கொடுக்கலாமானு கேட்டிருந்தா சியாமளியும்கூட சரின்னுருப்பா. பர்வதம்மட்டும் சண்டை போடுவா. அன்னம்மாவை அவளுக்கு எப்பவுமே பிடிக்காது. பர்வதத்துக்கு ஏகப்பட்ட சொத்து இருக்கு. இருந்தாலும் கொஞ்ச அல்பபுத்தி. இப்பவே பாரு, அண்டா தவலைன்னு அலையறா. அதெல்லாம் நமக்கு எதுக்கு இங்க. ஆனா எனக்கு மனசுக்குள்ள ஒரு உறுத்தல். பர்வதத்துகிட்ட அந்த பாலக்கரை வீட்டை அன்னம்மாக்கு கொடுத்திட்டோம்னு உண்மையச் சொல்லியிருக்கலாமோன்னு."

"அந்த சமயத்தில ஒரு மனிதாபிமானத்தில எடுத்த முடிவு அது. சட்டப்படி தப்பா இருக்கலாம். எல்லாரையும் கலந்துண்டு வேறவிதமா பண்ணியிருக்கலாம். ஆனா அது நடந்து ரொம்ப காலமாச்சு. அதை இப்ப கிளர்றது சரியில்ல. நீங்க காலையிலே சொன்னமாதிரி, சில சமயத்துல உண்மையைவிட பொய்யே சரிண்ணா. பொய்ம்மையும் வாய்மையிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்குமெனின் அப்படீன்னு திருவள்ளுவரே சொல்லியிருக்கார்."

எல்லே சுவாமிநாதன்
More

ஜில்லுவுக்கு கல்யாணம்
Share: 




© Copyright 2020 Tamilonline