Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | சமயம் | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அஞ்சலி | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது
Tamil Unicode / English Search
நேர்காணல்
Dr. சியாமா
பேராசிரியர். மதுரம் சந்தோஷம்
- வெங்கட்ராமன் சி.கே., கோம்ஸ் கணபதி, மீனாட்சி கணபதி|நவம்பர் 2015|
Share:
வேலூரில் பிறந்து மதுரை, கிளாஸ்கோ (ஸ்காட்லாந்து), பாண்டிச்சேரி (ஜிப்மர்), பால்டிமோர் (அமெரிக்கா) என உலகின் பல பகுதிகளிலும் படித்து, மருத்துவத்தில் உயர்தகுதிகளைப் பெற்றவர் Dr. Prof. மதுரம் சந்தோஷம். பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் வயிற்றுப் போக்கில் வறட்சியாலும், தாது உப்புக்கள் இழப்பாலும் மரணமடைவதைத் தடுக்கும் வாய்வழி கனிமக்கரைசல் சிகிச்சையை (Oral Rehydration Therapy) மேம்படுத்தி, அதை உலகெங்கிலும் எடுத்துச் சென்றவர்; மூளைக்காய்ச்சல் வைரஸுக்கான தடுப்புமருந்தைக் கண்டுபிடித்தவர் என இவருக்குப் பல சிறப்புகள் உண்டு. இவர் அமெரிக்க-இந்தியர் நலத்துறை இயக்குனரும் கூட. மருத்துவ உலகில் பல விருதுகளையும் பெற்றுள்ளார். வெளிநாட்டவரென்பதால் அப்போது இவருக்குப் படிக்க இடம்தராத ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்திலேயே இன்றைக்கு இவர் ஒரு பேராசிரியர்! தற்போது இவர் Professor, Departments of International Health and Pediatrics, Johns Hopkins University; Director, Center for American Indian Health ஆகிய பதவிகளை வகிக்கிறார். ஆனால், இவற்றையெல்லாம் சாதிக்க எவ்வளவு போராட வேண்டியிருந்தது என்பதை அவர் கூறும்போது நீங்கள் ஒருபக்கம் வியந்தாலும், சாதிப்பது நம் கையில்தான் இருக்கிறது என்பதையும் புரிந்துகொள்வீர்கள். வாருங்கள் உரையாடுவோம் பேரா. மதுரம் சந்தோஷம் அவர்களுடன்...

*****


தென்றல்: வாழ்க்கையின் ஆரம்பத்தில் ஒவ்வொரு படியிலும் நீங்கள் இல்லை, முடியாது போன்ற சொற்களையையே திரும்பத்திரும்ப கேட்டிருக்கிறீர்கள். இருந்தாலும் தொடர்ந்து சென்று வெற்றி பெற்றுள்ளீர்கள். உங்கள் வாழ்க்கைப் பயணத்தை விவரியுங்கள்.
Dr. மதுரம்: நான் வேலூரில் பிறந்தேன். நாங்கள் மூன்று குழந்தைகள். நான்தான் கடைசி. அப்பா தில்லியில் ஒரு மூன்றாம் பிரிவு எழுத்தர். அவர் எதையும் நேர்த்தியாகச் செய்வார். அதைப் பார்த்த மேலதிகாரி "நீங்கள் ஏன் அயலகத்துறையில் பணிபுரியக் கூடாது?" என்றார். அப்பொழுது நேபாளத்தில் மட்டும் ஒரு வேகன்சி இருந்தது. இது நடந்தது 1949. எனக்கு 5 வயது. தில்லியிலிருந்து நேபாளத்துக்கு ஒருவாரப் பயணம். அங்கு பள்ளிகளே கிடையாது. அதனால் என் அக்காவையும், அண்ணனையும் இந்தியாவிற்குத் திரும்ப அனுப்பிவிட்டனர். நான் கடைக்குட்டி, அம்மா செல்லம். என்னை போர்டிங் ஸ்கூலுக்கு அனுப்ப முயற்சித்தனர். ஒவ்வொரு முறையும் நான் அழுவேன், அதனால் என்னைத் திரும்பக் கூட்டிவந்து விடுவார்கள். என் எட்டாவது வயதில் அப்பா நான் படித்துத்தான் ஆகவேண்டும் என்று சொல்லி மதுரைக்கு அவருடைய அம்மா வீட்டிற்கு அனுப்பிவிட்டார். எனக்கு 5 வயதாக இருந்தபோது நடந்த சம்பவம் ஒன்றைச் சொல்லவேண்டும். ஒருநாள் அம்மா என்னை கடைத்தெருவுக்கு அழைத்துப்போனார். அங்கு நிறைய குழந்தைகள், போதிய ஊட்டச்சத்து இல்லாமல் சொறி, சிரங்குகளோடு சீழ்வடிந்தபடி இருப்பதைப் பார்த்தேன். அப்போது என் அம்மா என்னிடம் "நீ மருத்துவம் படித்து இவர்களுக்கெல்லாம் உதவவேண்டும்" என்று சொன்னார். அது என் மனதில் ஆழப் பதிந்துவிட்டது.

என் சித்தப்பா மதுரையில் புகழ்பெற்ற வக்கீல். என் அப்பாவுக்கு அப்பொழுது பாண்டிச்சேரிக்கு மாற்றலாகிவிட்டது. இன்னும் ஃபிரெஞ்சுப் பகுதியாக இருந்த காலம். அப்பா தூதரக அதிகாரி. சித்தப்பா என்னை மதுரையில் உள்ள புனித ஜோசஃப் கான்வென்டில் சேர்க்க அழைத்துச் சென்றார். பள்ளித் தலைமை ஆசிரியை என் சித்தப்பாவிடம் 'என்னங்க, எட்டு வயசாச்சு ஒண்ணும் படிக்கலை என்கிறான்' என்றார். என் சித்தப்பா 'நீங்கள் அவனிடம் கேள்வி கேளுங்கள். எப்படிப் பதில் சொல்கிறான் என்பதை வைத்து முடிவு செய்யுங்கள்' என்றார். அவரும் என்னிடம் கேள்விகள் கேட்டார். என்னால் எதற்கும் பதில் சொல்லமுடியவில்லை. கடைசியில் வெறுத்துப்போய் என்னிடம் 'it' என்ற வார்த்தைக்கு ஸ்பெல்லிங் சொல்லு என்றார். நான் 'e, t' என்றேன். எனக்கு ரொம்ப சந்தோஷம் நான் 50% சரியாகச் சொல்லிவிட்டேனே. கடைசியில் என் சித்தப்பா 8 வயதுப் பையன் எந்த வகுப்பில் படிப்பான் என்று கேட்க அவர் நாலாம் வகுப்பு என்றார். சித்தப்பா என்னை நான்காம் வகுப்பிலேயே சேர்க்கச் சொல்ல அவரும் ஒப்புக்கொண்டார். ஆரம்பத்தில் கஷ்டப்பட்டேன். பின் டியூஷன் எல்லாம் எடுத்துக்கொண்டு சராசரி மாணவனானேன்.கே: அப்படியாக மதுரையில் தொடர்ந்து படித்தீர்களா?
ப: இல்லை, அதற்குள் அப்பாவை ஜெர்மனிக்கு மாற்றிவிட்டார்கள். அங்கு ஆங்கிலப் பள்ளிக்கூடம் கிடையாது. அமெரிக்கன் பள்ளி மட்டும் ஆங்கிலத்தில் கற்பிக்கும். ஆனால் என் பெற்றோருக்கு அங்கு அனுப்ப வசதியில்லாததால் என்னையும் என் அண்ணனையும் ஸ்காட்லாண்டின் கிளாஸ்கோ நகரில் ஒரு போர்டிங் பள்ளிக்கு அனுப்பினார்கள்.

அந்தக் காலத்தில் போர்டிங் பள்ளிகள் பயங்கரமாக இருக்கும். குளிர்வேறு அதிகம். இப்போது மாதிரி சென்ட்ரல் ஹீட்டிங், வெந்நீர்க்குழாய் எதுவும் கிடையாது. குளிக்கவேண்டும் என்றால் ஒரு வாரம் முன்பே எழுதி அனுமதி வாங்கவேண்டும். நான் மிகவும் வருத்தத்தில் இருந்தேன். எனக்கு 12 வயது. அங்கு 11+ ன்னு ஒரு பரிட்சை இருந்தது. 12 வயதுப் பிள்ளைகளெல்லாம் அதை எழுதவேண்டும். நாம் பெறும் மதிப்பெண்ணைப் பொறுத்து அதில் S1 முதல் S3 வரை ஒரு தரவரிசையும், J1 முதல் J4 வரை மற்றொரு தரவரிசையும் உண்டு. பள்ளிப்படிப்பை முடிக்க குறைந்தபட்சம் S3 ஆவது பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் கல்லூரியில் சேரமுடியும். J தரவரிசையில் வந்தால் தச்சர், பிளம்பர் போன்ற வேலைகளுக்குத்தான் போகமுடியும்.

நான் வாங்கியது J3. அடிமட்டத்திற்கு சற்று மேலே. தலைமை ஆசிரியர் என்னை அழைத்து மேலே என்ன படிக்க விரும்புகிறாய் என்றார். நான் மருத்துவம் படிக்கவேண்டும் என்றேன். தச்சராகவோ, கார் மெக்கானிக்காகவோ தான் ஆகமுடியும் என்றார். நான் அழ ஆரம்பித்துவிட்டேன். அதற்குள் என் ஆசிரியை மிஸ். கிராண்ட் ஒரு தேவதைபோல வந்தார். நாங்கள் தீவிரக் கிறிஸ்துவர்கள். என் அம்மா எப்போதும் பிரார்த்தனை செய்வார். அவர் என்னிடம் 'கடவுள் உன்னை எப்படியாவது காப்பாற்றுவார்' என்பார். மிஸ். கிராண்ட் என்னை வகுப்பிற்கு போகச் சொல்லிவிட்டு தலைமை ஆசிரியரிடம் எனக்காக வாதாடினார். அவர் திரும்பிவந்து என்னிடம் 'இரண்டாவது வாய்ப்பு அளிக்கத் தலைமை ஆசிரியர் ஒப்புக்கொண்டு விட்டார். ஆனால் நீ தினமும் வகுப்புக்குச் சீக்கிரம் வரவேண்டும். மதிய உணவு இடைவேளையிலும், வகுப்புகள் முடிந்த பிறகும் தங்கிப் படிக்க வேண்டும். நான் உனக்குக் கற்பிப்பேன்' என்றார். என் பெற்றோர் அங்கு இல்லை. தானே முன்வந்து அவர் எனக்கு உதவினார். 6 மாதத்திற்குப் பின் S3 கிரேடில் பள்ளிப்படிப்பை முடித்தேன்.

கே: ஓ, பிறகு அங்கேயே மருத்துவம் படித்தீர்களா?
ப: என் அப்பா அப்போது சதர்ன் ரொடீஷியாவில் (இப்போதைய ஜிம்பாப்வே) ஹைகமிஷனராக இருந்தார். நான் அவருக்கு இந்தியா சென்று மருத்துவம் படிக்க விரும்புவதாகக் கடிதம் எழுதினேன். எனக்கு மதிப்பெண் குறைவு. ஆனால் அந்தக் காலத்தில் அயலகத்துறையில் பணிபுரிபவர் பிள்ளைகளுக்கு இட ஒதுக்கீடு உண்டு. அதனால் எனக்கு பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது.

அங்கும் போராட்டம்தான். ஏனென்றால், கிளாஸ்கோவில் நான் படித்தது ஏழைகள் படிக்கும் பள்ளிக்கூடத்தில். சுமாரான கல்விதான். ஆனால் இங்கோ அதிக மதிப்பெண் பெற்றவர்கள்தான் படிக்க வருவார்கள். கஷ்டப்பட்டு எப்படியோ கடைசி வருடத்துக்கு வந்துவிட்டேன். அங்கு எமர்ஜென்ஸி சிகிச்சைப் பிரிவில் தினமும் நிறையக் குழந்தைகள் வயிற்றுப்போக்கில் இறப்பதைப் பார்த்தேன். நானும், ஒரு நர்ஸும் ரத்தநாளம் வழியே திரவங்கள் (IV Fluids) கொடுப்போம். அப்பொழுது நான் இந்தக் குழந்தைகளுக்கு ஏதாவது செய்யவேண்டும், இப்படியே இறக்க விடக்கூடாது என நினைப்பேன். மாற்றுமருந்து கண்டுபிடிக்க உதவுபவருடன் சேர்ந்து வேலைசெய்ய விரும்பினேன்.கே: பிறகு மேல்படிப்புக்கு அமெரிக்கா வந்தீர்களா?
ப: நான் மருத்துவப் படிப்பை முடித்த சமயம், கயானாவில் இருந்த என் பெற்றோர் பணி ஓய்வு பெற்று பால்டிமோர் வழியாக இந்தியா திரும்பிக் கொண்டிருந்தனர். வாழ்வில் பெரும்பகுதி என் பெற்றோரைப் பிரிந்தே வாழ்ந்ததால், நான் அவர்களுடன் சேர்ந்திருக்க ஆசைப்பட்டேன். திடீரென என் தாய் இறந்துவிட்டதாகத் தந்தி வந்தது. எனக்குப் பேரதிர்ச்சி. அம்மாவின் சகோதரர் பால்டிமோரில் இருந்தார். என் அப்பாவும், மாமாவும் சந்திரனில் இறங்கியதை டி.வி.யில் பார்த்துக் கொண்டிருந்தனர். என் கஸின் திடீரென வந்து 'அத்தைக்கு உடம்பு முடியவில்லை வந்து பாருங்கள்' என்றாராம். ரத்தக்குழாயில் வெடிப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார் என அறிந்தேன்.

என் அப்பா என்னிடம் "அம்மா நீ மருத்துவராக வேண்டும் என ஆசைப்பட்டாள். நீ ஏன் அமெரிக்கா வந்து படிக்கக்கூடாது?" என்றார். நான் பால்டிமோரில்தான் படிக்க விரும்பினேன். ஏனென்றால் அம்மாவை அங்குதான் புதைத்திருந்தார்கள். அந்தக் காலத்தில் வெளிநாட்டுப் பட்டதாரிகளுக்கு 'ஜான்ஸ் ஹாப்கின்ஸ்' போன்ற மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காது. அதனால் நான் இங்குள்ள 'சர்ச் ஹோம்' மருத்துவமனையில் சேர்ந்தேன். அது ஜான்ஸ் ஹாப்கின்ஸுக்கு அருகில் இருந்தது. அவர்கள் ஜான்ஸ் ஹாப்கின்ஸுடன் இணைந்த மருத்துவமனை என விளம்பரம் செய்திருந்தனர். அது உண்மையல்ல எனப் பின்னால் தெரிந்தது.

கே: அடடா... பிறகு!
ப: உண்மையில் அது ஒரு கற்பிக்கும் மருத்துவமனையே அல்ல, ஒரு முதியோர் இல்லம் எனலாம். அவர்கள் வெளிநாட்டுப் பட்டதாரிகளைப் பயன்படுத்திக்கொண்டனர். எங்களை இனிமா, தூக்கமாத்திரை போன்றவை கொடுக்கத்தான் பயன்படுத்தினர். எனக்கு ஒரே ஏமாற்றம். ஜான்ஸ் ஹாப்கின்ஸில் குழந்தைகள்நல மருத்துவம் படிக்க விண்ணப்பித்தேன். நேர்முகத் தேர்வில் 'நாங்கள் வெளிநாட்டுப் பட்டதாரிகளுக்கு இடம் அளிப்பதில்லை" என்று கூறிவிட்டார்கள். அங்கும் ஏமாற்றம்.

அந்தச் சமயம் ஒரு வயதான நோயாளி என் பராமரிப்பில் இருந்தார். அங்கிருந்த மருத்துவர் ஒருவருக்கு என்னுடைய பணி பிடித்துப்போனது. நான் குழந்தைநல மருத்துவர் ஆகவேண்டும் என விரும்புவதை அறிந்து 'பால்டிமோர் சிட்டி ஹாஸ்பிடல்' பற்றிக் கூறினார். அது ஜான்ஸ் ஹாப்கின்ஸுடன் இணைந்தது. அதன் தலைவர் டாக்டர். ஹெரால்ட் ஹாரிஸன் பாய்மங்கள் மற்றும் மின்பகுளிச் சமநிலையில் (fluids and elecrolyte balance) வல்லுநர். அவர் எனக்கு வழிகாட்டியாக இருந்தார். Oral Rehydration Solution (ORS) என்பது அவரது ஐடியாதான். ORS என்பது தண்ணீரும் மின்பகுளிகளும்தான். அடிப்படையில் நம் ஊரில் கொடுக்கப்படும் கஞ்சித்தண்ணீர்தான். என் அம்மா என்னிடம் நான் குழந்தையாக இருந்தபோது மோசமான வயிற்றுப்போக்கு இருந்ததாகவும், வெறும் கஞ்சித்தண்ணீர் மட்டுமே கொடுத்ததாகவும் கூறுவார். அது மிகநல்ல, எளிய வைத்தியம். நான் டாக்டர். ஹாரிஸனிடமிருந்து அதைக் கற்றேன்.
கே: நீங்கள் கற்றதை எப்படிப் பயன்படுத்தினீர்கள்?
ப: கல்கத்தாவில் காலரா லேப் என்று ஒன்று இருந்தது. இப்போது National Institute of Cholera and Enteric Diseases (NICED) என்று பெயர். ஹாப்கின்ஸுக்கு அங்கு ஒரு பணித்திட்டம் இருந்தது. நான் அங்கு போக ஏற்பாடுகள் செய்த சமயத்தில் இந்தியா-பாகிஸ்தான் போர் தொடங்கியது. அமெரிக்கா பாகிஸ்தானை ஆதரித்ததால், இந்தியாவில் எல்லா அமெரிக்க ப்ராஜெக்ட்களையும் ரத்துச் செய்தனர். எனக்கு ஏமாற்றம். அப்போது ஹாப்கின்ஸில் என்னுடைய மேலதிகாரி அரிஸோனா மாநிலம் ஒய்ட் மவுன்டன் பகுதியில் வாழும் அப்பாச்சி என்னும் செவ்விந்தியர்கள் வயிற்றுப்போக்கு, நிமோனியா போன்றவற்றால் மரணம் அதிகமாக நேர்கிறது என்றும், அதை ஆராயும் வாய்ப்பு ஜான்ஸ் ஹாப்கின்ஸுக்குக் கிடைத்திருப்பதாகவும் கூறினார். அவர் கூறியபடி நான் அங்கு சென்றேன். அங்கிருந்த நிலமையைக் கண்டு அதிர்ந்து போனேன். ஓராண்டு அங்கு இருக்கலாம் என்று எண்ணிப் போன நான் 1971 முதல் 1980 வரை அங்கு இருந்தேன். அங்கிருந்த ஒரே குழந்தைநல மருத்துவர் நான்தான். அதனால் நோயுற்ற எல்லாக் குழந்தைகளையும் என்னிடம் கொண்டுவருவார்கள். உடலில் நீர்வற்றுதல், மூச்சுத்திணறல் போன்றவற்றால் நிறையக் குழந்தைகள் இறந்துவிடும். அனெஸ்தெடிஸ்டான என் மனைவியும் எனக்கு உதவவந்தார்.

நாங்கள் அந்தச் சமூகத்தில் ஒருவராகிப் போனோம். பெண்கள் பூப்படையும் போது அதை 'சன்ரைஸ் டான்ஸ்' எனக் கொண்டாடுவார்கள். காலைமுதல் மாலைவரை நடனம், விருந்து எனக் கொண்டாடுவார்கள்; இதற்கு, பிறந்தநாள் கொண்டாட்டம் இவற்றுக்கெல்லாம் நாங்கள் செல்வோம்.

அந்தக் காலத்தில் அவர்களிடையே இறப்பு விகிதம் மிக அதிகமாக இருந்தது. சாதாரணமாகவே மரணம் துக்கமான விஷயம். அதிலும் குழந்தையின் மரணம் மிகவும் பாதிப்பை உண்டாக்கும். சர்ச்சில் சண்டே பள்ளிகளில் இவர்களுக்குக் கற்பிப்போம். முதல்நாள் பார்த்திருப்போம், மறுநாள் இறந்திருப்பார்கள். விரைவிலேயே என்னுடைய பணியால் வயிற்றுப்போக்கில் குழந்தைகள் இறப்பது கணிசமாகக் குறைந்தது.

1986ல் WHO சீனாவில் ஒரு பயிற்சிக்கு என்னை அனுப்பியது. சீனாவில் பின்தங்கிய கிராமம் ஒன்றிற்கு நான் சென்றேன். அந்தக்காலத்தில் 'Bare-foot Doctors' என ஒரு குழு இருந்தது. அவர்கள் சுகாதாரப்பணியாளர்கள். அதிகம் படிக்காதவர்கள். அவர்களுக்குப் ORS பயிற்சியளிப்பது எனது பொறுப்பு. நான் அவர்களிடம் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு வந்தால் எப்படிச் சமாளிக்கிறீர்கள் எனக் கேட்டேன். அதற்கு அவர் 'அமெரிக்காவில் ஒயிட் ரிவர் என ஒரு இடம் உள்ளது. அங்கு அப்பாச்சி இந்தியர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறையையே நாங்களும் பின்பற்றுகிறோம்' என்றார். அவர்கள் நான் ஒயிட் ரிவரில் செய்ததையே செய்து வந்துள்ளார்கள். கடந்த 30 வருடங்களில் 50-60 மில்லியன் குழந்தைகள் இந்த சிகிச்சை முறையால் உயிர் பிழைத்துள்ளனர்.நான் சீனாவுக்குச் சென்ற முதல் மூன்று மாதத்திற்குள், குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்குத் தொற்று அதிகரித்தது. நான் கொடுத்த பயிற்சியால் நிறையக் குழந்தைகள் இறக்காமல் காப்பாற்றப்பட்டன. அச்சமயம் Hib (Haemophilus Influenzae type b) தொற்றுநோயால் என்னிடம் வந்த 5 குழந்தைகளில் ஒன்று இறந்துவிட்டது. இந்தக் கிருமியினால்தான் மூளைக்காய்ச்சல் (மெனஞ்சைட்டிஸ்) பரவும். எனக்கு இந்த இறப்புவிகிதம் அதிகமாகத் தோன்றியது. ஏனென்றால் மொத்தம் பிறந்த குழந்தைகளே இருநூறுதான். அவர்களது மூத்தோர் குழுவின் (Elders council) தலைவரிடம் சென்று, "இங்கு மூளைக்காய்ச்சல் பரவியிருப்பது தெரியுமா?" எனக் கேட்டேன். "தெரியும். நிறையக் குழந்தைகள் இதனால் இறந்துவிட்டனர். பிழைத்த குழைந்தைகளும் பக்கவாதம், காது, கண் திறனிழப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்றார். "அதற்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்" எனக் கேட்டேன். "எங்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நீங்கள் ஜான்ஸ் ஹாப்கின்ஸிலிருந்து வந்துள்ளீர்கள். என்ன செய்யவேண்டும், சொல்லுங்கள்" என்றார்.

நான் அடுத்த 10 வருடம் இதற்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டேன். கண்டுபிடித்து, உரிமம் பெற்றபின், அது Apache Navajo இந்தியர்களிடம் முதலில் பரிசோதிக்கப்பட்டது. பின்னர் நாடு முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. இப்பொழுது எல்லா நாடுகளிலும் பயன்படுத்துகின்றனர்.

இதை இந்தியாவுக்கு எடுத்துச்செல்ல விரும்பினேன். இந்திய சுகாதார அமைச்சர், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்தேன். அவர்கள், 'இங்கு 10 சென்ட் விலையுள்ள DPT தடுப்பூசியைப் போடவைப்பதே பெரிய விஷயமாக உள்ளது. உங்கள் தடுப்பூசியின் விலை 18 அமெரிக்க டாலர். இதை இங்கு அறிமுகம் செய்வது கடினம்' என்றார்கள். நான் அவர்களிடம் சர்வதேச நிதியுதவி கட்டாயம் கிடைக்கும் என்றேன். ஆனால் அவர்கள் இது நடவாத காரியம் என்று கூறிவிட்டனர். எனக்கு உடனே ஜிம் ரீவ்ஸின் 'To Dream that impossible Dream' என்ற பழைய பாடல்தான் நினைவுக்கு வந்தது. இது நடந்தது 1993ல். நான் இந்தியாவிற்குப் பலமுறை சென்று வந்தேன். எல்லாமுறையும் முடியாது என்பதுதான் பதிலாக வந்தது. நான் எல்லா வளரும் நாடுகளிலும் இந்த தடுப்பூசியை அறிமுகப்படுத்த விரும்பினேன். எனக்கு GAVI (Global alliance for vaccines and immunization) அமைப்பிடம் இருந்து 30 மில்லியன் டாலர் உதவித்தொகை கிடைத்தது. நான் CDC (Center for Disease Control and Prevention), WHO, லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் போன்றவற்றுடன் இணைந்து ஒரு குழுவை உருவாக்கினேன். நாங்கள் பல நாடுகளின் சுகாதாரத்துறை அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்து இந்த தடுப்பூசியைப் பரிந்துரைத்தோம்.

இந்தியாவில் 2011ல் கேரளாவிலும், தமிழகத்திலும் இதை அறிமுகம் செய்தனர். 2013ல் 6 மாநிலங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. 2014ல் 12 மாநிலங்களிலும், தற்போது 20 மாநிலங்களிலும் அறிமுகம் செய்துள்ளனர். அடுத்த வருட மத்தியில் எல்லா மாநிலங்களிலும் இதை நடைமுறைப்படுத்துவதாக உறுதியளித்துள்ளனர். தற்சமயம் நிமோனியா தடுப்பூசி, மற்றும் வயிற்றுப்போக்கிற்கு காரணமான 'Roto virus' தடுப்பூசி இரண்டையும் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளோம்.

தெ: இந்தியாவில் பொதுவாக வயிற்றுப்போக்கு, தண்ணீர், உணவு போன்றவற்றால் பரவுகிறது இல்லையா?
ப: வளரும் நாடுகளில் சுகாதாரக் குறைவு என்பது பொதுவாக காணப்படுவது. அங்கெல்லாம் வியாதிகள் தண்ணீரால்தான் பரவுகின்றது. இதற்கு ஒரு விதிவிலக்கு 'Roto virus'. இதனால் அமெரிக்காவாகட்டும், இந்தியாவாகட்டும் பாதிப்பு விகிதம் ஒன்றுதான். ஆனால் மருத்துவ வசதிகள் அமெரிக்காவிற்கு இணையாக இல்லாததால் அங்கு இந்தக் கிருமி தாக்கி இறப்போர் அதிகம். எல்லா ஏழைநாடுகளிலும் இதுதான் நிலை. உலகில் வியாதிகளால் நிகழும் இறப்புகளில் 20 முதல் 25 சதவிகிதம் இந்தியாவில்தான் நிகழ்கின்றன. வயிற்றுப்போக்கு, நிமோனியா, மூளைக்காய்ச்சல் போன்றவற்றால் மரணம் ஏற்படுகிறது.

கே: உங்களுடைய நேர்மையான முயற்சிகளே உங்களுக்கு வாழ்க்கைப் பாதையில் பெரிதும் உதவியிருக்கிறது என நினைக்கிறேன்.
ப: உண்மைதான். ஹாப்கின்ஸில் நிறைய இந்திய மாணவர்கள் இருக்கின்றனர். பலர் என்னிடம் வந்து, ஏதோவொரு வாய்ப்புக் கிடைக்கவில்லை என்று ஏமாற்றத்துடன் கூறுவார்கள். நான் அவர்களிடம் "சிலசமயம் உங்களது மிகப்பெரிய தோல்வியே உங்களது வெற்றிக்குக் காரணமாக இருக்கும்" என்பேன். என்னால் இந்தியாவுக்குச் செல்லமுடியவில்லை. ஹாப்கின்ஸில் படிக்கமுடியவில்லை. ஆனால் இவையே எனக்கு பெரிய வரப்பிரசாதமாக அமைந்தன. கடினமாக, நேர்மையாக உங்கள் வேலைகளைச் செய்யுங்கள். கண்டிப்பாகப் பலன் கிடைக்கும். நிறைய புத்திசாலிகள் நல்ல நல்ல வாய்ப்புகள் கிடைத்தும் பெரிதாக எதுவும் சாதிக்காமல் போவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால், சராசரி மனிதர்கள் கடின உழைப்பால் நிறையச் சாதித்திருக்கிறார்கள்.கே: இலக்கு என்பது எவ்வளவு முக்கியம்?
ப: நான் எப்போதும் மாணவர்களிடம் "நீங்கள் மிகப்பெரிதாக ஏதாவது செய்ய முயற்சித்துத் தோல்வி அடைவீர்கள் என்பதல்ல என் பயம். நீங்கள் சிறிதாக ஏதாவது முயற்சித்து வெற்றி பெற்றுவிடுவீர்கள் என்பதுதான் என் பயம்" என்று சொல்வேன். மாணவர்கள் என்னிடம் வந்து அதைச் செய்யவேண்டும், இதைச் செய்யவேண்டும் என்பர். நான் அவர்களிடம் PhD செய்தால் என்ன என்று கேட்பேன். அவர்கள் முயற்சிக்கிறேன் என்பார்கள். 'ஸ்டார் வார்ஸ்' படத்தில் வரும் லூக் ஸ்கைவாக்கர் பாத்திரம்தான் எனக்கு நினைவுக்கு வரும். ஒன்றைச் 'செய்தே தீருவது' என்ற முடிவுடன் இறங்கினால், என்ன மேடு பள்ளம் வந்தாலும் தொடர்ந்து செய்து வெற்றிபெறுவோம். 'முயற்சிக்கலாமே' என்ற எண்ணத்துடன் தொடங்கினால் பாதியில் விட்டுவிட வாய்ப்பு அதிகம். விடாமுயற்சியும், மன உறுதியும் முக்கியமானவை.

"Fortune Favours the Prepared Mind" என்று நான் எப்போதும் சொல்வேன். வாய்ப்புக்கள் கதவைத் தட்டவில்லை என்று சொல்லாதீர்கள். வாய்ப்பு எல்லோருடைய கதவையும்தான் தட்டுகிறது. சிலர் அதைக் கண்டுகொண்டு பின்தொடர்கின்றனர். பலர் அது கைநழுவிப் போனபிறகே உணர்கிறார்கள். பலர் எதிர்ப்பு வரும் என பயந்தே முயற்சிக்காமல் விட்டுவிடுகின்றனர். நீங்கள் உருப்படியாக ஏதாவது செய்ய முயற்சித்தால் கண்டிப்பாக எதிர்ப்பு வரத்தான் செய்யும். ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேலிடம் ஒருவர் இந்தியா சென்று சுகாதாரத்தை மேம்படுத்த முயலப் போவதாகக் கூறினார். அதற்கு அவர் 'அங்கு பெரிய எதிர்ப்பு இருக்கும். ஆனால் எதிர்ப்பு இல்லாவிட்டால் பெரிய விஷயம் எதையும் சாதிக்க முடியாது' என்றார். எந்த எதிர்ப்பு வந்தாலும் விடாமுயற்சி அவசியம். எனக்குச் சரியெனப் பட்டதைச் செய்தபோது, நிறைய எதிர்ப்புகள், விமர்சனங்கள் எல்லாம் சந்திக்க வேண்டியிருந்தது. உங்கள் வேலையைத் தொடர்ந்து செய்யவேண்டும். இல்லாவிட்டால் குற்றச்சாட்டுக்களுக்கு பதில் சொல்வதிலேயே நேரம் வீணாகிவிடும். வெற்றி ஒன்றே உங்கள் குறிக்கோளாக இருக்க வேண்டும்.

கே: வெகு அழகு. உங்கள் மனதில் நின்ற அனுபவம் ஒன்றைச் சொல்லுங்கள்.
ப: இது நைஜீரியாவின் கடைக்கோடி கிராமத்தில் நிகழ்ந்தது. ஒரு 16, 17 வயது மதிக்கத்தக்க இளம்பெண், தன்னுடைய பச்சிளம் குழந்தையை எடுத்துக்கொண்டு என்னிடம் வந்தார். குழந்தைக்கு வயிற்றுப்போக்கு என்றார். நான் குழந்தையைப் பார்த்தபோது அது இறந்துவிட்டிருந்தது. என்னால் எதுவும் செய்யமுடியவில்லை. குழந்தை அப்போதுதான் இறந்திருந்தது. நான் மிகவும் மனமொடிந்து போனேன். என்னிடம் ORS பாக்கெட்டுகள் இருந்தன. ஒரு 5 நிமிடம் முன்னால் வந்திருந்தால் அந்தக் குழந்தையைக் காப்பாற்றியிருக்க முடியும். அந்தப் பெண் என்னைப் பார்த்து அவர்கள் மொழியில் ஏதோ சொன்னாள். அதை மொழிபெயர்க்க மற்றவர்கள் முயன்றனர். "நீங்கள் அமெரிக்காவிலிருந்து வந்திருக்கும் பெரிய மருத்துவர். என் குழந்தையைக் காப்பாற்றுங்கள்" என்கிறார் என்பது புரிந்தது! இதுபோன்று நிகழாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அதற்காகத்தான் நான் 'உலக சுகாதாரக் கழகம்' மற்றும் பல்வேறு சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டேன். இன்றைக்கு இந்த ORS பாக்கெட்டுகள் உலகம் முழுவதும் கிடைக்கின்றன. வீட்டிலேயே இதை எடுத்துக் கொள்ளலாம். மருத்துவமனைக்கு வரத் தேவையில்லை.

கே: உங்களுக்கு இளைஞர்களை வழிநடத்துவதில் (mentoring) மிகுந்த ஆர்வம், அல்லவா?
ப: ஒரு கல்விக்கூடத்தில் வேலை பார்க்கும் போது மாணவர்களை வழிநடத்த நிறைய வாய்ப்புக்கள் கிடைக்கின்றன. கஷ்டப்படும் ஒருவருக்கு நாம் வழிகாட்டும்போது அது அவரோடு நிற்பதில்லை. அவர் பின்னால் பலருக்கு உதவுகிறார். பள்ளியில் எனக்கு மிஸ். கிராண்ட் உதவினார். நான் இன்று பலருக்கு உதவும் நிலையில் உள்ளேன். என்னிடம் உதவிபெற்ற மாணவர்கள் எனக்கு ஏதாவது திருப்பிச் செய்யவிரும்புகிறேன் என்று சொன்னால் "நீங்கள் மற்றவர்களுக்கு உதவுங்கள், அதுதான் நீங்கள் எனக்கு அளிக்கக்கூடிய பெரிய பரிசு" என்பேன்.

நேர்காணல்: சி.கே. வெங்கட்ராமன், கோம்ஸ் கணபதி
தமிழில்: மீனாட்சி கணபதி

*****


என்னைப் புரிந்துகொண்ட செவ்விந்தியர்
செவ்விந்தியர்கள் எப்போதும் மற்றவர்களை அந்நியராகத்தான் பார்ப்பார்கள். நான் ஒய்ட் ரிவர் சென்ற சில நாட்களில் அங்குள்ள மூத்தோர் குழுவின் (Elder's council) தலைவரது பேரக்குழந்தை நோய்வாய்ப்பட்டது. நான் அதைக் காப்பாற்ற இரவு முழுவதும் முயற்சித்தேன். முடிவில் காலை 5 மணிக்கு முயற்சியைக் கைவிட்டேன். அப்போது அந்தத் தலைவர் வந்து தன் பேரக்குழந்தை எப்படியிருக்கிறது எனக் கேட்டார். நான் குழந்தை இறந்துவிட்டது என வருத்தத்துடன் கூறினேன். அவர் ஒன்றும் சொல்லாமல் திரும்பிப் போய்விட்டார்.

நான் வீட்டிற்குச் சென்று என் மனைவியிடம் அவர்கள் நம்மை இங்கிருந்து போகும்படிக் கூறப்போகிறார்கள் எனச் சொன்னேன். பின்பு குளித்துவிட்டு மருத்துவமனை சென்றபோது தலைவரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. அங்கு போனேன். அவர் மிக அமைதியாகக் காணப்பட்டார். அவர் என்னை உட்காரச் சொல்லிவிட்டு எதுவும் பேசாமல் சிறிது நேரம் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். பின் "டாக்டர், உங்களுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். நீங்கள் என் பேரனைக் காப்பாற்றக் கடினமாக முயற்சித்தீர்கள் என்பதை அறிவேன். நீங்கள் எங்கள் குழந்தைகள் பலரைக் காப்பாற்றியுள்ளீர்கள். நீங்கள் என் குழந்தைக்குச் செய்த உதவியைப் பாராட்டுகிறேன்" என்றார். இது நான் எதிர்பாராதது. இந்த நிகழ்ச்சியை என்னால் மறக்க முடியாது.

- டாக்டர் மதுரம் சந்தோஷம்

*****


Honors and Awards
* The James F. ANd Sarah T. Fries Foundation, Fries Prize for Improving Health (2014)
* American Tamil Medical Association, Once in a Decade Service Excellence Award (2014)
* Sabin Gold Medal Award (2014)
* Counselors Healping (South) Asians/Indians Inc., Radha Pathak Humanitarian Award (2013)
* Johns Hopkins Distinguished Alumnus Award (2012)
* United States Department of Health and Human Services, Indian Health Service Director's Special Recognition Award (2011)
* Paul Rogers Society Research! America Ambassador for Global Health (2008-10)
* American Tamil Medical Association, Lifetime Achievement Award for "Extraordinary contributions in Global Preventative Health" (2008)
* ISPPD Board, Honorary Robert Austrian Lecture Award (2006)
* Indian Health Service Certificate of Merit, U.S. Department of Health and Human Services, in recognition of personal dedication, commitment and contribution to the overall IHS Research Program Activity (2003)
* Thrasher Research Fund Award, "In recognition of Excellence in Research" (1988)
* Indian Health Service Award for outstanding dedication and contribution to improving the health of the White Mountain Apache People (1981-1986)

SOURCE: www.jhsph.edu

*****


மேற்கோள்கள்:
"நிறைய புத்திசாலிகள் நல்ல நல்ல வாய்ப்புகள் கிடைத்தும் பெரிதாக எதுவும் சாதிக்காமல் போவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால், சராசரி மனிதர்கள் கடின உழைப்பால் நிறையச் சாதித்திருக்கிறார்கள்."
"சிலசமயம் உங்களது மிகப்பெரிய தோல்வியே உங்களது வெற்றிக்குக் காரணமாக இருக்கும்"
More

Dr. சியாமா
Share: 
© Copyright 2020 Tamilonline