Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | சாதனையாளர் | சமயம் | பொது
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | அஞ்சலி | சிறப்புப் பார்வை | முன்னோடி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
புதினம்
ஆத்ம சாந்தி (அத்தியாயம் 13)
- சந்திரமௌலி|மே 2015|
Share:
Click Here Enlargeதப்பிய குறி

இதுவரை: திருவல்லிக்கேணி ஒண்டுக்குடித்தன வீட்டில் பெற்றோரோடு வசிக்கும் பரத், மோட்டார் எஞ்சினீயரிங்கில் நாட்டம் உள்ளவன். அனுபவ அறிவு இருந்தாலும், இதில் முறையான கல்வி இல்லாததால் கிடைத்த சட்டப்படிப்பை எப்படியோ முடித்து குமாஸ்தா வேலைக்கு முயற்சிக்கிறான். அதிர்ஷ்டவசத்தால் 'கேந்திரா மோட்டார்ஸ்' நிறுவனர் விஷ்வனாத்தின் மகள் கேந்திராவுக்கு உதவும் வாய்ப்பு கிடைத்து, அவள் மனதில் இடம்பிடிக்கிறான். உலகைப் புரட்டிப்போடும் எரிபொருள் தேவையில்லா வாகன எஞ்சின் தயாரிக்கும் ப்ராஜெக்டைத் துவங்கிய விஷ்வனாத், தன் குழுவில் பரத்தை இணைத்துக்கொள்கிறார். கேந்திரா மோட்டார்சின் போட்டிக் கம்பெனியான வெளிநாட்டு நிறுவனம் கே.டி.கே. மோட்டார்ஸ் உரிமையாளர்கள் விஷ்வனாத்தின் முயற்சியைக் குலைக்கும் சதியில் பல வழிகளில் ஈடுபடுகிறார்கள். அவற்றுள் ஒன்று பரத்தை தீர்த்துக்கட்டிவிட்டு, அவன் இடத்தில் தங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒருவரை அமர்த்தி, விஷ்வனாத்தின் ரகசியங்களைத் திருடுவது. இரவு வீடு திரும்பிக்கொண்டிருந்த பரத்தை ஒரு கொலைகும்பல் குறி வைக்கிறது. இனி…

*****


வெல்டிங் மணி ஆட்டோவை விட்டிறங்கி பரத்தைக் குறிவைத்துப் போய்க்கொண்டிருந்த அதேநேரம், மணியின் செல்ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததால் எப்படியோ அவன் கும்பலில் இருந்த ஆட்டோடிரைவரின் செல்ஃபோன் நம்பரைப் பிடித்து இந்த முயற்சியை நிறுத்த கைலாஷ் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தான். மணி ஆட்டோவை விட்டு இறங்கியதும் அவனுக்குத் தொடர்பு கிடைத்தது. எடுத்ததுமே வள்ளென்று விழுந்தான்.

"எவ்வளவு தடவை கூப்பிடறது. மணி இல்லை? ஏன் ஸ்விட்ச் ஆஃப் பண்ணியிருக்கான் ஃபோனை?"

தன் தலைவரை அவன் என்று ஏகவசனத்தில் கைலாஷ் பேசியது பிடிக்காவிட்டாலும், படியளக்கும் பெருமாள் என்பதால் அமுத்தலாக "உங்க வேலையை முடிக்கதான் போயிருக்காரு. இதோ இப்ப முடிஞ்சிரும்" என்றான்.

"டேய் டேய் அதை நிறுத்ததாண்டா ஃபோன் பண்ணிட்டேயிருக்கேன். ஃபோனை எடுக்காம எருமைமாடு மாதிரி... உடனே மணியைக் கூப்பிடு. இந்த வேலையை ஆஃப் பண்ணு. பரத்தை வெட்டவேணாம், உட்டுரச் சொல்லு, சீக்கிரம்" கைலாஷ் பரபரத்தான்.

சுழன்றுவந்த மணியின் அரிவாளைப் பார்த்ததுமே, மிகவும் எச்சரிக்கையாக இப்படி எதுவாவது நடக்கும் என்று எதிர்பார்த்திருந்த கனகராஜ், "பரத் தள்ளிப்போ" என்று கத்தியவாறு, அவன் தலையை பலம் கொண்ட மட்டும் அமுத்தி தானும் அவன் மீது விழுந்தார். இளமைக் காலத்திலிருந்து கடுமையான மோட்டார்களோடும், உதிரிபாகங்களோடும் அதைவிடக் கடினமான வாடிக்கையாளர்களோடும் பழகிப்போன கனகராஜுக்கு வயதானாலும் வலு போகவில்லை. அதனால், அவர் தள்ளிய மாத்திரம் பரத் உடனே விழுந்துவிட்டான். ஆனால், வயதின் காரணமாக வலு இருந்த அளவு கனகராஜிடம் வேகம் இருக்கவில்லை. எனவே அவர் தன் தலையைக் குனிந்துகொள்ள அரைக்கால் வினாடி தாமதம் ஏற்பட்டது. அது போதுமே மணியின் அரிவாள் சுவைபார்க்க...

"சொத்" கனகராஜின் கழுத்துக்கும் தோள்பட்டைக்கும் நடுவில் அரை அங்குலம் அந்த வெறிபிடித்த அரிவாள் இறங்கியது. "அய்யோ" நினைவுதவறி கனகராஜ் தலைகுப்புற ரத்த விளாறோடு சரிந்தார்.

அதேநேரம், ஆட்டோவிலிருந்து "அண்ணே ஆளை விட்டுறச் சொல்லி ஃபோன் வந்துச்சு. விட்டுருங்க" என்று கத்தினான் கைலாஷின் செய்தி கிடைத்த மணியின் அடியாள்.

"சே, குறி தப்பிருச்சு, கெளவன் குறுக்க பூண்ட்டான்."

"தலை மீன் இன்னும் மாட்டலை. இன்னொரு அட்டெம்ப்ட் பண்ணுவமா?"

"அண்ணே விட்டுரச் சொல்லி ஃபோன் வந்துச்சு. வந்துருங்க. கைலாஷ் சார் ஃபோன் பண்ணாரு."

"ஏய் கெளம்புங்கடா, இனிமே இங்க நின்னா கூட்டத்துல மாட்டிருவோம்" மணி அவசர அவசரமாக ஆணை பிறப்பித்தான். தயாராக முழு திராட்டிலில் இருந்த ஆட்டோவில் அள்ளி அடைத்துக்கொண்டு, "பையன் உசிரு கெட்டி, தப்பிச்சிட்டான். கூட நின்ன கெளவன் காலின்னு நெனக்கிறேன். ஏய் எத்தினி மொறை சொல்லியிருக்கேன் பேரெல்லாம் பப்ளிக்ல இருக்க சொல்ல கத்தாதேனு. கைலாஷ் ஃபோன் பண்ணாருனு அந்த சவுண்டு குடுக்கற," அடியாளின் தலையைச் செல்லமாகத் தட்டிக் கடிந்துகொண்டான் மணி. "எண்ணூருக்கு விடு, ஆட்டோவை களுவணும்" ரத்தம் சொட்டிக்கொண்டிருந்த அரிவாளைப் பார்த்தவாறே சொன்னான். கண் இமைக்கும் நேரத்தில் அந்த ஆட்டோ அங்கிருந்து பறந்தது.

என்ன நடக்கிறது என்றே புரியாமல் தள்ளப்பட்ட வேகத்தில் கீழே விழுந்த பரத், சட்டென்று தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று புரிந்து கொண்டான். அதாவது புரிந்துகொள்ள முயன்றான். இதற்குள் கூட்டம் கூடிவிட்டது.

"எம்மாம் ரத்தம் பாரு? யாருனா ஆஸ்பத்திரி தூக்கிப்போங்கபா."

"சோடா வாங்க்யா, ஏய் தியேட்டர்ல ஃபர்ஸ்ட் எய்ட் பொட்டி இருக்கும். அப்படியே ஆம்புலன்ஸ் ஃபோன் பண்ணு" ஆளுக்கு ஆள் அடுத்தவர் என்ன செய்யவேண்டும் என்று உத்தரவு போட்டுக்கொண்டிருந்தார்கள்.

"அதுக்கெல்லாம் நேரமில்லை, அப்படியே அமுத்திப் புடிச்சாப்ல ஆட்டோல உடனே போணும். இல்லைனா ஆள் காலி."

"இதெல்லாம் போலீஸ் கேசுப்பா. ஒருத்தனுக்கொருத்தன் வெட்டிக்கிறானுங்க, நம்ம தலையிட்டா நமக்குதான் பிரச்சனை."

"வாட் இஸ் ஹேப்பனிங்க் டு திஸ் கன்ட்ரி? பாருங்க இவ்வளவு ஜனநடமாட்டம் உள்ள ஏரியால தைரியமா வெட்டறாங்க. இந்த கன்ட்ரி உருப்படாது"

நெட்டிசன்கள் ஓரிருவர் தங்கள் பளபள செல்ஃபோன்களில் அந்த கோரத்தைப் படம்பிடித்து அப்லோட் செய்துகொண்டிருந்தார்கள். கண்ணெதிரே நடந்த அந்த அக்கிரமத்தையும் ஒரு உயிர் போராடிக் கொண்டிருந்ததையும் சினிமாக் காட்சி போலவே பார்த்து விமர்சித்துக் கொண்டிருந்தார்கள்.

பரத் தன் சட்டையைக் கழற்றி கனகராஜின் கழுத்தில் பொங்கிவந்த ரத்தத்தை அடைத்து, தன் கண்களில் பொங்கிவந்த கண்ணீரை அடைக்க முடியாமல், இருகைகளிலும் அவரை வாரித்தூக்கி தான் வந்த ஆட்டோவில் ஏற்றிக்கொண்டான். தன்மையாக இருந்த அந்த ஆட்டோ டிரைவர், "ராயப்பேட்டை ஆஸ்பத்திரி பக்கம்தான். எமெர்ஜென்சிக்கு தூக்கிப்போயிடலாம். கவலைப்படாதே சார்" என்று விரைந்தான்.

கனகராஜ் லேசாகத் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு, "பரத் நீ எச்சரிக்கையா இரு, மனோவை நீதான் பாத்துக்கணும். அவனை இங்கியே வந்துரச் சொல்லு." வார்த்தைகளை மூச்சுவாங்கி, அட்சரம் அட்சரமாகக் கழட்டிப்பேசினார்.

"சிரமப்படாதீங்க அங்கிள். இதோ ஹாஸ்பிடல் வந்துட்டோம். நீங்க பொழச்சுக்குவீங்க. யாரு உங்களுக்கு இப்படிப் பண்ணினாங்க? உங்களுக்குத் தெரியுமா?"

"இவங்க என்னை வெட்ட வரலை. உன்னைக் குறிவெச்சு வந்தவங்க. நீ ஜாக்கிரதையா இரு."

அப்போதுதான் அவர் தன்னைத் தள்ளிவிட்டு குறுக்கே தான் வெட்டுப்பட்டது பரத்துக்கு உரைத்தது. அவனுக்கு இன்னும் அது பெரிய அதிர்ச்சியையும் அவர்மீது இன்னும் பரிதாபத்தையும் ஏற்படுத்தியது.

"டிரைவர் சீக்கிரம் போங்க..."

"இதோ வந்தாச்சு" விபத்து, அவசர சிகிச்சைப் பிரிவின் வாசலில் ஆட்டோவை நிறுத்தி, முழுதும் ரத்தத்தால் நனைந்திருந்த சட்டையை இன்னும் அமுக்கிப்பிடித்து ஒரு ஸ்ட்ரெச்சரில் கனகராஜைப் போட்டு, விடுவிடுவென பரத்தும், ஆட்டோ டிரைவரும் வார்டை நோக்கி ஒடினார்கள்.

கனகராஜ் மேலும் மூச்சுவாங்கி "பரத் நீ ஜாக்கிரதையா இரு. மனோகிட்ட சொல்லு எனக்கு அவனை ரொம்பப் புடிக்கும்னு. கடைசி நிமிஷத்துலகூட நான் அவனைப்பத்திதான் நெனச்சேனு சொல்வியா?"

"அங்கிள், அப்படில்லாம் சொல்லாதீங்க, இதோ வந்துட்டோம். நீங்க பொழச்சுருவீங்க."

அவன் அதை சொல்லிமுடிக்கும்போது, உதடோரம் ஒரு புன்னகையோடு கனகராஜின் தலை சரிந்தது. அதேகணம் அவர் ஆவி பிரிந்தது.

*****
காலை பத்துமணி அளவில் மீண்டும் சக்கரவர்த்தி தன் அலுவலகத்தில் கைலாஷைச் சந்தித்தார். மறுபடி முதல்நாள் இரவு விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார்.

"அந்த பரத்தை வெட்ட அனுப்பின ஆளுங்க என்ன ஆனாங்க?"

"அது வந்து. வந்து. பரத்தை வெட்டலை. அவனை விட்டுர சொன்ன மாதிரி விட்டுட்டாங்க."

"அப்பாடி. நல்லவேளை அனாவசிய பிரச்சனைலேருந்து தப்பினோம். அதை ஏன் இவ்வளவு தயங்கி சொல்றே? எனி பிராப்லம்?"

"வந்து வந்து. பரத் தப்பிச்சிட்டான். அவனோட பேசிட்டிருந்த இன்னோரு ஆளை போட்டுட்டாங்க. ஆள் காலின்னு நெனைக்கிறேன்."

"சே! இதெல்லாம் வேணாம்னு சொன்னேனே. இது ஏதாவது போலீஸ் கேசாயி பிரச்சனை ஆனா பெரிய விபரீதமாவும். சரி நடந்தது நடந்துருச்சு. இனிமே என்னைக் கேக்காம இதுபோல எதுவும் செய்யாதே. அப்படிச் செய்யறதாயிருந்தா என்னை இந்த வேலையில ஈடுபடுத்தாதே. உன் அவசரபுத்தியினால யாரோ முகந்தெரியாத, நமக்குச் சம்பந்தம் இல்லாத யாரையோ காவு வாங்கிட்ட. இரு ஒருநிமிஷம் அவர் ஆத்மா சாந்தியடைய மவுன அஞ்சலி செலுத்துவோம்."

"சக்கி நீங்க எல்லாத்தையும் முறைப்படி மாட்டிக்காம செய்வீங்கனு தெரியும். அதுக்காக இப்படியா?"

"ஆமாம், அந்த ஆத்மாவுக்கு என்ன ஆசையெல்லாம் இருந்ததோ?" ஒருநிமிட சம்பிரதாய மவுனத்துக்குப் பின், கைலாஷ் "அந்தப் பையன் மனோகருக்கு இந்தியா மாத்தலாகிற ஆர்டர் அனுப்பியாச்சு. அவனை இங்க கொண்டு வந்துரலாம்."

"இதையாவது உருப்படியா செஞ்சியே. சரி எனக்கு அந்த மனோகரை நம்ம சென்னை ஆஃபீசுல மீட் பண்ண ஏற்பாடு பண்ணு. அவனை மொத்தமா நம்ம கைக்குள்ள போட்டுக்கணும்."

தயங்கியவாறே கைலாஷ் "சக்கி நீங்க இன்னிக்கு நியூஸ் பேப்பர் இன்னும் பாக்கலையா?" சொல்லிக்கொண்டே அவர்முன் பிரபல தினசரிகளைக் கொட்டினான். எல்லாவற்றிலும் முதல் பக்கத்தில் முதல்நாள் இரவு சென்னையின் மையப்பகுதியில் நடந்த கனகராஜ் கொலை பத்திபத்தியாக, கோர விவரிப்புகளுடனும் படங்களுடனும் வந்திருந்தது.

"என்னை உள்ள வெக்காம விடமாட்ட போலெருக்கு. இதுக்குதான் இதெல்லாம் வேணாம்னு சொன்னேன்."

"சக்கி, இது யாரோ முகம் தெரியாத ஆளுனு சொன்னீங்களே. அது தப்பு. இது இப்ப நாம கைக்குள்ள போட்டுக்கணும்னு சொன்னீங்களே அந்த மனோகரோட அப்பா, பேரு கனகராஜ்."

"இதுக்கு மேல முடியாது. என்ன விட்டுரு கைலாஷ். இப்படி சொதப்புற ஆளுங்ககூட என்னால ஒரு காரியத்துல எறங்கமுடியாது."

"சக்கி கோவப்படாதீங்க. இனி நீங்க சொல்றதை மட்டும்தான் செய்வேன். இப்ப இந்தச் சிக்கலுக்கு என்ன செய்யிறது?" கைலாஷ் பணிந்ததும் சக்கரவர்த்தியும் இறங்கிவந்தார். "இந்த சந்தர்ப்பத்தை நமக்குச் சாதகமாக்கிக்குவோம். இப்ப அப்பா போன சோகத்துல இருக்கிற மனோகருக்கு நாம ஓவர் சப்போர்டா இருப்போம். இந்த மாதிரி சந்தர்ப்பத்துல மடக்கறது ஈஸி. ஆனா ஒரு விஷயம், தப்பித்தவறி இந்தக் கொலையை நீதான் செஞ்சேன்னு கண்டுபிடிச்சாங்கனு வெச்சுக்க, அத்தோட நீ க்லோஸ்."

அதெல்லாம் எச்சரிக்கையா இருப்பேன்.

"சரி அப்ப இந்த மனோகர் எப்ப சென்னை வரான்னு ட்ரேஸ் பண்ணு. ஏர்போர்ட்லேயே மடக்கி, அவன் அப்பா இறுதிக் காரியத்துக்கு எல்லா உதவியும் பண்ணு. நான் நாளைக்கு அவனை அவன் வீட்லயே பாக்கறேன். இவ்வளவு பெரிய ஆள் இப்படி உறுதுணையா இருக்காறேன்னு அவன் உருகிருவான். இந்த விஷயத்தை அஜாக்கிரதையா வேற யாருகிட்டயாவது கொடுக்காம, நீயே நேரடியா செய்."

கைலாஷ் அடுத்த காரியத்தை கவனிக்கச் சென்றான்.

*****


மனோகர் தன் அக்காவோடு கைலாஷின் பெரிய வண்டியில் வீட்டுவாசலில் இறங்கும்போது இரவு மணி பதினொன்று. கனகராஜ் வெட்டப்பட்டு 24 மணி நேரம் ஆகியிருந்தது. வாசலில் ஷாமியானா, முழுக்க சோக முகத்தோடு ஜனங்கள். சுத்தி அம்பாரமாய் பூக்கூடைகள், சாவு செண்ட், சங்கு, சேகண்டியோடு ஒரு கூட்டம் எத்தனை சாவு பாத்துட்டோம் என்ற முகத்தோடு கனகராஜின் இறுதி ஊர்வலத்துக்கு பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அவருடைய உடல் இன்னும் மார்ச்சுவரியிலிருந்து வரவில்லை. பரத் பிரமை பிடித்தவன்போல் வாசல்படியில் உட்கார்ந்திருந்தான். அவன் சாப்பிட்டு ஒருநாள் ஆகியிருந்தது. மனோகரைப் பார்த்ததும் தன் பிரமையிலிருந்து நீங்கி, "மனோ, அக்கா… அங்கிள் நம்மளை விட்டுப் போயிட்டார்" என்று அவன்மீது விழுந்து அதுவரை அடக்கிவைத்த அழுகையைக் கொட்டித் தீர்த்தான். சாதாரணமாகவே தன் உணர்ச்சிகளை அதிகம் வெளிக்காட்டாத மனோகர், மேலும் தன் துக்கத்தை அடக்கிக்கொண்டு, "அழாதடா, உன் மடிலதான் அப்பா கடைசியா உயிர் விட்டாராமே. உள்ளே வா, அம்மாவைப் பாக்கலாம். என்ன நடந்ததுனு சொல்லு. அக்கா உள்ளே போ. பெட்டியெல்லாம் நாங்க பாத்துக்கறோம்" என்று பொறுப்பாக உத்தரவு பிறப்பித்தான்.

அவனை விமான நிலையத்திலிருந்து அழைத்துவந்த கைலாஷ், பரத்தை ஒருமுறை நன்கு நெருக்கத்தில் பார்த்துவிட்டு, மனோகரிடம், "அப்ப நாங்க நாளைக்கு வரோம். கமிஷனர்கிட்ட சொல்லியாச்சு, தாமதமாகாமல் பாடியை ரிலீஸ் பண்ணிருவாங்க. அப்புறம் இந்த பணம், அவசர தேவைக்கு பாஸ் உங்களுக்கு குடுக்கச்சொன்னார். வேற எது வேணும்னாலும் தயங்காம ஃபோன் போடுங்க" என்று சொல்லி, பதிலுக்குக்கூடக் காத்திராமல் அவன் கையில் ஒரு புடைப்பான கவரைத் திணித்தான்.

"ரொம்ப தேங்க்ஸ் கைலாஷ். இந்த சந்தர்ப்பத்துல நீங்க செய்யற இந்த உதவியை நாங்க என்னிக்கும் மறக்கமாட்டோம்."

அதுவரை அசுவாரசியமாக இருந்த பரத்தை "கைலாஷ்" என்ற வார்த்தை உசுப்பேற்றியது. வெல்டிங் மணியின் அடியாள் கடைசியாகக் கூவியது பரத்தின் நினைவுக்கு வந்தது "அண்ணே விட்டுரச் சொல்லி ஃபோன் வந்துச்சு. வந்துருங்க. கைலாஷ் சார் ஃபோன் பண்ணாரு." கைலாஷ்.. கைலாஷ்..

மனோகர் "இவர் நான் வேலை செய்யிற கேடிகே க்ரூப்போட சேர்மனுக்கு வலதுகை. பெரிய போஸ்ட்ல இருந்தாலும், வெரி கைண்ட். கைலாஷ் சார் இது என்னோட ஃப்ரெண்ட் பரத். அப்பாவோட கடைசியா இருந்தவன்" பரத்தின் எண்ண ஓட்டம் உசைன்போல்ட்டின் வேகத்தை அடைந்தது. கேடிகே க்ரூப்… கேடிகே மோட்டார்ஸ் அதுல ஒண்ணு. அவங்க கேந்திரா மோட்டார்சோட ஜன்ம வைரிகளாச்சே.

"பரத் நீ எச்சரிக்கையா இரு, மனோவை நீதான் பாத்துக்கணும். அவனை இங்கியே வந்துரச் சொல்லு.... இவங்க என்னை வெட்ட வரலை. உன்னைக் குறிவெச்சு வந்தவங்க. நீ ஜாக்கிரதையா இரு" கனகராஜின் கடைசிநிமிட எச்சரிக்கை இப்போது பரத்தின் மனதில் மறுபடி ஒலித்தது. கைலாஷ் "ஒன்ஸ் எகய்ன் சாரி ஃபார் யுவர் லாஸ். டேக் கேர். உங்க அப்பாவுக்கு எதிரிகள் யாராவது? ப்லான் பண்ணின அட்டாக் மாதிரி இருக்கே. ஏதாவது விவரம் தெரிஞ்சதா?" என்றான்.

"அப்பாவுக்கு எதிரிகள்னு எனக்கு தெரிஞ்சு யாரும் இல்லை"

"மனோகர் நீ உள்ளே போ. அம்மாவைப் பாரு. அங்க்கிளுக்கு என்னிக்கும் எதிரிகள் கிடையாது. அவங்க குறி வெச்சது எனக்கு."

"என்ன சொல்றே பரத்?" என்று திடுக்கிட்ட மனோகரின் தோளில் கைபோட்டு, கைலாஷை தீர்மானமாக வெகு அருகில் உற்று நோக்கி, "அந்த ரவுடிங்களையும், அவனுங்கள அனுப்பி உன் அப்பாவை அநியாயமா கொன்ன அந்த பொட்டப் பசங்களையும் பழிக்குப்பழி வாங்கலன்னா என் பேர் பரத் இல்லை" என்றான் பரத்.

சங்கும் சேகண்டியும் சேர்ந்து அப்போது அகாலமாக ஒலித்தது. கைலாஷின் உடல் உதறியது.

(தொடரும்)

சந்திரமௌலி,
ஹூஸ்டன்
Share: 




© Copyright 2020 Tamilonline