Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | சாதனையாளர் | சமயம் | ஜோக்ஸ் | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சிறுகதை
தோப்பாகும் தனி மரம்
நூல் தானம்
விசிறிவாழை
சாக்கடைப் பணம்
- சேகர் சந்திரசேகர்|ஏப்ரல் 2015|
Share:
"மதிப்புமிக்க ஆசிரியருக்கு, இது என் பிரச்சினை தொடர்பாக தங்களுக்கு நான் அனுப்பும் மூன்றாவது கடிதம். சமூகத்தில் நடக்கும் பல அநியாயங்களைத் தங்கள் பத்திரிக்கை தட்டிக்கேட்டு, தீர்வுகளை வழங்கியுள்ளதால் தொடர்ந்து தங்களுக்கு எழுதுகிறேன். இத்துடன் தனி இணைப்பில் எனது பிரச்சனைபற்றி விளக்கியுள்ளேன். தாங்கள் இதனை அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டுசென்று இந்த பிரச்சனையிலிருந்து என்னை விடுவிக்கப் பேருதவி செய்யுமாறு வேண்டுகிறேன்.

இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள,
தியாகராஜன், பி.ஏ."

இணைப்பில் இருந்த பிரச்சனை, தியாகு என்கிற தியாகராஜனையும் அவன் மனைவி சாந்தியையும் கடந்த மூன்று மாதங்களாகத் தொடர்கிறது. அவர்கள் வீட்டைச் சுற்றிப் பாதாளச்சாக்கடை போடுவதற்காக அரசாங்கத்தின் ஏதோ ஒரு டிபார்ட்மெண்ட் மூன்று மாதங்களுக்கு முன் குழிவெட்டிப் போட்டிருந்தது. சாக்கடைக் குழாய்களும் வந்திறங்கிவிட்டன. ஆனால் இன்னும் ஒரு வேலையும் ஆரம்பிக்கவில்லை. அதனால், சாக்கடைத் தண்ணீர் வெளியே வழிந்து கொசு, ஈ, பன்றிகள் என்று அவர் வீட்டை நாறடித்தது. கதவு, ஜன்னல், எல்லாவற்றையும் எப்பொழுதும் மூடிவைக்க வேண்டிய சூழ்நிலை. குடிக்கும், குளிக்கும் தண்ணீரிலெல்லாம் சாக்கடைத் தண்ணீர் கலக்க ஆரம்பித்திருந்தது.

வீட்டின் உள்ளே போகவேண்டுமென்றால் குழி வெட்டிப்போட்டு மலையாகக் குவிந்திருக்கும் மண்மீது ஏறி, சாக்கடைக் குழாயில் வழுக்காமல் ஏறி, ஒரு ஜம்ப் பண்ணி வாசல்படியில் லாவகமாகக் கால்வைக்க வேண்டும். இதனால் தியாகுவும், அவரது மனைவி சாந்தியும் படும் தொந்தரவு அதிகம். சீக்கிரம் வேலையை முடிக்கச்சொல்லி எத்தனையோ முறை டிபார்ட்மெண்ட்க்கு ஃபோன் செய்து பார்த்துவிட்டார் ஒன்றும் நடக்கவில்லை.

டைப் செய்த கடிதத்துடன், இணைப்பாக, மேற்கண்ட பிரச்சனை தாங்கிய காகிதங்களைக் கவருக்குள் வைத்து, பெறுபவர் முகவரி எழுதி, தபால்தலையை ஒட்ட மேசை இழுப்பறையைத் திறந்தார்.

"சாந்தி.. சாந்தி.. இங்க வச்சிருந்த ஸ்டாம்ப் எங்க போச்சு?"

சமையல் அறையிலிருந்து வந்த அவர் மனைவி சாந்தி, "தம்பிக்கு பொங்கல்வாழ்த்து அனுப்புறத்துக்காக அன்னைக்கு எடுத்தேன். திருப்பிக் கொண்டாந்து வைக்க மறந்துட்டேன். இந்தாங்க" என்று தபால்தலை கொண்டுவந்து கொடுத்தாள்.

தியாகுவுக்கு அந்தந்தச் சாமான் அந்தந்த இடத்தில் இருக்கவேண்டும். எந்தக் காரியமானாலும் அதற்குரிய காலத்தில் நடைபெற வேண்டும். எல்லாவற்றிலும் ஓர் ஒழுங்கு, நேர்த்தி இருக்க வேண்டும். எந்த ஒரு காரியமும் அதற்குரிய தர்ம, நியாயப்படி நடக்க வேண்டும். அதிகப்படியாக காசு, செலவு செய்து எதையும் செய்யமாட்டார். ஏதாவது ஊருக்குச் செல்வதாயிருந்தால் தானே ரயில்வே ஸ்டேஷன் சென்று, வரிசையில் கால்கடுக்க நின்று, டிக்கெட் ரிசர்வ் செய்வார். ஏஜெண்டிடம் போனால், அதிகக் காசு தரவேண்டியிருக்கும் என்று போகமாட்டார்.

அன்றொரு நாள் வீட்டுக்கு ஆட்டோவில் வந்தவுடன் மீட்டர் காசைச் சரியாக 54 ரூபாய் எண்ணிக் கொடுக்க, ஆட்டோ டிரைவர் மீட்டருக்கு மேல் காசு கேட்க, இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. சாந்தி அறுபதாய்க் கொடுக்கச் சொல்லி எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். முடியவே முடியாது என்று பிடிவாதம் பிடித்தார் தியாகு. கடைசியில் ஆட்டோக்காரனிடம் "சாவுகிராக்கி" பட்டம் வாங்கிக்கொண்டு ஆறு ரூபாய் மிச்சம் பிடித்த பெருமிதத்தோடு வந்தார்.

இப்பொழுது உள்ள சாக்கடைப் பிரச்சினை, அவ்வளவு எளிதாய்த் தோன்றவில்லை திடீர் என்று சந்தேகம் வந்தது. அந்தப் பத்திரிகைக்காரர்கள் என்றைக்கு என் கடிதம் பிரித்து, அதை அவர்கள் பத்திரிகையில் போட்டு சம்பந்தப்பட்டவர்கள் என்றைக்குப் பார்த்து, என்றைக்கு உதவி செய்யப் போகிறார்கள்? மேலும் இதை அவர்கள் சமூகப் பிரச்சனையாகப் பார்க்காமல் தனிமனிதப் பிரச்சனையாகப் பார்ப்பதால், பத்திரிகை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறதோ? பலவாறு சிந்தித்தார். முடிவில், அந்தப் பாதாளசாக்கடை சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு நேரில் சென்று விசாரிப்பதுதான் நல்லது என்று தோன்றியது.

ஒரு பழைய கட்டிடத்தில் இருந்தது அந்த அலுவலகம். வாசலில் தள்ளுவண்டியைச் சுற்றி டீ, வடை, போண்டா என்று பலர் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். உள்ளே இரண்டு பக்கமும் மேசை நாற்காலிகளில் ஆண்களும், பெண்களுமாக குமாஸ்தாக்கள் டைப் அடித்துக் கொண்டு, எழுதிக் கொண்டு, போனில் உரத்து பேசிக்கொண்டிருந்தனர். காகிதக்குவியல்கள், பைல்கள், சுருட்டி வைத்த ரப்பர் குழாய்கள், கம்பிச் சுருள்கள் என்று அந்த அலுவலகமே குழப்பமாய் இருந்தது.

தியாகு சாந்தியை அழைத்துக் கொண்டு அலுவலகம் உள்ளே போனார். சிறிதுநேரம் ஒன்றும் புரியாமல், யாரைப் போய் என்ன கேட்பது என்று தெரியாமல், உத்தேசமாய் ஒருவரை அணுகி "சார்" என்றார்.

அழைக்கப்பட்டவர் தலை நிமிராமல் "என்ன?"

"என் பெயர் தியாகராஜன். நாங்க வேல்நகர் எக்ஸ்டன்ஷன்லேந்து வர்றோம். பிரச்சனை என்னன்னா...."

"வேல்நகர் ஈஸ்டா, வெஸ்டா?"

"வெஸ்ட்."

இப்போதும் தலை நிமிராமல், கையை மட்டும் வலதுபக்கம் நீட்டி, "அங்க கடைசி டேபிளுக்கு மொத டேபிள். அவரைப் பாருங்க. வேல்நகர் வெஸ்ட் அவரோட ஜூரிடிக்சன்."

கடைசி டேபிளுக்கு, முதல் டேபிளில் யாரும் இல்லை. "அங்க யாரும் இல்லியே"

"இப்பத்தான் ஆபீசுக்கு வந்தான். அதுக்குள்ள போயிட்டானா? வெளில வடை தின்னுட்டு இருப்பான். லோகுன்னு போய்க் கேளுங்க" சொன்னவர், தலை நிமிரவே இல்லை.

தியாகுவும், சாந்தியும் வெளியில் வந்து லோகு யார் என்று விசாரித்தனர். யாரோ, யாரையோ கை காட்ட, திடீரென்று ஒருவன் வந்தான்.

"என்னா சார், என்னையா தேடறீங்க?"

கேட்டவன் கருப்பாய், குள்ளமாய், குண்டாய் இருந்தான். கையில் தடிமனான பிரேஸ்லெட்டும், விரலில் பிரபல கட்சித் தலைவர் படம்போட்ட பெரிய மோதிரமும் இருந்தது. வாயில் பாதி மென்றுகொண்டிருந்த வடை. பேப்பர் பொட்டலத்தில் மீதி வடை.
"நீங்கதான் லோகுவா?" என்று கேட்டு உறுதி செய்தபின் தியாகுவும் சாந்தியும் மாறி மாறி சாக்கடைக் குழி பிரச்சனைபற்றிச் சொன்னார்கள்.


"ஓ அதுவா. பாதாளச் சாக்கடை ப்ராஜக்ட்! காண்ட்ராக்ட்காரன் பண்ணின கொளறுபடி. ரொம்ப லோவா கோட் பண்ணி காண்ட்ராக்ட் எடுத்துப்புட்டு இப்போ ஃபண்ட்ஸ் இல்லாமத் தவிக்கிறான். எப்ப திருப்பி வொர்க் ஆரம்பிப்பான்னு சொல்ல முடியாது. ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பிச்சிருக்கோம்" என்றான் லோகு.

"என்னங்க இப்படிச் சொல்றீங்க. ஆல்ரெடி மூணு மாசம் ஆச்சு. எத்தனையோ தடவை ஃபோன் பண்ணி பார்த்திட்டேன். யாரும் ஒழுங்கா பதில் சொல்லலை. வீட்டைச் சுத்திலும் சாக்கடைத் தண்ணி, கொசு, குழி வெட்டிப் போட்ட மண்ணு மலைமாதிரி குமிஞ்சு கெடக்கு. கார், ஸ்கூட்டர் வண்டி எதுவுமே போகமுடியலே. ஆட்டோக்காரன் வரமாட்டேங்குறான். மருந்து அடிக்கறதும் இல்லை. சுகாதாரக் கேடு."

"புரியுது சார்.. ஆனா, இது கவர்மெண்டு. எல்லாம் ரூல்ஸ்படி போறதால ஸ்லோவாத்தான் நடக்கும். வேண்ணா ஒரு மனு எழுதிக் கொடுங்க. அப்புறம் கொசு மருந்தெல்லாம் நாங்க அடிக்கறது இல்லை. அது வேற டிபார்ட்மெண்ட். அங்க போய்க் கேளுங்க."

கோபம் வந்தது தியாகுவுக்கு. "என்னய்யா பெரிய ரூல்ஸ்? ரெக்லெசா பேசுறது எந்த ரூல்ஸ்? கொஞ்சம்கூட ரெஸ்பான்ஸிபிலிடி இல்லியே?"

"சார்.. மரியாதையாப் பேசுங்க. நான் ஒரு கவர்ன்மெண்ட் செர்வண்ட். சிசுவேஷன் என்னன்னு தெளிவா சொல்லிட்டேன். இனி ஒண்ணும் பேசறதுக்கு இல்ல" என்று மீதி வடையை வாயில் போட்டுக்கொண்டு, அதே பேப்பரில் கையைத் துடைத்து, அதைக் கசக்கி அவர்மேல் வீசுவதுபோல தூர எறிந்துவிட்டு உள்ளே போனான் லோகு.

தியாகுவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. கோபத்தில் ரத்தம் கொதித்தது. சாந்தி, அவரை ஆசுவாசப்படுத்தினாள். பிறகு புறப்பட எத்தனிக்கும்போது ஒருவன் அவர்கள் அருகே வந்து ரகசியமாய், "சார், அம்மா, கொஞ்சம் என்கூட வாங்க" என்றான்.

"எதுக்கு யாருப்பா நீ?"

"அங்கிட்டு போயிடலாம். இங்க வேணாம். அட சும்மா பயப்படாம வாங்க சொல்றேன்."

சிறிது தூரத்தில் ஒரு கல் மேடையில் அமரச் சொன்னான். "நான் லோகுவோட மச்சான். நீங்க லோகு அண்ணன்கிட்ட பேசுனதெல்லாம் கேட்டுக்கிட்டுத்தான் இருந்தேன். இது ரொம்ப சிம்பிள் மேட்டர். அவருக்கு மால் வெட்டினீங்கன்னா ரெண்டே நாள்ல வேலை சுளுவா முடிஞ்சுரும். நான் எல்லா ஏற்பாடும் பண்றேன். மொத்தம் 10 ரூவா ஆகும். நீங்க எனக்கு எதுவும் தரத் தேவையில்லை."


"என்னய்யா சொல்றே? லஞ்சமா? அவன் செய்யற வேலைக்கு நான் எதுக்குய்யா லஞ்சம் தரணும்? அதுவும் 10000? எனக்கு வர்ற கோவத்துக்கு மொகரையப் பேத்துப் பிடுவேன்."

"சார்.. சார்.... மெதுவா... ம்.. அது இன்னா படம்? கமலு கெளவனாரா வந்து எல்லாரையும் கீசுவாறே. அந்த மாறி கூவுற. லோகு அண்ணனைப் பத்தி ஒங்களுக்குத் தெரிலை. சொல்றேன் கேளு."

லோகு இந்தமாதிரி எல்லா வேலைகளையும் பாதியில் நிறுத்தி விடுவதையும் முடிக்கச் சொல்லும்போது லஞ்சப்பணம் பெற்று முடித்து விடுவதையும் விவரமாகச் சொன்னான். யாராவது அவன்மேல் புகார் சொன்னால் கட்சி செல்வாக்கை வைத்துத் தப்பிவிடுவதாகவும், புகார் கொடுப்பவர்களை மிரட்டிப் பணியவைப்பவன் என்றும் சொன்னான்.

"அதான் சொல்றேன். பாத்து செய் சார். நாளைக்கு இதே எடத்துக்கு பணத்தோட வந்தியானா வேலை சுளுவா முடிஞ்சுறும். அல்லார்ட்டயும் இருவது, இருவத்தஞ்சுன்னு வாங்குறோம். அம்மா மொகத்துக்காகத்தான் இந்தக் கம்மி ரேட்டு. இங்க வந்து மிளகு யார்னு கேட்டா, பச்ச புள்ளைக்குக் கூடத் தெரியும். என்னான்டை கொண்டு விட்றுவாங்க" என்றான்.

"போடா ஃபூல்... யாருகிட்ட ஒன் வேலையக் காட்ற? எனக்கு ஹை அஃபிஷியல்ஸ் எல்லாம் தெரியும். மிளகாம் மிளகு. நசுக்கிப்பிடுவேன், நசுக்கி."

"ஏதோ பெரிய மனுசனா இருக்க, ஒதவலாம்னு வந்தா ஒதைப்பேங்குற... இம்புட்டு சொல்லியும் என்னா தெயிரியம் ஒனக்கு? இந்த அம்மா இருக்கத் தொட்டு பேசாமப் போறேன். மேக்கொண்டு நான் ஏதும் செய்யறதுக்குள்ள ஓடிரு" என்றான் மிளகு. பிறகு செல்ஃபோனை ஒற்றி, "லோகு அண்ணே, இது ஒண்ணும் தேர்ற மாதிரி தெரிலை. விட்டுத்தொலை. ஆமா அதான். அந்தக் காமாச்சி நகர் பார்ட்டி பணத்தோட இன்னும் அரைமணியில வருதாம். அந்த வேலையை நாளைக்கு ஆரம்பிக்கச் சொல்றேன்."

*****


தியாகுவும் சாந்தியும் பஸ்ஸில் திரும்பி வரும்போது ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை. ஒருவருக்கொருவர் கைப்பிடித்து சாக்கடை மண்மீது ஏறி, குழாயில் கால்வைத்து, படியில் குதித்து வீட்டினுள் சென்றனர்.

இரவு உணவு சாப்பிடும்போது சாந்திதான் மெல்லப் பேச்சை ஆரம்பித்தாள். "ஏங்க நமக்குக் காரியம் ஆகறதுதாங்க முக்கியம். பேசாம கேக்கற பணத்தைக் கொடுத்துத் தொலைச்சுடலாங்க" என்றாள்.

"என்ன பேசற நீ? அநியாயத்துக்கு அடிபணியச் சொல்றியா? காலிப்பயலுக! அவனுங்கள என்ன பண்றேன் பாரு."

"அவங்க எக்கேடு கெட்டுப் போகட்டுங்க. அதுவா முக்கியம் நமக்கு? இன்னும் எத்தினி நாள்தான் இந்த சாக்கடைத் தண்ணில நீச்சலடிக்கிறது.? வீச்சம் தாங்கல. இங்க பாருங்க குடிக்கிற தண்ணி எல்லாம் கலங்கிக்கிடக்கு. எத்தனைவாட்டி கொதிக்க வச்சு வடிகட்டினாலும் சுத்தமாவல. இப்படியே போச்சுன்னா மலேரியா, டயரியானு வந்துரும்.. பேசாம ஒங்க புடிவாதம் கொள்கை குப்பை எல்லாம் மூட்டைகட்டி வச்சுட்டு கேக்கற பணத்தைக் குடுத்து வேலைய முடிப்பீங்களா...?"

"அதிகம் பேசாத சாந்தி. எந்த தயிரியத்துல என்கிட்டயே லஞ்சம் கொடுத்து வேலைய முடிக்கச் சொல்ற? என்னைய முறைதவறி நடக்கச் சொல்ற? அரசாங்கம் செய்யுற வேலை இது. நாம்ப இன்கம்டாக்ஸ், வாட்டர் டாக்ஸ், டிரெய்னேஜ்னு வருஷா வருஷம் கவர்மெண்ட்டுக்குப் பணம் கட்றோம். அதுலதான் இவங்க இந்த வேலை எல்லாம் முடிக்கணும்" அதிகக் கோபத்தில் மேலும் வார்த்தைகள் முணுமுணுப்பாக வந்தன. பாதி சாப்பாட்டில் எழுந்தார். "இதுக்கெல்லாம் ஒரு வழி இருக்கு. நாளைக்கு நான் டவுன் கோர்ட்டுக்குப் போயி வக்கீல் ரத்னவேலைப் பாத்து, அப்டியே, என் ஸ்கூல் ஃப்ரெண்ட் ரிடையர்ட் தாசில்தார் அவனையும் பாத்து எல்லாத்துக்கும் முடிவுகட்றேன். கண்டிப்பா ரெண்டு பேரும் ஹெல்ப் பண்ணுவானுங்க" என்றார்.

மறுநாள், காலை எட்டுமணி சுமாருக்கு வக்கீலையும், தாசில்தாரையும் பார்க்க டவுனுக்குப் புறப்பட்டார் தியாகராஜன். சாந்தி எடுத்துவந்த குடையை கையில் வாங்கி விரித்துக்கொண்டு "திரும்பி வர நைட் ஆயிடும்.. எனக்காக வெயிட் பண்ணாம நீ சாப்ட்ரு" என்றார்.

உள்ளே சென்ற சாந்தி, எதிரே சுவற்றில் தொங்கிய சாமி படத்தைப் பார்த்து, தம் கணவர் சென்ற காரியம் நல்லபடி முடியப் பிரார்த்தனை செய்துகொண்டாள். அப்பொழுதுதான் திடீரென்று அந்த யோசனை தோன்றியது. உள்ளறைக்குள் சென்று தனது பீரோவைத் திறந்தாள். அதில் சிறுகச் சிறுகச் சேர்த்த பணம் ஒரு பெட்டியில் இருந்தது. பெட்டியைத் திறந்து அந்துருண்டை வாசத்துடன் இருந்த பணத்தை எடுத்து எண்ணினாள். ஏழாயிரத்து இருநூறு இருந்தது. போதாதே! தொலைபேசியில் தம்பியை அழைத்தாள்.

"யாரு அக்காவா? என்னக்கா காலைல ஃபோனு? அத்தானுக்கு மேலுக்கு ஒண்ணும் இல்லியே."

"இல்லடா தம்பி. ஒங்கிட்ட ஒரு உதவி வேணும் யாருக்கும் தெரியப்பிடாது. முக்கியமா அத்தானுக்கு தெரியவே பிடாது. செய்வியா?"

"என்னக்கா, இப்படிக் கேக்குற.. ஒனக்கு இல்லாததா? சொல்லு."

"இது யாருக்கும் தெரியக் கூடாதுரா.. எனக்கு அவசரமா ஒரு மூவாயிரம் வேணும். இப்பவே வண்டி எடுத்துக்கிட்டு வீட்டுக்கு வாரியா?"

"மூவாயிரமா? அப்டி என்ன அவசரம்? அப்புறம் வண்டி ஒங்க வீட்டுக்கு வருமா? சாக்கடை எல்லாம் அடஞ்சிருச்சா?"

"அதப்பத்தித்தான் சொல்ல வந்தேன்."

எல்லாவற்றையும் தம்பியிடம் விபரமாகச் சொன்னாள். அதே கல் திண்ணையில் தம்பியும், சாந்தியும் மிளகுவின் வரவுக்காக (செலவுக்காக) காத்திருந்தனர்.

"பத்தாயிரம் பெரிய தொகையாச்சே... அந்தாளுங்களை நம்பலாமா? சொன்னபடி செஞ்சிருவானா?" என்றான் தம்பி.

"என்ன இன்னும் என்னை நம்பலையா? பணம் கொண்டாந்தீங்களா?" பின்னாலிருந்து மிளகின் குரல்.

படக்கென்று சுதாரித்துக் கொண்டு "இல்லப்பா தம்பிக்கு ஒன்னப்பத்தித் தெரியாதுல்ல, அதான். இந்தா நீ கேட்ட பத்தாயிரம்" சுற்றுமுற்றும் பார்த்துவிட்டுப் பணத்தைக் கொடுத்தாள் சாந்தி.


பிளாஸ்டிக் கவரைப் பிரித்துப் பணத்தை வாங்கி எண்ணிப் பார்த்தான்.

"என்ன அந்துருண்டை வாசம் தூக்குது.. ஏம்மா ஒங்க வீட்டுக்காரரு வல்லியா? ஓ, அவருதான் காந்தியாச்சே, எப்படி வருவாரு? ஹ.. ஹ.." என்று சிரித்துவிட்டு பணத்தை மீண்டும் பிளாஸ்டிக் கவரில் போட்டு சட்டை உள்பாக்கெட்டில் பத்திரப்படுத்திவிட்டு, "கவலைப்படாமப் போமா... லோகு அண்ணன்கிட்ட சொல்லிர்றேன்... ரெண்டு மூணு நாள்லே வேலை ஆரம்பிச்சுரும்... போயிட்டு வாங்க" என்றான் மிளகு.

வண்டியில் சாந்தியை வீட்டில் கொண்டுவிட்டுப் புறப்பட்ட தம்பியிடம் "ரொம்ப தாங்க்ஸ்டா தம்பி. இது யாருக்கும் தெரியவேண்டாம்" என்று நூறாவது முறையாகச் சொன்னாள்.

தியாகுவும் அன்றிரவு டவுனிலிருந்து திரும்பிவந்தார். வக்கீல் ரத்னவேலுவைப் பார்த்ததாகவும், பிறகு அவர் ஒரு கேஸ் விஷயமாக டெல்லி செல்வதால், இரண்டு வாரம் கழித்துத் தன்னை வந்து சந்திக்கச் சொன்னதாகவும் சொன்னார். தமது பால்ய நண்பர் ரிடயர்ட் தாசில்தார், புகார் மனு எழுதும் முறைபற்றிச் சொன்னதாகவும், அதை முறைப்படி எழுதியவுடன், கலெக்டரிடம் வரும் திங்கட்கிழமை தானே சென்று சேர்ப்பதாகவும் சொன்னதைச் சாந்தியிடம் கூறினார்.

இரண்டு நாட்களாக ஒன்றும் நடக்கவில்லை. அடுத்த இரண்டு நாட்கள் சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள்.

திங்கள் காலை தியாகு தம் நண்பர் தாசில்தாருக்குப் புகார்மனு கொடுக்க டவுனுக்குச் சென்றார். செவ்வாய்க்கிழமையும் சுவாரஸ்யம் இல்லாமல் சென்றது. சாந்திக்குக் கவலை வந்தது. பணம் கொடுத்து ஆறு நாட்கள் ஆகிவிட்டன. இன்னும் யாரும் வந்து வேலை ஆரம்பிக்கவில்லையே என்று கவலைப்பட்டாள்.

புதன்கிழமை காலை பால் வாங்கிக்கொண்டு வந்த தியாகுதான் சாந்தியை எழுப்பி, "சாந்தி எந்திரி.. வாசல்ல பார்... ஆட்கள் வந்துட்டாங்க. டிராக்டர் சத்தம் கேக்குதா?"

"அட... ஆமாங்க."

குழந்தைபோல் குதூகலித்தார். ஜன்னல் கதவைத் திறந்து ஆட்கள் வேலை செய்வதை நாள்முழுதும் பார்த்துக் கொண்டிருந்தார்.

"அடேயப்பா. அவன் ரிடையர்ட் தாசில்தாராக இருந்தாலும் என்ன ஒரு இன்ஃப்ளூயன்ஸ்? புகார் மனுவை சொன்னமாதிரி கலெக்டர்கிட்ட கொடுத்து கையோட வேலை முடிச்சான் பாரு, கிரேட்!"

சாந்தி மனசுக்குள் சிரித்துக்கொண்டாள்.

"அப்புறம் சாந்தி, இந்தச் சாக்கடை வேலை முடிஞ்சு, நல்ல ரோட்லாம் போட்டப்புறம் அவனை வீட்டுக்கு அழைச்சுட்டு வர்றேன். நல்ல விருந்து ஒண்ணு பண்ணிப் போடு."

"சரிங்க. நல்லா செஞ்சிப்பிடலாம்" என்றாள்.

பத்து நாட்கள் சென்றன. தியாகு வீட்டு வாசலில் முன்பு இருந்த சாக்கடை, குழி அடையாளங்கள் இல்லாதவாறு, பணி நடைபெற்று, புது தார்ரோடு போடப்பட்டு பளிச்சென்று இருந்தது. பூச்சி மருந்துகள் அடிக்கப்பட்டு, தண்ணீர்க்குழாய்கள் எல்லாம் சுத்தம் செய்யப்பட்டன.

ஒரு மாலை நேரம். சாந்தி உள்ளே தம்பியுடன் போனில் பேசிக் கொண்டிருந்தாள். தியாகு வெளியே கதவைத் திறந்து வைத்து ஒரு ஈஸிசேரில் சாய்ந்தபடி புதுக்காற்றைச் சுவாசித்துக் கொண்டிருந்தார்.

இன்னும் பிபி மாத்திரை சாப்பிடவில்லை என்ற நினைவு வந்ததும், உள்ளே பார்த்து மனைவியை அழைத்தார். பதில் வராமல் போகவே, தாமே மாத்திரை எடுப்பதற்காக உள்ளே வந்தார்.

உள்ளே வந்த தியாகுவின் காதுகளில் சாந்தியின் டெலிபோன் உரையாடல் நன்றாகக் கேட்டது.

"ஆமா தம்பி, நாம் அன்னைக்கு அவன் பேர் என்ன, மிளகோ, சுக்கோ அவங்கிட்ட பணம் கொடுத்துருக்காட்டி இவ்ளோ ஈசியா வேலை முடிஞ்சிருக்காது. என்ன காதுல விழலயா? அத்தான் வெளில ஈஸிசேர்ல படுத்திருக்காரு. இதுக்குமேல சத்தம்போட்டு பேச முடியாதுரா. அவர் காதுல வுளுந்திரும்.. ஆமா... ஆமா... அவரு ஏதோ, ஒரு காசும் செலவு செய்யாம, அவர் ஃப்ரெண்ட் தாசில்தார் மூலம் வேலைமுடிஞ்ச மாறி நெனச்சிக்கிட்டு சந்தோஷமா இருக்காரு.. ஆமா தம்பி, நாம பணம் கொடுத்த விஷயம் அவருக்குத் தெரியப்பிடாது. ஒரு ரெண்டு மாசம் பொறுத்துக்க. ஒங்கிட்ட வாங்கின மூவாயிரத்தைக் கொடுத்திர்றேன். சரி... ஒருநாள் குடும்பத்தோட சாப்பாட்டுக்கு வா. தம்பி, திரும்பத் திரும்பச் சொல்றேன். அத்தானுக்குத் தெரிய வேண்டாம் சரியா... சரி சரி.. வச்சுரவா..."

ஃபோனை வைத்துத் திரும்பியவள், தியாகு அங்கு நிற்பதைக் கண்டு அதிர்ந்தாள்.

"நீங்க.. நீங்க... எப்ப இங்க.." சாந்தியின் வார்த்தை குழறியது.

தியாகு, சாந்தியை இமைக்காமல் பார்த்தார்.

"என்ன மன்னிச்சுருங்க.. ஒங்களுக்குத் தெரியாம செஞ்சிட்டேன்... தப்புதான்" ஓவென்று கத்திக்கொண்டே அவர் காலில் விழுந்தாள் சாந்தி.

திடுக்கிட்டுச் சிலையாக நின்றார் தியாகு. குமுறிக்குமுறி அவள் அழுத அழுகை இதுவரை அவர் தம் வாழ்நாளில் கண்டதில்லை.

எல்லா விபரங்களையும் கேவிக்கேவி அழுது கொண்டே தியாகுவிடம் கூறினாள்.

தியாகு இன்னும் அந்த அதிர்ச்சி நீங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

"அம்மா, அம்மா.. " வாசலில் குரல் கேட்டது. திறந்து வைத்திருந்த கதவு வழியாக யாரோ நுழைய, அங்கே அந்த அலுவலகத்தில் பார்த்த மிளகு நின்று கொண்டிருந்தான்.

"அட, சாரும் இங்கதான் இருக்கீங்களா? நல்லா இருக்கீங்களா சார்?"

குரல் கேட்டு சுதாரித்து எழுந்து, கண்ணைத் துடைத்துக்கொண்ட சாந்தி, "என்னப்பா, எதுக்கு வீட்டுக்கெல்லாம் வர்ற?"

"ஒண்ணும் இல்லைமா.. இப்ப எல்லாம் சந்தோஷமா இருக்கீங்களான்னு கேட்டுப் போகலாம்னு வந்தேன். எல்லா வேலையும் நல்ல சுத்தமா பண்ணியாச்சு.. ஹி.. ஹி..:" என்று இளித்தான்.

"என்னய்யா.. இன்னும் பணம் வேணுமின்னு வந்தியா? அதான் அன்னிக்கே எல்லாத்தையும் நீ கேட்டபடி கொடுத்தேனே?" ஆத்திரத்தோடு சாந்தியிடம் வார்த்தைகள் வெளிப்பட்டன.

"அடச்சே, அதெல்லாம் இல்லம்மா. தப்பா நினைச்சீட்டீங்க என்னப்பத்தி.. என்ன, முன்னாடியே நான் ஃபோன் போட்டு சொல்லியிருக்கணும். அது என் தப்புதான். மன்னிச்சுருங்க" என்ற மிளகு, உள்பாக்கெட்டிலிருந்து ஒரு கவரை எடுத்து சாந்தியிடம் கொடுத்தான்.

தியாகு இன்னும் அந்த அதிர்ச்சி நீங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

"என்னப்பா இது?"

"அம்மா இது நீங்க அன்னைக்கு என்கிட்ட குடுத்த பணம். நீங்க பணம் கொடுத்துட்டுப் போன பின்னாடி, அன்னைக்குச் சாயங்காலமா சார் என்னைத் தேடிட்டு வந்து, அவரும் ஒரு பத்தாயிரம் கொடுத்தாரு. கையப் புடிச்சு சீக்கிரம் வேலைய முடிச்சுக் கொடுன்னு கேட்டுக்கிட்டாரு. ரொம்பப் பாவமா இருந்துச்சி.. என்னடா இது, காலைல அம்மா வந்து கொடுத்தாங்க, சாய்ங்காலம் சார் வந்து தராறுன்னு எனக்கு டவுட்டு. நாங்க என்னதான் பணம் வாங்கினாலும் எங்களுக்கும் தர்மம் நியாயம் எல்லாம் உண்டு.. ஆமாம்மா, ஒரே வேலைக்கு ரெண்டு தரம் பணம் வாங்கக்கூடாது பாருங்க. இது நீங்க கொடுத்த பணம். திருப்பிக் கொடுக்கவந்தேன். அந்த பிளாஸ்டிக் கவரு. அந்துருண்டை வாசம் இன்னும் அடிக்குது பாருங்க."

தியாகு இன்னும் அந்த அதிர்ச்சி நீங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

சேகர் சந்திரசேகர்,
இல்லினாய்ஸ்
More

தோப்பாகும் தனி மரம்
நூல் தானம்
விசிறிவாழை
Share: 


© Copyright 2020 Tamilonline