Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2024 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | முன்னோடி | சின்னக்கதை | அலமாரி | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | பொது
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
நேர்காணல்
முனைவர் ப. சரவணன்
- அரவிந்த் சுவாமிநாதன்|பிப்ரவரி 2024|
Share:
முனைவர் ப. சரவணன் மதுரையில் தனியார் பள்ளி ஒன்றில் தமிழாசிரியராகவும், தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றுகிறார். சங்க இலக்கியம் தொடங்கி நவீன இலக்கியம் வரை சிறகு விரித்திருப்பவர். தேர்ந்த வாசிப்பாளர், விமர்சகர். இலக்கியம், வரலாறு, தமிழாய்வு என நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். இலக்கிய ஆளுமைகள் பற்றிய இவரது கட்டுரைகள் குறிப்பிடத் தகுந்தன. தனது எழுத்துலகப் பணிகளுக்காகத் 'தமிழ்த் தேனீ' பட்டம் பெற்றிருக்கும் ப. சரவணன், தென்றலுடன் தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். அதிலிருந்து....

★★★★★


கேள்வி: உங்களது இளமைப்பருவம் கல்வி, குறித்துச் சில வார்த்தைகள்...
பதில்: என் தந்தையார் தெய்வத்திரு சு. பழனிசாமி தமிழ்நாடு அரசின் மீன்வளத்துறையில் உயர்பதவி வகித்தவர். எம்.ஏ. ஆங்கில இலக்கியம் கற்றவர். மிகவும் நேர்மையானவர். அதனால், அவர் ஆண்டுதோறும் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆண்டுக்கு ஒரு பள்ளி எனப் பல பள்ளிகளில் படித்தேன். பொதுவாகவே எனக்குக் கல்வியில் ஆர்வம் இல்லை. தேர்வுக்கு மட்டும் படித்து, தேர்ச்சி பெறுவதே வழக்கம். கோனார் தமிழ் உரையை மட்டும் நன்றாகப் படிப்பேன்.

பள்ளிப் பொதுத்தேர்வில் நான் மிகக் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மதுரை அமெரிக்கன் கல்லூரிப் பட்டப்படிப்புகளில் எனக்குத் தமிழ் இலக்கியம் மட்டுமே கிடைத்தது. முதலாமாண்டு பட்டப் படிப்பில் வகுப்பின் இறுதி மாணவனாகத்தான் தேர்ச்சிபெற்றேன். பேரா. இரா. பிரபாகர் அவர்களின் தூண்டுதலால் புதுமைப்பித்தனைப் படிக்கத் தொடங்கி, பின்னர் பரவலாக வாசிக்கத் தொடங்கினேன். பேரா. தெய்வத்திரு செ. போத்திரெட்டி அவர்களின் தூண்டுதலால் சங்க இலக்கியத்தில் ஈடுபாடு ஏற்பட்டது.

மூன்றாண்டு பட்டப் படிப்பு முடியும்போது கல்லூரி நூலகத்தில் இருந்த தமிழ்ப் புத்தகங்களுள் பாதியைப் படித்து முடித்திருந்தேன். வகுப்பின் முதல் மாணவனாகத் தேர்ச்சிபெற்றேன். அங்கேயே முதுகலைத் தமிழ்ப் பயின்றேன். பின்னாளில் கல்வியியலிலும் முதுகலைப் பட்டம் பெற்றேன்.



கே: உங்களது தொடக்க கால எழுத்து முயற்சிகள் குறித்துச் சொல்லுங்கள்
ப: பள்ளியில் படிக்கும்போது ஜன்னல் திரைச்சீலை காற்றில் படபடப்பதைப் பற்றி ஒரு பத்தி அளவுக்கு வர்ணனையாக எழுதினேன். அதனை என்னுடைய வகுப்புத் தோழன் பாராட்டினான். பின்னர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்தபோது கல்லூரி மலரில் எழுதினேன். பின்னர் பல்வேறு இதழ்களில் கட்டுரைகளை மட்டுமே எழுதிவந்தேன். 'சொல்புதிது' சிற்றிதழ், 'மருதம்' இணைய இதழ் ஆகியவற்றில் சிலகாலம் பணியாற்றினேன். தொடர்ந்து சில இலக்கியக் கூட்டங்களை மதுரையில் நடத்தினேன்.

கே: இலக்கிய ஆர்வம் துளிர்த்தது எப்போது, எப்படி?
ப: எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்கள் ஊட்டி குரு நித்ய சைதன்ய யதி அவர்களின் இடத்தில் நடத்திவந்த இலக்கியச் சந்திப்புகளின் வழியாகவும் திரு. வசந்தகுமார் அவர்களின் தமிழினி பதிப்பக நூல்கள் வழியாகவும் நவீனத் தமிழ் இலக்கியப் பரிச்சயம் பெற்றேன். பேரா. தெய்வத்திரு. வேதசகாயகுமார் அவர்கள் விமர்சனக் கலை கற்பித்தார். அதன் விளைவாகவே பின்னாளில் நான் 'வெண்முரசு' பற்றி 26 கட்டுரைகளை எழுதினேன்.



கே: உங்கள் முதல் படைப்பு பற்றிச் சில வார்த்தைகள்...
ப: 'உயிர்மை' மாத இதழில் வெளிவந்த என்னுடைய சர்க்கஸ் சிங்கத்தைப் பற்றிய கவிதையைப் படித்துவிட்டு என் அப்பா பாராட்டினார். அவரும் எழுத்தாளர் என்பதால் (சுபமி என்ற புனைபெயரில் எழுதிவந்தார்) பொதுவாகவே அவரின் பாராட்டுக்களைப் பெற நான் பெரும்பாடு பட்டேன். என்னுடைய முதற் கவிதைத் தொகுப்பைக் 'காலச்சுவடு' பதிப்பகம் வெளியிட்டது. தலைப்பு 'மழைக்காலப் பாடகனும் மழையிசையும்'.

கே: எழுத்தாளர் அ. முத்துலிங்கம் சிறுகதைகள் பற்றி முனைவர் பட்ட ஆய்வு செய்துள்ளீர்கள். அதைக் குறித்துச் சொல்லுங்கள்...
ப: முதல் முதலில் நான் அ. முத்துலிங்கம் என்ற பெயரை 'அமுத்து லிங்கம்' என்றுதான் வாசித்தேன். 'இந்தியா டுடே' தமிழ் இதழில் கனடா எழுத்தாளர் அ. முத்துலிங்கம் ஐயாவின் 'ராகுகாலம்' சிறுகதை வெளிவந்தபோது அதனைப் பேரா. செ. போத்திரெட்டி அவர்கள் வீட்டில் படித்தேன். அந்தக் கதைதான் என்னை முத்துலிங்கம் அவர்கள் பக்கம் ஈர்த்தது.

மதுரை யாதவர் கல்லூரிப் பேரா. முனைவர் வீ. கோபால் அவர்களை நெறியாளராகக் கொண்டு அ. முத்துலிங்கத்தின் சிறுகதைகளைப் பற்றி முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டேன். தமிழகத்தில் அவரது படைப்புகளைப் பற்றி முதன்முதலில் ஆய்வுசெய்தது நான்தான். அன்று முதல் நேற்று வரை அ. முத்துலிங்கம் ஐயாவுடனான என்னுடைய தொடர்பு வலுவாகவே இருந்துவருகிறது. அவரது படைப்புகளைப் பற்றிய செய்தி இந்தியாவில் எந்த ஊடகத்தில் வெளிவந்தாலும் அதனை உடனே அவருக்கு அனுப்பி வைப்பேன். அதனால் அவர் 'தன்னுடைய இந்தியக் கண்' என்று என்னைப் புகழ்ந்து வருகிறார்.



கே: 108 புத்தகங்கள் எழுதியுள்ளீர்கள்! அதைப்பற்றிச் சொல்லுங்கள்...
ப: தொடக்கத்தில் பல புத்தகங்களை எழுதினேன். சரியான பதிப்பாளர்கள் அமையவில்லை. இறுதியாகக் கிழக்கு பதிப்பகம் என்னுடைய 'சங்ககாலம்' நூலை வெளியிட்டது. அது என்னை எழுத்தாளர்கள் மத்தியில் அடையாளப்படுத்தியது. அந்தப் புத்தகம் இன்றுவரை தொடர்ந்து மீள்பதிப்பில் இருந்து வருகிறது.

சென்னை கௌரா பதிப்பகம் என்னுடைய 'மதுரைக்கோவில்' புத்தகத்தை வெளியிட்டது. திருச்சி எம்.ஜெ. பதிப்பகம் என்னுடைய எழுத்தின் தரத்தை அடையாளம் கண்டு, தொடர்ந்து பதிப்பிக்கத் தொடங்கியது. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் ஈர்க்கும் விதத்தில் சிறுவர் இலக்கியம், கவிதை, சிறுகதை, சமூக நாவல், வரலாற்று நாவல், சரித்திர நாவல், கட்டுரை, பொதுக்கட்டுரை, வரலாற்று நூல்கள், பொது அறிவு நூல்கள், தன்னம்பிக்கை நூல்கள் என இதுவரை 108 புத்தகங்களை எழுதியுள்ளேன்.



கே: நீங்கள் எழுதியதில் முக்கியமான நூல் என்று எதனைக் குறிப்பிடுவீர்கள்?
ப: என்னுடைய முக்கியமான நாவலாக நான் கருதுவது 'ஜோ.ஜே. சிலரின் குறிப்புகள்' என்ற நாவலைத்தான். அதில் நான் எழுத்தாளர் சுந்தர ராமசாமி எழுதிய 'ஜே.ஜே. சில குறிப்புகள்' நாவலில் இடம்பெற்றுள்ள மையக் கதைமாந்தரை மற்றுமொரு பரிமாணத்தில் காட்டியிருந்தேன். 'சுவாசம்' பதிப்பகம் தற்போது தொடர்ந்து என்னுடைய புத்தகங்களை வெளியிட்டு வருகிறது.

'ஒருவர் இறந்த பின்பும் வாழமுடியும்' என்பது அவர்களது படைப்புகளிலும் சாதனைகளிலும் வாயிலாக மட்டுமே முடியும். நான் புத்தகங்களை எழுதுவதன் மூலம் 'முடிவற்ற வாழ்வை அடைவேன்' என்பதில் ஐயமே இல்லை.

கே: ஜெயமோகன் அவர்களின் தலைமைத்துவத்தில் முன்னெடுக்கப்படும் தமிழ்விக்கி தளத்தின் ஆசிரியர் குழுவில் நீங்களும் ஒருவர். தமிழ் விக்கியின் செயல்பாடுகள் பற்றி, அதில் உங்கள் பங்களிப்பு பற்றிச் சொல்லுங்கள்...
ப: 'தமிழ்விக்கி' எதிர்காலத் தலைமுறையினருக்குரிய நம்பகமான மாபெரும் தரவு வங்கி. அதில் கல்வித்துறை சார்ந்த ஆசிரியர் குழுவில் இடம்பெற்றுள்ளேன். உண்மையில், அது என் கல்வித்தகுதிக்குக் கிடைத்த அங்கீகாரம். ஜெயமோகன் அவர்கள் எனக்கு வழங்கிய பெரும்பரிசு இதுவெனத் தயங்காமல் கூறுவேன்.



கே: தாய்மொழியை வாசிக்கவே மாணவர்கள் பலர் திணறுவதாகச் சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்று கூறுகிறது. இதுபற்றி ஆசிரியராக உங்கள் கருத்து என்ன?
ப: 'தாய்மொழி' என்பது மனத்துக்குள் உறைநிலையில் உள்ளதோர் உணர்வு. அது பயன்படுத்தப்படும்போதுதான் செயல்நிலைக்கு வரும். இக்காலத் தலைமுறையினர் பார்ப்பதும் கேட்பதும் வாசிப்பதும் எழுதுவதும் முக்கியமாகச் சிந்திப்பதும் பிற மொழியாக இருக்கும்போது அவர்களின் 'தாய்மொழி' மேலும் மேலும் உறைநிலைக்கே செல்லும்.

முதலில் நாம் அதனை உறைநிலையிலிருந்து உயிர்ப்பு நிலைக்குக் கொண்டுவரவேண்டும். பின்னர் அதனைச் செயல்நிலைக்குத் தள்ளவேண்டும். அதற்கு முதல்பணி அவர்களைச் சுற்றி இருப்பவற்றை அவர்களின் தாய்மொழிக்கு மாற்ற வேண்டும். குறிப்பாக, அவர்கள் பார்ப்பதை, கேட்பதை, வாசிப்பதை.

கே: ஓர் ஆசிரியராக இன்றைய மாணவர்களை எப்படி அவதானிக்கிறீர்கள்? கோவிட் காலகட்டத்திற்குப் பின் மாணவர்களிடையே கல்வியில் ஆர்வம் குறைந்திருப்பதாகவும், அலட்சியம், மரியாதையின்மை, வன்முறை நாட்டம் போன்றவை பெருகி இருப்பதாகவும் கூறப்படுவது பற்றி உங்கள் கருத்து என்ன?
ப: தலைமுறை இடைவெளி என்பது மானுடவியலாளரின் கருத்துப்படி 30 ஆண்டுகள். ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் அது குறுகிவிட்டது. வெறும் பத்தாண்டுகள்தான். அதிநவீன தகவல் தொழில்நுட்பம், குறிப்பாக பெருந்தொற்றுக் காலத்துக்குப் பின்னர், தலைமுறை இடைவெளியை ஐந்தாண்டுகளாகச் சுருக்கிவிட்டது என்றே நான் கருதுகிறேன்.

ஒரே வீட்டில் பத்தாம் வகுப்பு பயிலும் பிள்ளைக்கும் ஐந்தாம் வகுப்பு பயிலும் பிள்ளைக்கும் இடையில் தலைமுறை இடைவெளி ஏற்பட்டுள்ளது. இதனை நாம் அவர்களின் 'ரசனை' சார்ந்து மிக எளிதாகக் கண்டுகொள்ள முடியும். தலைமுறை இடைவெளி குறுகக் குறுக அவர்கள் நம் பிடியைவிட்டு மிக எளிதாக விலகிச் சென்றுவிடுவார்கள். இதுதான் நீங்கள் மேற்குறிப்பிட்ட எல்லாவற்றுக்கும் அடிப்படைக் காரணம். விழுந்துவிட்ட இடைவெளி இடைவெளிதான். அதனை எதனைக் கொண்டும் இனி நிரப்ப (நிரவ) முடியாது.



கே: மாணவர்களிடையே வாசிப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் பின்தங்கி இருக்கக் காரணம் என்ன?
ப: அவர்கள் அதிநவீனத் தொழில்நுட்பப் பெருக்கக் காலத்தில் வாழ விதிக்கப்பட்டவர்கள். அவர்களின் நெருங்கிய தோழமை இனிச் செயற்கை நுண்ணறிவுதான். அதனைக் கொண்டுதான் அவர்களை இனி நம்மால் மேம்படுத்த முடியும். முதலில் நாம் செயற்கை நுண்ணறிவு பற்றிய விழிப்புணர்வைப் பெற வேண்டும். முதலில் நாம் மேம்படுத்திக்கொள்ள வேண்டியது நம்மைத்தான்.
ராமபாணம் - நாவல் தொடர்
'ராமபாணம்', ராமாயணத்தைப் பற்றிய நாவல்தொடர். அதிநவீன தொழில்நுட்பமும் மிகுதியான பகுத்தறிவும் கொண்ட எதிர்காலத் தலைமுறையினருக்கு 'நியாயம்' செய்யவே இதனை எழுதுகிறேன். நான் என் எழுத்தின் வழியாக ஸ்ரீராமருக்கும் ராவணனுக்கும் 'நியாயம்' செய்து, ராமாயணத்தைப் புதிய கண்ணோட்டத்தில் எதிர்காலத் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தி, அதன் ஸநாதனத்தை உறுதிப்படுத்தவுள்ளேன்.

திரு. ஜெயமோகன் எழுதிய 'வெண்முரசு' நாவல் நிரையினை நான் முதல்முறை படித்தபோது, அது தொடர்பான கட்டுரைகளை அவரின் இணையதளத்தில் எழுதினேன். பின்னர் அவற்றைத் தொகுத்துப் 'புனைவுலகில் ஜெயமோகன்' என்ற தலைப்பில் புத்தகமாக்கினேன்.

நான் வெவ்வேறு பொருண்மைகளில் 108 புத்தகங்களை எழுதி முடித்த பின்னர் வெண்முரசை இரண்டாம் முறை படித்தேன். அதன் தாக்கத்தால் உந்தப்பட்டு, ராமாயணத்தை 'ராமபாணம்' என்ற பொதுத்தலைப்பில் சில ஆயிரம் பக்கங்களில் தொடர் நாவலாக எழுத விழைந்துள்ளேன். அந்த வரிசையில் முதல் நாவலின் பெயர் 'பிறவிநூல்'. அதனைத் தைப்பொங்கல் அன்று எழுதத் தொடங்கியுள்ளேன். நாளொன்றுக்கு இருபது பக்கம் வீதம் எழுதி வருகிறேன். இந்தப் பெரும்பணியைப் பத்து நாவல்களாக இரண்டாண்டுகளுக்குள் முடிக்கத் திட்டம்.

பழங்கதைகளை மீட்டுருவாக்கம் செய்யப் பிற எழுத்தாளர்களுக்கு முன்னத்தி ஏராக அமைந்துவிட்டது ஜெயமோகன் எழுதிய 'வெண்முரசு'. ஒரு பெருநாவலை எவ்வாறு தொடங்க வேண்டும், அதன் கட்டமைப்பு எத்தகையதாக இருக்க வேண்டும், அதன் செல்வழி, இலக்கு முதலானவை எவ்வகையில் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதற்கு முன்மாதிரி வரைபடமாக 'வெண்முரசு' பயன்படுகிறது. அந்த வகையில், நான் வெண்முரசின் நிழலில் மிக இனிதாகவும் எளிதாகவும் பயணித்து ராமபாணத்தைத் தொடங்கியுள்ளேன். ஓவியர் திரு. ஷண்முகவேல் அவர்கள் ராமபாண நாவல்களின் முன்னட்டைகளுக்கு ஓவியம் வரைந்து தர இசைந்துள்ளார். இனிமேல்தான் ராயல்டி தரக்கூடிய தரமான பதிப்பகத்தினை அணுக வேண்டும்.

'வெண்முரசு' என்பது ஜெயமோகனின் மகாபாரதம் என்று இன்று அறியப்படுவதைப் போலவே 'ராமபாணம்' சரவணனின் ராமாயணம் என்று நாளை அறியப்படும் என நம்புகிறேன். என் வாழ்நாள் விருப்பமும் அதுவே. அதற்காகவே இந்தப் பெரும்பணியை ஏற்றுள்ளேன். ஸ்ரீராமரின் பாதங்களை என் தலையில் தாங்கியும் எனது எழுத்துலக குருவான ஜெயமோகன் அவர்களின் பாதங்களைப் பணிந்தும் எப்போதும் என்னை ஆதரிக்கும் எழுத்தாளர் கனடா அ. முத்துலிங்கம் ஐயாவின் நல்லாசிகளோடும் இந்தப் பணியைத் தொடங்கியுள்ளேன்.

★★★★★


முனைவர் ப. சரவணன் நூல்கள்
1857 இந்தியப் புரட்சி, பகத்சிங், வ.உ.சி. , ஜூலியஸ் சீசர், முசோலினி, கடாஃபி, செங்கிஸ்கான், சர்வாதிகாரி தைமூர், சைபர் குற்றம், தேர்வுக்குத் தயாராகுங்கள், மதுரைக்கோவில், தமிழ் இலக்கியமும் இலக்கணமும், பழந்தமிழ்க் கட்டுரைகள், நவீனப் பெண்ணியம், தமிழக வரலாறு, அப்பாவின் கால்கள், நினைவுகளின் பேரணி, ஜோ.ஜே - சிலரின் குறிப்புகள், தனிமையின் நிழலில், அழியாக முகம், நீயும் நானும், வழிப்பறி, இருவர் எழுதிய டைரி, சிந்தனைச் சிறகுகள், புனைவுலகில் ஜெயமோகன், புனைவுலகில் அ. முத்துலிங்கம், எல்லோரும் எழுதலாம், ஆன்மிகப் புரட்சியாளர்கள், கார்ப்ரேட் கலாச்சாரம், இயற்கையின் புன்னகை, பண்டைய வல்லரசுகள், சிப்பாய்ப் புரட்சி, ஜாலியன்வாலா பாக், மற்றும் பல.

★★★★★


முனைவர் ப. சரவணன் பெற்ற விருதுகள்
செந்தமிழ்த் திலகம் விருது, இலக்கியச் சுடா் விருது, எழுத்துலகத் தேனீ


உரையாடல்: அரவிந்த் சுவாமிநாதன்
Share: