| அம்மா அமெரிக்கா வந்தால்
 
 பழைய நண்பர்கள்
 பார்க்க வருவார்கள்
 புதிதாய் நண்பர்கள்
 பழக வருவார்கள்
 
 குடிக்க மோர்
 கிடைக்குமென்று
 கொரியர்காரன் வருவான்
 
 பசிவந்தால்
 பாட்டிக்கும் அம்மாவுக்கும்
 குழந்தைக்கு
 குழப்பம் வரும்
 
 வடாம் இடுவாளென்று
 வெய்யில் வரும்
 பகோடா போடுவாளென்று
 பனி வரும்
 
 சாதம் கிடைக்குமென்று
 காகம் வரும்
 தாகம் தணியுமென்று
 குருவி வரும்
 
 இம்முறை
 பிள்ளையார் எறும்பு
 பால்கனியில் வந்தது
 
 எண்ணிக்கையில்
 அதிகமாய் இருந்ததால்
 அம்மா அதை
 இந்தியாவிலிருந்து
 எடுத்து வந்திருக்க முடியாது
 
 அமெரிக்காவில்
 பிள்ளையார் எறும்பு
 இருக்கிறதாவென்றேன்?
 
 "ஏன் இல்லாமல்?
 நீங்கள் ஏதும்
 இடுவதில்லை
 அதனால் அது
 வருவதில்லை"
 என்றாள்.
 
 குருபிரசாத் வெங்கடேஸ்வரன்,
 எல்லிகாட் சிடி, மேரிலாந்து
 |