| ஆகஸ்ட் 6, 2011 அன்று கனெக்டிகட் மாநிலம் வாட்டர்பரி நகரின் பேலஸ் தியேட்டரில் செல்வி சூர்யா சுந்தரத்தின் பரத நாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. இவரின் நடன குருவான கலைமாமணி நிருத்ய சூடாமணி திருநங்கை நர்த்தகி நடராஜ் மற்றும் கலைவளர்மணி திருநங்கை சக்தி பாஸ்கர் மற்றும் சூர்யாவின் இசை குருவான முனைவர் பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலையில் நிகழ்ச்சி நடந்தேறியது. 
 முரளி பாலசந்திரன் மிருதங்கம், கல்யாணசுந்தரம் வயலின், ஜோசப் கெட்டர்ன் புல்லாங்குழல் ஆகியவை நிகழ்ச்சிக்கு மெருகூட்டின. முனைவர் பழனி சுந்தரம், திருமதி ரஞ்சனி சுந்தரம் ஆகியோர் வரவேற்புரை அளித்தனர். இந் நிகழ்ச்சியை முனைவர் சுந்தரராஜா தொகுத்தளித்தார்.
 
 அபிராமி அந்தாதியுடன் இனிதே துவங்கிய நிகழ்ச்சி, வெள்ளியம்பலத்தின் சிறப்புப் பாடமான சொல்லுக்கட்டை கடந்து, பாவேந்தர் பாரதிதாசனின் 'எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்' பாடலில் சூடு பிடித்தது. தொடர்ந்து, அலாரிப்பு, ஜதிஸ்வரம் ஆகியவற்றை கவனத்துடனும், மிருதங்கத்தின் தாளத்திற்கேற்பவும் சூர்யா அனாயாசமாக ஆடினார். இதனை குரு நர்த்தகி அவர்களே பின்னர் பாராட்டியது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியின் முக்கியமான மற்றும் நீண்ட நடனமாக சூர்யா தேர்ந்தெடுத்தது திருநாவுக்கரசர் தேவாரத்திலிருந்து 'முன்னம் அவனுடைய நாமம்' என்னும் பாசுரம். ஈசனிடத்தே காதல் கொண்டு, அவனையே மணமுடிக்க வேண்டி, உலக ஆசைகளைத் துறந்து, பெற்றோர் உற்றார்களின் பேச்சை நிராகரித்து வாழும் ஒரு சிறிய பெண்ணின் நிலையை உணர்த்தும் இந்தப் பாடலுக்கு, நுட்பமான உணர்ச்சிகளைத் தேர்ந்த முறையில் வெளிப்படுத்தினார் சூர்யா.
 
 இடைவேளைக்குப் பின் 'ஓமன திங்கள் கிடாவோ' என்னும் தாலாட்டுப் பாடலுக்குத் தன் கையில் ஒரு குழந்தை இருப்பது போலவும் அதைத் தூங்க வைப்பதுபோலவும் ஆடிய சூர்யா காட்டிய தாயனைய முகபாவனை வெகு நேர்த்தி. அடுத்து 'சரவண பவ' என்னும் கவிஞர் பாபநாசம் சிவன் பாடலுக்குச் சிறப்பாக ஆடினார்.
 
 நாட்டுப்புற மெட்டில் அமைந்த 'பெரியார் குறவஞ்சி', சற்றே மாறுபட்டு, சுயமரியாதை, தீண்டாமை, பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றை முன்னெடுத்துப் போராடிய தந்தை பெரியாரின் கதையை விளக்குவதாக அமைந்திருந்தது. முத்தாய்ப்பாக, வெள்ளியம்பலம் நடனப்பள்ளியின் சார்பாக 'முத்தமிழ்ச்செல்வி' என்னும் பட்டம் அளிக்கப்பட்டது. திருநங்கை நர்த்தகி நடராஜ் பட்டத்தை வழங்கினார்.
 
 சூர்யா சுந்தரம் தனது ஐந்தாவது வயதிலிருந்து பரத நாட்டியத்தைக் கற்று வருகிறார். முதலில் ஹரி கிருஷ்ணனிடமும் பிறகு திருநங்கை நர்த்தகி நடராஜிடமும் பயின்றார். முனைவர் பால்ராஜ் பாலசுப்ரமணியத்திடம் ஆறு வருடங்களாக கர்நாடக சங்கீதமும் பயின்று வருகிறார். ஒரு மெல்லிசைக் குழுவில் பாடிவரும் சூர்யா பல்வேறு திறமைகள் படைத்தவர். திருநங்கை நர்த்தகி நடராஜ் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) மூலமாக அமெரிக்காவில் 2004ம் ஆண்டிலிருந்து நடனம் கற்றுத்தரும் பணியை மேற்கொண்டு வருகிறார்.
 
 முனைவர்கள் பழனி சுந்தரம் மற்றும் ரஞ்சனி சுந்தரம், தமது நன்றியுரை வழங்கினர்.
 
 சத்யா, அருள்
 கனெக்டிகட்
 |