|  ஒலி வடிவத்தில் கேட்க
 - Audio Readings by Saraswathi Thiyagarajan
 
   
 1
 என்றின் நிழலோ
 எங்கோ விழ
 அந்த நிழலின்
 வார்ப்பாக
 நான்
 இன்று
 இங்கு
 
 2
 பல வருடங்களுக்குமுன்
 இரண்டு முழங்கால்களையும்
 வளைத்து மடித்து
 டென்னிஸ் ஆடிய அப்பாவின்
 இன்றைய நடை
 அடிப்பிரதட்சிணம்
 
 3
 இது
 புலம்பெயர்ந்தோர் அக்ரஹாரம்
 அங்கு கிடைப்பதெல்லாம்
 இங்கு கிடைக்கும்
 அங்கு வந்துவிடும்
 இங்கு
 உத்சவராக
 இங்கு வாங்குபவர்கள் எல்லாம்
 அங்கின் ஆஸ்திகர்கள்.
 
 4
 நேரம்தான் கம்மி - பத்து
 நாட்கள்தான் என்று
 வைத்துக்கொள்வோமே
 இவைகளை செலவழிக்க வேண்டும்
 சிக்கனமோ ஊதாரித்தனமோ
 இல்லாமல்
 வளமும் செழுமையும் குறையாமல்
 ஒவ்வொரு கணமும் தடித்து
 துடித்து, மெலிந்து, குழைந்து,
 நிமிர்ந்து, கூனி, நெளிந்து,
 உருண்டு, புரண்டு
 வானளாவி மண்
 கலக்க வேண்டும்.
 அட்சய விருந்தும்
 அடங்காப் பசியும் கலந்து
 ஆனால் ஒன்றாகாமல்
 ஆர்ப்பரித்துக் கொண்டே
 இருக்க வேண்டும். இதுதான்
 கடைசிமுறை, இதுதான்
 கடைசிமுறை என்று
 ஒவ்வொரு அபிநயமும்
 அவயவ அசைவும்
 குட்டிபோட்டு மேடை
 நிறைய வழிய வேண்டும்.
 மரணத்தின் கடைசித்தனம்
 மறுபிறவி எடுத்துக் கொண்டே
 இருக்க வேண்டும்
 இங்கே இப்பொழுதே
 உன்முன்னால்
 என்முன்னால்
 
 ரா. ராதாகிருஷ்ணன்,
 இர்வைன், கலிஃபோர்னியா
 |