| மீண்டும் ஜூன் 21 முதல் 23 வரையிலான நாட்களில் செட்டிகுளம், வவுனியா பகுதிகளில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாம்களுக்கு சின்மயா மிஷன் தொண்டர்கள் சென்றிருந்தோம். எங்களோடு பாப்பா ராம்தாஸ் அறக்கட்டளையின் (ஆனந்தாஸ்ரமம்) தொண்டர்களும் வந்திருந்தனர். இந்த நாட்களில் ஏறத்தாழ 22 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள உணவுப் பொருட்கள், மருந்துகள், சோப்பு மற்றும் பிற அத்தியாவசியத் தேவைப் பொருட்களை 20 பிளாக்குகளில் இருந்த 10,000 பேருக்கு வழங்கினோம். 
 தொற்று நோயாலும் ஊட்டக் குறைவாலும் கைக்குழந்தைகளும் முதியோரும் மரணத்தைத் தழுவி வருகின்றனர். இறப்பு விகிதம் அதிகரித்துத்தான் வருகிறது. அதிலும் மழைக்காலத்தில் அனைவரும் மண் தரையில் படுக்க வேண்டிய நிலை வரும்போது நோய்வாய்ப்படுவது அதிகரிக்குமே என்பது இப்போது மிகப்பெரிய கவலை. அங்கே வெள்ளம் பெருகும் அபாயமும் உள்ளது.
 
 முகாம்களை நிர்வகிக்கும் அதிகாரிகள் குழந்தைகளுக்குப் பாடநூல்கள், கதைப் புத்தகங்கள் (இவை பெரியோருக்கும் தேவை), கேரம் போன்ற விளையாட்டுப் பொருட்களும் கொடுத்தால் நல்லது என்று கூறினர். சில முகாம்களில் தற்காலிக வகுப்பறைகள் அமைத்து 8 முதல் 10 வரை வகுப்புகளுக்கான அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களைக் கற்பிக்கத் தொடங்கிவிட்டனர். போதிய அளவில் நல்ல குடிநீர் கிடைப்பது இன்னமும் பெரிய பிரச்சனையாகத்தான் இருக்கிறது. ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன், ஹிந்து காங்கிரஸ் மனிதநேயம் போன்ற அமைப்புகளும் அங்கே சேவை செய்கின்றன.
 
 60 வயதுக்கு மேற்பட்டோர் முகாம்களுக்கு வெளியே இருக்கும் தமது குடும்பத்தினருடன் சேர்ந்திருக்க அனுப்பவும், ஆதரவற்றோரை வவுனியா, மன்னார் ஆகிய இடங்களிலுள்ள ஏதிலியகங்களுக்கு அனுப்பவும் அரசு தற்போது ஏற்பாடுகள் செய்து வருகின்றது.
 
 இதற்கான சின்மயா மிஷன் இணையதளம்: www.cordsrilanka.org
 
 எல்லோரும் ஒரு கை கொடுத்தால் பெரிய நன்மைகளைச் செய்ய முடியும். உங்கள் நன்கொடையை ‘Chinmaya Mission West' என்ற பெயருக்குக் காசோலையாக அனுப்பவேண்டும். காசோலையில் கீழே "CORD-Sri Lanka" என்று தவறாமல் குறிப்பிடுங்கள். நன்கொடைகளுக்கு 501(c)(3) பிரிவின் கீழ் வரிவிலக்கு உண்டு. Tax ID: 51-017-5323
 
 அனுப்ப வேண்டிய முகவரி:
 Chinmaya Mission West,
 Meera Raja,
 2246 West Cullom Ave.,
 Chicago, IL 60618, USA.
 
 ஆங்கிலத்தில்: கௌரி மகேந்திரன்
 தமிழ்வடிவம்: மதுரபாரதி
 |