| தேங்காய், பாசிப்பருப்பு சுகியன்கள் எல்லோரும் செய்வதுதான். ஆனால் நாம் இங்கே பார்க்கப் போவது சில புதிய வகை சுகியன்களை. சுகியன் செய்து சாப்பிட்டுச் சுகிக்க வாருங்கள்! 
 ரவை சுகியன்
 
 தேவையான பொருட்கள்
 ரவை - 1 கிண்ணம்
 வெல்லம் - 1/2 கிண்ணம்
 தேங்காய்த் துருவல் - 1/4 கிண்ணம்
 மைதாமாவு - 1/4 கிண்ணம்
 கோதுமை மாவு - 1/4 கிண்ணம்
 ஏலக்காய்ப் பொடி - சிறிதளவு
 நெய் - 2 தேக்கரண்டி
 உப்பு - 1 சிட்டிகை
 எண்ணெய் - பொரிக்க
 
 செய்முறை
 ரவையைச் சிவக்க வறுக்கவும். வெல்லத்தை நன்கு கரைய விட்டு, அதில் ரவையையும், தேங்காய்த் துருவலையும் போட்டுக் கிளறவும். பாதி வெந்தவுடன் ஏலக்காய் போட்டு, நெய் விட்டுக் கிளறி, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
 
 மைதா, கோதுமை மாவு இரண்டையும் ஒரு சிட்டிகை உப்புச் சேர்த்து, தோசை மாவுப் பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும். எண்ணெய் நன்கு காய்ந்ததும், உருண்டைகளை மாவில் நன்றாகத் தோய்த்து எடுத்து, வாணலியில் போட்டு நன்றாகக் கிளறிப் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். இது சுவையானது.
 
 தங்கம் ராமசாமி
 |