| பல நூற்றாண்டுகளாகவே உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள பழங்களில் வாழைப்பழம் ஒன்று. வருடம் முழுவதும் தடையின்றி தாரளமாகக் கிடைப்பதும், விலை குறைவாக இருப்பதும் இப்பழத்தின் தனிச்சிறப்புகள். 
 மேலும் வாழைப்பழத்தில் பல நூறு வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான சுவை!
 
 பழங்கால ஐரோப்பாவில் வாழைப்பழத்தை 'சொர்க்கத்தின் ஆப்பிள்' என்று அழைத்தார்கள்.
 
 அரேபியர்களும், கிரேக்கர்களும் இதை இந்தியாவின் அதிசயப் பழம் என்று வர்ணித்தார்கள்.
 
 வாழைப்பழத்தின் பிறப்பிடம் இந்தியாவே எனக் கூறப்படுகிறது. இந்தியாவிலிருந்து பின்னர் மலேஷியாவிற்கும், பிற கீழை நாடுகளுக்கும் கொண்டுசென்று பயிரிட்டார்கள்.
 
 சத்துக்கள்
 
 பிற பழங்களைப் போலன்றி வாழைப்பழத்தில் நீர்ச்சத்து குறைவாகவும், சக்தி தரும் கலோரிகள் அதிகமாகவும் உள்ளது.
 
 மாவுச்சத்து, புரதம், வைட்டமின்கள், நார்ச்சத்து என எல்லா சத்துக்களும், சக்தியும் நிறைந்த ஒரு சரிவிகித உணவாக வாழைப்பழம் இருப்பதால் வளரும் குழந்தைகளுக்கும், நோயுற்றிருப்பவர்களுக்கும் வாழைப்பழம் ஒரு சிறந்த உணவு.
 
 மருத்துவ குணங்கள்
 
 எளிதில் ஜீரணமாகும். நோயாளிகளும் உண்ணலாம்.
 
 பச்சை வாழை அல்சர் நோயைக் குணப்படுத்தும்.
 
 அதிக அளவில் சக்தியைத் தருவதால் வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது.
 
 மலச்சிக்கலைத் தவிர்க்கும். மூலநோய் உள்ளவர்கள் தினமும் இரவில் தவறாமல் வாழைப்பழம் உண்ண வேண்டும்.
 
 சீதபேதி உள்ளவர்களுக்கு வாழைப் பழத்தைப் பிசைந்து, சிறிது உப்பு சேர்த்து உண்ணக் கொடுத்தால் சீதபேதி கட்டுப்படும். (சில நாடுகளில் இதோடு சிறிது புளியும் சேர்ப்பதுண்டு)
 
 கவுட், ஆர்த்ரைட்டிஸ் போன்ற எலும்பு நோய்களால் அவதிப்படுபவர்கள் மூன்று நாட்களுக்கு தொடர்ந்து வாழைப்பழத்தை மட்டுமே உணவாக உண்டால் நல்ல குணம் தெரியும்.
 
 இரத்த சோகை நோய் உள்ளவர்கள் தொடர்ந்து வாழைப்பழம் உண்டு வந்தால் உடலில் இரத்தம் ஊறும்.
 
 சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு வாழைப்பழம் சிறந்த உணவு. இதில் புரதம் உப்பு ஆகியவை மிகக் குறைந்த அளவிலேயே இருக்கிறது. சக்தி தரும் மாவுச்சத்து அதிக அளவில் உள்ளது. எனவே சீறுநிரக நோயாளிகள் தங்கள் மருத்துவரின் அனுமதியோடு வாழைப்பழத்தை தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம்.
 
 காசநோய் உள்ளவர்களுக்கு வாழைப்பழம் மிகச் சிறந்த ஊட்டச்சத்துள்ள உணவாகும்.
 
 பிரேசில் நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் வாழைப்பழச்சாறு அல்லது வேகவைத்த வாழைப்பழம் தொடர்ந்து கொடுத்தபோது காசநோய் உள்ளவர்கள் விரைவில் உடல் தேறுவதுடன், நோயின் தீவிரமும் விரைவில் கட்டுப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
 
 குறிப்புகள்
 
 வாழைப்பழத்தில் பொட்டாஷியம் அதிகம் உள்ளதால், சிறுநீரகங்கள் செயல்படாத நிலையில் உள்ளவர்கள் இதைத் தவிர்த்து விடுவது நல்லது.
 
 நன்கு பழுத்த பழமே எளிதில் செரிமானமாகும். காயாக இருந்தால் செரிமானம் ஆவதில் சிரமம் வரலாம்.
 
 பாதுகாத்தால்
 
 வாழைப்பழங்களை குளிர்பதனப்பெட்டியில் பாதுகாக்கக்கூடாது,
 
 வருடம் முழுவதும் எல்லா இடங்களிலும் தாரளமாகக் கிடைப்பதால் தேவைக்கு ஏற்ப பழுத்த பழங்களாக அவ்வப்போது வாங்கி உபயோகிப்பது நல்லது.
 
 ******
 
 சமையல் குறிப்புகள்
 
 சாலடுகளில் வாழைப்பழத்தை அப்படியே துண்டுகளாக்கிச் சேர்த்தால் சிறிது நேரத்தில் அவற்றின் நிறம் மாறிவிடும்.
 
 பழத்துண்டுகளின் மேல் சிறிது எலுமிச்சைச் சாறு தடவி வைத்தால் நிறம் மாறாமல் இருக்கும்.
 
 எல்லா சாலடுகளிலும் பிற காய்கள் அல்லது பழங்களை முதலில் சேர்த்து கடைசியாகப் பரிமாறுவதற்கு சற்று முன்னர் வாழைப் பழத்தை சேர்க்கலாம்.
 
 100 கிராம் வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள்
 
 நீர்சத்து		-70.1கிராம்
 புரதம்		-1.2கிராம்
 கொழுப்பு		-0.3கிராம்
 மாவுச்சத்து	-27.2கிராம்
 நார்சத்து		-0.4கிராம்
 தாதுப்பொருட்கள்	-0.8கிராம்
 கால்சியம்		-17.மி.கிராம்
 பாஸ்பரஸ்		-36மி.கிராம்
 இரும்புச்சத்து	-0.9மி.கிராம்
 வைட்டமின் 'சி'	-7மி.கிராம்
 பி.காம்ப்ளெக்ஸ்	-சிறிய அளவில்
 
 ******
 
 வாழைப்பழப் பச்சடி
 
 தேவையான பொருட்கள்
 
 வாழைப்பழம்	-2
 விதையில்லா திராட்சை 	- 2 கிண்ணம்
 தயிர்		- 3 கிண்ணம்
 சீரகம்		-1/4 தேக்கரண்டி
 சர்க்கரை	 	- 3 தேக்கரண்டி
 உப்பு		- தேவைக்கேற்ப
 
 செய்முறை
 
 வாழைப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, திராட்சையை அதோடு சேர்க்கவும். தயிரை நன்றாக ஒரு கரண்டியால் அடித்து, பழத்தில் சேர்க்கவும்.சர்க்கரை, தேவைக்கு உப்பு சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.
 |