| தென்றலே! நீ, 
 காவிரித் தண்புனல் மணத்தைக் கவர்ந்து வரும் தென்றலோ?
 பூவிரி வனத்தின் சுகந்தம் சுமந்த சுகத் தென்றலோ?
 மாவுடன் தெங்குறை சோலைப் புகுந்து வரும் தென்றலோ?
 மாவரமாய் மழைகண்ட மண்மணம் கொணர் தென்றலோ?
 
 இல்லை, ஈதேதுமில்லை. நீ,
 
 நாமணக்கும் நற்றமிழை இந்நாட்டிற் குதவிடு தென்றல்,
 தேமதுரத் தமிழினை எம் மகற்கு ஊட்டும் தாய்த் தென்றல்;
 ஒப்பரிய இலக்கியத்தின் பொற்புணர்த்தும் பூந்தென்றல்;
 துப்பறியும் தொடர், புதிர்கள், இறையுணர்வீயும் தென்றல்;
 
 தலையங்கம் வாசிக்கத் தனி மகிழ்ச்சி தரு தென்றல்;
 கலையுடனே கவிநயமும் கலந்து சுவை மிகு தென்றல்;
 விலைமதிக்க வொண்ணாத கதை மகள் காண் தென்றல்;
 தலைபோலப் புழைக்கடையும் தரமுடனே மிளிர் தென்றல்;
 
 மாதமுற்றும் கழ்வுகளை ஆய்ந்தளிக்கும் அருந் தென்றல்;
 சாதனையால் உயர்ந்தோர்தம் சரித்திரங்கள் உரைதென்றல்;
 பேதமின்றி விமர்சித்து, பெருமைதரும் பூந்தென்றல்;
 மாதமொருமுறை எங்கள் மனம் வருடி வருந் தென்றல்;
 
 தகவறிந்து புது வரவைத் தாங்கி ஊக்கிடும் தென்றல்
 புகலரிய புதுமைகளைப் புகுத்தி மிளிர்ந்திடு தென்றல்
 அகவையொரு ஆறு கண்டு ஆடிவரும் தென்றலே! நீ
 புகழ் சிறக்கப் பல்லாண்டும் பொலிந்திடுக தென்றலே!
 
 அம்புஜவல்லி தேசிகாச்சாரி
 
 அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
 
 வணக்கம் பல.
 
 ஆறு ஆண்டுகளை சிறப்புடன் நிறைவு செய்த தென்றல் குழுவினருக்கு எங்கள் மகிழ்ச்சியைத் தெரிவிக்கிறோம்.
 
 இப்படிக்கு அன்புள்ள,
 வத்ஸலா ஜானகிராமன்
 |