அக்டோபர் தென்றலில் முனைவர் இ. சுந்தரமூர்த்தி அவர்கள் நாட்டிற்கும் தமிழுக்கும் ஆற்றியுள்ள பணிகள் படித்து மகிழ்ந்தேன் .தேர்தல் நெருங்கும் இச்சமயத்தில் தென்றலின் யோசனைகள் மிகவும் சரியாக சக்தி வாய்ந்தவையாக இருக்கின்றன.
எழுத்தாளர் கல்கியினுடைய மனைவியின் தம்பி உறவு முறைதான் எல்லார்வி என்று தெரிந்தபோது ஆச்சரியமடைந்தேன். அவர் சொந்த முயற்சியில் மறக்க முடியாத, சிறப்பான பெயரும் புகழும் பெற்றிருப்பது அவரது கடின உழைப்பின் அடையாளம்.
அவசரப்பட்டு முடிவு எடுக்காதீர்கள், வதந்திகளால் தடம் மாறிப் போகாதீர்கள் என்று கற்பித்த 'கழுதை இறந்தது' நல்ல படிப்பினை தரும் சின்னக்கதை.
'பரத நாட்டியத்தில் ஒருகுறை' வ.ரா. அவர்களின் மனம் திறந்த வார்த்தைகள் அற்புதம். திருமணத்திற்கான வரன் என்பது இருவழிச்சாலை, கொஞ்சம் விட்டுக் கொடுத்தால்தான் பயணம் நன்றாகச் செல்லும், சமரசம் செய்யத் தயாராக இருந்தால், அதைவிட மதிப்புள்ளதை வாழ்க்கை திருப்பித்தரும் என்ற தத்துவத்தைக் கூறிய 'திருமணங்கள் விமானத்திலும் நிச்சயிக்கப் படலாம்!' என்ற மருங்கர் எழுதிய சிறுகதை அற்புதமானது.
நாட்டுப்புற பாடல்கள் என்றாலே கணீரென்ற குரல் ஒலிக்கும் டாக்டர் விஜயலக்ஷ்மி நவநீதகிருஷ்ணன் அவர்கள்தான் முதலில் ஞாபகத்திற்கு வருவார்.
தென்றலுக்கு எங்களது மனமார்ந்த நன்றி.
சசிரேகா சம்பத்குமார், யூனியன் சிட்டி, கலிஃபோர்னியா |