திருச்சியில் அன்று நல்லமழை. அன்று ஞாயிற்றுக்கிழமை. மகாலிங்கம் நல்ல விடுமுறை மூடில் இருந்தார். மாலை அந்த மழையிலும் குடைபிடித்துக் கொண்டு காலார வாக்கிங் சென்று வந்தார். சரி, இரவுச் சாப்பாட்டை முடித்துக்கொண்டு டிவி பார்த்துவிட்டுத் தூங்கப் போகலாம் என்று நினைத்துக் கொண்டார்.
திடீரென ஒரு ஃபோன். அவரது ஆபீஸ் G.M. பேசினார். "மகாலிங்கம், நீங்க உடனே கிளம்பி மும்பைக்குப் போகவேண்டும். நாளை காலையில் 10 மணிக்கு ஹெட் ஆபீஸில் ரிவ்யூ மீட்டிங்" என்றார். "சார் அதற்க்குத்தான் சுரேஷ் டிஜிஎம் போகிறாரே" என்று மகாலிங்கம் சொல்ல அவர், "இல்லைப்பா, சுரேஷுக்குத் திடீரென உடம்பு சரியாக இல்லை. அவரால் போகமுடியவில்லை. அவருக்கு பதில் நீங்கள் போகணும். கிளம்புங்க" என்று சொல்லி வைத்துவிட்டார்.
மகாலிங்கம் திருச்சி கிளையின் சீனியர் மேனேஜர். பழுத்த அனுபவசாலி. எப்பொழுதும் தனது ஆபீஸ் பையில் தன் கிளையின் அறிக்கைகள் எல்லாவற்றையும் லேப்டாப்பிலே தயாராக வைத்திருப்பார். அதனால் மீட்டிங்கிற்குச் செல்வதில் ஒரு பிரச்சனையும் இல்லை. மேலும் சுரேஷுக்கு உடம்பு சரியாக இல்லை என்பதால் இதிலிருந்து தப்பிக்கவோ, இதைத் தவிர்க்கவோ முடியாது.
அடுத்த பத்து நிமிடத்தில் ஆபீஸ் டிராவல் ஏஜென்சி அவருடைய சென்னை - மும்பை விமான டிக்கெட், மறுநாள் காலை விமானத்திற்கு, இமெயிலில் அனுப்பிவிட்டனர். போனில் "சார் இன்றிரவு திருச்சி - சென்னை ரயில்களில் ரிசர்வேஷன் டிக்கெட் இல்லை. நீங்கள் திருச்சி ஜங்ஷனுக்கு இரவு ஒன்பதரை மணிக்கு வந்துடுங்க. எங்க ஊழியர் அங்கு வந்துவிடுவார். உங்களை ஏதாவது டிடிஆரிடம் பேசி, பத்திரமாக ஏற்றிவிடுவார், ரிசர்வ் பர்த் வாங்கிவிடுவார் என்று தைரியம் கொடுத்தார் டிராவல் ஏஜெண்ட்.
வேறு வழியில்லை. ராக்போர்ட் எக்ஸ்பிரஸைப் பிடித்து காலை 4 மணிக்கெல்லாம் தாம்பரத்தில் இறங்கி ஒரு டாக்ஸி பிடித்து மீனம்பாக்கத்துக்கு அருகில் ஒரு ரூம் எடுத்து குளித்துவிட்டு ஆறு மணிக்கெல்லாம் விமான நிலையத்தை அடைந்து 8 மணி விமானத்தில் ஏறிவிடலாம். அவசர அவசரமாக இரவு டிபனை அள்ளிப் போட்டுக்கொண்டு திருச்சி ஜங்ஷனை 9.30 மணிக்கு அடைந்தார்.
அங்கு ஏஜென்சியின் ஆள் அன்ரிசர்வ்டு டிக்கெட்டை வைத்துக்கொண்டு இங்குமங்கும் ஒடி எல்லா டிடிஆர்களிடமும் கெஞ்சிப் பார்த்தார், எல்லோரும் கைவிரித்து விட்டனர். சரி, பார்த்துக்கொள்ளலாமென அன்ரிசர்வ்டு பெட்டியில் ஏறிவிட்டார் மகாலிங்கம். கூட்டம் நிரம்பிவழிந்தது. முட்டி மோதி உள்ளே போனார். நிற்கத்தான் இடம் கிடைத்தது. வண்டியும் கிளம்பிவிட்டது.
அவருக்கு இந்த மாதிரிப் பயணத்திலே முன் அனுபவமில்லை. சற்று நேரம் ஆன பின் ஸ்ரீரங்கம் தாண்டியவுடன் மூலை சீட்டில் உட்கார்ந்திருந்தவர் இவரிடம் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தார். "சென்னைக்குத்தானே" என்று தொடங்கி சம்பாஷணை ஆரம்பித்தது. இவர் பதில் சொன்னவுடன் சூடு பிடித்தது. பிறகு அன்யோன்யம் ததும்பி, நன்றாகப் பேசினர். பிறகு அமர்ந்திருந்தவர் தன்னை இன்னும் கொஞ்சம் சுருக்கிக் கொண்டு "நீங்கள் இப்படி அட்ஜஸ்ட் பண்ணி உட்காருங்க" எனச் சில அங்குலங்கள் இடம் கொடுத்தார்.
இவரையும் சேர்த்து இப்போது ஐந்துபேர் அந்த பெஞ்ச் போன்ற இருக்கையில் உட்கார்ந்திருந்தார்கள். அதிர்ஷ்டவசமாக மகாலிங்கம் போலவே எல்லோருமே ஒற்றைநாடியாக இருந்ததால் சரியாகிப் போனது. லால்குடி தாண்டியதும் எதிரே இருந்த நபர் திரும்ப மகாலிங்கத்திடம் "சார், சென்னை வரையா?" என்ற அதே கேள்வியைக் கேட்க இவரும் "தாம்பரம் வரைதான்" என்று பதிலளித்தார். அவரும் "நான் மாம்பலம் போகிறேன். பெண் வீட்டுக்கு" என்று பயண விவரங்களைக் கூற, இவரும் "நான் தாம்பரத்தில் இறங்கி, ஏர்போர்ட்டுக்குப் போய் மும்பை விமானத்தைப் பிடிக்க வேண்டும்" எனச் சொன்னார்.
மற்றவர்களும் தத்தம் பயண விவரங்களைக் கூற உரையாடல் சூடு பிடித்து இனிமையான அனுபவமாக மாறியது. எதிர்வரிசை நபர்களும் நட்புடன் கலந்து கொண்டனர். அப்போது டீ விற்றுக் கொண்டு வந்தவரிடம் மகாலிங்கம் எல்லோருக்கும் தேநீர் கொடுக்கும்படிச் சொல்லி, தானும் அருந்தினர். மகாலிங்கம் சந்தோஷமாகக் காசு கொடுத்தார், மேலே உள்ள பலகையில் படுத்துக் கொண்டவருக்கும் சேர்த்து டீ வாங்கியிருந்தார். அவரும் அருந்திவிட்டு "சார் நீங்க மும்பை வரைக்கும் தூரமா பயணம் செய்யணுமே, நீங்க மேலே வந்து படுங்க, நான் கீழே வந்துவிடுகிறேன்" என்று தடுத்தாலும் கேட்காமல் இவருக்கு ஒரு படுக்கை பர்த் மாதிரி ஏற்பாடு செய்துவிட்டார். இன்னொரு சக பயணியும் "ஐயா, நீங்க கவலைப்படாம தூங்குங்க, நான் செங்கல்பட்டு தாண்டியதும் எழுப்புகிறேன்" என்றார்.
மகாலிங்கம் ஆச்சரியப்பட்டுப் போனார். முதலில் பெட்டி உள்ளே ஏறமுடியாமல், வழிவிடாமல் தடுத்த இந்தப் பயணிகள், பிறகு எவ்வளவு நன்றாகப் பேசி, உட்காரவும், பின்னர் படுக்கவும் வசதி செய்து கொடுத்துட்டாங்க என நெகிழ்ந்து போனார். ரயில் குலுக்கல் தாலாட்ட அயர்ந்து தூங்கிவிட்டார். காலை 4 மணிக்கு அந்தச் சகபயணி இவரைத் தட்டி "சார் எழுந்திருங்க. வண்டலூர் தாண்டிவிட்டது. தாம்பரம் வந்துடும்" என எழுப்பி விட்டார். எல்லோருக்கும் நன்றி சொல்லிவிட்டு ஒரு டாக்ஸி பிடித்து மீனம்பாக்கத்திலே ஒரு ஓட்டலுக்குச் சென்று அறை எடுத்து காலைக் கடன்களை முடித்துக்கொண்டு, குளித்துவிட்டு ஆறரை மணிக்கெல்லாம் ஏர்போர்ட் சென்றடைந்துவிட்டார்.
அங்கு போர்டிங் பாஸ் வாங்கிக்கொண்டு செக்யூரிட்டி சோதனையை முடித்துவிட்டு ஒரு சூடான காபி அருந்தினார். அப்பொழுது அவரிடம் சற்றும் சோர்வு இல்லை. இரவு முழுவதும் ரிசர்வ் செய்யாத பெட்டியில் பயணம் செய்தாலும் அந்தக் களைப்பை, உடன் பயணித்த சாதாரண மனிதர்களின் நட்புணர்வும் கனிவும் அக்கறையும் நீக்கிவிட்டதை உணர்ந்தார். நெடுநேரம் நின்றிருந்ததையும், ஏசி இல்லாததையும், தூங்குவதற்கு மெத்தையில்லாமல் வெறும் பலகையில் படுத்து வந்ததையும் மனதும் உடலும் சிறிதும் பொருட்படுத்தவில்லை. மாறாக, உற்சாகம் துளிக்கூட குறையவில்லை என்பதாக உணர்ந்தார்.
போர்டிங் ஆரம்பித்துவிட்டார்கள். உற்சாக மனதுடன் மகாலிங்கம் விமானத்தில் ஏறினார். அன்று அவருக்கு மூன்று இருக்கைகள் கொண்ட வரிசையில் நடு சீட்தான் கிடைத்திருந்தது. அவரது வரிசைக்கு வந்தபோது நடைபாதை ஓர (ஐல்) சீட்டில் பருமனான ஒருவர் உட்கார்ந்திருந்தார்.
கையில் ஒரு செய்தித் தாளை வைத்துப் படித்துக்கொண்டிருந்தார். இவரைக் கண்டுகொள்ளவேவில்லை. மகாலிங்கம் "சார், எக்ஸ்கியூஸ் மீ" என்றார். அவர் துளிக்கூட சிநேகமில்லாமல் பார்த்தார். இவர் அடுத்த சீட் தன்னுடையது என்று சைகை காட்டியபின், 'உச்' என்ற ஒரு சப்தத்துடன், ஒரு முனகலுடன் சற்றே எழுந்து வேண்டா வெறுப்பாக வழி கொடுத்தார். இவரும் தன் உடலை வளைத்து அந்த இடைவெளியில் நுழைய, அவர்மேல் சற்றே உராய்ந்துவிட்டார். இவர் என்ன செய்வார்? குண்டான அந்த நபர் சற்றே வெளியே வந்தால் சுலபமாக இவர் இருக்கைக்குச் சென்றிருக்கலாம். இவர் உராய்ந்ததற்கு அவர் வெறுப்புடன் ஆங்கிலத்தில் இவரைப்பற்றி ஒரு எதிர்மறையான சொல்லை முணுமுணுத்தார்.
மகாலிங்கம் தன் சீட்டில் உட்கார்ந்ததும் மறுபக்கம் திரும்பிப் பார்த்தார். ஜன்னல் சீட்டில் இன்னொரு பெரிய மனிதர் அமர்ந்திருந்தார். அவரும் அதேபோல் கண்களில் சற்றேனும் நட்புணர்வு இல்லாமல் இவரைப் பார்த்துவிட்டு ஒரே கணத்தில் முகத்தைத் திருப்பிக் கொண்டார். குறைந்த பட்சம் ஒரு "ஹலோ" அல்லது "குட் மார்னிங்" சொல்லலாம் என்றால் இருவருமே அதை விரும்ப மாட்டார்களெனத் தெளிவாகத் தெரிந்தது.
சில்லென்ற ஏசி, மெத்தென்ற சீட். சரி, சற்றே ஓய்வாகக் கைப்பிடியின் மேலே கைகளை வைக்கலாமென்றால் இரண்டு பக்கக் கைப்பிடிகளையும் பக்கத்து இருக்கை பெரிய மனிதர்கள் தத்தம் கைகளை வைத்து ஆக்கிரமித்திருந்தனர். அதில் ஒருவர் ஒரு விநாடி கையை எடுத்தவுடன் மகாலிங்கம் தன் கையை வைத்துக்கொள்ள அந்த நபர் இவரைப் பார்த்த பார்வை மிக பயங்கரமாக இருந்தது. இதற்குள் விமானப் பணிப்பெண் காலைச் சிற்றுண்டியைக் கொண்டுவந்தாள். மகாலிங்கம் தன் முன்சீட்டின் முதுகிலிருந்த டிரேயை ரிலீஸ் செய்து அவள் கொண்டு வந்த டிபன் தட்டை எதிர்கோக்கிக் காத்திருந்தார். அவள் முதலில் இடது மூலையில் ஜன்னல் பக்கத்தில் இருந்த பயணியிடம் தட்டை நீட்டினாள். அவர் தன் கையை நீட்ட, மகாலிங்கமும் நட்போடு தட்டைத் தான் வாங்கி அவருக்குத் தரலாம் எனக் கையை நீட்டினார். அந்தப் பயணியோ இவரிடமிருந்து தன் தட்டை வாங்குவதைத் தவிர்க்க எவ்வளவு சேஷ்டை செய்ய முடியுமோ அவ்வளவும் செய்து, இவரை ஏதோ ஒரு ஜந்துவைப் பார்ப்பது போல வெறுப்புடன் நோக்கி, கையிலிருந்து சரேல் எனத் தட்டை வாங்கினார். ஒரு சம்பிரதாயமான "தாங்க்ஸ்" கூடக் கிடையாது.
பிறகு பணிப்பெண் நடுச்சீட்டு மகாலிங்கத்தின் தட்டை நீட்ட வலது புறமிருந்த பயணியோ தன்கையில் அதை வாங்கித் தர முயலாமல், ஏதோ தொற்று நோயாளியின் உணவுத் தட்டைத் தீண்டாமல் இருப்பது போல முகத்தையும் உடலையும் வைத்துக்கொண்டார். தட்டை இவரே வாங்கிக்கொண்டார். உணவு அருந்தியவுடன் மகாலிங்கத்துக்கு பாத்ரூம் போகவேண்டுமெனத் தோன்றியது. வலதுபக்கப் பயணியோ கண்ணை மூடி யோக நிஷ்டையில் இருந்தார். இவரும் தயங்கித் தயங்கிக் காத்திருந்தார். அடக்கவே முடியாது என்ற நிலைமை வந்துவிட்டது. "சார், எக்ஸ்கியூஸ் மீ" என்று கூப்பிட்டுப் பார்த்தார். அவரோ அசையவேயில்லை. தூக்கமா, பாசாங்கா என்று நினைத்துப் பார்த்தால், அவர் கண் இமைகளை இறுக்கி வைத்திருந்தது தெரிந்தது. ‘தூக்கத்திலும் என்ன நடிப்புடா சாமி!’ என்றுதான் தோன்றியது. என்னப்பா இது! இவரை நமக்கு முன்னே பின்னே தெரியாது. இவர் ஏன் என்னிடம் இவ்வளவு விரோதம் பாராட்டுகிறார்?
பூர்வ ஜன்மத்தில் இவருக்கு ஏதோ கெட்ட காரியம் பண்ணிவிட்டோம் போல என்ற எண்ணம் மேலோங்கியது, வேறு ஒன்றும் தோன்றவில்லை. ஒரு வழியாக அடக்கமுடியாமல் போனதால் சீட்டிலிருந்து எழுந்து அவருடைய கால்களின் தடையை மீறி என் எண்சாண் உடம்பைச் சுருக்கிக்கொண்டு வெளியே வந்து பாத்ரூமிற்குப் போனார். திரும்ப சீட் வரிசையை நோக்கி நடந்தபோதுதான் அந்தப் பயணியை தாண்டுவது பாக் ஜலசந்தியை தாண்டுவது போன்ற சாத்தியமற்ற செயல் என்று, நல்ல வேளை கடைசி வரிசையில் ஒரு பாதையோர சீட் காலி இருந்தது. அதில் அமர்ந்து கொண்டார். விமானம் ஒரு வழியாக மும்பை அடைந்தது.
இந்த விமானப் பயணம் எவ்வளவு அசௌகரியமாக அமைந்துவிட்டது என மனம் அயர்ந்தார் மகாலிங்கம். வெளியே வந்து ஒரு டாக்ஸி பிடித்து தலைமை அலுவலகம் போய்ச் சேர்ந்தார்.
ரெவ்யூ மீட்டிங்கும் மும்முரமாக நடந்தது. மகாலிங்கம் தன் கிளையின் செயல்திறன், வர்த்தக வளர்ச்சி, இந்த வருட இலக்குகள் ஆகியவை பற்றி மிகச்சரியாக விளக்கினார். எம்.டி. கேட்ட கேள்விகளுக்கும் மற்ற உயர் அதிகாரிகளின் ஆழமான வினாக்களுக்கும் நேர்த்தியான விடைகளை அளித்தார். மாலை நான்கு மணி அளவில் எம்.டி. தன்னுடைய நிறைவுரையில் திருச்சி கிளையை, குறிப்பாக மகாலிங்கத்தின் விடைகள், விளக்கங்களை, வெகுவாகப் பாராட்டினார். எல்லோரோடைய கைகுலுக்கல்களையும் பெற்றுக் கொண்டார் மகாலிங்கம். மற்ற வேலைகளை முடித்துக் கொண்டு மனிதவளப் பிரிவுக்குச் சென்று, திருச்சி திரும்புவதற்கு பயண ஏற்பாடுகளைச் செய்து தருமாறு கேட்டார்.
அங்கு இருந்தவர் "மகாலிங்கம் சார், நீங்க 7 மணி பெங்களூர் விமானத்தைப் பிடித்தால் எட்டரை மணிக்கு அங்கு போய்விடலாம். திருச்சி விமானம் அங்கிருந்து இரவு பத்து மணிக்கு. இரவு பதினோரு மணிக்கு ஊர் போய்ச் சேர்ந்து விடலாம். டிக்கெட் ரிசர்வ் பண்ணிடட்டுமா?" என்று கேட்டார். மகாலிங்கம் சற்றே யோசித்தார்.
என்னதான் இரட்டை விமானப் பயணம் விரைவாக இருந்தாலும், ஏசி குளிர் இதமாக இருந்தாலும், உணவு ருசியாகத் தெரிந்தாலும், இரண்டு பக்கமும் உட்கார்ந்திருந்த பயணிகளை நினைத்தாலே பயமாக இருந்தது. வேண்டாம், சென்னைவரை விமானத்தில், கொஞ்சம் சிரமமாக இருந்தாலும், போய்விட்டால் அங்கிருந்து இரவு ரயிலைப் பிடித்தால் திருச்சிக்குப் போய்விடலாம், சிரமமில்லை என்று தோன்றியது அவருக்கு.
உடனே, "இல்லை சார். நீங்க சென்னை விமானத்தில் டிக்கெட் போடுங்க. அங்கிருந்து நான் தாம்பரம் போய் இரவு ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸைப் பிடித்து காலையில போய் திருச்சி சேர்ந்துவிடுவேன்" என்றார்.
அவர் கம்ப்யூட்டரில் பார்த்து, விமான டிக்கெட் உடனே வாங்கிவிடலாம், ரயில்வே ரிசர்வேஷன்தான் கிடைக்கவில்லை. எந்த வண்டியிலும் இடம் இல்லை என்று காண்பிக்கிறது. இரண்டாம் கிளாஸ் பர்த்தோ, சீட்டோகூட இல்லை என்றார். மகாலிங்கம் உடனே "பரவாயில்லை, நீங்கள் சென்னை டிராவல் ஏஜெண்ட் கிட்ட சொல்லி, அவருடைய ஆள் ஒருவரைத் தாம்பரம் ஸ்டேஷனில் போய் ஒரு அன்ரிசர்வ்டு டிக்கெட் வாங்கிட்டு, எனக்காகக் காத்திருக்கச் சொல்லுங்க. நான் விமான நிலையத்திலிருந்து டாக்ஸி பிடித்துப் போய் அவரிடம் டிக்கெட்டை வாங்கிக் கொண்டு, ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸில் ஏதாவது ஒரு அன்ரிசர்வ்டு பெட்டியில் ஏறிவிடுகிறேன்" என்றார். அந்த அதிகாரி "மகாலிங்கம், அன்ரிசர்வ்டு பயணம் கடினம், கும்பலோடு போவதற்குச் சிரமமாக இருக்கும், ரொம்பக் கஷ்டப்படுவீங்க" என்றார்.
இவர் "இல்லை சார், விமானப் பயணம்தான் சிரமம். அன்ரிசர்வ்டு ரயில் பயணம் எனக்கு துளிக்கூட கஷ்டம் இல்லை. நான் ஜாலியாக போய்விடுவேன் என்று சொன்னார். அதை நினைத்தாலே அவர் மனம் உற்சாகமாகி, ஒரு நிம்மதி உணர்வும் தோன்றியது.
சுகம் என்பது நம் மனதில்தான். சக மனிதர்கள் காட்டும் அன்பும், கரிசனமும், நட்பும்தான் என்ற உண்மையைப் புரிந்து கொண்டு அங்கிருந்து விமான நிலையத்துக்குப் புறப்பட்டார்.
வெங்கடேஷ்குமார், ஆஸ்டின், டெக்சஸ் |