தென்றல் பேசுகிறது...
அமெரிக்கத் தேர்தலுக்கு ஒரு மாதமே உள்ளது. தாம் பதவி நாற்காலிகளில் அமர்த்தப் போகிறவர்கள் மெய்யாகவே நாட்டுக்குப் பெருமை சேர்ப்பார்களா, மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவார்களா என்பதை வாக்களிப்போர் யோசிக்க வேண்டும். பாரம்பரிய மனச் சாய்வுகளைத் தாண்ட வேண்டும். கனிமங்கள், உள்நாட்டு ரயில் பாதைகள் உட்பட்ட விரைவுப் போக்குவரத்து, உற்பத்தி வசதிகள், விலைவாசிக் குறைப்பு, மக்களை தண்டிக்காத வரி விதிப்பு, எல்லாத் தரப்பு மக்களும் அணுகத் தக்க, பரவலான மருத்துவ வசதிகள் என இவற்றை வெறும் கோஷமாக அல்லாமல், செயல்படுத்தத் தயாராக இருக்கும் நாணயமான தலைவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இடையறாத போர்களாலும், இறக்குமதி வரி விதிப்பாலும் அமெரிக்கா மற்றும் உலக நாடுகளின் வளர்ச்சியைத் தடுக்கும் பிற்போக்கு அணுகுமுறை மாறியாக வேண்டும். லாஸ் ஏஞ்சலஸில் நித்யா ராமன் மேயர் பதவிக்கும், ஒஹையோவில் விவேக் ராமஸ்வாமி கவர்னர் பதவிக்கும் போட்டியிடுகிறார்கள். இருவருமே இந்திய வம்சாவளியினர். கட்சியின் நெடுநோக்கு, வேட்பாளரின் தகுதி ஆகிய இரண்டையும் சிந்தித்துப் பார்த்து மக்கள் வாக்களிக்க வேண்டும்.

அண்மையில் அமெரிக்கா வந்திருந்த ஜீ ஷின் பிங் 100,000 அமெரிக்க மாணவர்களைச் சீனக் கல்லூரிகளில் படிக்க வரும்படி அழைப்பு விடுத்தார்! ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும் என்பார்கள். உலகெங்கிலும் இருந்து கனவுக் கண்களோடு அமெரிக்காவுக்கு இளைஞர்கள் வந்த காலம் வலிய மாற்றப்பட்டுள்ள நிலையில் இந்த அழைப்பு நம்மவர் கண்களைத் திறக்க வேண்டும். அமெரிக்காவின் அதிசயிக்கத் தக்க முன்னேற்றத்துக்குக் காரணம் எட்டுத் திக்கிலும் இருந்து கூர்மதியும் சிறந்த கல்வியும் கொண்ட அனைவரும் இங்கே வந்து சேர்ந்ததுதான். அவர்களை எதிரிகளாகப் பார்ப்பது இன்றைய அரசின் மிகப்பெரிய தவறு.

துபாயில் இருந்து இஸ்ரேலை நோக்கிப் பறந்த FlyDubai விமான பைலட் ஸ்மிட் மச்சாரின் வீர சாகஸம் உலகளாவிய பாராட்டுகளைப் பெற்றுள்ளது. நாமும் இந்த இந்தியரைப் பெருமிதத்தோடு பாராட்டுவோம்.

நாட்டுப்புறக் கலைச்சுடர் டாக்டர் விஜயலக்ஷ்மி நவநீதகிருஷ்ணன் குறித்த அட்டைப்படக் கட்டுரை பழமைக்கும் புதுமைக்கும் பாலமாகும். நீம் கரோலி பாபா, எழுத்தாளர் எல்லார்வி, முனைவர் இ. சுந்தரமூர்த்தி ஆகியோர் குறித்த கட்டுரைகள் மனதுக்கு இதமும் எழுச்சியும் ஊட்டுவன.

வாசகர்களுக்கு காந்தி ஜயந்தி, நவராத்திரிப் பண்டிகை நல்வாழ்த்துகள்.

தென்றல்
அக்டோபர் 2026

© TamilOnline.com