சுதாகர் கஸ்தூரி
சுதாகர் கஸ்தூரி, தென்றலின் எழுத்தாளர் பகுதி மூலம் ஏற்கனவே வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். சமீபத்தில் ஆண்களுக்கு மிக அரிதாக ஏற்படும் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறார். நோயை எதிர்கொண்ட விதத்தைப் பற்றியும் அறுவை சிகிச்சை, கீமோ, கதிரியக்கச் சிகிச்சை பற்றியும், எப்படி அந்த நோயை எதிர்கொள்ள வேண்டும் என்பதைக் குறித்து அண்மையில் எழுதிய 'நெஞ்சிலோர் நண்டு' நூலில் மிக விரிவாக விவரித்திருக்கிறார். அவருடனான உரையாடலிலிருந்து...

★★★★★


கே: உங்கள் இளமைப்பருவத்திலிருந்து தொடங்குவோமா?
ப: நான் 1968ம் ஆண்டு பிறந்தேன். பள்ளிக்காலம் தூத்துக்குடியில் தொடங்கி, அம்பாசமுத்திரத்தில் தொடர்ந்து, மீண்டும் தூத்துக்குடி புனித சவேரியார் மேல்நிலைப் பள்ளியில் முடிந்தது. தமிழைப் பயிற்சி மொழியாகக் கொண்டு பத்தாம் வகுப்புவரை படித்தேன். ஆங்கிலத்தைப் பயிற்சி மொழியாகக் கொண்டு +2 வகுப்புகளில் படித்தேன். அதன்பின் வ.உ.சி. கல்லூரியில் இயற்பியல் இளங்கலை முடித்தேன். தொடர்ந்து கொச்சியில் CUSAT என்னும் அறிவியல் தொழில்நுட்பப் பல்கலையில் இயற்பியல் முதுகலை, எலக்ட்ரானிக்ஸ் முதன்மைப் பாடமாகக் கொண்டு தேறினேன்.

கே: இலக்கிய ஆர்வம் வந்தது எப்போது, எப்படி?
ப: பத்தாம் வகுப்பில் திரு சலைஸ் ஐயா தமிழ் வகுப்பு எடுத்தார். கம்ப ராமாயணம் அவர் உணர்ச்சி பூர்வமாக நடத்துவதில் ஈர்ப்பு ஏற்பட்டு, மெல்ல மெல்ல மனப்பாடச் செய்யுள் தவிர மீதிப் பாடல்களையும் மனப்பாடம் செய்தேன். பின் புதுக்கவிதை, பேச்சுப் போட்டி எனக் கல்லூரிக் காலத்தில் இலக்கிய ஆர்வம் வளர்ந்தது. ஆன்மிகமா, இடதுசாரியா என்று குழம்பியிருந்த காலத்தில் அப்பா "திருவாய்மொழி படி" என்றார். அதில் பெரியதாக ஈர்ப்பு ஏற்பட்டு, இன்றும் கம்பராமாயணம், திருவாய்மொழி படித்து வருகிறேன்.



கே: பாசுரங்களிலும், சங்க இலக்கியங்களிலும், இலக்கண நுட்பத்திலும் தேர்ந்தவராக இருக்கிறீர்கள். அது குறித்துச் சொல்லுங்கள்...
ப: சலைஸ் ஐயாவின் வழி நடத்தலும், அந்தமானில் தமிழ் ஆசிரியையாக இருந்த அண்ணி கமலா தோத்தாத்ரி அவர்கள் கொடுத்த ஊக்கமும், பள்ளிக் காலத்திலேயே வெண்பா, கலிவிருத்தம் என எழுதத் தூண்டியது. கல்லூரிக் காலத்தில் , நகைச்சுவைக்காகவும் நையாண்டி செய்யவும் திருநெல்வேலி வட்டார வழக்கில் வெண்பாக்கள் எழுதினேன். அது அப்படியே இயல்பாகப் போனது. புதுக்கவிதை ஒரு பரீட்சார்த்த நிலையிலேயே, நாட்டமில்லாமல் நின்று போனது. அப்பாவின் வழி நடத்தலில் பாசுரம் கற்க ஆரம்பித்து, வைணவ, சைவ சமயக் கருத்துகளை அதிகம் கற்க விரும்பி, பாசுரங்களில் ஈடுபட்டேன். வியாக்கியானங்கள் புரியாவிடினும், பாசுரங்கள் இரு பெரும் சமயங்களின் அடிநாதம் என்பது சீக்கிரம் புரிந்துபோனது. திருவாசகமும், திவ்யப்ரபந்தமும், வாழ்வில் ஒரு பகுதியாயின. இன்றும் வைணவ நூல்களான ஆச்சார்ய ஹ்ருதயம், பாசுர வியாக்கியானங்கள் கற்று வருகிறேன்.

கே: 6174 என்னும் உங்கள் நூல், தமிழில் தோன்றிய அறிவியல், கணிதம் மற்றும் புள்ளியியல், குறியீடுகள் சார்ந்த முதல் நூலாகக் கருதத்தக்கது. அதை எழுதும் உந்துதல் வந்தது குறித்து, அதன் பின்னணி குறித்து...
ப: எனது தொழில் அறிவியல் தொழில்நுட்பக் கருவிகள் சார்ந்ததாக அமைந்ததும், அறிவியலில் அதீத நாட்டம் இருந்ததும் அறிவியலில் ஏற்படும் முன்னேற்றங்களை அறியக் காரணங்களாயின. அறிவியலின் பல துறைகளைச் சேர்ந்தவர்களை அறியவும், உரையாடவும் வாய்ப்பு என் தொழிலால் கிடைத்தது.

கப்ரேகர் அவர்களைப் பற்றி 2003ல் அறிய நேர்ந்தது. அதிகம் தகவல் இல்லாமையால், பொதுநூலகம், பல்கலை நூலகம் என்று அலைந்து அவர் பற்றிக் குறிப்பெடுத்தேன். 6174 மனதில் நின்று போனது. அந்த எண்ணின் ரூபம், ஒரு பிரமிட் அமைப்பில் எண்கள் புள்ளிகளாக அமைந்தால் எப்படி வரும் என்று ஒருநாள், லோக்கல் மின் ரயிலில் பயணிக்கும்போது வித்தியாசமாகச் சிந்தித்தபோது, கிடைத்தது. அதன் குறியீடுகளைச் சந்த வடிவில் (வெண்பா, கலிவிருத்தம் என்று மட்டும் அமையாமல்) எழுத ஆர்வம் வந்தது. உசாத்துணைகள் கிடைக்க அலைய நேர்ந்தவை, சுவாரசியமான அனுபவங்கள்.

சுதாகர் கஸ்தூரியின் பிற படைப்புகள்:
சங்க இலக்கியங்களின் மேல் கொண்ட நாட்டத்தால், நான் சந்தித்த, கேட்ட பெண்களின் வாழ்க்கைச் சவால்களை மையமாக வைத்து 'நிறக்குருடு' என்ற சிறுகதைத் தொகுப்பு எழுதினேன். 'டர்மரின் 384' என்ற அறிவியல் குறுநாவல் 6174க்கு முன்பே எழுதத் தொடங்கிய ஒன்று. தொழில் நிமித்தமாகப் பல ஊர்களுக்கும் அலைந்ததால், பல வாகன ஓட்டிகளுடன் பேச்சுக் கொடுத்துச் செல்வது வழக்கம். அவர்களது அனுபவப் பகிர்வுகள் 'வலவன்' என்ற சிறுகதைத் தொகுப்பாக வந்தது. அதன்பின், அன்றைய தினமணி டிஜிட்டல் வெளியீட்டில் இருந்த நண்பர் ஆர்.வி.எஸ். அவர்களின் ஆலோசனையில் 'நேரா யோசி' என்று சிந்திக்கும் முறை, அதில் வரும் சாய்வுகள், பிழைகள் பற்றிய புத்தகம், தினமணியில் தொடராக வெளி வந்து பிரபலமானது. அதன்பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இப்போது 'நெஞ்சிலோர் நண்டு' அனுபவப் பகிர்வாக வந்திருக்கிறது.
- சுதாகர் கஸ்தூரி


கே: உங்களுடைய '7.83 ஹெர்ட்ஸ்' நூல், ஒலி அலைகளை மையமாக வைத்து எழுதப்பட்ட முதல் அறிவியல் புதினம் என்று சொல்லலாம். அதைக் குறித்துச் சில வார்த்தைகள்...
ப: ஒலி மற்றும் மன அதிர்வலைகளின் பின்னணி 7.83 ஹெர்ட்ஸ் கதைக்கு அடித்தளம் என்றாலும், HAARP பற்றிய வதந்திகள் சுவாரசியத்தை ஊட்டுவனவாய் அமைந்தன. ஓநாய்கள் மேல் பல வருடங்களாகவே ஒரு ஈர்ப்பு இருந்ததால், 7.83 ஹெர்ட்ஸில் அதனைச் சிறிது ஏற்றி வைத்தேன். அகமதாபாத் நகரில் வசிக்கும்போது, ஓதவ் என்ற கிராமத்தில், ஒரு மாலை நேரம் திடீரெனப் பார்த்த ஓர் ஓநாயின் உருவம் மனதில் பதிந்துவிட்டது. அதன் விளைவே 7.83 ஹெர்ட்ஸில் ஓநாயுடனான சந்திப்பு பற்றிய வரிகள். எவ்வளவோ முயன்றும், டெஹ்ராடூனில் வன ஆராய்ச்சி நிறுவனத்தில், ஓநாய் இனத்தில் ஆராய்ச்சி செய்பவர்களிடமிருந்து மேலதிகத் தகவல்களைப் பெறமுடியாது போனது இன்றும் ஒரு குறை.

கே: நீங்கள் எதிர்கொண்ட மார்பகப் புற்றுநோய் குறித்துப் பேசலாம். பொதுவாகப் பெண்களுக்கு வரக் கூடியதாகச் சொல்லப்படும் அது ஆண்களுக்கும் வருமா?
ப: ஆண்களுக்கு வருவது அரிதுதான். ஆனால், மார்பகப் புற்று வரும் சாத்தியக் கூறுகள் இருபாலருக்கும் உண்டு. மருத்துவர் ஒருவர் சொன்னது "ஆண், பெண் இருவருக்கும் மார்பகச் சதையின் பண்பு ஒன்றுதான். அதன் அளவு, பாலினம் பொறுத்தும், ஹார்மோன்களின் தாக்கம் கொண்டும் மாறும். அவ்வளவுதான்". இதெல்லாம் நான் முன்னே அறிந்திருந்தும், எனக்கு வந்ததை மிக நாட்படவே அறிந்தேன். இது எனது முட்டாள்தனம் என்றே கொள்ளவேண்டும்.

கே: அந்த நோயை நீங்கள் எதிர்கொண்ட விதம், குடும்பத்தாரின் உறுதுணை, மருத்துவ முயற்சிகள், மீண்டு வந்த தருணம் குறித்துச் சொல்லுங்கள்...
ப: எனது தொழில்சார் அறிவால், புற்றுநோய் பற்றி ஏராளமாக அறிந்திருந்தேன். அப்படியிருந்தும், புற்று எனக் கேட்டபோது ஆடித்தான் போனேன். என் மனைவி , பயப்பட்டுக் குழம்பாமல், மிக யதார்த்தமாகச் சிந்தித்து, அடுத்த கட்டம் என்ன என்று கேட்டுச் செயல்பட்டதை இங்கு பகிர விரும்புகிறேன். மருத்துவம் அதன் வேலையைச் செய்யும்போது, நமது நேர்மறை எண்ணங்கள், செயல்கள், அருகில் இருப்பவர்களின் மன உறுதி, உற்சாகமூட்டல் ஆகியவை இந்தச் சிரமமான பொழுதுகளைக் கடக்க உதவுகின்றன. இதனை யதார்த்தத்தில் கண்டவன் என்ற வகையில் இவை அனைத்தையும் 'நெஞ்சிலோர் நண்டு' புத்தகத்தில் பகிர்ந்திருக்கிறேன்.

கே: இதுபோன்ற நோய்களை எதிர்கொள்வது எப்படி என்று சொல்ல இயலுமா?
ப: முதலில், யதார்த்தமாக இதனைப் பார்க்கவேண்டும். கடினம்தான். ஆனாலும் அதுதான் ஓரே வழி. முன்பே திட்டமிட்டு மருத்துவக் காப்பீடு எடுப்பதில் அலட்சியம் காட்டக் கூடாது. "இதெல்லாம் நமக்கு எங்க வரப்போகுது?" என்று புற்று போன்ற நோய்களை, காப்பீட்டில் விலக்கி வைக்கக் கூடாது. இதன் பொருட்செலவும், மன உளைச்சலும், உடல் வருத்தங்களும் மிக மிக அதிகம். பொருட்செலவு பெரும் கவலைகளை ஏற்படுத்தும் என்பதால் காப்பீடு மிக அவசியம்.

இரண்டாவது, வந்துவிட்டது என்று அறிந்தால், "அடுத்து என்ன?" என்பதைத்தான் சிந்திக்க வேண்டும். வீட்டில் இதுபற்றி ஆரோக்கியமான நாட்களிலேயே பேசி வைத்தால், ஓரளவு தயார் நிலையில் அவர்கள் இருப்பார்கள். மருத்துவர்கள், மருந்துகள் தத்தம் வேலையைச் செய்யும் போது, நாமும் இயன்றவரை சுறுசுறுப்பாகவும், உடல் அசைவுகளுடனும், உற்சாகத்துடனும் இயங்க முற்பட வேண்டும். பெருமளவில் இது போன்ற நோய்கள் மன விளையாட்டுகள் (Mind Games) தாம்.

நெஞ்சிலோர் நண்டு நூலில் இருந்து சிறு பகுதி:
காலை 6 மணிக்கு அழைத்துப் போனார்கள். என்னுடன் வரிசையில் 8 ஸ்ட்ரெச்சர்களில் ஆட்கள் காத்திருக்க, மூன்று ஆபரேஷன் தியேட்டர்களில் சிகிச்சை மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. அவரவர் அழைப்பிற்குக் காத்திருந்தோம்.

சுமார் 7.30 அளவில் என்னை உள்ளே தள்ளிச் சென்றனர். நான்கைந்து இளம் டாக்டர்கள் குழுமியிருந்தார்கள். ஒவ்வொருவராக வந்து என் முகத்தருகே குனிந்து, "உங்கள் பெயர்?" என்றார்கள். அடுத்ததாக, "எந்த இடத்துல அறுவை சிகிச்சை செய்யப் போகிறார்கள்?" என்றொரு கேள்வி. எனக்கு எல்லாமும் நினைவிருக்கிறதா என்பதைப் பரிசோதிக்கவா இந்தக் கேள்விகள்? அல்லது அவர்கள் உறுதிப்படுத்திக் கொள்வதற்கா? தெரியவில்லை. ஒரு சீனியர் அவர்களுக்குச் செயல்முறைப் படிகளை விளக்கிக் கொண்டிருந்தார். அப்பரசெண்ட்டிகளுக்கு நான்தான் அகப்பட்டேனா என்று சிந்தித்துக் கொண்டிருக்கையில், "கொஞ்சம் வலிக்கும் பொறுத்துக்குங்க" என்றபடி மயக்கமருந்தைச் செலுத்தினார்கள். அதுவரை நினைவிருந்தது.

மீண்டும் நினைவு வந்தபோது என் பெயர் சொல்லி யாரோ அழைப்பது போலிருந்தது. அந்த ஷெனாய் டாக்டரா? "நலமாக இருக்கிறேன் டாக்டர் ஷெனாய்" என்றேன். "நான் ஷெனாய் இல்லை" என்று பதில் வந்தது. "ஸாரி உங்கள் பெயர்?" அவர் ஏதோ சொன்னார். ஜஸ்பால் என்றதாக மங்கலாக நினைவு. பிற டாக்டர்கள் ஒருவரையொருவர் பார்த்து முகமூடிக்குள் புன்னகைத்ததைக் கண்டேன்.

"அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துவிட்டது. உங்கள் நினைவு திரும்பிக் கொண்டிருக்கிறது" என்றவாறே ஸ்ட்ரெச்சரைத் தள்ளிக்கொண்டு போய் அறுவை சிகிச்சைக்குப் பின்னான கவனிப்பு அறை ஒன்றில் அரைமணி நேரம் வைத்திருந்தார்கள். மெல்ல மெல்ல மார்பில் வலிவரத் தொடங்கி அது தாங்க முடியாமல் போக முனகினேன்.

அருகிலிருந்த செவிலி டாக்டரை அழைக்க, வலி மறக்க ஊசியைச் செலுத்தினார்கள். ஆனால் வலி அதற்கெல்லாம் நின்றபாடாயில்லை. அறைக்கு ஸ்ட்ரெச்சரில் இழுத்து வந்தபோது அண்ணன் சற்றே நெகிழ்ந்து போனார். சட்டெனக் கண்கலங்கி, "வந்துட்டடா. இனிமே எல்லாம் சரியாயிரும்" என்று இடது கன்னத்தில் தட்டினார். எனக்கு எந்த உணர்ச்சியும் மட்டுமல்ல, பேச்சும் வரவில்லை.

ஒரு மணி நேர வேதனைக்குப்பின் மெல்ல உறங்கத் தொடங்கினேன். கைத்தாங்கலாக பாத்ரூம் அழைத்துச் செல்ல மங்கை இருந்தாள். நாலு மணி நேரத்திற்குப் பின் அனைத்து இயக்கங்களும் நார்மலாகிவிட்டன. அயர்வு அதிகம் அவ்வளவுதான்.

அரைமணி நேரத்தில் டாக்டர் ஜஸ்பால் வந்தார். "உங்கள் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துவிட்டது. மார்பில் முழுதுமாக எடுத்துவிட்டோம். அத்தோடு கை அக்குளின் உட்புறம் சில நிணநீர்க் கணுக்களை எடுத்திருக்கிறோம். ALND (Axillary Lymphatic Node Dissection) என்பார்கள். இதன் பரிசோதனை விவரங்கள் இன்னும் சில நாட்களில் தெரியவரும். கை இடுக்கில் ஒரு ட்யூப் போட்டு குடுவை ஒன்றை இணைத்திருக்கிறோம். எப்போது எடுப்பார்கள் என நர்ஸ் சொல்லுவார்" என்றதும் மேற்கொண்டு நான் எதுவும் கேட்க எத்தனிக்குமுன் அவர் சென்றுவிட்டார்.

அப்போதுதான் உன்னிப்பாகக் கவனித்தேன். வலது மார்பில் பெரியதாகப் பஞ்சு வைத்து, நீல நிறத்தில் ஒரு ப்ளாஸ்ட்டர் இட்டிருந்தார்கள். பக்கவாட்டில் அறுத்ததன் அடையாளமாக நடுவில் புடைத்த ஒரு ப்ளாஸ்டர் இடமிருந்து வலமாக ஓடியிருந்தது. வலது அக்குளில் ஒரு ட்யூப் செருகி அதன் கீழே ஒரு ப்ளாஸ்டிக் குடுவை இணைத்திருந்தார்கள். "இதில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் சொட்டிச் சேரும். நூறு மிலி ஒரு நாள்ல வெளிவரும். அதனைக் கொட்டிவிட்டு, மீண்டும் ப்ளாஸ்டிக் குடுவையை மாட்டிக்கொள்ள வேண்டும்" என்றார் நர்ஸ்.

"எப்ப எடுப்பாங்க?" என்றேன்.

"குறைந்த பட்சம் ரெண்டு வாரம் ஆகும். முக்கியமா ஒன்று..." என்று நிறுத்தியவர் தொடர்ந்தார்.

'நெஞ்சிலோர் நண்டு' புத்தகத்தை வாங்க: சுவாசம் பதிப்பகம், எண் 5, கேஸில் வேலி, வெங்கடமங்கலம் மெயின்ரோடு, பொன்மார், சென்னை - 600127.

தொடர்பு எண்: 8148066645

ஆன் லைனில் வாங்க: www.swasambooks.com


கே: புற்றுநோய் பாதித்தவர்களுக்கு உங்கள் ஆலோசனை அல்லது வழிகாட்டல் என்று எதைச் சொல்வீர்கள்?
ப: முதலில், "எனக்கு இது வந்திருக்கிறது. இதனை வெற்றிகாண முடியும்" என்று மனதளவில் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனை வெற்றி கண்டு வந்தவர்களோடு உரையாடல்/அறிவுரைகள் கேட்டு நடத்தல் என்பன முக்கியம். நல்ல நண்பர்களின் இடையூறில்லா உற்சாகமூட்டல், தொடர்புகள், பிறரிடம் உற்சாகத்துடன் தன்னம்பிக்கையுடன் உரையாடுதல் போன்றவை மிக அவசியம்.

கே: 'நெஞ்சிலோர் நண்டு' நூல் குறித்துச் சொல்லுங்கள்...
ப: இது எனது டைரியின் பக்கங்கள் அல்ல. எனது அதிர்ச்சிகள், சந்தித்த இடையூறுகள், வலிகள், துணை நின்றவர்கள் கொடுத்த ஊக்கம், அறிவியலின் ஆச்சரியமான வளர்ச்சி. சந்தித்த மனிதர்கள், உணர்ந்த மனிதநேயம் என்பவற்றின் இரு வருடப் பதிவு இது.

இப்புத்தகத்தின் மூலம், புற்று வராதவர்களுக்கு ஒரு விழிப்புணர்ச்சிச் செய்தியையும், நோய் வந்தவர்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதோடு, புற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பராமரிப்பு அளிப்பவர்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதையும் சொல்ல முயன்றிருக்கிறேன். இப்புத்தகத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு, மக்களிடம் நான் சொல்லவந்த செய்தி நன்றாகவே சென்றடைகிறது என்கிற நிறைவை அளிக்கிறது.

இதனைப் பற்றி சகமனிதர்களிடம் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்த தென்றல் இதழுக்கு என் நன்றி.

உரையாடல்: அரவிந்த் சுவாமிநாதன்

© TamilOnline.com