ராஜேந்திரகுமார்
நகைச்சுவை, குடும்பம், திகில், காதல், மர்மம் எனப் பல்வேறு வகைமைகளில் வெகுஜன வாசகர்களுக்கான நாவல்களையும் சிறுகதைகளையும் எழுதியவர் ராஜேந்திரகுமார். ஜனவரி 02, 1939 அன்று கோயம்புத்தூரில் பிறந்தார். பள்ளி இறுதி வகுப்புவரை படித்தார். ஓவியக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார். சென்னையில் உள்ள ஜெ. வால்டர் தாம்ப்ஸன் கம்பெனியில் விளம்பரத்துறையில் பணியாற்றினார். ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம் அறிந்தவர்.

ராஜேந்திரகுமார், கல்கி, சுஜாதா எழுத்துக்களின் ரசிகர். 1963ல் எழுதத் தொடங்கினார். முதல் சிறுகதை 'ஓய்வு'. தொடர்ந்து பதின்ம வயதினரின் உலகைப் பேசும் 'வால்கள்' சிறுகதை குமுதத்தில் வெளியாகிப் பரவலான அறிமுகம் பெற்றது. எழுத்தார்வத்தால் பணியிலிருந்து விலகி சுதந்திர எழுத்தாளராகச் செயல்பட்டார். முதல் நாவல் 'வணக்கத்துக்குரிய காதலியே' மாலைமதியில் வெளியானது. தொடர்ந்து 300க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 500க்கும் மேற்பட்ட நாவல்களையும் எழுதினார். குமுதம், கல்கி, பாக்கெட் நாவல், திகில் நாவல், த்ரில் நாவல், மாலைமதி, ராணிமுத்து, நவரத்னம் உள்ளிட்ட பல இதழ்களில் சிறுகதை, தொடர்கள், நாவல்களை எழுதினார். 'ஙே' என்ற எழுத்தைப் பயன்படுத்திப் பிரபலமானார். தனது மர்ம நாவல்களில் 'ராஜா-ஜென்னி' என்ற பாத்திரங்களைப் பயன்படுத்திப் புகழ்பெற்றார்.



மர்மக் கதைகளையும், ஆவி, பேய், பிசாசு, மாந்திரீகம் போன்றவற்றைப் பின்னணியாகக் கொண்ட கதைகளை அதிகம் எழுதினார். நாடகங்கள் சிலவற்றையும் எழுதினார். அவை. சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் ஒளிபரப்பாகின. வானொலியிலும் ராஜேந்திரகுமாரின் நாடகங்கள் ஒலிபரப்புச் செய்யப்பட்டன. ராஜேந்திகுமாரின் வணக்கத்துக்குரிய காதலியே, மூடுபனி, கண்ணாமூச்சி, கௌரி ஆகிய நாவல்கள் திரைப்படங்களாக வெளியாகின. 'ராஜா-ராணி' என்ற இதழின் ஆசிரியராகச் சில ஆண்டுகள் பணியாற்றினார். உடல் நலிவுற்றுச் சென்னையில் ராஜேந்திரகுமார் காலமானார்.

ராஜேந்திரகுமார் நூல்கள்
சிறுகதைத் தொகுப்புகள்: வால்கள், வால்கள் ஜாக்கிரதை!
நாவல்கள்: தப்பாமல் பூ இருக்கும், மொட்டும் மலரும், அவள் தம்பி அங்கதன், நிஜங்கள், ஒளிப்பதற்கு ஒன்றுமில்லை, மின்னல் இடி பூகம்பம், ஒரு காதல் புயல் வருகிறது, காதல் XYZ, ஒரு சின்னத்தவறு, உறவு சொல்ல ஒருத்தி, துரத்து துரத்து, பருவம் பக்கத்தில், பாசமெல்லாம் உங்க மேலே.., அவளும் பெண்தானே, தங்க விழி தாரா, கன்னி இளமை கனவு, பரிசாக ஓர் இரவு, ஒரே நாள் கதை, மறுபடியும் மரணம், ரயிலில் வந்த மயில், அந்தப்புரத்தில் ஒரு நந்தலாலா, நீ நீயா?, கோணல் நிழலைத் துரத்தி, எதுவரை சொர்க்கம்?, பைரவன் அழைக்கிறேன், பகலில் இங்கே, இரவில் எங்கே? அந்தரங்கம் அலறுகிறது, அதுக்கு இது அல்ல வயது..!, அவன், அவள், தீவு, அழகு, வயது, ஆபத்து...!, இரவல் உறவுகள், இரவு வசந்தம், இறந்தவன் பேசுகிறேன், இன்னமும் பிரம்மச்சாரி, ஈரமான ரோஜாவே!, உலாவரும் தேவதை, உனக்கே தெரியும் சுகந்தி!, ஊமைக்கரு, எப்படியடி காதலிப்பது?, என்னோடு ஒரே இரவு, ஒரு நள்ளிரவின் மறுபக்கம், ஓடி வா, இனியா..., கண்ணாமூச்சி, கதவுக்கு இருபுறமும் சொர்க்கம், கெஞ்சும் சலங்கை...!, கொலைதூர பயணம்..., கொல்வதெல்லாம் நன்மை, கொல்லாதே யாரும் பார்த்தால்!, கௌரி, சம்மந்தி, பிருந்தாவனத்தில் ஒரு நந்தகுமாரி, பெண் பேய் போலீஸ், மறுபடியும் மரணம்...!, மூடுபனி, தனிமரத் தோப்பு, தீ... தீ... சிநேகிதி, தீர்க்கா சுமங்கலி, தீர்க்கா நாளை தீர்க்கப்படுவாள், நம்புவதற்கல்ல, நரகத்திற்குப் புதியவன், நான் ஒரு ஏ, நித்தம் ஒரு நட்சத்திரம், நியாயம் (சில சமயம்) கொல்லும், நில், கவனி, காத்திரு, நீயா என் காதலி?, வணக்கத்துக்குரிய காதலியே, வாழ்க! மேலும் வளமுடன்!, வேடிக்கை மனிதர்கள், 37-வது எலும்புக்கூடு, ஜூலி கொடுத்த விலை, ஸ்ட்ரா... ஒரு எக்ஸ்ட்ரா, தனிமரத் தோப்பு, ஒரு நள்ளிரவின் மறுபக்கம், கொல்லாதே யாரும் பார்த்தால்..., கதவுக்கு இருபுறமும் சொர்க்கம், ஊமைக்கரு, ஜூலி கொடுத்த விலை.


அரவிந்த்

© TamilOnline.com