கவிஞர் சினேகன்
கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர், நடிகர், பேச்சாளர் எனப் பன்முக அடையாளங்களுடன் செயல்பட்டு வருபவர் சினேகன். ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து தமிழ்த் திரையுலகின் குறிப்பிடத்தகுந்த பாடலாசிரியராய் உயர்ந்திருக்கும் சினேகனின் வாழ்க்கை சவாலானது. கடும் உழைப்பாலும், பல்வேறு புறக்கணிப்புகளைத் தாண்டியும் இன்றைக்குத் தவிர்க்க முடியாத ஒரு படைப்பாளியாக உயர்ந்திருக்கும் சினேகன், அவை அனைத்தையுமே தன் வளர்ச்சிக்கான உரமாகவும், வாழ்க்கை உயர்வுக்கான படிக்கட்டுகளாகவும் கொண்டார். பொறுமையும், தன்னடக்கமும், தீராத் தமிழ்ப் பற்றும் அவரது உயர்வுக்கு முக்கியக் காரணங்கள்.

ஜூன் 23, 1978ல், தஞ்சை மாவட்டத்தின் செங்கிப்பட்டிக்கு அருகில் உள்ள புதுக்கரியப்பட்டி என்ற சிற்றூரில், ம. சிவசங்கு கொடும்புராயர், சிவ. மகமாயி தம்பதியர்க்கு எட்டாவது மகனாகப் பிறந்தார் சினேகன். உடன்பிறந்தோர் ஆறு அண்ணன்கள். ஓர் அக்கா. எளிய விவசாயக் குடும்பம். சினேகனின் இயற்பெயர் சிவசெல்வம். இந்த உலகில் நாம் யாருக்கும் எதிரியாக இருக்கக்கூடாது என்ற நோக்கத்திற்காகச் சினேகன் என்ற பெயரை எழுத்துலகில் நுழைந்தபோது சூட்டிக் கொண்டார்.

தாய், தந்தை இருவருமே கையொப்பமிட மட்டுமே அறிந்திருந்தனர். தங்கள் பிள்ளைகளாவது கல்வியறிவு பெறவேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டனர். சினேகன், புதுக்கரியப்பட்டியில் உள்ள தொடக்கப் பள்ளியில் கற்றார். உயர்நிலைக் கல்வியைக் கல்லணைக்கு அருகிலுள்ள திருக்காட்டுப்பள்ளி சர். சிவசாமி ஐயர் மேல்நிலைப்பள்ளியில் படித்தார். பள்ளியில் படிக்கும்போதே கவிதை ஆர்வம் கொண்டிருந்தார். கவிதைகள் எழுதினார். பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றார். மேடைப்பேச்சில் வல்லவராக இருந்தார். பள்ளியில் படிக்கும்போது நடந்த மாநில அளவிலான கவிதைப் போட்டியில் முதல் பரிசைப் பெற்று, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரனிடம் பரிசு பெற்றார். ஆசிரியர்களால் ஊக்குவிக்கப்பட்டார். திருச்சிராப்பள்ளியில் உள்ள சுயநிதிக் கல்லூரியில் இளங்கலை பயின்று பட்டம் பெற்றார்.



சினேகன் திரை வாய்ப்புத் தேடிச் சென்னைக்கு வந்தார். நண்பர் ஒருவரின் மூலம் பரிந்துரையில் கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராகச் சேர்ந்தார். 1997ல் 'புத்தம்புது பூவே' என்ற திரைப்படத்திற்குப் பாடல்கள் எழுதினார். பாடல்கள் பிரபலமாகின, ஆனால் படம் வெளியாகவில்லை.

2001ல் வெளியான 'பாண்டவர் பூமி' சினேகன் வாழ்க்கையில் பல வாசல்களைத் திறந்துவிட்டது. 'அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள்', 'தோழா...தோழா...' போன்ற பாடல்கள் மிகவும் பிரபலமாகின. தொடர்ந்து பல திரை வாய்ப்புகள் வந்தன. மண்ணின் மணத்தோடு பாடல்களை எழுதுவது சினேகனின் பலம். வெற்று வார்த்தை விளையாட்டுக்களின்றி, உணர்வு பூர்வமாக பால்ய கால நினைவுகளை, பள்ளிப் பருவத்தை, கிராம வாழ்க்கையை, காதலைப் பலவாறாகப் பேசின சினேகனின் பாடல்கள். தமிழ்த் திரையுலகின் முக்கியக் கவிஞர்களுள் ஒருவரானார் சினேகன். 'ஞாபகம் வருதே ஞாபகம் வருதே', 'ஆராரிராரோ...', 'மீண்டும் பள்ளிக்குப் போகலாம்' போன்ற பாடல்கள் சினேகனின் பெயர் பொதிந்த பாடல்களாக அமைந்தன. 'பாண்டவர் பூமி', 'ஆட்டோகிராப்', 'ராம்', 'பள்ளிக்கூடம்', 'பருத்திவீரன்', 'மௌனம் பேசியதே', 'சாமி', 'பேரழகன்', 'ஆடுகளம்' போன்ற பல திரைப்படங்களுக்கு இவர் எழுதிய பாடல்கள் வெற்றிப் பாடல்களாக அமைந்தன.



சினேகன் நடிகராகவும் கால் பதித்தார். முதல் படம் 'யோகி', 2009ல் வெளியானது. 'உயர்திரு 420', 'ராஜராஜ சோழனின் போர்வாள்', 'பூமிவீரன்' போன்ற படங்களில் நடித்துள்ளார். 'பிக் பாஸ்' ரியாலிடி ஷோவிலும் கலந்துகொண்டு புகழ்பெற்றார். சினேகன் எழுதியிருக்கும், 'எழுத்துச் சிறகு - முதல் அத்தியாயம்', 'இன்னும் பெண்கள் அழகாக இருக்கிறார்கள்', 'இப்படியும் இருக்கலாம்', 'அவரவர் வாழ்க்கையில்' போன்ற புதுக்கவிதை மற்றும் கட்டுரை நூல்கள் பால்ய நினைவுகளின் ஏக்கங்கள், கடந்துபோன கணங்கள் ஆகியவற்றோடு புதிய பல சிந்தனைகளையும் தன்னுள் கொண்டவை. இயற்கை, நட்பு, காதல், சோகம், தோல்வி, உறவு, சமூகம் எனப் பலவற்றைப் பேசுபொருளாகக் கொண்டவை.

சினேகனின் 'அவரவர் வாழ்க்கையில்..' நூல் குறித்து பாரதிராஜா, "எல்லா கவிஞர்களும் இப்படி எழுதிவிட முடியாது. பாரதிக்கும் கண்ணதாசனுக்கும் பிறகு. யதார்த்தமான வாழ்க்கையை எந்தவித எதிர்பார்ப்புமின்றிப் பதிவு செய்திருக்கிறான் சினேகன். என்னை எப்போதும் ஆச்சர்யப்பட வைக்கும் கவிஞன். உழைப்பும் உற்சாகமும் ஒருமிக்க இணைந்த கலைஞன். இவனது வெள்ளந்தியான புன்னகை, என்னைச் சலவை செய்திருக்கிறது. மண்வாசனை மாறாத மனிதப் பண்பும், அரிதாரம் பூசிக்கொள்ளாத அன்பும் சினேகளின் பலம்" என்று குறிப்பிட்டிருந்தார்.

சினேகன் சமூக சேவையிலும் ஆர்வமுடையவர். பல சமூக நற்பணிகளில் ஈடுபட்டவர், 2018ல், நடிகர் கமல்ஹாசன் தோற்றுவித்த 'மக்கள் நீதி மய்யம் கட்சி'யில் இணைந்தார். 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார்.

சிநேகன் பெற்ற விருதுகள்:
கண்ணதாசன் விருது - மூன்று முறை.
பாரதி விருது - இரண்டு முறை
நேதாஜி விருது - இரண்டு முறை
கம்பன் விருது - இரண்டு முறை
கம்பன் கழக விருது
அவ்வை விருது
ஆதித்தனார் சிலம்பக் கழக விருது
அப்துல் கலாம் விருது
தமிழய்யா கல்விக் கழக விருது
மலேசியா எழுத்தாளர் சங்க விருது
செஷல்ஸ் தமிழ்ச் சங்க விருது

பட்டங்கள்
கவிச்சிற்பி
சின்னபாரதி
கவி இளவரசு
எழுச்சி கவிஞர்


சினேகன் 2001ல், கன்னிகாவைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குப் பிறந்த இரட்டைப் பெண் குழந்தைகளுக்கு நடிகர் கமல்ஹாசன், 'கவிதை', 'காதல்' என்று பெயர் சூட்டினார். சமீபத்தில் நடந்த 2026-29 ஆண்டுக்கான தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் துணைத்தலைவர் தேர்தலில் போட்டியிட்டுச் சினேகன் வெற்றி பெற்றுள்ளார். பள்ளி மற்றும் கல்லூரி நிகழ்வுகளில் மாணவர்களுக்குத் தன்னம்பிக்கைப் பேச்சாளாராகச் சினேகன் செயல்பட்டு வருகிறார்.

சினேகன் எழுதி, விகடன் பிரசுரம் வெளியிட்ட 'அவரவர் வாழ்க்கையில்...' நூலில் இருந்து சிறு பகுதி:
பள்ளி இறுதி ஆண்டில் நான் இருந்தேன். அதே சமயம் விடுதியில் மாணவர் தலைவனாகவும் தேர்வுபெற்றிருந்தேன். உடலெல்லாம் உற்சாக நதி ஓடியது. நான் எப்போதும் மாணவர்கள் பக்கம்தான். விடுதியில் மாணவர்களுக்கு வழங்கவேண்டிய சலுகைகள் மறுக்கப்பட்டுக் கிடந்தன. இதைத் துணிவோடு முதலில் எதிர்த்தவன் நான்தான். மாணவர்களும் என் பக்கம்தான். இதனால் விடுதிக் காப்பாளர் செய்யும் ஊழல்கள் வெளியே தெரியத் தொடங்கின. தனியொரு மாணவனை வேண்டுமானால் தண்டிக்கலாம்; மாணவச் சமுதாயத்தையே தண்டிக்க முடியுமா என்ன?

இதனால் விடுதிக் காப்பாளர், என்னுடைய அத்தனை செயல்களையும் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். எந்த நொடியிலும் என்னிடமிருந்து தவறுகளைக் கண்டுபிடிப்பதே குறிக்கோளாக இருந்தார். எனக்கு நண்பர்கள் கூட்டம் அதிகம் என்பதை ஏற்கெனவே நான் சொல்லியிருக்கிறேன். அவர்களிடமிருந்து என்னைப் பிரிப்பதும், அவர்கள் செய்யும் தவறுகளுக்கு நான்தான் காரணம் என்பதும் விடுதிக் காப்பாளரின் பிரசங்கமாக இருந்தது. இந்தத் தகவல் என் வீட்டாருக்கும் தெரிந்துவிட்டது. இதனால் வீட்டாரும் எனக்கு எதிரிகளாக மாறினார்கள். இது நாளடைவில் முழுமையாக என்னைத் தனிமைப்படுத்தும் என்பது எனக்குத் தெரியாது. என்மீது உள்ள கோபத்தில் யார் யாரையோ தண்டித்தார் காப்பாளர். 12-ம் வகுப்பு இறுதி நாள்கள் எவ்வளவு கடினமானது என்பது நாம் அறிந்ததே. அரசுத் தேர்வு நெருங்குகிறது. ஒருவனின் எதிர்காலத்தை இதுவே முடிவுசெய்கிறது. விடுதியில் எனக்கும் காப்பாளருக்கும் உள்ள பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்தது. அதனால் அதிகமான மாணவர்களின் வாழ்க்கை பாழாய்ப்போய்விடுமே என அஞ்சினேன்.

எனக்கு நான்தான் நல்ல நண்பன்; நல்ல நீதிபதி என்பதால், ஒரு முடிவுக்கு வந்தேன். 'விடுதியிலிருந்து விலகிச் செல்கிறேன்' என ஒரு கடிதத்தில் எழுதி, காப்பாளரின் கையில் கொடுத்தேன். கடிதத்தைப் படித்த காப்பாளர், காரணம் கேட்டார். `தேர்வு நெருங்குகிறது. எனக்கு இங்கு படிக்கும் வசதி போதவில்லை' என்ற காரணத்தைத் தவிர, வேறு எதையும் சொல்லவில்லை. நீண்டநாள் எதிர்பார்த்ததைப் போல மறுப்பு ஏதும் சொல்லாமல் ஏற்றுக்கொண்டார்.

நான் விடுதியைவிட்டு வெளியேறுகிறேன் என்ற தகவல், விடுதி மாணவர்களுக்கு மத்தியில் பரவத் தொடங்கியது. அது என் நண்பர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியது. தேர்வு நேரத்தில் நான் ஊரிலிருந்து தினமும் வந்து எழுதமுடியாது என்பதுதான் அவர்களின் ஏக்கம். எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அப்போது எனக்கு இல்லை. ஒரு சனிக்கிழமை மாலை, விடுதியைவிட்டு வெளியேறினேன். காப்பாளர் அன்று விடுதியில் இல்லை. இருந்திருந்தால் ஏதாவது கலகம் மூண்டிருக்கும் என்பது அவருக்கும் தெரியும்; எனக்கும் தெரியும். விடுதியிலிருந்து பேருந்துநிலையம் இரண்டு கிலோமீட்டர் தூரம். என்னை வழியனுப்ப, விடுதி நண்பர்கள் அத்தனை பேரும் திரண்டு வந்தனர். அதுமட்டுமின்றி விடுதியைச் சுற்றியிருந்த நண்பர்களும் என் வகுப்பறை நண்பர்களும் உடன் வந்தனர். அன்று பேருந்து நிலையமே பெரும் பரபரப்பாக இருந்தது. தங்களுக்காகப் பரிந்துபேசியதால்தான் எனக்கு இந்த நிலை என்று விடுதி மாணவர்களின் கண்களில் விடைபெறா நீர்த்துளிகள். எத்தனை கனவுகளை வளர்த்த பூமி, எத்தனை நட்புகளைக் கொடுத்த பூமி எல்லாம் கண்முன் வந்து கை அசைத்தன. பேருந்து புறப்படும்போது என்னையும் அறியாமல் அழுதுவிட்டேன். என்முகம் பார்த்த நண்பர்களும் அழுதுவிட்டனர். அன்று பேருந்து நிலையமே கண்ணீரால் நனைக்கப்பட்டது.

தற்போது அந்தப் பேருந்து நிலையத்தைப் பார்த்தேன். கொஞ்சம் மக்கள்தொகை அதிகரித்திருந்தது. ஆனால், அந்தப் பள்ளிக்கால நினைவுகள் பத்திரமாக அங்கேயே படர்ந்து கிடக்கின்றன. பேருந்து புறப்பட்டது. ப்ரியமில்லாமல் பிரிந்துபோகிறேன். திருக்காட்டுப்பள்ளி வழியெல்லாம் வசந்தகால நினைவுகள். வண்ண வண்ணக் கனவுகள் எல்லாம் சாயம்போனதாகத் தெரிந்தது.

ஊரை அடைந்ததும் மேலும் ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. அம்மாவைத் தவிர வேறு யாரும் பேசவில்லை. 'படிக்கப்போன இடத்தில் தேவையில்லாத வேலை எதற்கு?' என்பதுதான் அண்ணன்களின் கேள்வி. நடந்ததைச் சொன்னால், 'நீ என்ன சீர்திருத்தவாதியா? எவனாவது எப்படியாவது போறான்' என்றார்கள். என்னால் அப்படிப் போகமுடியாது. நியாயத்துக்குப் புறம்பானது எதையும் நான் அனுமதித்ததில்லை; அனுமதிக்கப் போவதுமில்லை. எதைப்பற்றியும் எனக்குக் கவலை இல்லை. என் கோபம் எல்லாம், என்னைப் புரிந்துகொள்ள யாரும் இல்லையே என்பதுதான். - சினேகன்


அரவிந்த்

© TamilOnline.com