பிள்ளையார்புரத்துக்கு ஒரு டிக்கெட்
"ஏன் தாத்தா சிரிக்கிறீர்கள்?" கேட்டுக்கொண்டே வந்தான் சங்கர்.

"ஒன்றுமில்லை சங்கர். இன்றைக்கு உனக்கு எக்ஸாமில்லையா?" பதிலளித்தார் சந்திரசேகர்.

"சும்மா சொல்லுங்க தாத்தா. நான் வெளியே வரும்போதே நீங்கள் ஏதோ நினைத்துச் சிரித்துக் கொண்டிருந்தீர்கள்."

"சங்கர், உனக்கும், வயதும் காலமும் வரும்போது தெரியும். எங்கே இன்னும் ஸ்கூலுக்கு கிளம்பல!"

"இல்லை தாத்தா. அம்மா உடம்பு சரியில்லாமல் படுத்துவிட்டாள். அப்பாவிற்கு ஏதோ ஆடிட்டிங் டயமாம். காலையிலே போய்ட்டாங்க. ஆமா இப்படி காலையிலே பனியிலே வெளியே நாற்காலியை எடுத்துப் போட்டுக் கொண்டிருக்கீங்களே?" கேட்டான் சங்கர்.

சங்கர் வரும்வரை நெஞ்சுவலியை மறைத்து வைத்தவர் பொறுக்க முடியாது என்ற நிலை வந்தபோது நெஞ்சைப் பிடித்துக் கொண்டார்.

"ஐயையோ! தாத்தா என்னாச்சுது," என்றான் சங்கர்.

"ஒன்றுமில்லேப்பா." என்றபோது, "ஏண்டா இன்னுமா டிபன் வாங்கக் கிளம்பலே" என்ற வார்த்தைகள் வேகமாக வெளியே வந்தன சங்கரின் அம்மாவிடமிருந்து.

"அம்மா தாத்தாவுக்கு மறுபடியும் வலி வந்துவிட்டதம்மா" என்றான் சங்கர்.

"ஆமாம், அவருக்கு இப்படித்தான் ஓயாமல் வலி வரும். நேற்று தானே அப்பாகூட டாக்டரிடம் போய் முன்னூறு ரூபாய் தெண்டம் போட்டுட்டு வந்தாங்க. சும்மா மாத்திரையைத் தூக்கிப் போட்டுட்டு கூட்டிண்டு போ."

மருமகளின் பேச்சும் தொனியும் அந்த வலியிலும் சந்திரசேகருக்கு சிரிப்பைத் தந்தது. 'மருமகளைத் தேர்ந்தெடுப்பதில் நான் தவறி விட்டேனோ' என்று ஒரு கணம் தோன்றினாலும், 'இனி அதை நினைத்துப் பயனில்லை' என மெதுவாக எழுந்து சங்கரின் விரலைப் பிடித்துக்கொண்டு அருகிலிருந்த ஹோட்டலை நோக்கி நடந்தார்.

"ஏன் தாத்தா, அம்மா எப்போதும் உங்களை ஜாடை மாடையா திட்டறா?"

"சீ, அப்படி பேசக்கூடாது. தாத்தா செய்ய வேண்டிய வேலைகளைச் செய்தால்தான், உடல் சுறுசுறுப்பா இருக்கும் என்பதற்காகச் சொல்கிறாள்."

"தாத்தா சீக்கிரம் வாங்க. ஸ்கூலுக்கு லேட்டாப் போனா டீச்சர் திட்டுவாங்க. சீக்கிரம் டிபன் பண்ணிட்டு ஓடணும்."

இருவரும் காலை டிபனை முடித்துக் கொண்டு, பார்சலும் வாங்கிக் கொண்டு வர, சந்திரசேகருக்கு நெஞ்சுவலி தாங்க முடியாமல் போனது. அருகில் வந்த ஆட்டோவை நிறுத்தி சங்கரும் தாத்தாவும் ஏறிக் கொண்டார்கள்.

காலையில் நினைத்துச் சிரித்தது திரும்பவும் நினைவிற்கு வந்தது சந்திரசேகருக்கு.

தமிழரசியைக் காதலித்தது, அவளுக்காக வீட்டிலே சண்டை போட்டு, சாப்பிடாமலே திரிந்தது. அம்மா தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டியது. பயப்படாமல் தமிழரசியைக் கூட்டிக்கொண்டு மெட்ராஸ் வந்தது…

சென்னைப் பட்டணம் தன்னை ஆளாக்கிய பிறகு ஊரே மறந்து போனது. வைராக்கியமாக அம்மா அப்பாவுடன் தொடர்பைத் துண்டித்துக் கொண்டார்.

ரொம்ப நாள் கழித்து ஒரு நண்பன் மூலமாக அப்பா, அம்மா எல்லோரும் இறந்து போனது தெரியவந்தது. திரும்ப ஊருக்குப் போகவேண்டும் என்று தோன்றாமலே போய்விட்டது.

தம்பி இருமுறை வந்து சொத்தைச் சரிபாதி எடுத்துக்கொள்ளச் சொல்லிவிட்டுப் போனான். நீயே ஆண்டு அனுபவித்துக் கொள் என்று சொல்லிவிட்டார்.

இப்போது திடீரென்று பிள்ளையார்புரம் போகவேண்டும் போல ஆசை வந்தது. இரவு மகன் வேலையிலிருந்து வந்ததும் சொல்லவேண்டும்.

அடுத்த வாரம் கண்டிப்பாக ஊருக்குப் போகவேண்டும். தான் வாழ்ந்த வீடு, தமிழரசியின் வீடு, தெருக்கள், தமிழரசியைச் சந்தித்த இடங்கள் எல்லாவற்றையும் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த போதே அதைக் கலைத்து விட்டான் பேரன் சங்கர். "இப்போ வலி எப்படி இருக்குது தாத்தா?" என்றான், அவருடைய நெஞ்சைத் தடவியபடி.

"குறைந்து போச்சுடா. வீடு வந்துடுச்சு இறங்கு" என்று சொல்லிவிட்டு வலி தாங்கமுடியாமல் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு இறங்கினார்.

முன் அறை ஜன்னல் ஓரத்தில் இருந்த மாத்திரையை எடுத்துப் போட்டுக்கொண்டு, நாற்காலியில் திரும்பவும் காற்றாட வந்து உட்கார்ந்தார்.

ஸ்கூலுக்குப் புறப்பட்ட சங்கர், "தாத்தா, நான் வர்றேன். இன்றைக்கு எங்க ஸ்கூல் 'பேரன்ட்ஸ் டே' எல்லோரும் வருவாங்க. நீங்களும் வர்றீங்களா தாத்தா?" என்று கேட்டான்.

"இல்லேப்பா. நீ அப்பாவிடம் சொல்லி தாத்தாவிற்கு பிள்ளையார்புரம் போவதற்கு அடுத்த திங்கட்கிழமை ரயில் டிக்கட் ஒண்ணு எடுத்துவரச் சொல்றியா?"

"சரி தாத்தா. ஆமாம், உங்களுக்கு அந்தப் பிள்ளையார் புரத்திலே யார் இருக்கிறாங்க தாத்தா?"

'என் இளமைக்காலம்' சொல்ல நினைத்தவர், இவனுக்கு விவரம் புரியாது என்று எண்ணி "நம்மோட சொந்தக்காரங்க எல்லாம் அங்கே இருக்கிறாங்கப்பா" என்றார்.

"நானும் வரட்டுமா, தாத்தா?"

"உனக்கு ஸ்கூலுக்குப் போகணுமே."

"சரி தாத்தா. நான் உங்களுக்கு ரயில் டிக்கட் எடுத்துக்கிட்டு வரச் சொல்றேன்" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான் சங்கர்.

மறுபடியும் இளமைக்கால வாழ்க்கைக்கு அவர் மனம் தாவியது.

சாயங்காலம் அவர் மகனும் பேரன் சங்கரும் பிள்ளையார்புரம் டிக்கட்டோடு வந்தபோது நாற்காலியிலிருந்து அவர் எழுந்திருக்கவே இல்லை.

இரஜகை நிலவன்,
டொம்பிவிலி, மும்பை

© TamilOnline.com