மதுரை காந்தி
(நாட்டாண்மை மல்லி ராயலு சுப்பராமன்‌ என்னும் நா.ம.ரா. சுப்பராமன் மதுரையில் பிறந்து வளர்ந்தவர். சௌராஷ்டிர சமூகத்தைச் சேர்ந்தவர். இளவயது முதலே காங்கிரஸ் இயக்கத்தின்மீதும் காந்திமீதும் மிகுந்த பற்றுக்கொண்டு செயல்பட்டவர். சுதந்திரப் போராட்ட வீரர். ஹரிஜனங்களின் முன்னேற்றத்திற்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர். 'மதுரை காந்தி' என்றும், 'மதுரை ஐயா' என்றும் மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர். அவரது வாழ்க்கை வரலாற்றிலிருந்து சில துளிகள்....)

சமுதாய அந்தஸ்திலும்‌ பொருளாதார நிலையிலும்‌ தாழ்த்தப்பட்ட மக்களான அரிஜனங்களின்‌ மேம்பாட்டுக்காக அர்ப்பணித்துக்‌ கொண்ட ஒரு. சிலருள்‌ ஐயா (மதுரை காந்தி நா.ம.ரா. சுப்பராமன்) அவர்கள்‌ குறிப்‌பிடத்‌தக்கவர்‌.

காங்கிரஸ்‌ மேற்கொள்ள வேண்டும்‌ என்று காந்தியடிகள்‌ அளித்த நிர்மாணத்‌ திட்டங்களில்‌ ஒன்று அரிஜன முன்னேற்றப்‌ பணி. மதுரையில்‌ இதில்‌ தீவிர அக்கறை காட்டியவர்கள்‌ இரு பெரியார்கள்‌. அவர்களில்‌ ஒருவர்‌ ஸ்ரீ வைத்தியநாதையர்‌. மற்றவர்‌ ஐயா அவர்கள்‌. இத்‌திட்டத்தை மேற்கொள்ளுமாறு காந்தியடிகள்‌ கேட்டுக்‌ கொண்டவுடனே இவ்விருவரும்‌ அதனை ஏற்றுச் செயல்‌படத்‌ தொடங்கிவிட்டனர்‌. அதனையடுத்து 1932ல்‌ காந்தியடிகள்‌ அகில, இந்திய அரிஜன சேவா சங்கத்தைத் தோற்றுவித்தபோது, தமிழ்நாடு சங்கத்துக்கு ஸ்ரீ வைத்தியநாதையர்‌ பொறுப்பேற்றார்‌. மதுரை மாவட்டத்துக்கு ஐயா அவர்கள் பொறுப்பேற்றார்‌. இவ்விரு பெரியார்களும்‌ தமிழ்‌நாட்டில்‌ இத்துறையில்‌ ஒரு சரித்திரமே படைத்துவிட்டார்கள்.

அரிஜன மக்கள்‌ சமுதாய, பொருளாதார மேம்பாடு அடைய வேண்டுமானால்‌ அவர்களுக்கு முதலாவது விழிப்‌புணர்வு ஏற்பட வேண்டும்‌. இதற்குக்‌ கருவி கல்வி. ஆகவே ஐயா, அவர்‌களுக்குக்‌ கல்‌விபெறும்‌ வாய்ப்பளிக்க விரும்பினார்‌. அக்காலத்தில்‌ அவர்களைப்‌ பள்ளியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்‌ என்ற கட்டாயம்‌ இல்லை அவ்வாறு சேர்த்துக்‌ கொள்ள முன்வந்தாலும்‌ அரிஜனப்‌ பெற்றோர்‌ குழந்தைகளைப்‌ பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள்‌. அரிஜனங்களுக்குப்‌ படிப்பு எதற்கு என்று அவர்களே கூறிவிடுவார்கள்‌. தங்கள்‌ குழந்தைகள்‌ படித்தால்‌ தங்கள்‌ குலதெய்வத்துக்கு ஆகாது என்றும்‌ அவர்களில்‌ பலர்‌ எண்ணினார்கள்‌. அத்தனை பாமரத்தனம்‌ அவர்களைப் பற்றிக்‌ கொண்டிருந்தது. இந்‌நிலையில்‌ குழந்தைகளைப்‌ பள்ளிக்கு அனுப்பத் துண்டுவதே பிரச்சனையாக இருந்தது.

அரிஜனக்‌ குழந்தைகள்‌ படிப்பதற்கு ஓரிடம்‌ அமைப்பதில்‌ ஐயா‌ ஈடுபட்டார்‌. மேல்ஜாதி மக்கள்‌ வாழும்‌ பகுதிகளில்‌ பள்ளி அமைக்க அனுமதி கிடைக்காது. அவ்வாறு அமைத்தாலும்‌ அரிஜனக்‌ குழந்தைகள்‌ அங்கு வர‌ மாட்டார்கள்‌. ஆகவே வைகை ஆற்றின்‌ வடகரையில்‌ கைவிடப்பட்டுக்‌ கிடந்த ஒரு மண்டபத்தை ஐயா தேர்வு செய்தார்‌. ஆற்றுக்கு வடக்கே அக்காலத்தில்‌ வீடுகள்‌ கிடையாது. மக்கள்‌ நடமாட்டமும்‌ அதிகமிராது. அரிஜன மக்கள்‌ அங்கு குடிசைகளில்‌ வசித்து வந்தார்கள்‌. அருகே அந்த மண்டபம்‌ இருந்தது நல்லதாயிற்று. அம்மண்டபத்தில்‌ நிர்மாணத்‌ திட்டத்தில்‌ ஈடுபாடுடைய சில தொண்டர்களின்‌ உதவியோடு ஐயா பள்ளி நடத்த ஏற்பாடு செய்தார்‌.

பள்ளியை அமைத்துவிட்டால்‌ போதுமா? பிள்ளைகள்‌ வரவேண்டுமே. இதற்காக அவர்‌ அரிஜனங்‌கள்‌ வாழுகிற சேரி சேரியாகப் போக வேண்டியிருந்தது.

குழந்தைகள்‌ படிக்க வேண்டியதன்‌ அவசியத்தை அவர்‌களுக்கு விளக்கிக்‌ கூற வேண்டியிருந்தது. இவ்வாறு நாள்தோறும்‌ சென்று திரும்பத்‌ திரும்பக்‌ கூறி மன்றாடிய பின்னர்‌ சில பெற்றோர்கள்‌‌ பிள்ளைகளைப்‌ பள்‌ளிக்கு அனுப்பச்‌ சம்மதித்தார்கள்‌. அக்குழந்தைகளை வைகை ஆற்றில்‌ குளிக்கச்‌ செய்து, அவர்களுக்கு கதர்‌ ஆடை அணிவித்து மண்டபத்துப் பள்ளியில்‌ கல்வி கற்பிக்கும்‌ பணி தொடங்கிற்று. குழந்தைகளுக்கு அங்கேயே மதிய உணவு அளிக்கப்பட்டது. தேவையான உணவு, உடை, புத்தகம்‌, சிலேட்டு போன்றவற்றை ஐயா சொந்தச் செலவில் ஏற்பாடு செய்தார்‌. தமிழ்நாடு அரிஜன சேவா சங்கம்‌ உருவான பின்னர்‌ ஆசிரியர்களுக்கு ஊதியம்‌ அளிக்கும்‌ பொறுப்பை அது ஏற்றுக்கொண்டது.

குழந்தைகளுக்குக்‌ கல்வி போதித்தால்‌ போதாது. அவர்களுடைய பெற்றோர்களுக்கும்‌ கல்வி அளிக்க வேண்டிய அவசியத்தை அனுபவத்தில்‌ ஐயா கண்டறிந்தார்‌. பள்ளியிலிருந்து சுத்தமாக வீடு திரும்‌பும்‌ குழந்தைகள்‌ மறுநாள்‌ பள்ளிக்கு மீண்டும்‌ அழுக்கில்‌ தோய்ந்து திரும்பி வந்தனர்‌, காரணம்‌ வீட்டுச்‌ சூழல் அவ்வாறு இருந்‌தது. அதைவிடப்‌ பரிதாபம்‌ என்னவெனில்‌ அவ்வாறு இருப்பது குறித்து அவர்களில்‌ யாரும்‌ கவலைப் படாததாகும்‌. ஆகவே, குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதைப்‌ போல்‌ பெற்றோர்க்கும்‌ விழிப்புணர்வு அளிக்க வேண்டுவதன்‌ அவசியத்தை ஐயா‌ உணர்ந்தார்‌.

ஆகவே அன்றுமுதல்‌ இரவு நேரத்தில்‌ நிர்மாண ஊழியர்கள்‌ சிலருடன்‌ சேரிகளுக்குச்‌ சென்று அரிக்கேன்‌ லாந்தர்‌ வெளிச்சத்தில்‌ அச்சேரியில் இருந்த பெற்றோர்களை அழைத்து, வீட்டையும்‌ சுற்றுப்புறத்தையும்‌ சுத்தமாக வைத்துக்‌ கொள்வதன்‌ அவசியத்தையும்‌, நாட்டு நடப்பையும்‌ விளக்கிக்கூற ஏற்பாடு செய்யப்‌பட்டது. பெற்றோர்களில்‌ பெரும்பாலோர்‌ நகரசுத்தித்‌ தொழிலாளிகள்‌. அவர்கள்‌ நகர மக்களின்‌ சுகாதாரத்‌துக்குப்‌ பொறுப்பாளிகள்‌, ஆனால்‌ தங்களது சுகாதாரம்‌ இன்னதென அறியாதிருந்தார்கள்‌. இதற்குக்‌ காரணம்‌, அவர்களின்‌ வறுமையைவிட அறியாமை என்பதை ஐயா அவர்கள்‌ அனுபவத்தில் கண்டார். அவர்‌களிடம்‌ மண்டிக்கிடந்த‌ வறுமையோடு அறியாமையையும்‌ போக்கச் செயல்திட்டங்கள்‌ வகுத்தார்‌. அப்போது அவர்‌ நகராட்சித் தலைவராக இருக்கவில்லை என்பதை மனதிற்‌ கொண்டு. இதனைப்‌ பார்க்க வேண்டும்‌.

சேரிகளைச்‌ சுத்தமாக வைத்திருக்குமாறு வாய்மொழியாகச்‌ சொன்னால்‌ போதாது என்று அறிந்து அவர்‌ காங்கிரஸ்‌ தொண்டர்களுடன்‌ வாரம்‌ ஒருமுறை அங்கு சென்று துப்புரவு செய்யும்‌ திட்டத்தைச் செயலாற்றத்‌ தொடங்கினார்‌. நாளாவட்டத்‌தில்‌ குடிசைவாழ்‌ மக்களும்‌ தொண்டர்களோடு சேர்ந்து செயல்பட்டனர்‌. படிப்படியாக தங்கள்‌ சேரிகளைச்‌ சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்‌ என்ற உணர்வு அவர்களுக்கு ஏற்பட்டது. அதைத்‌ தொடர்ந்து குழந்தைகள்‌ புழுதியிலும்‌ சாக்கடை நீரிலும்‌ புரளும்‌போது அதைக்‌ கண்டிக்கும்‌ எண்ணமும்‌ தோன்றிற்று. இவ்வாறு குழந்தைகள்‌ முன்னைவிட இப்பொழுது சுத்தமாகப் பள்ளிக்கு வரத் தொடங்கினர்‌. இந்நிலை ஓரிரு வாரங்களில்‌ வந்துவிட்டதாகக்‌ கருதவேண்டாம்‌. இதற்‌குப்‌ பல மாதங்கள், பல ஆண்டுகளும்கூட தொடர்ந்து ஐயா அவர்களும்‌, தொண்டர்‌களும்‌ கண்காணிக்‌கவும்‌ கல்வியளிக்கவும்‌ வேண்‌டியிருந்தது.

ஐயாவும்‌ தொண்டர்களும்‌ ஆற்றிவந்த இப்பணி நாளுக்கு நாள்‌ விரிவடைந்தது. உண்மை உணர்வுடன்‌ செய்யும்‌ பணிகளுக்கு தெய்வம்‌ முன்வந்து உதவும்‌ என்பது வள்ளுவர்‌ வாக்கு. ஐயா அவர்களின்‌ அரிஜன முன்னேற்றப்‌ பணிக்கு காங்கிரஸ்காரார்களின்‌ ஆதரவு பெருகிற்று. நல்ல மனம்‌ படைத்த பிரமுகர்கள்‌ பலர்‌ பொருளுதவி செய்ய முன்வந்தனர்‌. தக்க சமயத்தில்‌ நிறுவப்பெற்ற தமிழ்நாடு அரிஜன சேவா சங்கத்தின்‌ தலைவர்‌ ஸ்ரீ வைத்தியநாதையர்‌, ஐயா அவர்களின்‌ சேவைக்கு உறுதுணையாக இருந்தார்‌.

ஆற்றங்‌கரையில் இருந்த பள்ளியை விரிவாக்கம்‌ செய்ய அவர்‌ முன்வந்தார்‌. அரிஜன சேவா சங்கத்தின்‌ மூலமாகக்‌ கிடைத்ததுபோக பற்றாக்‌குறைக்குத்‌ தம்‌ கையிலிருந்தும்‌ அவர் நிதி‌ உதவினார்‌. அத்துடன்‌ காங்கிரஸ்‌ தொண்டர்கள்‌ தெருத்தெருவாக மதுரையில்‌ அரிஜன நிதி வசூலித்தனர்‌. கடைத்தெருக்களில்‌ பண்டங்களாகவும்‌ சேகரித்தனர்‌ உணவுப்‌ பண்டங்களும்‌, துணிகளும்‌, பள்ளிக்குத்‌ தேவையான உபகரணங்களும்‌ வந்து குவிந்தன.

அரிஜனங்கள்‌ சமுதாயத்தில்,‌ நகரசுத்தித்‌ தொழிலாளிகள்‌ மிகவும் தாழ்த்தப்பட்டவர்கள்‌ எனலாம்‌. ஐயா அவர்‌கள்‌ தலைவராக இருந்த காலத்தில்‌ இவர்களோடு நெருங்கிப்‌ பழகும்‌ வாய்ப்பு ஐயாவுக்குக்‌ கிடைத்‌தது. அவர்களின்‌ பரிதாப நிலை கண்டு‌ மிகவும்‌ வருந்தினார்‌. அவர்களுக்குக்‌ கிடைக்கும்‌ ஊதியம்‌ மிகக்குறைவு. அதையும்‌ அவர்கள்‌ மது அருந்துவதில்‌ விரயப்‌படுத்தினர்‌. அதிக வட்டிக்குக்‌ கடன்‌ வாங்கக்‌ கூசமாட்டார்கள்‌. சம்பளம்‌ வாங்கும்‌ நாளன்று வட்டிக்குக்‌ கொடுத்தவர்கள்‌ அங்கு காத்திருந்து கடனும்‌ வட்டியுமாக வசூல்‌ செய்துவிடுவார்கள்‌. அதேகமாக அன்று இவர்கள்‌ கைகளில்‌ எதுவும்‌ மிஞ்சாது. ஆகவே மீண்டும்‌ வட்டிக்குக்‌ கடன்‌ வாங்குவார்கள் . இவ்வாறு அவர்கள்‌ வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துவதிலேயே‌ ஊதியத்தில்‌ பாதிக்குமேல் பறிகொடுத்து விடுவார்கள்‌.

இந்நிலையைக்‌ கண்ட ஜயா அவர்களுடைய ஊதியத்‌தைப்‌ பணமாக அளிக்காமல்‌ அத்‌தியாவசியத் தேவைகளான உணவு, உடை போன்ற பண்டங்களாகக் கொடுக்க ஏற்பாடு செய்தார்‌. இதற்கெனத்‌ தனியான பண்டகசாலை திறக்கப்பட்‌டது. தரமான பண்டங்‌கள்‌ சலுகை விலையில்‌ அவர்‌களுக்கு விற்கப்பட்டன. வட்டியில்லாக்‌ கடன்‌ வழங்கவும்‌ ஏற்‌பாடு செய்யப்பட்டது. இதன்‌மூலம்‌ மது அருந்துவதும்‌ அதிக‌ வட்டிக்குக்‌ கடன்‌ வாங்குவதும்‌ கட்டுப்படுத்‌தப்‌பட்டன.

துப்புரவுத்‌ தொழிலாளர்களுக்குக்‌ குடியிருப்பு கட்டித்‌தரும்‌ திட்டம்‌ உருவாயிற்று, இப்படி ஒரு திட்டம்‌ அக்‌காலத்தில்‌ மதுரை நகராட்சியில்தான்‌ முதலில் தொடங்கப் பெற்றது எனலாம்‌. அப்போது அதற்கென்று ஒரு லட்ச‌ ரூபாயை‌ நகராட்சி ஒதுக்கிற்று. 1938ல்‌ அதனைக்கொண்டு 400 வீடுகள்‌ கட்டப்பட்டு, துப்புரவுத் தொழிலாளர்கள்‌ குடியமர்த்தப் பெற்றனர்‌. அடுத்து ஓவ்வோர் ஆண்டும்‌ நகரத்தின்‌ பல்வேறு பகுதிகளில்‌ குடியிருப்புகள்‌ கட்டித்‌ தரப்பட்டன, அப்பகுதிகளில்‌ இரவு நேரங்களில்‌ முதியோர்‌ கல்வி மையங்கள்‌ இயங்கவும் ஐயா ஏற்பாடு செய்தார்‌. பொதுப்பணியில்‌ ஆர்வமுள்ள கல்லூரி மாணவர்கள்‌ மற்றும்‌ படித்த இளைஞர்களின்‌ சேவையை அவர்‌ ஒருங்கிணைத்துப்‌ பயன்படுத்தினார்‌. அக்குடியிருப்புகளில்‌ பன்றிகள்‌ வளர்க்கத் தடை விதிக்கப்பட்டது. குடியிருப்புப்‌ பகுதிகள்‌ சுத்‌தமாக வைக்கப்பட்டுள்ளனவா என்பதைக்‌ கண்காணிக்க‌ ஏற்பாடு இருந்தது. ஐயா அவர்களே அவ்வப்போது குடியிருப்புகளுக்கு நேரில்‌ சென்று பார்த்து அவர்‌களோடு கலந்துரையாடுவார்‌. இதில்‌ அவருக்கு ஆன்ம திருப்தியும்‌ மகிழ்ச்சியும் இருந்தன.

(நன்றி: பா.சி. சந்திரபிரபு எழுதிய மதுரை காந்தி நா.ம.ரா. சுப்பராமன் வாழ்க்கை வரலாற்று நூல், வெளியீடு: காந்திய இலக்கியச் சங்கம், மதுரை-625020)

அரவிந்த்

© TamilOnline.com