அட்லாண்டா: மதுரை மண்ணின் மைந்தர் அரவிந்த் கிருஷ்ணசாமிக்குப் பாராட்டு விழா
திரு அரவிந்த் கிருஷ்ணசாமி ஒரு புதிய நடமாடும் கண் அறுவை சிகிச்சை வாகனம் (Mobile Eye Surgery Unit-MESU) மற்றும் 12 'கிராம தத்தெடுப்பு' (Adopt-A-Village) கண் மருத்துவ முகாம்களுக்காக $5,55,000 நிதியுதவி வழங்கியுள்ளார்.

சங்கர நேத்ராலயா (USA) அமைப்பின் அட்லாண்டா கிளை, ஏப்ரல் 12, 2026 அன்று க்ரௌன் ப்ளாஸாவில் (Crowne Plaza Atlanta NE – Norcross) ஒரு "சந்திப்போம் பாராட்டுவோம்" நிகழ்வை நடத்தியது. Medlytix LLC-யின் தலைமை நிர்வாக அதிகாரியான திரு அரவிந்த் கிருஷ்ணசாமி, அமைப்பின் ஆலோசகர் குழுவில் புதிய உறுப்பினராக வரவேற்கப்பட்டார்.

மதுரை மாநகரில் பிறந்த திரு அரவிந்த் கிருஷ்ணசாமியின் வாழ்க்கை, ஓர் அரிய, அகில இந்திய பரிமாணத்தைப் பிரதிபலிக்கிறது. தனது ஆளுமை உருவாகும் காலகட்டத்தை பல்வேறு பகுதிகளில் கழித்தார். முதலில் பெங்களூரிலும், பின்னர் புது தில்லியிலும் வசித்த அவர், அப்பகுதிகளில் நிலவிய மொழி, கலாச்சாரப் பன்முகத்தன்மையை உள்வாங்கிக்கொண்டார். இந்த ஆரம்பகாலத் தொடர்பு அவருக்கு விரிவான கண்ணோட்டத்தையும், மாறுபட்ட சமூக, தொழில்முறைச் சூழல்களைக் கையாளும் திறனையும் வழங்கியது. பின்னர், குஜராத்தில் உள்ள REC சூரத் (தற்போது NIT, சூரத்) கல்வி நிறுவனத்தில் மின் பொறியியலில் தனது இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார்.

டாலஸில் உள்ள சதர்ன் மெதடிஸ்ட் பல்கலைக்கழகத்தில் (SMU), அவர் மின் பொறியியலில் M.S. பட்டம் பெற்றார். மேலும் MBA படிப்பு, தொழில்நுட்ப ஆழத்தையும் வணிக உத்திகளையும் ஒருங்கிணைக்கும் தொழில் வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்தது. பிரசாத் ரெட்டி கட்டம்ரெட்டியுடன் இணைந்து, அரவிந்த் 'அரை மில்லியன் டாலர் கிளப்பில்' (half-a-million-dollar club) இணைந்தது பெருமைமிக்க தருணம். இது ஈகைசார்ந்த தலைமைத்துவத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்.



இந்த அருமையான நிகழ்ச்சியில் ஜார்ஜியா மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து 250-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

சங்கர நேத்ராலயா (USA) அமைப்பின் சார்பாக புரவலர்கள் திரு சங்கர் சுப்ரமணியன், பத்மபூஷண் டாக்டர் ஜகதீஷ் ஷேத் ஆகியோர் அரவிந்த் கிருஷ்ணசாமியை 'பிராண்ட் அம்பாசிடராக' கௌரவித்தனர்.

நிகழ்வு பாரம்பரியமான விளக்கேற்றும் வைபவத்துடன் தொடங்கியது. அமைப்பின் தலைவர் பாலாரெட்டி இந்துர்த்தி தலைமையில், பத்மபூஷண் விருது பெற்ற டாக்டர் ஜகதீஷ் ஷேத், பெரும் நன்கொடையாளர்கள் மற்றும் பிராண்ட் அம்பாசிடர்களான திரு சங்கர் சுப்ரமணியன், திரு அரவிந்த் கிருஷ்ணசாமி, திருமதி ஜெயா கிருஷ்ணசாமி, டாக்டர் கிஷோர் சிவுகுலா (ஆலோசகர் குழு உறுப்பினர்), பொருளாளர் மூர்த்தி ரேகப்பள்ளி, JC சேகர் ரெட்டி, அறங்காவலர் குழு உறுப்பினர்களான டாக்டர் ரெட்டி உரிமிண்டி, மேஹர் லங்கா, கலாச்சாரப் பிரிவுத் தலைவர் நீலிமா கடடமானுகு, கிளைத் துணைத் தலைவர் வெங்கீ நீலம் மற்றும் அட்லாண்டா SN குழுவின் பிற அர்ப்பணிப்புள்ள உறுப்பினர்கள் ஆகியோர் விளக்கேற்றினர்.

பட்டாச்சார்யர் ஸ்ரீ நரசிம்மாச்சார்யுலுவின் புனித முன்னிலையில் நடைபெற்ற இவ்வைபவம், இந்நிகழ்வு அர்த்தமுள்ளதாகவும் வெற்றிகரமானதாகவும் அமைய எல்லாம்வல்ல இறைவனின் ஆசியை வேண்டித் தொடங்கப்பட்டது.

மாலை நிகழ்வில், அட்லாண்டாவின் நான்கு முன்னணி செவ்வியல் நடன மற்றும் இசைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களின் துடிப்பான கலாச்சார நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. சுஸ்வரா சங்கீத வித்யாலயாவின் சாந்தி மேடிசெர்லா, பாரத் தர்ஷன் இந்திய நடன இசைப் பள்ளியின் சௌஜன்யா மதுசூதன், கேலக்ஸியா அகாடமியின் மித்தல் படேல், நடராஜா நாட்யாஞ்சலி குச்சிபுடி நடன அகாடமியின் நீலிமா கடடமானுகு ஆகியோர் தங்கள் குழுவினருடன் நிகழ்ச்சிகளை வழங்கினர்.

இந்தியாவின் பிரபல பின்னணிப் பாடகர் ராமு (சென்னை) வழங்கிய சிறப்பு நிகழ்ச்சி இடம்பெற்றது; அவரது குரல்வளமும், மேடையில் வெளிப்படுத்திய வசீகரமான ஆளுமையும் உற்சாகமான கைதட்டல்களைப் பெற்றுத் தந்தன. ராமு, உள்ளூர்த் திறமிக்க பாடகர்கள் ஷில்பா உப்புலூரி (இவர் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் செயல்பட்டார்), ஃபானி டோக்கா, ராம் துர்வாசலா, உஷா மோச்சர்லா, சாந்தி மேடிசெர்லா மற்றும் அட்லாண்டாவைச் சேர்ந்த ராக வாஹினி ஆகியோருடன் இணைந்து, புகழ்பெற்ற திரைப்படப் பாடல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தி, தமிழ் மற்றும் தெலுங்குப் பாடல்களைப் பாடி, மாலைப் பொழுதுக்கு இனிமை சேர்த்தார்.

அரவிந்த் கிருஷ்ணசாமி குறித்த காணொளி (AV) திரையிடப்பட்டபோது, அவர் வழங்கிய 5,55,000 டாலர் எனும் மகத்தான பங்களிப்பைப் பாராட்டி, பார்வையாளர்கள் பலத்த கைதட்டலுடன் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். 12 கண் மருத்துவ முகாம்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், அரவிந்த் 1,55,000 டாலர் நிதியளித்துள்ளதாகத் தலைவர் பாலா இந்துர்த்தி தெரிவித்தார். இவற்றில் மூன்று முகாம்கள் ஏற்கனவே ஜார்கண்ட், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. நான்காவது முகாம் நெல்லூர் (ஆந்திரப் பிரதேசம்) மாவட்டத்தின் அனுமாசமுத்திரம் பேட்டையில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. எஞ்சிய எட்டு முகாம்களும் அடுத்த ஓரிரு ஆண்டுகளுக்குள் நடத்தப்படும். அரவிந்த் உறுதியளித்துள்ள $4,00,000 நிதி, இந்தியாவின் மருத்துவ வசதி குறைவாக உள்ள பின்தங்கிய பகுதி ஒன்றில், ஒரு புதிய MESU மையம் நிறுவுவதற்குப் பயன்படுத்தப்படும்.

மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் இதற்கானஇடங்களை அடையாளம் காணும் பணியில், சங்கர நேத்ராலயா (இந்தியா) தலைவர் டாக்டர் கிரிஷ் ராவ் அவர்களுடன் பாலா இணைந்து செயல்பட்டு வருகிறார்.

டாலஸைச் சேர்ந்த அறங்காவலர் குழு உறுப்பினரும், SMU-வில் அரவிந்த் கிருஷ்ணசாமியுடன் பயின்ற முன்னாள் வகுப்புத் தோழருமான டாக்டர் ரெட்டி உரிமிண்டி, அரவிந்தை 'சங்கர நேத்ராலயா USA' அமைப்புக்கு அறிமுகப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றினார். இதற்கென டாலஸிலிருந்து வருகை தந்த டாக்டர் உரிமிண்டிக்கு தலைவர் பாலா இந்துர்த்தி நன்றி தெரிவித்தார்.

நிகழ்வின் வெற்றிக்குப் பங்களித்த நன்கொடையாளர்கள், தன்னார்வலர்கள், கலாச்சார அமைப்புகள், சமூக ஆதரவாளர்களுக்கு பாலா இந்துர்த்தி நன்றி தெரிவித்தார்.

நிகழ்வின் புகைப்படங்களைப் பார்க்க: sankaranethralayausa.org
மேலும் தகவல்களுக்கும், நன்கொடை அளிக்கவும்: www.sankaranethralayausa.org
கட்டணமில்லாத் தொலைபேசி: (855) 463-8472

வரிவிலக்கு பெறக்கூடிய நன்கொடையை (வரிவிலக்கு அடையாள எண்: 52-1611548) பின்வரும் முகவரிக்கு அஞ்சல் வழி அனுப்பலாம்:
Sankara Nethralaya USA, 7238 Muncaster Mill Rd, No. 522, Derwood, MD 20855

USA யூட்யூப் சேனல்: youtube.com

அரவிந்த் கிருஷ்ணசுவாமி குறித்த காணொளி:


MESU 'கிராம தத்தெடுப்புத் திட்டம்' (Adopt-A-Village) குறித்த காணொளி:


தகவல்: முனைவர் அ.போ. இருங்கோவேள்,
சங்கர நேத்ராலயா, சென்னை

© TamilOnline.com