குவான்டம் கணினியின் குழப்பம்! (பாகம்-20)
முன்கதை: சிலிக்கான் மின்வில்லைத் தொழில்நுட்ப நிபுணர் சூர்யாவின் துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு உதவியை நாடவே, அவர் முழுநேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் துப்பறியும் தொழிலில் மிக ஆர்வம் கொண்டு அவருக்கு உதவுகின்றனர். கிரண், வேகமான, தமாஷான இளைஞன்! தொழில் பங்கு வர்த்தகமானாலும், சூர்யாவுடனேயே நிறைய நேரம் செலவிடுகிறான். ஷாலினி ஸ்டான்ஃபோர்ட் மருத்துவ மனையில் மருத்துவராகவும், உயிரியல் மருத்துவ நுட்ப (bio-med tech) ஆராய்ச்சி நிபுணராகவும் பணி புரிபவள். மூவரும் சேர்ந்து துப்பறிந்து பலரின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்துள்ளனர்.

இதுவரை: ஷாலினிக்குப் பரிச்சயமான பெண்மணி மேரி தன் குவான்டம் ஒளிக்கணினி (Quantum optical computer) தொழில்நுட்ப நிறுவனம் திடீரென ஒரு பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி, கிரண், சூர்யா மூவரும் பெர்க்கலி, கலிஃபோர்னியாவில் உள்ள மேரியின் ஆராய்ச்சிக் கூடத்துக்கு விரைகின்றனர். மேரி குவான்டம் கணினி எப்படி வேலை செய்கிறது, அதன் இடையூறுகள் என்னென்ன, அவற்றைத் தங்களுடைய தனிச்சிறப்பு நுட்பங்களால் எப்படி நிவர்த்தித்தனர் என்பதை விவரித்தாள். ஆனால் நுட்பங்களை நன்கு அறிந்த உள்நபர் உதவியால் நுட்ப வன்பொருட்கள் திருடப்பட்டன என்றாள். மேலாண்மைக் குழுவினரை விசாரித்து வரும் சூர்யா, குவான்டம் கணினியின் குழப்பத்தை எப்படி நிவர்த்திக்கிறார் என்பதைப் பார்ப்போம் வாருங்கள்!

குவான்டம் கலையலால் (decoherence) உயர்வு போய் சில முறை குறைவாகிவிட வாய்ப்புள்ளதாக மேரி கூறிவிட்டு, தங்களின் நுட்பத்தின் தனிச்சிறப்புக்களில் ஒன்று மிக தனித்துவமுள்ள அபூர்வ பூமிக் கலவையால் க்யூபிட்கள் உருவாக்குவதால் கலையல் குறைகிறது என்றும் கணினிக்குள்ளேயே வயலட் நிற லேஸர் கதிரை மிகக் குறைந்த சக்தியில் மிக அதிக வேகத்தில் தகவல் துளிகளை நகர்த்துவது மற்றொரு தனிச்சிறப்பு என்றும் கூறினாள். கடந்த இரண்டு வாரங்களாக அந்தத் தனிச்சிறப்பு நுட்பங்கள் ஏன் சரியாகப் பலனளிக்கவில்லை என்று நிறுவன நுட்ப நிபுணர்கள் ஆராய்ந்து கொண்டிருந்த போது, முந்தைய தினம் திடீரெனத் திருட்டு நடந்து விட்டதால் ஷாலினிக்கு அவசரச் செய்தி அனுப்பியதாக மேரி விளக்கினாள்.

சூர்யா, மேரியின் மேலாண்மைக் குழுவினரை ஒவ்வொருவராகச் சந்தித்து விசாரித்து விட்டு பிரச்சனைக்கு நிவாரணம் நெருங்கிவிட்டது, அதற்காக மேலாண்மைக் குழுவைக் கூட்ட வேண்டும் என்று கூறியதும், மேரி பெரும் உற்சாகத்துடன் கூவினாள்! "என்ன நிவாரணம் நெருங்கிடுச்சா? பிரமாதம்! இப்பவே குழுவைக் கூட்டறேன். வாங்க எங்க போர்டு அறை பக்கத்துலதான் இருக்கு, அங்க எல்லாரையும் வரவழைக்கிறேன்."

சூர்யா, கிரண், ஷாலினி மூவருடன் மேரி மற்றும் அவளது மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் போர்டு அறையில் அமர்ந்தனர்.

சூர்யா மேஜையின் ஒரு கடைசியில் நின்றுகொண்டு அனைவர் முகங்களையும் நோட்டமிட்டுவிட்டுப் பேச ஆரம்பித்தார். "இந்தத் திருட்டு உள்நபர் ஒருவர் உதவியோடுதான் நடந்திருக்கணும்னு கணிச்சுத்தான் மேரி போலீஸ்கிட்ட போகாம எங்களை வரவழைச்சாங்க. ஆனா கிடைச்ச தடயங்களையெல்லாம் சேர்த்து பாக்கறப்போ அது தவறான கணிப்புன்னு தோணுது."

மேரி பரபரப்புடன், "அப்படியா? ரொம்ப நல்லதாச்சே! உள்நபர் உதவியில்லையா? வெளியாட்கள் வேலையா? அப்போ போலீஸைக் கூப்பிடலாமா?" என்றாள்.

சூர்யா மெல்லத் தலையசைத்து மறுதலித்தார். "நீங்க மீண்டும் தவறான முடிவுக்கு வந்துட்டீங்க மேரி. நான் சொன்னதுக்கு அர்த்தம் நேர்மாறானது!"

மேரி குழம்பினாள்! "புரியலையே சூர்யா! ரெண்டும் இல்லைன்னா வேற என்ன சாத்தியம்?"

சூர்யா விளக்க ஆரம்பித்தார். "ஷெர்லாக் ஹோம்ஸ் கதை ஒண்ணுல, நாய் ஏன் குரைக்கலைன்னு சந்தேகிக்கிறார். அதிலிருந்து, குற்றம் செஞ்சவரை அந்த நாய்க்கு நல்லாத் தெரிஞ்சிருக்கணும்னு யூகிக்கிறார். அதே மாதிரிதான் இங்கயும் நடந்திருக்கு."

பீட்டர் இளக்காரமாக நகைத்தார். "நீங்க என்ன பெரிய ஷெர்லாக் ஹோம்ஸோ? அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம். எங்க நேரத்தை ஏன் வீணாக்கறீங்க!"

சூர்யா அவர் இளக்காரத்தை கண்டுகொள்ளாமல் தொடர்ந்தார். "சம்பந்தம் இருக்கு பீட்டர்! இந்தப் பிரச்சனையில் அந்த நாய்க்கு ஈடானது உங்க பாதுகாப்புப் பதிவேடுகள். அது குலைக்காததுக்கு ஈடு, அந்தப் பதிவேடுகளில் வெளியிலிருந்து யாரும் நுழைந்த நிகழ்வு பத்தி எந்தக் குறிப்பும் இல்லாதது."

மேரி குழப்பத்துடன் கேட்டாள். "அதிலிருந்து நீங்க யூகிக்கிறது என்ன?"

சூர்யா தொடர்ந்தார். "முதல்ல நான் யாரோ பாதுகாப்பு சாதனத்தை மாற்றி அபாய மணி தற்காலிகமா இயங்காமல் செஞ்சு வெளியாட்களை உள்நுழைய உதவியிருக்காங்கன்னு நினைச்சேன்."

லூயிஸ் குறுக்கிட்டார். "அதைத்தான் நாம் ஏற்கனவே பேசி அலசியாச்சே? அதுக்கும் நீங்க சொன்ன ஹோம்ஸ் கதைக்கும் என்ன சம்பந்தம்?"

சூர்யா தொடர்ந்தார். "ஹோம்ஸ் கதைப்படியான என் யூகம் என்னன்னா, பாதுகாப்பு பதிவுகளில ஏன் உள்நிழைவு பத்திய குறிப்பு எதுவுமே இல்லைன்னா, அது நடக்கவேயில்லை, வெளியார் யாரும் உள்ள நுழையவே இல்லங்கறதுதான்!"

மேரிக்குப் புரிய ஆரம்பித்தது. "ஓ! அப்படின்னா வெளி ஆள் யாருக்கும் உள்நபர் யாரும் உதவி செய்யலை...."

சூர்யா தலையாட்டி ஆமோதித்து விட்டுத் தொடர்ந்து விளக்கினார்.

"ஆமாம் நீங்க இப்ப புரிஞ்சுகிட்டதுதான் சரி! உள்நபர் உதவியுடன் வெளிநபர் திருட்டு இல்லை. யாரோ உள்நபர் மட்டுமே நடத்தியுள்ள கபட நாடகம்! அந்த உள்நபர் இந்த அறையில்தான் இருக்க வேண்டும்!"

மேரியைத் தவிர மேலாண்மைக் குழுவினர் அனைவரும் ஒரேயடியாக எழுந்து உரத்த குரலில் சூர்யாவின் மேல சீறினர்!

மேரி கை தூக்கிக் காட்டி "எல்லாரும் உட்காருங்க. சூர்யா நீங்க சொல்றதைக் கேட்டா என்னைக்கூடச் சந்தேகிக்கறீங்க போலிருக்கு!"

சூர்யா ஆமோதித்தார். "உங்க மேலயும் ஆரம்பத்துல சந்தேகந்தான்! எதாவது இன்ஷ்யூரன்ஸ் விஷயமா பொய்த்திருட்டு நடத்தியிருக்கலாம்னு முதல்ல நினைச்சேன். ஆனா உங்களோடு மேற்கொண்டு பேசி உங்க நுட்பங்களைப்பத்தி நீங்க விவரிச்சப்போ, உங்க சோகம் உண்மையானதுன்னு உணர்ந்துகிட்டேன். அப்புறம் உங்க மேல இருந்த சந்தேகம் நீங்கிடுச்சு. இப்ப நான் சொன்னது மேலாண்மைக் குழுவில் மற்றவங்களைப் பத்தி."

மீண்டும் மேலாண்மைக் குழுவினர் சீறி வெடித்தனர்!

சூர்யா பொருட்படுத்தாமல் தொடர்ந்தார். "குழுவினர் ஒவ்வொருவரும் ஒருவித நுட்பத்தில் வல்லுனர். அவங்க இல்லாம போட்டி நிறுவனத்துக்கு இந்தத் திருட்டுனால பயன் இல்ல. மேலும், ஒவ்வொருவருக்கும் பணத்தேவை இருக்கு. அதுனால அவங்களுக்குக் காரணமும் இருக்கு. அதனாலதான் அவங்க எல்லாரும் சந்தேகத்துக்கு உரியவங்க."

மேரி தூண்டினாள். "அப்போ குழுவினர்ல யார்தான் செஞ்சாங்கங்கறீங்க?"

சூர்யா தொடர்ந்தார். "இந்தத் திருட்டுனால பலன் பெறக்கூடிய நிறுவனத்துக்கு, இவங்க எல்லோருடைய நிபுணத்துவமும் தேவைப்படுங்கறதுனால, இவங்க எல்லாருமே சேர்ந்து இந்த திருட்டுல ஈடுபட்டிருக்கக் கூடும்னும் அடுத்து நினைச்சேன்."

மேலாண்மைக் குழுவினர் மீண்டும் எழுந்து கூச்சலிட்டு களேபரம் செய்யுமுன் கையை உயர்த்தித் தடுத்தார் சூர்யா. "ஆனால், கூடிய சீக்கிரமே அப்படி இருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தேன். ஏனெனில், அவ்வாறு இருந்திருந்தால் இவர்களின் நிதித் தேவை நிவாரணமடைந்திருக்குமே! நான் யாரை விசாரித்தாலும் அந்தக் கவலை தீராமல் காணப்பட்டார்கள்."

மேரி மீண்டும் கேட்டாள். "சரி சூர்யா, இப்படி எல்லார் மேல இருக்கும் சந்தேகத்தையும் நீக்கிட்டா யார்தான் மிஞ்சறாங்க?"

சூர்யா முறுவலுடன் விளக்கினார். "நான் எல்லாரும் சேர்ந்து செய்யலன்னுதான் சொன்னேனே தவிர ஒருத்தருமே செய்யலன்னு சொல்லலயே மேரி! புலப்பட்ட விவரங்களை வச்சுப் பாக்கறப்போ, ஒரே ஒருவர்தான் இதை செஞ்சிருக்கும் முடியும்னு தோணுது..."

மேற்கொண்டு சூர்யா விளக்கியது என்ன, குவான்டம் கணினியின் குழப்பத்தை சூர்யா எப்படி நிவர்த்தித்தார் என்பதை அடுத்த பகுதியில் காண்போம்!

(தொடரும்!

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com