ஹம்சாநந்தி
ஊரே அதைப்பற்றிப் பேசிக்கொண்டது. பத்திரிகைகளெல்லாம் அரசியல் விஷயங்களை அன்று ஒருதினம் மறந்துவிட்டுப் பெரிய எழுத்துக்களில் "செயின்ட் மேரீஸ் சம்பவம்" என்று தலைப்புக்கள் கொடுத்துப் பிரமாதப்படுத்தின.

ராக விசிறிகள், பல்லவிப் புலிகள், துக்கடா தாசர்கள் இன்னும் அந்த சங்கீத மண்டம் கட்டிய இன்ஜினியர்கள் எல்லோருமே ஆச்சர்யப்பட்டுப் போனார்கள்!

மற்றும் விவரிக்கப்போனால் அந்த அல்லோலகல்லோலத்தைப்பற்றி தார் ரோடுகள் தங்களை உருக்கிக் கொண்டு அனுதாபப்பட்டன. மோட்டார் கார்கள் பரிதாபகரமாக ஓலமிட்டுக்கொண்டு இங்குமங்கும் ஓடின.

பாட்டுக்கச்சேரி ஆரம்பமானவுடன் தன் கச்சேரியையும் ஆரம்பித்து விடவேண்டும் என்று அதெற்கென்றே அங்கிருந்த ஒன்றிரண்டு குழந்தைகள் கூட அழ மறந்துபோய் வாயில் விரலைப் போட்டுக்கொண்டு வருத்தப்பட்டன.

ஏன்? ஏன்? ஏன்?

★★★★★


இப்படி மூன்று 'ஏன்கள்' போட்டு கேட்கவேண்டிய விஷயந்தான் இது.

அணுகுண்டு வேகத்தில் முன்னுக்கு வந்து கொண்டிருந்த பிரபல சங்கீத நக்ஷத்திரம் ஆனந்தி எப்பவும்போல ஆனந்தமாக செயின்ட் மேரிஸ் மண்டபத்தில் பாடிக் கொண்டிருந்தாள் அன்று.

வழக்கமான சபா - சகாக்கள், சபையில் எள்விழ இடமில்லாத கூட்டம். பாடவாரம்பித்து அரைமணி நேரங்கூட ஆகவில்லை. ரஸிகர்களில் ரொம்பப் பேர்களுக்கு ஏககாலத்தில் கைகளையும், கண்களையும், கால்களையும், கழுத்துக்களையும் வலிக்க வாரம்பித்துவிட்டது. அவர்கள் எத்தனை தரந்தான் கரகோஷம் செய்வது? அவர்களையறியாமல் எழும்பிக் குதிப்பது? எட்டி எட்டிப் பார்ப்பது?

பாடகி பிலஹரி ராகத்தின் சாயையை அப்படி நாஸுக்காகக் காண்பித்துவிட்டு கீர்த்தனம் பாடி முடித்திருந்தாள். திடீரென்று சபையின் நடுவே இருந்து ஒரு குரல் "ஹம்சாநந்தி ராக ஆலாபனம்" என்று பாடகியை நோக்கி ஒலித்தது.

ஆனந்தி குரல் வந்த திக்கை உற்று நோக்கினாள். அடுத்த நிமிஷம் மேடையிலிருந்து "ஹா!" வென்று அலறிக்கொண்டு சுருண்டு விழுந்தாள். பேச்சு மூச்சில்லை.

அந்தக் குரலின் சொந்தக்காரனை வலைபோட்டுத் தேடினார்கள். அலசி எடுத்துப் பார்த்தார்கள். "பிடி! பிடி!" என்று கத்தினார்கள். அவன் அகப்படவில்லை.

அவன் யார்?

அவளுக்கும், அவனுக்கும் என்ன? கதையே அதுதான். ஆனால் நேயர்களை 10-வருஷங்களுக்கு முன்னால் அழைத்துக்கொண்டு போவதுடன் ஒரு சின்னஞ்சிறு ஓட்டுவில்லை வீட்டிற்குள்ளும் அழைத்துக்கொண்டு போக வேண்டியிருக்கிறது.

அப்பொழுது ஆனந்தி சின்னஞ்சிறு பெண்ணாக தத்திக் குதித்துக் கொண்டிருந்தாள். ஆடுவதும், பாடுவதும், ஓடுவதுமே அவள் உலகம்.

அவள் வயதான தாய் திலகம் பார்த்தாள். தன் மகளின் குரலினிமைக்கும், முகவெட்டிற்கும், அவளுக்கு சங்கீதம் சொல்லிவைத்து ஏன் ஒரு 'வாணி'யாக்கக் கூடாது என்று நினைத்தாள். அந்த எண்ணத்தின் பிரதிபலிப்பாக அம்மா பெண் ஆனந்தியின் கையைப் பிடித்துக் கொண்டு ஒரு குருவை நாடிப்போனாள்.

அந்தக் காலத்தில் பிரபல சங்கீத சாகரம் சிவானந்தம் பல வாணிகளையும், பாகவதர்களையும் சிருஷ்டித்து அனுப்பிவைத்த கலாபீடம்.

அங்கே போய்ச் சேர்ந்தார்கள் இருவரும். "ஆனந்தியை ஏற்றுக்கொண்டு ஆளாக்கி வைக்கும் பொறுப்பு தங்களுடையது" என்று விருப்பமாக விழிகளை உருட்டிச் சொன்னாள் திலகம்.

கருத்த தாடிகளுக்கு நடுவே ஆசீர்வதிப்பது போல இளஞ்சிரிப்பு ஒன்று தோன்றி மறைந்தது. ஆனந்தி அவரது சிஷ்யையானாள்.

முதல்நாள் பாடம் ஆரம்பமான போது சிவானந்தம் சாய்ந்தபடி தாடியை உருவிக்கொண்டே "கைலாஸம்! கைலாஸம்!!" என்று கூப்பிட்டார்.

"இதோ வந்துவிட்டேன்!" என்பதற்குப் பிறகு ஒரு வாலிபன் பால் வடியும் முகத்துடன் பரபரப்புடன் அவரருகே வந்தான்.

ஆனந்தி நாணிக் கோணிக்கொண்டு இரண்டடி தூரமாக எடுத்து வைத்தாள். கண்கள் மருண்டபடி "யார் இந்த கைலாஸம்?" என்று கேட்க வாரம்பித்தன.

சிவானந்தம் புரிந்து கொண்டு சொன்னார்: "ஆனந்தி! இவன்! என் வளர்ப்புப் பிள்ளை. இவன்தான் எனது பிரதிநிதியாக உனக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கப்போகிறான். எல்லாம் என் மேற்பார்வையில் தான்... சங்கீத உலகில் ஆண், பெண், உணர்ச்சிகளுக்கோ வித்தியாசங்களுக்கோ இடமில்லை. அவைகளையெல்லாம் மீறியது அது, என்ன சரிதானே?"

ஆனந்தியின் மௌன அசைவு சரி என்று பதிலளித்தது. சங்கீத சிஷை அமோகமாக ஆரம்பமாயிற்று.

★★★★★


அன்று மாலை சங்கீத சிஷை முடிந்து ஆனந்தி தன் விடுதிக்குப் போனவுடன் அவளுக்கு குப்பென்று வியர்த்தது. அவள் வாய் இரு முறை "என் வாத்தியார் கைலாசம்!" என்று சொல்லி ஆனந்தப்பட்டது. "ஆஹா! எப்பேர்ப்பட்டவர்... எவ்வளவு நன்றாகச் சொல்லிக் கொடுக்கிறார். அத்துடன் அந்த களை சொட்டும் முகம்..." இப்படியெல்லாம் தனக்குள்ளேயே பேச ஆரம்பித்து விட்டாள்.

சங்கீதம் சொல்லிக்கொள்ள வந்த இடத்தில் காதல் வந்து இப்படி பயமுறுத்தும் என்று அவள் எதிர்பார்த்தாளா, என்ன!

கைலாசத்தின் வாலிப உள்ளத்திலும் புயல் அடிக்காமலில்லை. இதுவரை எவ்வளவோ பெண்களுக்கு ஆனந்தியைப்போன்ற நவயுவதிகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்திருக்கிறான். ஆனால் இன்று வந்த ஆனந்தி அவன் உள்ளத்தை என்ன பாடு படுத்தினாள்? அவனை குரு பீடத்திலிருந்து கெல்லி எடுத்து அவளது இதயத்தில் குடி ஏற்றிக்கொண்டு விடுவாள் போலிருக்கிறதே! பாடங்களை என்னமாகப் புரிந்து கொள்கிறாள். அத்துடன் அந்த இரண்டு கண்கள் என்னமோ என்னிடம் வேண்டுகின்றனவே, அது என்ன? - இப்படியாக அவஸ்தைப்பட்டான்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு ஒரு இரவு, இந்த இரண்டு அவஸ்தைகளுக்கும் குளத்தங்கரையில் அல்லிச் செடிகளுக்கருகே முடிவு ஏற்படப் பார்த்தது.

ஆனந்தி படிக்கட்டில் அமர்ந்தபடி ஹம்சாநந்தியை ஆலாபனம் செய்து கொண்டிருந்தாள். அவளை மறக்கச் செய்த அந்த ஆலாபனை விண்ணையும் மண்ணையும் மறக்கச் செய்தது.

அப்படி எவ்வளவு நேரம் மெய்மறந்து எதைப் பாடிக் கொண்டிருந்தாளோ அவள் அறியாள். அவளை யாரோ அன்புடன் "ஆனந்தி!" என்று சொல்லி தட்டி எழுப்பிய பிறகுதான் துள்ளி எழுந்தாள்.

குரு கைலாசம் அவளருகே நின்றபடி "பேஷ்! ஆனந்தி ரொம்ப பேஷ்!" என்று சொல்லிப் பாராட்டியதுடன் கையைப் பிடித்து அருகே இழுத்து உள்ளங்கையில் அதர அன்பளிப்பு ஒன்றும் கொடுத்தான்.

ஆனந்தி இரண்டாம் முறையாகத் தன்னை மறந்தாள். தன் ஜன்மம் சாபல்யமடைந்து விட்டதாகக் கருதினாள். அவன்மேல் துவண்டு விழுந்தாள்.

அந்த இன்பம் ஐந்தே நிமிஷந்தான் நீடித்தது. பெரிய குருநாதர் சிவானந்தர் அகஸ்மாத்தாக குளக்கரைப் பக்கம் வந்தவர் அக்காட்சியைக் கண்டு ஸ்தம்பித்துப் போனார்.

கைலாசம் காதலின் பெயரால் குரு ஸ்தானத்தைக் களங்கப்படுத்தி விட்டதாக அங்கிருந்து அகற்றப்பட்டான். பேதைப்பெண் என்ற பெயரால் ஆனந்திக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டது. இருந்தாலும் கைலாசத்தை மறக்க அவளால் இயலவில்லை.

★★★★★


காலப்பறவை இறக்கைகளைப் படபடவென்று அடித்துக்கொண்டு 5, 6 வருடங்களை விரட்டி மடிந்தது.

ஆனந்தியின் சங்கீத சிட்சையெல்லாம் ஒரு தினுசாக முடிந்து அரங்கேற்றத்துக்கு நாள் குறிப்பிட்டிருந்தது. அன்றைய தினத்தில் அவள் பேருக்கு ரிஜிஸ்தர் தபால் ஒன்று வந்தது. அதில்,

என் ஆனந்திக்கு...

இந்தப் பாபியை மறந்திருக்க மாட்டாய் என்று நம்புகிறேன். ஹம்சாநந்தி ராக ஆலாபனம் செய்து அகில உலகத்தையும், அல்லிக் குளத்தையும் அடியேனையும் மயங்க வைத்த ஆனந்தியை அப்படிப்பட்டவளாகக் கருதவில்லை. நான் என்னமோ தெரியாத்தனமாக வாலிப உணர்ச்சியால் பந்தப்பட்டு குற்றவாளியானேன். இருந்தாலும் என் மகத்தான தவறுதலை உணருகிறேன்.

உன் குருவான நான் இந்தப் புனித தினத்தில் உன்னைப் பாவிக்கும் காணிக்கை ஒன்று உண்டு. அரங்கேற்ற வைபவ நாளான இன்று என்பொருட்டு எக்காரணத்தைக் கொண்டும் அந்தப் பாழாய்ப் போன ஹம்சாநந்தி ராகம் பாடுவதில்லை என்று திடசங்கல்பம் செய்து கொள்ளு. ஒரு சமயத்தில் உன் இருதயத்தையே ஒழித்துவிடப் பார்த்த நீ இதுகூட எனக்குச் செய்யமாட்டாயா?

உன்னை நம்புகிறேன். பாட்டுலகில் பிரபல நட்சத்திரமாக உன்னை மனப்பூர்வமாக ஆசீர்வதிக்கும்.

கைலாஸம்.

அன்று முதல் ஆனந்தி ஹம்சாநந்தியை மறந்து விட்டாள். எந்தக் கச்சேரியிலும் பாடுவதில்லை. ஆனால் அன்று செயின்ட் மேரிஸ் மண்டபத்தில் பாடிக்கொண்டிருக்கும்போது எழுந்த அந்தக் குரல் யாருடையது? ஒருவேளை கைலாஸமே...

நினைத்தாள், தவித்தாள், மயங்கி விழுந்தாள்.

உலகிற்கு ஒரு குரல் வெகு தூரத்திலிருந்து பதிலளிக்கிறது.

குருவினிடம் சீடனுக்கு அசையாத பக்தி இருக்க வேண்டும். குருவின் ஒழுக்கம் எப்படி இருந்தாலும் சரி, சீடன் மோக்ஷமடைய அந்த குரு பக்தியே போதும்.

நவீனன்

© TamilOnline.com