நவீனன்
எழுத்தாளர், இதழாளர், திரைப்படக் கலைஞர் பலரது வாழ்க்கை வரலாற்றை எழுதியவர், திரைப்படத் துறையினர் பலரை நேர்காணல் செய்து வெளியிட்டவர் எனப் பன்முகப் படைப்பாளியாகத் திகழ்ந்தவர். நவீனன். இயற்பெயர் பி.கே. முத்துசாமி. 1917-ல் திருவையாறுக்கு அருகில் உள்ள பூதலூரில், பூதலூர் கிருஷ்ணய்யர் - நாகலட்சுமி இணையருக்குப் பிறந்தார். திருக்காட்டுப்பள்ளியில் உள்ள சர். சிவசாமி ஐயர் பள்ளியில் பத்தாம் வகுப்புவரை பயின்றார். அக்காலகட்டத்தில் நண்பர்களுடன் இணைந்து கையெழுத்து இதழ் ஒன்றை நடத்தினார்.

சிறுவயது முதலே தமிழின் மீதும் இதழ்கள் வாசிப்பதிலும் ஆர்வம் கொண்டிருந்தார். முதல் படைப்பு 'எமப்பயல்' என்ற சிறுகதை, திருச்சியிலிருந்து வெளிவந்த 'ஆனந்தக் கூத்தன்' இதழில் வெளியானது. பத்திரிகைத்துறை மீது கொண்ட காதலால், 17 வயதில் சென்னைக்குப் புறப்பட்டு வந்தார். 'யுவன்' குழந்தைகள் இதழில் பணி கிடைத்தது. அவ்விதழில் குழந்தைகளுக்கான பல சிறுகதைகளையும் கட்டுரைகளையும் எழுதினார். இதழியல் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டார். பி.கே. முத்துசாமி என்ற பெயரில் தொடக்க காலத்தில் எழுதிக் கொண்டிருந்தார். அவரது எழுத்தில் இருந்த நவீனத்துவத்தால் கவரப்பட்ட எழுத்தாளர் சிரஞ்சீவி, 'நவீனன்' என்ற பெயரைச் சூட்டினார். அதுமுதல் 'நவீனன்' என்ற பெயரில் எழுதத் தொடங்கினார். ஜெயலட்சுமியை மணம் செய்துகொண்டார். இவர்களுக்கு எட்டுப் பிள்ளைகள்.

நவீனன், 'ஊழியன்' இதழில் பல்வேறு கட்டுரைகள், திரைப்பட விமர்சனங்கள், திரைப்படம் சார்ந்த செய்திகளை எழுதினார். 1935-ல், 'நவயுவன்' என்ற இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். இளம் எழுத்தாளர்கள் பலரது படைப்பை அவ்விதழில் வெளியிட்டு ஊக்குவித்தார். 'நகுலன்' உள்ளிட்ட பல எழுத்தாளர்களின் முதல் மற்றும் முக்கியப் படைப்புகள் 'நவயுவன்' இதழில் வெளிவந்தன. ஜெகசிற்பியன், பூவை எஸ். ஆறுமுகம் உள்ளிட்ட பலரது சிறுகதைகளை நவயுவன் இதழில் வெளியிட்டார். 'மாலதி' என்ற மாதமிருமுறை இதழின் ஆசிரியராகப் பணிபுரிந்தார். விக்கிரமனின் முதல் சிறுகதை அதில்தான் வெளியானது. 'பிரசண்ட விகடன்' இதழில் பல சிறுகதைகளை எழுதினார். பல்வேறு இதழ்களில் தொடர்கதைகள் எழுதினார். சிறார்களுக்காவும் பல படைப்புகளைத் தந்தார். 'கலை' இதழில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1942 முதல் 1946 வரை அருணோதயம், காதம்பரி, பாலர் மலர், சுதேசமித்திரன், சினிமா உலகம், ஆனந்தபோதினி, பேசும்படம் போன்றவற்றில் சுதந்திர எழுத்தாளராகப் பல படைப்புகளை வெளியிட்டார்.

வெள்ளிமணி, கல்கி, குமுதம் போன்ற இதழ்களில் பங்களித்தார். அண்ணாவின் வாழ்க்கை வரலாற்றை 'தினமணி கதிர்' இதழில் தொடராக எழுதினார். அது 'அண்ணாவின் கதை' என்ற தலைப்பில் நூலாக வெளிவந்து, ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பிரதிகள் விற்றது. அதுபோல எம்.ஜி.ஆரின் வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்களைத் தொகுத்து 'நான் கண்ட எம்.ஜி.ஆர்.' என்ற தலைப்பில் எழுதினார்.



நவீனன், என்.டி. ராமராவ் தொடங்கி எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலிதா, சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், ரஜினிகாந்த், கமல்ஹாசன் எனப் பலருக்கு நெருக்கமானவராக இருந்தார். எம்.ஜி.ஆர். கருணாநிதி, ஜெயலலிதா என மூன்று முதலமைச்சர்களை நேர்காணல் செய்த சிறப்புக்குரியவர். திரைப்படங்கள் பலவற்றின் மக்கள் தொடர்பாளராகப் பணியாற்றினார். எம்.ஜி.ஆர். படங்கள் சிலவற்றிற்கு மக்கள் தொடர்பாளராகப் பணிபுரிந்தார். சினிமா மற்றும் அரசியல் உலகில் தனக்கேற்பட்ட அனுபவங்களை தினமணி கதிரில் தொடராக எழுதினார். திரைப்படத்துறை அனுபவங்களை 'நவீனின் நினைவுக் குறிப்புகள்' என்ற தலைப்பில் சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் எழுதினார். பல நூற்றுக்கணக்கான திரைக் கலைஞர்கள் பற்றி எழுதினார். கணக்கற்ற திரைப்பட விமர்சனங்கள் எழுதினார்.

நவீனன், கிட்டப்பா, ரேவதிகாந்தன், மீனாட்சிநாதன், தர்மராஜ், விஜய கோதண்டராமன், சுவாமி போன்ற பல புனைபெயர்களில் எழுதியிருக்கிறார். சிறுகதை, நாவல், கட்டுரை, ஸ்டூடியோ செய்திகள், திரைப்படக் கலைஞர்களின் நேர்காணல், வாழ்க்கை வரலாறு எனப் பலவகைப் படைப்புகளைத் தந்திருக்கிறார். நவீனன்' என்ற பெயரில் முழுக்க முழுக்க சினிமா செய்திகளை வெளியிடுவதற்காகவே இதழ் ஒன்றைத் தொடங்கி நடத்தினார். பொருளாதாரக் காரணங்களால் இதழ் சில மாதங்களிலேயே நின்று போனது. தொடர்ந்து சுதேசமித்திரன், மஞ்சரி, தென்றல் திரை, வெள்ளிமணி, பூவாளி, கல்கண்டு உள்ளிட்ட இதழ்களில் பணியாற்றினார். சாவியின் வேண்டுகோளின்படி தினமணி கதிர் இதழின் ஆசிரியர் குழுவில் இணைந்தார்.

நவீனன் நூல்கள்
அண்ணாவின் கதை, நான் கண்ட எம்.ஜி.ஆர்., நான் கண்ட தமிழ்வாணன், கலைவாணர் கதை, ஜி.டி. நாயுடு கதை, சுவையான சந்திப்புகள் - டாக்டர் கலைஞர் முதல் ரஜினிகாந்த் வரை, மதுரம்: வாழ்க்கையோ வாழ்க்கை, வரலட்சுமியின் வாழ்க்கை, என் திரைப்படக் காதலர்கள்: அஞ்சலிதேவி (தொகுப்பு: நவீனன்)


நவீனன் எம்.கே. தியாகராஜ பாகவதர், அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் போன்ற பல முன்னணி நட்சத்திரங்களை பேட்டி கண்டு வெளியிட்டார். சிவாஜி கணேசனை முதன்முதலில் இதழுக்காகப் பேட்டி எடுத்தது நவீனன்தான்.

தினமணி குழுமம் திரைப்படத் துறைக்காகவென்றே முதன் முதலில், 1980-ல், 'சினிமா எக்ஸ்பிரஸ்' இதழைத் தொடங்கியது. நவீனன் இதழின் முதல் ஆசிரியராகப் பணியாற்றினார். சினிமா எக்ஸ்பிரஸின் முதல் இதழை அப்போதைய முதல்வரான எம்.ஜி.ஆர். வெளியிட்டார். நவீனன், சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் பல்வேறு புதுமைகளைப் புகுத்தினார். திரைப்பட நடிகர்களின் வாழ்க்கை, திரை அனுபவங்கள், திரைப்படச் செய்திகள் பலவற்றை சுவாரஸ்யமான மொழியில் கட்டுரைகளாக்கினார். நடிகர்களின் நேர்காணல்கள், பட விமர்சனங்கள், சினிமா செய்திகளை பல்வேறு புனைபெயர்களில் சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் எழுதினார். பணி ஓய்வுக்குப்பின் சுதந்திர எழுத்தாளராகச் செயல்பட்டார். குமுதம், குங்குமம், கல்கி, தினமணி, தினமலர் உள்ளிட்ட பல இதழ்களில் கட்டுரைகள், தொடர்களை எழுதினார்.

நவீனன், மணிமேகலை மன்றம் வழங்கிய இலக்கிய சாதனையாளர் விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். பிப்ரவரி 29, 2012 அன்று, 95 வயதில் காலமானார். மகன் ரவி நவீனன் எழுத்தாளர். நவீனனின் வாழ்க்கைக் குறிப்புகளையும், தகவல்களையும், இதழியல் பணி அனுபவங்களையும் தொகுத்து, நவீனனின் நூற்றெட்டாவது ஆண்டை நினைவுகூரும் வகையில் 'நவீனன் நூற்றியெட்டு நினைவுகள்' என்ற நூலைத் தொகுத்துள்ளார்.

அரவிந்த்

© TamilOnline.com