"ஏங்க கதவத் திறங்க, திறங்க" என்று உள்புறமாகப் பூட்டியிருந்த படுக்கையறையின் கதவை, உள்ளங்கை சிவந்து போக, விரல் முட்டி வலிக்கத் தட்டினாள் கதிஜா.
படுக்கையறைக் கதவு திறக்கவில்லை. உச்சகட்ட பதற்றத்தில் கதிஜா குரலுடைந்து கத்தினாள்! அவளது அலறல், காயம்பட்ட பறவையின் கதறலாக ஒலித்தது.
"ஏங்க இப்படிச் செய்றீங்க? எல்லாத்தையும் பேசிக்கலாம். நீங்க செய்யறது பாவம், நாங்க என்ன குற்றம் செஞ்சோம்! எப்படி மனசு வந்தது உங்களுக்கு? கொஞ்சம் நம்ம பசங்களை நினைச்சுப் பாருங்க. இந்த முடிவு தவறுன்னு புரியும். இப்ப கதவ திறக்கப் போறீங்களா, இல்ல, நான் அக்கம் பக்கத்தில எல்லாரையும் கூப்பிடட்டுமா?"
ஐந்து நிமிடங்கள் யுகங்களாய் நகர, படுக்கையறையின் கதவு திறக்கப்பட்டது. சோர்ந்து, களைத்து, உயிரை யாரோ உறிஞ்சி எறிந்தது போன்ற முகத்துடன், சாவின் பயத்துடன் ஹக்கீம் அறையிலிருந்து வெளியே வந்தவனை, கதிஜா கட்டிக்கொண்டு அழத் தொடங்கினாள்.
"என்ன ஆயிடுச்சுன்னு இந்த முடிவுக்கு வந்தீங்க? யாருக்குத்தான் கஷ்டமில்லை இந்த வாழ்க்கையில. எல்லோரும் இதே முடிவை எடுத்தால் உலகத்தில யாருதான் வாழ்வாங்க சொல்லுங்க? கஷ்டத்தைக் கடந்துதான் பார்க்கணும், அதைவிட்டுட்டு இப்படிச் சாகத் துணிய மாட்டாங்க."
★★★★★
"கதிஜா வேற என்ன பண்ணச் சொல்ற? ரத்தத்தை உறிஞ்சும் அட்டையைப் போல, காசு காசுன்னு பிடுங்குறானே அந்த பில்டர். இருந்ததை எல்லாம் கொடுத்தாச்சு. ஆனாலும், அவன் என்னடான்னா கட்டுமானத்தை முடிக்காம தள்ளிப் போட்டுக்கிட்டே போறான்."
அவனிடம் எப்போ முடிப்பீங்கன்னா, சரியான பதில் இல்லை. 'ஐயா பணம் பத்தல. நீங்க கொடுத்த பணத்தை என் பையில போட்டுட்டுப் போயிட்டேனா என்ன? உங்க முன்னாடிதான் கட்டடமா நிக்குது'ன்னு சொல்றான்."
"ஏங்க அப்ப அவர் ஆரம்பிக்கும்போது சொன்னாரே, அதெல்லாம் பொய்யா?"
"அதை நம்பித்தானே நம்மகிட்ட இருக்கிறதை எல்லாத்தையும் வித்தோம். வங்கிக் கடன் வேற வாங்கியிருக்கோம். இப்ப என்னடான்னா நாமா கையிலிருந்து ஐந்து லட்சத்திற்கு மேல் கொடுத்தாச்சு. ஆனால் அவன் தரப்பிலிருந்து இன்னும் கட்டுமானத்தை முடிக்கிற மாதிரி தெரியல. நம்மகிட்ட இருந்து இன்னும் எவ்வளவு பணம் வசூல் செய்யலாம் என்று நரியைப் போல சுத்தி சுத்தி வரான்! அதான் எப்போ கேட்டாலும் ஒரே பதிலச் சொல்றான்."
"சரி விடுங்க, பிறகு பார்த்துக்கலாம். முதல்ல நீங்க போய்க் குளிச்சுட்டு வாங்க, சாப்பிடலாம். பசங்க உங்களுக்காகக் காத்திருக்காங்க."
"இதோ இன்னும் பத்து நிமிசத்தில குளிச்சுட்டு வந்துடறேன்," என்று ஹக்கீம் குளியல் அறையை நோக்கிக் சென்றவன், சொன்ன மாதிரியே பத்து நிமிடத்தில் குளித்துவிட்டு வெளியே வந்தான். பிள்ளைகள் மற்றும் கதிஜாவுடன் சாப்பிட்டான். இரவு தூங்கச் சென்றனர் அனைவரும்.
★★★★★
படுக்கையில் படுத்த கதிஜாவுக்குத் தூக்கம் வரவில்லை. அவளது நினைவு, கரை புரண்டோடும் வெள்ளமெனப் பின்னோக்கிச் சென்றது. ஹக்கீமும் கதிஜாவும் அவர்களது சொந்தக்காரர் வீட்டு நிக்காஹ்வுக்கு ஸ்கூட்டரில் சென்றிருந்தனர். அங்கே அனைத்துச் சொந்தங்களும் வந்திருந்தனர். நிக்காஹ் முடிந்தபிறகு சாப்பிடச் சென்றனர்.
அவர்கள் பக்கத்தில் கதிஜாவின் நெருங்கிய சொந்தமான தாய்மாமன் மகள் ஒருத்தி, அவளிடத்தில்,
"என்ன கதிஜா, எப்போ சொந்தமா வீடு கட்டப்போறீங்க? இன்னும் எவ்வளவு காலம் அந்த வாடகை வீட்டில் காலம் தள்ளப்போறீங்க?" என்றாள். அந்தக் கேள்வி, கூரிய அம்பு போல கதிஜாவின் இதயத்தில் தைத்தது. கதிஜாவால் பதில் கூற முடியவில்லை. வலியை மறைத்துக்கொண்டு, காய்ந்த ரோஜாவைப் போன்றதொரு புன்முறுவலை உதிர்த்து வைத்தாள் கதிஜா.
விருந்து முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கையில், இருள் கவிந்த சாலையில், வண்டிகளின் வெளிச்சம் மட்டும் கீற்றுகளாய் சாலையைக் கடக்க, ஸ்கூட்டரின் பின்னால் அமர்ந்திருந்த கதிஜா கணவனிடம் கேட்டாள், "ஏங்க, நாம எப்பங்க சொந்தமா வீடு வாங்கப் போறோம்? இன்னும் எத்தனை காலம் இந்த வாடகை வீட்டில் இருக்கிறது? நமக்கென்று ஒரு சொந்த வீடு இருந்தால் சொந்தங்கள் மத்தியில் கௌரவமாக வாழலாமல்லவா? இப்ப பாருங்க, எங்க விசேஷத்துக்குப் போனாலும், யார் பார்த்தாலும் முதலில் கேட்பது இந்தக் கேள்விதான். நீங்களே சொல்லுங்க, இன்னும் எவ்வளவு வருஷம் காத்திருக்கணும்?"
"ஏம்மா, உனக்கே தெரியும், நாமளும் காதில் விழுகிற செய்தியை வைத்து எவ்வளவோ இடம் அல்லது கட்டிய வீடாப் பார்த்து வருகிறோம். ஆனா, ஒரு நல்ல இடமோ, வீடோ அமைய மாட்டேங்குது. பொறுத்துக்கோ. இன்னும் கொஞ்ச காலம். அதுக்கப்புறம் கட்டாயம் நாமளும் மத்தவங்க மாதிரி நமக்கென்று ஒரு வீடு கட்டி, அதுல வாழத்தான் போறோம்."
★★★★★
பழைய நினைவில் மூழ்கியிருந்த கதிஜா திடீரென்று கண் விழித்தாள்! மணி பார்ப்பதற்காகச் சுவிட்சைத் தட்டினாள். அறைக்குள் மஞ்சள் ஒளி மெல்லப் படர்ந்தது.
படுக்கையை விட்டு எழுந்து, தண்ணீரைக் குடித்துவிட்டு, ஹக்கீமைப் பார்த்தாள். அவனது நெற்றியில் கையை வைத்துப் பாசத்துடன் வருடினாள். அவளது மனதில் எண்ணங்கள், அமைதியான குளத்தில் எறிந்த கல் உண்டாக்கும் அலைகளைப் போல வட்டமிட்டன.
ஒருவனது வாழ்க்கையில் பணம் எவ்வளவு முக்கியமானது! பணம் இல்லை என்றால், ஒருவன் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போகிறானே! சாகக்கூடத் துணிகிறானே! பணம் இல்லாதவன், இறக்கைகள் வெட்டப்பட்ட பறவையைப் போல இந்தச் சமுதாயத்தில் பறக்க முடியாமல் தவிக்கிறானே!
மீண்டும் கடிகாரத்தைப் பார்த்தாள். இரவு மணி இரண்டு. அவளால் தூங்க முடியுமா! நேற்று நடந்த சம்பவத்தையே நினைத்து நினைத்து அவளது தூக்கம் தொலைதூர தேசத்திற்குச் சிறகடித்துப் போய்விட்டது. அவளது நினைவுகள் மீண்டும் பின்னோக்கிச் சென்றன.
"ஹக்கீம் சார், வணக்கம். நீங்க சொன்ன நேரத்துக்கு வந்திருக்கேன்."
"வாங்க வில்லியம்ஸ், சரியா வந்திருக்கீங்க, சொல்லுங்க."
"நாம பேசியிருந்த மாதிரி ஒரு இடம் இருக்கு, உங்களுக்குப் பிடிக்குமென்று தோணுது. அதான் வீடு தேடி வந்திருக்கேன்."
"எந்த இடத்துல வில்லியம்ஸ்?"
"என்ன, இங்கிருந்து ஒரு கிலோ மீட்டருக்குள்ளதான் சார். வாங்க, வந்து பாருங்க."
"இடம் பிடிச்சிருந்தா மேற்கொண்டு நாம ஓனருடன் பேசலாம்."
"சரி, வர்ற சனிக்கிழமை நாங்க ரெண்டு பேரும் வர்றோம். அதுக்குள்ள அந்த லொகேஷனை அலைபேசியில் அனுப்புங்க."
"உடனே செஞ்சுடறேன். வர்றதுக்கு ஒரு மணி நேரம் முன்னாடி என்கிட்ட சொல்லுங்க, நானும் அங்க வந்துடறேன். அப்ப நான் கிளம்புறேன்," என்று சொல்லிவிட்டு வில்லியம்ஸ் கிளம்பினான்.
★★★★★
நாட்கள் வேகமாக ஓடின. ஹக்கீம் சொன்ன மாதிரி சனிக்கிழமை இருவரும் இடத்தைப் பார்க்கச் சென்றனர். வில்லியம்ஸ் காத்திருந்தான். இவர்கள் இடத்தைப் பார்த்தனர். பார்த்தவுடனே பிடித்துப் போக, மேற்கொண்டு பேச விருப்பம் தெரிவித்தனர்.
உடனே வில்லியம்ஸ் கைபேசியை எடுத்து ஓனரிடம் பேசி, சிறிதுநேரம் கழித்து கைபேசியை ஹக்கீமிடம் கொடுத்தான். ஹக்கீம் உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இடத்தின் உரிமையாளர் கறாராக, "இவ்வளவு எனக்குப் பணமாகக் கொடுக்க வேண்டும். மீதிப் பணத்தில் பத்திரப் பதிவைச் செய்தால் போதும்," என்றார். ஹக்கீம் சிறிது யோசித்துவிட்டு, "நாளைக்கு எங்க முடிவைச் சொல்றோம்," என்று கூறி கைபேசி அழைப்பைத் துண்டித்தார்.
★★★★★
ஹக்கீமிடம், "சார், இடம் ரொம்ப நல்லா இருக்கு, உங்க இடத்தைச் சுத்தி வீடுதான், நிலத்தடி நீர் ரொம்ப நல்லாவே கிடைக்குது. தண்ணீர்ப் பஞ்சம் இல்லை. 365 நாளும் மோட்டாரைப் போட்டால் நீர்த்தொட்டியில் தண்ணீர் ஏறிவிடும். யோசித்துவிட்டுச் சொல்லுங்க, பிறகு என்னவென்று பார்ப்போம்," என்றான் வில்லியம்ஸ்.
ஒரு மாதத்திற்குள் பணத்தைப் புரட்டி, மீதிப் பணத்தை வங்கியில் கடனாக எடுத்தனர் ஹக்கீம்-கதிஜா தம்பதியினர். ஒரு மாபெரும் போராட்டத்திற்குப் பிறகு, பத்திரப் பதிவு இனிதே நடந்தேறியது. சந்தோஷம் ஒருபக்கம் இருந்தாலும், மறுபக்கம் நாம் இந்த இடத்தில் நல்லபடியாக வீட்டைக் கட்டி முடிக்க வேண்டுமே என்ற எண்ணம் நெருஞ்சி முள் போல அவர்களது மனதில் ஓடிக்கொண்டிருந்தது.
ஆனால் வில்லியம்ஸிற்குச் சந்தோஷம் இரட்டிப்பு. ஏனென்றால், வாங்கியவரிடத்திலும் விற்றவரிடத்திலும் கமிஷன் கிடைக்குமல்லவா? அதனால்தான்.
ஹக்கீம் வில்லியம்ஸிற்குப் பணம் கொடுக்கையில், "வில்லியம்ஸ், நான் உங்களை புரோக்கராகப் பார்க்கவில்லை. அதையும் தாண்டி ஒரு பில்டராகப் பார்க்கிறேன். நாங்க வாங்கின இடத்தில் வீடு கட்ட வேண்டும். அதற்கு வேறு எந்த ஒப்பந்ததாரரிடமும் நாங்க போகப்போவதில்லை, உங்களிடம்தான் வருகிறோம். அதனால், தரகுத் தொகையில் 80 சதவீதம் பெற்றுக்கொள்ளுங்கள். கட்டட ஒப்பந்தம் உங்களிடம்தான் கொடுக்கலாம் என்று யோசித்து வைத்திருக்கிறோம்," என்றான்.
★★★★★
வில்லியம்ஸிற்கு வாயெல்லாம் பல். கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு வில்லியம்ஸிற்குச் சரியான கட்டட ஒப்பந்தம் கிடைக்கவில்லை. ஹக்கீம் கொடுப்பதே அவருக்கு வறண்ட நிலத்தில் பெய்த மழைபோல. அதனால் வில்லியம்ஸ் ஹக்கீமிடமிருந்து 80% கமிஷனை வருத்தமில்லாமல் வாங்கிக் கொண்டான்.
இரண்டு வாரத்தில் வில்லியம்ஸ் கட்டுமானப் பணிக்கு இவ்வளவு என்று ஒரு விலைப்புள்ளிப் பட்டியலை ஹக்கீமிடம் கொடுத்தான். இதோ, அதோ என்று ஒரு மாதம் கழிந்தது. ஹக்கீம் முடிவெடுக்கவில்லை. மறுமுனையில் வில்லியம்ஸால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எப்படியாவது இந்த ஒப்பந்தத்தை எடுக்க வேண்டும் என்ற ஒரே எண்ணம் அவன் மனதில் சுழன்றடித்தது. ஒரு மாதத்திற்குப் பிறகு வில்லியம்ஸ், ஹக்கீம் வீட்டிற்கு வந்தான்.
"நீங்க சொன்ன மாதிரியே நான் கொடேஷன் கொடுத்திருக்கேன். ஒரு முறைக்குப் பலமுறை பாருங்க, ஏதாவது விடுபட்டிருந்தால் சொல்லுங்க, அதையும் சேர்த்துக்கலாம். நேரம் போய்க்கொண்டே இருக்குது, நாம இப்ப ஆரம்பித்தால்தான் அடுத்த ஒரு வருஷத்தில கட்டுமானப் பணியை முடிக்க முடியும்," என்றான்.
"இல்ல வில்லியம்ஸ், பணம்தான் கொஞ்சம் அதிகமாத் தெரியுது. அதான் முடிவெடுக்கச் சிரமப்படுகிறோம்."
★★★★★
"சார், நீங்க எங்கு வேணுமானாலும் போய் விசாரிங்க, இந்த அளவுக்கு யாரும் கொடுக்க மாட்டாங்க. நான் ப்ராஃபிட் இல்லாமத்தான் கொடுத்திருக்கேன். ரெண்டு வருஷமா கட்டட காண்ட்ராக்ட் இல்லாமதான் இருந்தேன்.
இப்ப நீங்க கொடுக்கும் ப்ராஜெக்ட் மூலம் நான் என்னை மறுபடியும் நிரூபிக்கணும். உங்க திட்டம் மூலம் எனக்கு வேற பல திட்டங்கள் கிடைக்கணும். அதான் நிறைய கற்பனையெல்லாம் செய்து வெச்சிருக்கேன், இந்த வீட்டை எனக்கு ஒரு முன்மாதிரி இல்லமா கட்டப் போறேன்.
உங்களுக்கும் திருப்தியா இருக்கணும். ஒண்ணும் யோசிக்க வேண்டாம். சரின்னு சொல்லுங்க, வேலையைத் தொடங்கிடலாம்," என்று தேனில் தோய்த்தெடுத்த வார்த்தைகளாலும், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் கள்ளம் நிறைந்த புன்னகையாலும் ஹக்கீமிடம் பேசி, சம்மதத்தை வாங்கினான்.
பட்டா வாங்குவதிலிருந்து, கட்டட அனுமதி பெறுவதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் தவணை முறையில் ஹக்கீமிடமிருந்து பணம் கை மாறியது. வேலை தொடங்கும் முன்னர்
வேலை மின்னல் வேகத்தில் நடந்தது. வேக வேகமாக ஆட்களை வைத்து அந்த வேலையை முடித்துவிடுவான் வில்லியம்ஸ். அப்போது ஏன் இவன் எல்லா வேலையையும் இப்படி அவசர அவசரமாகச் செய்கிறான் என்று ஹக்கீமுக்குப் புரியவில்லை. வீட்டு அஸ்திவாரம் தோண்டுவதிலிருந்து, தூண்கள் வைப்பதிலிருந்து, சுற்றுப்புறச் சுவர் எழுப்புவதிலிருந்து, வெளிப்புற வேலைகளான கழிவுநீர்த் தொட்டி, தண்ணீர்த் தொட்டி முதற்கொண்டு எல்லா வேலைகளும் வேக வேகமாக முடிந்தன.
★★★★★
கீழ்த்தளம் போட ஒரு நாள், ஒவ்வொரு வேலைக்கு மத்தியிலும் இரண்டு மூன்று வாரம் என்று இடைவெளி விட்டு வேலைகளைச் செய்வதை வில்லியம்ஸ் வழக்கமாகக் கடைப்பிடித்தான். ஒவ்வொரு வேலைக்கும் பணம் தண்ணீரைப் போல் கரைந்தது.
ஒரு கட்டத்தில் முதல் மாடி தளம் போட்ட பிறகு உட்புற வேலை மட்டும்தான். பூச்சு வேலை, குழாய் வேலை, மின் வேலை ஆகியவற்றை அப்படியே தள்ளிப் போட ஆரம்பித்தான்.
பசுத்தோல் போர்த்திய புலியின் குணம் அப்போதுதான் ஹக்கீமுக்கு மெல்ல மெல்லப் புரிய ஆரம்பித்தது. இனிக்க இனிக்கப் பேசிய வில்லியம்ஸா இப்படிச் சொன்ன வேலையைச் செய்யாமல் தள்ளிப்போடுகிறான்? எப்போது பார்த்தாலும் பணம் வேண்டும், பணம் இருந்தால் அடுத்த வேலையைச் செய்யலாம் என்பான். ஒரு கட்டத்தில் வங்கி கடனாகக் கொடுத்த எல்லாப் பணத்தையும் கொடுத்தாகி விட்டது. அதையும் தாண்டி இன்னும் பணம் இருந்தால் மட்டுமே மீதி வேலையை முடிக்க முடியும் என்று கூறினான். ஹக்கீம் கழுத்தில் போட்டிருப்பதையும் கையில் போட்டிருப்பதையும், பத்தாதற்கு அவனது மனைவி நகையையும் வங்கியில் தங்க அடகுத் திட்டத்தில் கடன் எடுத்துக் கொடுத்துவிட்டான்.
★★★★★
இவ்வளவும் கதிஜாவுக்கு நினைவு வந்தது. படுக்கையிலிருந்து சட்டென்று எழுந்தாள். நேரத்தைப் பார்த்தாள், விடியற்காலை ஐந்து மணி. கிழக்கு வெளுக்கத் தொடங்கிய அந்த அதிகாலைப் பொழுதில், அவளது மனதிலும் ஒரு புதிய நம்பிக்கை ஒளிக்கீற்றாகப் படர்ந்தது. அவளது ஆழ்மனதில் ஒரேயொரு எண்ணம்தான், 'இன்றைய பொழுது நன்றாக அமைய வேண்டும். இந்த நாள் இனிய நாளாக அமைய வேண்டும். தேவையில்லாமல் எந்தப் பிரச்சனையும் வீடுதேடி வரக்கூடாது. கணவனின் மனதிலும் தன்னம்பிக்கை என்னும் விதையை முளைக்கச் செய் இறைவா.'
"இன்ஷா அல்லாஹ்" என்று கூறியபடி படுக்கையை விட்டு எழுந்தாள்.
விடிந்தவுடன் தன் கணவனிடம் பக்குவமாகப் பேசி, அவனது மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டும். வீடு கட்ட ஆரம்பித்தாகிவிட்டது, அதைப் பாதியில் நிறுத்த முடியாது. எப்பாடுபட்டாவது அதை முடித்துவிட வேண்டும். கோழைத்தனமான எந்த முடிவையும் நாம் இருவரும் எடுக்கக் கூடாது. வில்லியம்ஸ் போன்ற ஆட்களுக்கு மத்தியில் நாம் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற தைரியத்தை அவருக்கு நாம்தான் கொடுக்க வேண்டும் என்று யோசித்துக்கொண்டே, விடிந்தும் விடியாமலும் இருந்த நேரத்தில் எழுந்து, அன்றாட வேலையைச் செய்யத் தொடங்கினாள் கதிஜா.
★★★★★
பாலமுருகன் லோ. |