(பண்டிதை கிருஷ்ணவேணி அம்மாள் எழுதிய 'மகளிர் இல்லம்' கட்டுரை நூலிலிருந்து)
ஒருநாள் இரவு ஒன்பதரை மணி இருக்கும். சிலர் படுக்கைக்குச் சென்றனர்; சிலர் படித்துக் கொண்டிருந்தனர். யான் என் அறையில் ஏதோ எழுதிக்கொண்டிருந்தேன். சமயற்காரரும் தூங்கச்செல்லும் நேரம். அவ்வமயம் பெரிய மாணவி ஒருத்தி, சிறுநீர் கழித்தற்பொருட்டு, நடுக்கட்டிற்குச் சென்று தூக்க மிகுதியினால், விரைவுடன் திரும்பிவந்து படுக்கையில் படுத்துக்கொண்டாள். அவள் திரும்பும்போது மூன்றாங் கட்டிலிருந்து வந்த சமையற்காரி, அம்மாணவியின் வெள்ளைப்புடைவையையும், அவள் செல்லும் விரைவையும் பார்த்துக் கள்ளனென ஐயங்கொண்டு அவளைப் பின்பற்றினாள்; ஆனால், அவள் படுக்கையில் படுத்துக்கொண்டதைச் சமையற்காரி பார்க்கவில்லை. ஆதலின், யாரோ ஒரு திருடன் வந்து வீட்டிற் புகுந்துகொண்டானென்றும், அவன் தனக்குப் பயந்து எங்கோ ஓடி ஒளிந்து கொண்டானென்றும் அவள் தீர்மானித்துக்கொண்டாள்; அந்த அச்சத்தினால் அவள், "திருடன் திருடன்," எனக் கத்தினாள். பக்கத்தில் கீழே உறங்கிக்கொண்டிருந்த பிள்ளைகளுள் பெரும்பாலாரை விழிக்கச் செய்தது. அவர்களும் "திருடன் திருடன்," எனக் கத்திக்கொண்டே மாடிக்கு வந்தார்கள். மாடியில் இருந்தவர்களும் அவர்களுடன் சேர்ந்து அவ்வாறே கத்திக்கொண்டே என் அறைக்கு ஒடிவந்தார்கள்.ஆனால், திருடனைப் பார்த்தவர் ஒருவருமில்லை. திடீரென உண்டான இக்கத்துதலும், அப்பிள்ளைகள் ஓடிவரும் அலங்கோலமும் எனக்கு அச்சத்தையும் வியப்பையும் விளைவித்தன. யான் "என்ன?" என்று அவர்களைக் கேட்டபோது, "திருடன் திருடன்," என்னும் வார்த்தைகள் தவிர வேறொன்றும் அவர்கள் வாயிலிருந்து வெளிவந்திலது. வேறேதேனும் அவர்கட்குத் தெரிந்திருந்தால்தானே சொல்லப்போகின்றார்கள்!
அங்ஙனம் ஓடிவந்தவர் என் அறையில் நுழைந்து கதவை அடைத்துவிட்டனர். யான் வெளிச்சென்று பார்த்தற்கும் விட்டாரில்லை. சிலர் கதவை அழுத்திக் கொண்டு, "ஐயோ திருடர்கள் வந்துள்ளார்கள். நீங்கள் வெளியே போகக்கூடாது. உங்களை அடித்துவிடுவார்கள்," எனக் கத்துகின்றனர். தூக்கத்தில் இருக்கும் சில சிறு குழந்தைகளோ கீழிடத்திலேயே இருக்கிறார்கள். அவர்களை என்ன தடுத்தும் எனக்கு வழிவிடுவதாய்க் காணவில்லை. என்ன செய்வதென்றும் எனக்குத் தோன்றவில்லை! என் மனமோ வெளியே சென்று பார்க்கத் துடிக்கிறது! உடல் விரைகின்றது! கீழே என்ன நடைபெறுகிறதெனத் தெரிந்துகொள்ளாமல் எங்ஙனம் யான் உள்ளே இருக்கமுடியும்? அவர்கள் வார்த்தைகளினால், "சில கொடியோர் தடிகளுடன் உள்ளே வந்து விட்டனரோ!" என நினைக்கவும் இடந்தந்தது. இரண்டு கைகளாலும் கதவினிடம் இருந்த இருவரை இழுத்துவிட்டு நான் வெளியே செல்ல முயன்றேன். அதற்குள் நான்குபேர் விரைந்துவந்து அக்கதவை அடைத்துக் கொண்டனர். கோபித்தும் பார்த்தேன்! "நீங்கள் மிக்க கோழைகள், உங்களுக்கு அறிவே இல்லை. எனக்கு வழி விடுவதற்கென்ன? இந்த அதிகப்பிரசங்கித்தனமான காரியத்தைச் செய்ய உங்களுக்கு யார் கற்பித்தது?" எனப் பல சினச் சொற்களையும் கூறினேன். அவற்றுள் ஒன்றும் பயன்பட்டிலது. அவ்வமயம் ஒன்றும் செய்ய இயலாமையின் யாரையேனும் உதவிக்கு அழைத்தலே நலம் என எனக்குத் தோன்றிற்று.
என் அறையில் பின்புறத்திற்குப் போகும் வழி ஒன்று உண்டு. அப்பின்புறமிருந்து பார்க்கில் எதிர் வீடு நன்றாகத் தெரியும். யான் அவ்வழியே கீழிறங்கிச் செல்லாததற்குக் காரணம், பின்புறக் கதவை இரவு ஒன்பது மணிக்கே பூட்டிவிடுவர். அத்திறவுகோல் முன்புறக் கூடத்தில் தொங்கவிடப்பட்டிருக்கும். அதைச் சென்று எடுப்பதற்கும் வழி இல்லை. இங்ஙனம் எதற்கும் வசதி இல்லாமையால், யான் என் அறையிலிருந்துகொண்டே, "யாரோ திருடர் உள் நுழைந்துள்ளனர். தயவுசெய்து உதவிக்கு வாருங்கள்," என உரக்கக் கூவினேன். உடனே சிலர் முன்புறமாய் ஓடிவந்தனர். அவர்களைப் பார்த்து முன்தெருவில் இருந்த சிலரும் உள்நுழைந்தனர். அப்போதுதான் என் அறையிலிருந்த மாணவிகள் எனக்கு வழி விட்டார்கள். யானும் கீழே இறங்கிச் சென்றேன். வந்தவர்கள் ஒவ்வோர் அறையையும் ஒவ்வொரு மூலையையும், பரண்களையும் "நிலையத்தில் தேடாது விடப்பட்ட இடம் ஒன்றும் இல்லை", என்னுமாறு ஆராய்ந்தார்கள். ஒருவரும் காணப்படவில்லை. ஆதலால், அவர்கள், "ஒருவருமில்லை எதையோ கண்டு சிறுமியர் மயங்கி இருப்பர். நடு இரவில் மறுபடியும் ஏதேனும் கலக்கமுண்டாயின் தெரிவியுங்கள், நாங்கள் வருகிறோம்," எனக் கூறிச் சென்றார்கள். அவ்வமயம் வந்தவர்களுள் யாரோ ஒருவன் ஒரு சிறுமியின் விலையுயர்ந்த காஷ்மீரச் சால்வை ஒன்றைக் களவாடிச் சென்றான். அதுதான் அவ்வாரவாரத்தின் பயன்.
அப்போதும் சில மாணவிகளுக்கிருந்த கலக்கம் முற்றும் நீங்கவில்லை. யான் மட்டும் இது வீணாய் உண்டான கலக்கமே என நன்றாய்த் தெரிந்துகொண்டேன். ஆயினும், அதன் காரணம் எனக்குப் புலப்படவில்லை. அதை அறிதற்கும், சிறுமிகளுக்கிருக்கும் ஐயத்தை நீக்குதற்கும் "அச்சத்தம் முதன்முதலில் யாரிடமிருந்து தோன்றியது" என விசாரிக்கப் புகுந்தபோது, "அவளைப் பார்த்து யான் கத்தினேன்; அவளைப் பார்த்து யான் கத்தினேன்," என ஒருவரிலிருந்து ஒருவரிடம் தொடர்ந்து கொண்டே சென்ற அஃது, இறுதியில் சமையற்காரியிடம் போய் நின்றது. அவளை வினவியபோது, வெள்ளைத்துணி கட்டிக்கொண்டிருந்த யாரோ ஒருவன் நடுக்கட்டிலிருந்து விரைந்து சென்றதாயும், அங்கு வந்து பார்த்தபோது அவன் காணாது போனதாயும், சொன்னாள். "அந்தச் சமயத்தில் யாரேனும் நடுக்கட்டிற்குச் சென்றுவந்தீரா?" எனக் கேட்க, முற்குறிப்பிட்ட மாணவி அச்சத்தம் கிளம்புதற்கு ஒரு விநாடியின் முன்பே தான் நடுக்கட்டிற்குச் சென்று தூக்கத்தினால் விரைந்துவந்து படுக்கையில் படுத்துக்கொண்டதாய்ச் செப்பினாள். "அவள் உடுத்துக்கொண்டிருந்தது வெள்ளைப்புடவை," என முன்னரே தெரிவித்துள்ளேன். இதனால், இக்கலக்கத் தோற்றத்திற்குக் காரணம் அப்பெண்ணே எனக் குழந்தைகளுக்கும் எனக்கும் நன்கு புலனாயிற்று. பின்புதான் அவர்கள் அச்சம் நீங்கியது. ஆயினும், வேலைக்காரி மட்டும் தான் செய்தது வெறும் ஆரவாரமென்பதை ஒப்புக்கொள்ளவே இல்லை. "தான் பார்த்தது ஆண்மகனே" என்றும், "அவன் ஒருகால் ஓடி விட்டிருக்கக்கூடும்," என்றும்தான் இறுதிமட்டும் கூறினாள். "வந்தவன் அங்ஙனம் ஓடுதற்கு வழியில்லாமையினாலும், அதற்குப்பிறகு கள்ளன் என்ற கனவுகூட ஏற்படாமையினாலும், அவள் தன் அறியாமையினால் உண்டாக்கிய ஆரவாரத்திற்கு நாணியே நாங்கள் தக்க காரணங்களுடன் கூறியவற்றிலும் சிறிதும் நம்பிக்கை கொள்ளாதொழிந்தாள்," எனத் தீர்மானிக்கவேண்டி வந்தது. இஃதொரு வீணான கலக்கமே!
★★★★★
பைத்தியக்காரன் படக்காட்சி ஒவ்வோர் ஆண்டும் ஆறாம் பாரத்தில் (S.S.L.C.) படிக்கும் மாணவிகளுக்கு, சோதனைக்குமுன் பாடங்களைப் படித்தற் பொருட்டுக் கல்லூரியில் ஒருவாரம் விடுமுறை விடுதல் உண்டு. அங்ஙனம் விடப்பட்ட ஒரு விடுமுறையில் ஒருநாள் வீட்டிலிருந்த மாணவிகளுள் ஒருத்தி, மூன்றாம் மாடியில் படித்துக்கொண்டிருந்தாள். நிலையக் கட்டிடத்தில் மூன்றாவது மாடிவரையும் தெருவிலிருந்தே மேலேறிப் போகப் படிகள் உண்டு. அப் படிக்கதவுகளை எப்போதும் பூட்டிவைத்தல் வழக்கம். யாரேனும் அப்பக்கம் வர நேர்ந்தாலன்றி, அக்கதவைத் திறத்தல் இல்லை. திறப்பினும் அப்போதே பூட்டிவிடுவர். என்ன காரணத்தினாலோ அன்று திறந்தவர் அக்கதவைப் பூட்ட மறந்துவிட்டனர். நாங்கள் யாவரும் கல்லூரிக்குச் சென்றவுடனே, ஒருவன் அவ்வழியாய் ஏறி மூன்றாம் மாடிக்கு வந்தான். அவனைப் பார்த்ததும் அவண் படித்துக்கொண்டிருந்த மாணவி, "யார் யார்?" எனக் கேட்டாள்.
அவன் மறுமொழி பகராமலே, உள்கூடத்திற்குச் சென்றான். அவன் ஒன்றும் பேசாமையினாலும், தான் தனியாய் இருப்பதனாலும் மிக்க அச்சங்கொண்ட அவள், விரைவாய்த் தெருப்புறமே இறங்கிப் படிக்கதவைத் தாளிட்டுக்கொண்டு கீழே இருந்த மற்றப் பிள்ளைகளுக்கும், சமையற்காரருக்கும் செய்தியைத் தெரிவித்தாள். அவ்வமயம் காவற்காரன் கடைக்குச் சென்றிருந்தமையின், சமையற்காரர் வீட்டிற்குள் இருந்த படிகளின் வழியாய் மூன்றாம் மாடிக்கு விரைந்து சென்றனர். சில மாணவிகளும் அவர்களைப் பின்தொடர்ந்தார்கள். மேல்மாடிக்குச் சென்ற அவர்கள் அங்கிருந்த பெரிய கூடம் அறைகள் எங்கும் தேடினார்கள். ஒருவரும் காணப்படவில்லை. ஆதலால், "அம்மாணவி, நம்மை ஏமாற்றவே இங்ஙனம் கூறினாள்," எனச் சிலரும், "எதையோ பார்த்து ஆள் எனக் கருதினாள்," எனச் சிலரும் சொல்லி அவளை ஏளனஞ் செய்தனர். அவளோ, "இல்லை; யான் உண்மையாகத்தான் மனிதனைப் பார்த்தேன்; அவன் எங்கோ ஒளிந்துகொண்டிருப்பான்," என ஊன்றிக் கூறினாள்; அவளுக்கு மேல்மாடிக்குச் செல்ல அச்சமாய் இருந்தமையின், கீழேயே நின்றிருந்தாள். ஆயினும், "நீயே வந்து பார்," என அவளை மற்றவர் வற்புறுத்தி அழைத்துச் சென்றனர். அவளும் சுற்றும் முற்றும் பார்த்தாள். அவள் கண்ணுக்கும் அவன் காணப்படவில்லை.
ஒன்றும் தெரியாது அவள் தயங்கினாள்! பின்பு கண் கண்ணாகப் பின்னப்பட்ட அழுக்குத் துணிப்பெட்டியில் ஒரு மனிதனிருப்பதாய் ஒருத்தி கண்ணிற்குப் புலப்பட்டது. அவள் மற்றவருக்கும் காட்டினாள். அதில் இருப்பவன் மனிதனே என மற்றவரும் தீர்மானித்தனர். அப்பெட்டியில் அவன் சுகமாக உட்கார்ந்துகொண்டிருந்தான். அவன் கண் முதலிய உறுப்புகள் அத்துளைகளின் வழியாய்த் தெரிந்தன; அவர்களைப் பார்த்ததும் அவன் ஓடி ஒளியவில்லை. உடனே அவர்கள், அவன் வெளியே ஓடிவிடாதவாறு அப்பெரிய கூடத்தின் கதவைப் பூட்டிக்கொண்டு, போலீஸ் நிலையத்திற்குச் செய்தியைத் தெரிவித்தார்கள்.
சேவகர் வந்தபோதும் அவன் அப்பெட்டியிலேயே உட்கார்ந்திருந்தானாம். சேவகர் அவனை வெளிவருமாறு எத்தனைமுறை சொல்லியும் அவன் வாராமல் ஒன்றிற்கொன்று மாறுபட்ட வார்த்தைகளைப் பேசிக்கொண்டிருந்தானாம். ஆதலால், அவர்கள் அவனை அப்பெட்டியோடும் தூக்கி ஒருவன் தலையில் வைத்துத் தெருவழியே எடுத்துச் சென்றனராம். அவ்வமயம் அவன் கூண்டிலடைப்பட்ட புலிபோலக் காணப்பட்டானாம். போலீஸ் நிலையத்திற்குப் போகுமட்டும் ஒவ்வொரு வீட்டிலுள்ளாரும் வெளிவந்து பார்த்தனராம். யாவருக்கும் அஃதொரு வியப்பாகவும் படக்காட்சி போன்றும் காணப்பட்டதாம். அன்று யாவருக்கும் பணமின்றிப் படக்காட்சி காணும் பாக்கியம் கிடைத்தது!
இச்செய்தியைக் கல்லூரியில் இருந்த எனக்குத் தெரிவித்தனர். யான் அங்கு வந்து பார்த்ததும், அவனை எங்கோ பார்த்ததாய் எனக்கு நினைவிருந்தது. சிறிது சிந்தித்துப் பார்த்தேன்; நிலையத்தில் இரண்டு மாதங்களுக்குமுன் மின்சார விளக்குகளைப் பழுது பார்த்தவர்களுள் இவனும் ஒருவன் என அறிந்தேன். அதைக் குறித்து அவனைக் கேட்க, அவனும் 'ஆம்' என ஒப்புக்கொண்டான். ஆனால், அவன் புத்திநிலையோடு பேசுவதாய்த் தெரியவில்லை. வேண்டுமென்றே அங்ஙனம் நடித்தானோ! அன்றி உண்மையோ அறியேன்! அதிகாரிகளிடமும் அவன் அங்ஙனமே முரண்படப் பேசியதால், அவன் பயித்தியக்காரனென்றே தீர்மானித்து அவனைத் தண்டனைக்கு உட்படுத்தாமலே விட்டுவிட்டார்கள். இஃதும் எங்களுக்கு இறைவன் செய்த பேருதவியே யாகும். அவனை உண்மைக் கள்வன் எனத் தீர்மானித்திருப்பின், அஃது ஒரு முடிவிற்கு வருமளவும், யானும் குழந்தைகளும் போலீஸ் கோர்ட்டுக்குப் பன்முறை செல்லவேண்டியிருக்குமல்லவா? அத்துன்பம் நேராதவாறு நீக்கிய இறைவனைப் பன்முறை வாழ்த்தினோம்.
தொகுப்பு: அரவிந்த் |