சகோதரி நிவேதிதா (பாகம் - 1)
வெளிநாட்டில் பிறந்து வளர்ந்தாலும் இந்தியாமீதும் இந்தியத் தத்துவங்கள் மீதும் ஆர்வம் கொண்டு, இந்தியாவை நாடி வந்து ஆன்மிக, சமூகப் பணியாற்றி, செயலிலும், சிந்தனையிலும் இந்தியராகவே வாழ்ந்தவர்கள் பலர். அவர்களில் ஒருவர் சகோதரி நிவேதிதா. இயற்பெயர் மார்கரெட் எலிஸபெத் நோபிள். அக்டோபர் 28, 1867 அன்று அயர்லாந்தில் உள்ள டங்கனனில் சாமுவேல் ரிச்மண்ட் நோபிள் - மேரி ஹாமில்டன் தம்பதியருக்கு மகளாகப் பிறந்தாள். தந்தை சாமுவேல் ஸ்காட்டிஷ் வம்சாவளியைச் சேர்ந்த நோபிள்ஸ் என்ற குடும்பத்தைச் சேர்ந்தவர். மத போதகர். மார்கரெட் உடன் பிறந்தவர்கள் மே மற்றும் ரிச்மண்ட். மார்கரெட் தந்தையின் மத சேவையால் கவரப்பட்டாள். சிறுவயதிலேயே மத உணர்வு, சேவை மனப்பான்மை, மனிதநேயம் ஆகியவற்றை வளர்த்துக் கொண்டாள். தந்தை மறைந்த பின் இங்கிலாந்தில் உள்ள தாத்தா, பாட்டியின் வீட்டில் வளர்ந்தாள். அவளது தொடக்கக் கல்வி அங்குதான் நடந்தது.

மார்கரெட் இளவயதில் இருந்தே கிறிஸ்துவின் உபதேசங்களிலும், சேவையிலும் அதிக நாட்டம் கொண்டிருந்தாள். அனைவரிடமும் அன்புடன் பழகினாள். சக மாணவிகளின் அன்பிற்குப் பாத்திரமானவளாக இருந்தாள். அந்தப் பள்ளியின் தலைமை மாணவியாகவும், மாணவர் குழுவின் தலைவியாகவும் விளங்கினாள். ஆசிரியர்களின் அன்பிற்குரியவளாக இருந்தாள்.

பள்ளிப்படிப்பை முடித்தபின் மார்கரெட், ஹாலிஃபாக்ஸ் கல்லூரியில் பட்டப் படிப்புக்காகச் சேர்க்கப்பட்டாள். கல்வியில் மிகவும் ஆர்வம்கொண்டு விளங்கினாள். கூடவே இசை, கலை, இயற்கை அறிவியல் ஆகியவற்றில் ஆர்வத்துடன் செயல்பட்டாள். 1884ல், பதினேழு வயதில் இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றாள். பின் கெஸ்விக் நகரில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றினாள். கூடவே வடக்கு வேல்ஸில் உள்ள ரெக்ஸ்ஹாமிலும் கற்பிக்கத் தொடங்கினார். ரெக்ஸ்ஹாம் ஒரு சுரங்க மையமாகவும், சுரங்கத் தொழிலாளர் அதிகம் வசிக்கும் பகுதியாகவும் இருந்தது. அங்குள்ள ஏழைகளுக்குக் கல்வி போதித்ததோடு தன்னால் இயன்ற சமூகப் பணிகளையும் செய்தாள்.

மார்கரெட், 1889ல் ரெக்ஸ்ஹாமை விட்டு செஸ்டர் நகருக்குச் சென்றார். அங்கு அவரது தங்கை மே லிவர்பூலில் ஆசிரியராகவும், மற்றொரு தங்கை ரிச்மண்ட் அதே நகரத்தில் கல்லூரி மாணவியாகவும் இருந்தனர். அங்கே மூவரும் ஒன்றாக வசித்தனர். தாய் அவர்களுக்குத் துணையாக இருந்தார்.

மார்கரெட் சுவிஸ் கல்வி சீர்திருத்தவாதி பெஸ்டலோஸியின் கல்வியியல் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டாள். அவளுக்கு இயல்பிலேயே குழந்தைகளின் மீது அளவற்ற அன்பு இருந்தது. அவர்களுக்கு நல்லவற்றை போதித்து, நல்ல முறையில் வளர்த்து ஆளாக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருந்தாள். 1890ம் ஆண்டில், அவள் தாயுடன் லண்டனின் புறநகர்ப் பகுதியான விம்பிள்டனுக்குச் சென்றாள். 1892ம் ஆண்டில் அங்கு சிறார்களுக்காக ஒரு பள்ளியை நிறுவினாள். அதற்கு ‘ரஸ்கின் பள்ளி’ என்று பெயரிட்டாள். அதில் ஐம்பதிற்கும் மேற்பட்ட குழந்தைகள் சேர்ந்தன. தன்னைப் போன்ற ஆர்வமுடைய சக ஆசிரியர்களை இணைத்துக் கொண்டு, அதனை ஒரு முன்மாதிரிப் பள்ளியாக உருவாக்கப் பாடுபட்டாள்.

கல்வியாளர்கள் லேடி ரிப்பன் மற்றும் லேடி இசபெல் மார்கெசன் ஆகியோருடனான நட்பு மார்கரெட்டிற்குப் பல புதிய வாசல்களைத் திறந்து விட்டது. அவர்கள் ஒரு சிறிய இலக்கிய வட்டத்தை உருவாக்கினர். அதில் மார்க்கரெட் இணைந்தார். அதன் கூட்டங்களில் பெர்னார்ட் ஷா, தாமஸ் ஹக்ஸ்லி போன்றோர் உரையாற்றினர். அவர்களது பேச்சுக்களால் மிகுந்த உத்வேகம் பெற்றாள் மார்கரெட்.

ஆனாலும் அவள் வாழ்க்கை அமைதியாக அமையவில்லை. அதில் பல்வேறு சிக்கல்கள் தோன்றிக் கொண்டிருந்தன. அவள் சமூக சேவையை முன்மாதிரியாகக் கொண்டு கல்வி போதித்தாலும், ஒருவிதமான தேடல் அவளுக்குள் இருந்தது. இந்நிலையில், ஒரு பத்திரிக்கைக் குறிப்பிலிருந்து, இந்தியாவிலிருந்து ஒரு சந்யாசி வந்திருப்பதாகவும், அவர் அற்புதமான சொல்லாற்றல் மிக்கவராக, அறிவுப் பெட்டகமாகத் திகழ்வதாகவும் தெரிய வந்தது. அவர் உரையாற்றிய கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் மார்கரெட்டிற்குக் கிடைத்தது. ஆர்வத்துடன் அந்தக் கூட்டத்திற்குச் சென்றாள்.



அது 1895ம் ஆண்டு. இந்தியாவிலிருந்து வந்திருந்த அந்த யோகி மக்கள் முன் உரையாற்றத் தொடங்கினார். வட்டமான அழகிய முகம். அதில் ஒரு தெளிவு. இனம் புரியாத அமைதி. ஒளிவீசும் கண்கள். தலைப்பாகை. நிமிர்ந்த தோற்றம், கம்பீரமான குரலும் உடலமைப்பும் உடைய அந்த நபரை வியப்புடன் பார்த்தாள் மார்கரெட். அவர் தோற்றமே அங்கிருந்தோருக்கு ஒருவித பணிவையும், மரியாதையையும் தோற்றுவித்தது. அவர் பேசத் தொடங்கினார். உறுத்தலில்லாத தெளிவான, கம்பீரமான குரல். அழகான ஆங்கில உச்சரிப்பு. சொல்ல வந்ததைத் தெளிவாகச் சொல்லும் பாங்கு என அவர் முதல் பேச்சிலேயே மார்கரெட்டின் உள்ளத்தைக் கவர்ந்து விட்டார். அவர் மிகப்பெரிய தத்துவ ஞானி என்றும், அவர்முன் தான் கற்றவை அனைத்தும் பொருளற்றவை என்பதாகவும் அவள் உடனே உணர்ந்து கொண்டாள். தன் சந்தேகங்களை அவரிடம் இருந்து தெளிவுபடுத்திக் கொள்ள முடிவு செய்தாள்.

அவர்தான் இந்தியாவிலிருந்து வந்திருக்கும் தவயோகி சுவாமி விவேகானந்தர் என்றும், பல வெளிநாடுகளுக்கும் சுற்றுப் பயணம் செய்து மக்களிடையே ஆன்மிக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் மகாயோகி என்றும் மார்கரெட் அறிந்தாள். அவரைச் சந்திக்க ஆவல் கொண்டு, தனது தோழியர் மூலம் ஏற்பாடு செய்தாள்.

லேடி இசபெல் மார்கெசனின் வீட்டில்தான் மார்கரெட் முதன்முதலில் சுவாமி விவேகானந்தரைச் சந்தித்தாள். நாடுகள் கருத்துப் பரிமாறல் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று தான் நம்பியதால்தான் அயல்நாடுகளுக்குப் புறப்பட்டு வந்ததாக சுவாமி விவேகானந்தர் அவளிடம் கூறினார். கடவுள் மற்றும் ஆன்மிக முன்னேற்றத்தின் மூன்று பாதைகளான கர்மம், ஞானம், பக்தி ஆகியவை பற்றி அவர் விரிவாக உரையாற்றினார். மார்கரெட் சொற்பொழிவுகளைக் கவனமாகக் கேட்டாள். விவேகானந்தரின் உயர்ந்த லட்சியங்களாலும், ஆத்மாத்தமான உரையாடலாலும் ஈர்க்கப்பட்டாள்.

லண்டன் மாநகரில் சுவாமி விவேகானந்தர் நிகழ்த்திய வேறு சில சொற்பொழிவுகளுக்கும் அவள் சென்றாள். அவரது மகத்துவத்தையும், ஞானத் தெளிவையும் உணர்ந்தாள். அந்தச் சொற்பொழிவுகளின் போது பல்வேறு கேள்விகளை எழுப்பி அதற்கான விளக்கங்களையும் அவரிடமிருந்து பெற்றாள். பின் சுவாமி விவேகானந்தரைச் சந்தித்து, தான் ஆற்றி வரும் பணிகளைப் பற்றித் தெரிவித்து அவரது ஆசியைப் பெற்றாள்.

லண்டனிலிருந்து விடைபெற்றுச் சென்ற சுவாமி விவேகானந்தர், மீண்டும் ஏப்ரல் 1896ல் லண்டனுக்கு வந்தார். பல்வேறு அமைப்புகள் நடத்திய கூட்டங்களில் உரையாற்றினார். மார்கரெட் இந்தக் கூட்டங்களில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டாள். சுவாமி விவேகானந்தரைச் சந்தித்து அவரிடம் தனது வாழ்க்கைப் பயணம், சிறு வயதில் பெற்றோர் அன்பு இல்லாமல் வளர்ந்தது, மணமாவதற்கு இருமுறை எடுத்துக் கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தது, அதனால் தன் கவனத்தைச் சமூக சேவையில் திருப்பியது உட்படத் தன் வாழ்க்கைச் சம்பவங்கள் எல்லாவற்றையும் எடுத்துரைத்தாள். பின் சுவாமி விவேகானந்தரையே குருவாகக் கருதுவதாகவும், அவருடன் இந்தியா வந்து சேவை செய்ய ஆர்வத்துடன் இருப்பதாகவும் தெரிவித்தாள். ஆனால் சுவாமிகள் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அவள் இதுபற்றி நன்கு யோசித்துப் பின்னரே முடிவெடுக்க வேண்டும் என்று கூறிவிட்டு இந்தியா திரும்பிச் சென்றார்.

சில மாதங்கள் கழிந்தன. மார்கரெட் இந்தியா சென்றே தீர்வது என்றும், அங்கு சென்று அந்த வீரத்துறவியர் குழாத்துடன் இணைந்து தன்னால் முடிந்த சமூக சேவைப் பணிகளைச் செய்வது என்றும் முடிவு செய்தாள். அதற்கான ஒப்புதல் வேண்டி சுவாமி விவேகானந்தருக்குக் கடிதம் எழுதினாள். சுவாமிகள் அவளது முடிவையும், தைரியத்தையும் சேவை மனப்பான்மையையும், நல்லெண்ணத்தையும் பாராட்டியதோடு, இந்தியாவின் வாழ்க்கை முறை, அங்குள்ள மக்களின் நிலைமை, வெளிநாட்டவர்கள் இங்கு வந்து நிரந்தரமாகத் தங்கினால் சந்திக்க நேரும் சங்கடங்கள் என்பது பற்றியெல்லாம் விரிவாகக் கடிதம் எழுதி, "நான் என்னால் முடிந்த உதவிகளை இங்கு செய்ய முடிந்தாலும், தன் கையே தனக்கு உதவி என்ற எண்ணத்திலேயே வாழ்க்கை நடத்திவர வேண்டியிருக்கும். ஆகவே யோசித்துச் செயல்படவும்" என்று பதில் கடிதம் எழுதினார்.

தான் அதற்கு முழுவதும் தயாராக இருப்பதாக பதில் கடிதம் எழுதிய மார்கரெட், இந்தியா புறப்படத் தயாரானாள். தனது பொறுப்புகளை எல்லாம் ஒழுங்குபடுத்தினாள். தனது பள்ளி மேற்பார்வைப் பொறுப்பை தன் சகோதரியிடம் ஒப்படைத்தாள். குடும்பத்தினர் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டாள். 1898-ல், இந்தியாவிற்குப் புறப்பட்டாள்.

(தொடரும்)

பா.சு. ரமணன்

© TamilOnline.com