"எந்தப் பணியைச் செய்தாலும் அதில் முழு ஈடுபாடு, அர்ப்பணிப்பு, மும்முரமான உழைப்பு, ஆக்கபூர்வமான செயல்பாடு ஆகியவை இருக்கவேண்டும்" என்ற கொள்கையோடு செயல்பட்டு வருபவர் சிவசங்கரி. நாடறிந்த எழுத்தாளர். மத்தியதர மக்களின் வாழ்க்கையைக் கதைக்களன்களாகக் கொண்டு பல படைப்புகளைத் தந்தவர். பல்வேறு சமூகநலப் பணிகளை முன்னெடுத்து வருபவர். இந்திய இலக்கியங்களையும், எழுத்தாளர்களையும், படைப்புகளையும் ஒருங்கிணைத்து சிவசங்கரி எழுதிய 'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு' நூல்கள் மிகப்பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகின்றன. தனது முயற்சிகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்ற சிவசங்கரியின் சாதனை மகுடத்தில் மேலும் ஒரு மயிற்பீலியாக சமீபத்தில் இந்திய அரசு அவருக்கு 'பத்மஸ்ரீ' விருதை அறிவித்துள்ளது. 83 வயதாகும் சிவசங்கரியின் வாழ்க்கை ஒவ்வொரும் அறிந்துகொள்ள வேண்டிய ஒன்று.

பிறப்பு சிவசங்கரி, அக்டோபர் 14, 1942 அன்று, சென்னையில், சூர்யநாராயணன் - ராஜலட்சுமி தம்பதியினருக்குப் பிறந்தார். உடன் பிறந்தோர் இரண்டு அண்ணன்கள், மூத்த சகோதரி ஒருவர். தியாகராயநகரில் திருமலைப்பிள்ளை தெருவில் ஒரு பெரிய பங்களாவில் பத்து வயதுவரை குடியிருந்தார். அந்த நாட்களை நினைவுகூரும் சிவசங்கரி, "எங்கள் வீடு அத்துவானமாக இருக்கும். அடுத்த வீடு எதுவும் கிடையாது. வால்மீகி தெருதான் பக்கத்துத் தெரு. இப்போது இருக்கும் சின்னையா தெரு அப்போது கிடையாது. எல்லாமே மைதானம்தான். முன் மைதானத்தைத் தாண்டி, எங்கள் வீட்டு வேலியைத் தாண்டி, இன்னும் கொஞ்சம் மைதானத்தைத் தாண்டி திருமலைப் பிள்ளை சாலையை அடைந்தால், நேரெதிர் வீடு திரு. காமராஜர் அவர்கள் வீடு. இப்போது அவரது நினைவு இல்லமாக இருக்கிறதே, அதே வீடுதான்!" என்கிறார், தனது சுயசரிதையான 'சூரிய வம்சம்' நூலில்.
திரைப்படங்களாக வெளிவந்த சிவசங்கரியின் நாவல்கள் அவன் அவள் அது (ஒரு சிங்கம் முயலாகிறது நாவல்) - 1980 47 நாட்கள் - 1981 நண்டு - 1981 தியாகு 1990 குட்டி - 2001
தந்தையின் கண்டிப்பான அரவணைப்பில் வளர்ந்த சிவசங்கரி, பள்ளிக் கல்வியை தி.நகர் சாரதா வித்யாலயாவில் கற்றார். கல்லூரிக் கல்வி எஸ்.ஐ.ஈ.டி. மகளிர் கல்லூரியில். அங்கு விலங்கியலில் இளநிலைப் பட்டம் பெற்றார். கல்லூரியில் முதலாவதாகவும், பல்கலைக்கழக அளவில் ஒன்பதாவதாகவும் தேர்ச்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. கல்லூரிக் காலத்தில் NCC, பேச்சுப்போட்டி, நாடகம், பாட்டு, நடனம் என்று பல துறைகளிலும் ஆர்வத்துடன் பங்கேற்றுப் பரிசுகள் வென்றார்.
சிவசங்கரி இளவயதிலேயே, தந்தையால், "பெண்கள் யாரையும் நம்பித்தான் வாழ வேண்டும் என்ற நிலை இல்லாமல் பெண்கள் எந்தநிலையிலும் நம்மால் வாழ முடியும் என்கிற தன்னம்பிக்கையோடு வாழவேண்டும்" என்று ஊக்குவிக்கப்பட்டார். அதுவே அவரது பிற்காலச் சாதனைகள் பலவற்றிற்கு அடித்தளமானது.
கல்வியினூடே இசையும், நடனமும் கற்றார். பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் பங்களித்தார்.

திருமணம் சிவசங்கரி, ஏப்ரல் 11, 1963-ல், 20 வயதில் சந்திரசேகரனை மணந்தார். சந்திரசேகரன், போபால் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தில் எஞ்சினீயராகப் பணியாற்றி வந்தார். திருமணமான புதிதில் போபாலுக்குச் சென்று வசித்தார். மூன்று வருடங்களுக்குப் பின் 1966-ல் மாற்றலாகிச் சென்னைக்கு இருவரும் வந்து வசித்தனர் . சிவசங்கரி, ஃபர்ஸ்ட் நேஷனல் சிட்டி வங்கியில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றினார்.
சிவசங்கரியின் நூல்கள் நாவல்கள்/குறுநாவல்கள்: சாந்தா ஏன் அழுகிறாள், காத்திருக்கிறேன், எதற்காக?, திரிவேணி சங்கமம், ஏன்?, நண்டு, நதியின் வேகத்தோடு, தனிமை, சுறாமீன்கள், மெள்ள மெள்ள, 47 நாட்கள், தப்புக் கணக்கு, ராமனைப் போல் ஒரு பிள்ளை, அம்மா ப்ளீஸ் எனக்காக, ஆயுள் தண்டனை, வளர்த்த கடா, இரண்டு பேர், ஒரு சிங்கம் முயலாகிறது, ஒரு அப்பாவும் இரண்டு பெண்களும், துள்ள முடியாத புள்ளிமான், ஒரு பகல் ஒரு இரவு, வெட்கம் கெட்டவர்கள், ஒரு மனிதனின் கதை, அம்மா, அவர்களுக்குப் புரியாது, பிராயச்சித்தம், போகப்போக, தான் தன் சுகம், நெருஞ்சி முள், பார்வை, காளான், கடைசியில், கோழைகள், தவம், திரிசங்கு சொர்க்கம், மாலையில் பூக்கும் மலர்கள், கப்பல் பறவை, விமோச்சனம், மூக்கணாங்கயிறு, காற்றுள்ள போதே, அப்போதும் இப்போதும், நட்பு, பாலங்கள், ஆயிரம் காலத்துப் பயிர், ஓவர் டோஸ், தகப்பன் சாமி, காரணங்கள், அடி மாடுகள், கண் கெட்ட பின், இதுவும் ஒரு தாஜ்மகால், கருணைக் கொலை, இன்னொரு காரணம், பயிரை மேய்ந்த வேலிகள், தீர்வு, அவன், பொய், ஒற்றைப் பறவை, நூலேணி, அது சரி; அப்புறம்?, மண் குதிரை, ருசி கண்ட பூனை, அம்மா பிள்ளை, இனி தொடராது, இரட்டை நாக்குகள், மலையின் அடுத்த பக்கம், வேரில்லாத மரங்கள், அந்த அம்மா ரொம்ப நல்லவங்க, கிணற்றுத் தவளைகள், விலை, பச்சோந்திகள், ஏரிக்கடியில் சில கனவுகள், வானத்து நிலா, உயர்ந்தவர்கள், ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால், முதல் கோணல், நான் நானாக, குட்டி, சுட்டமண், இவர்களும் அவர்களும், இன்னொருத்தி + இன்னொருத்தி, காதல் என்பது எதுவரை, நப்பாசை வாழ்க்கை வரலாறுகள்: இந்திராவின் கதை, அப்பா (ஜி.டி. நாயுடுவின் கதை), அறியாத முகங்கள் (ஜி.கே. மூப்பனார் வரலாறு), சூரியவம்சம் - இரண்டு பாகங்கள் (தன் வரலாறு) பயணக் கட்டுரைகள்: அனுபவங்கள் புதுமையானவை, அனுபவங்கள் தொடர்கின்றன, மனம் கவர்ந்த மலேசியா, பிரதமருடன் ஒரு பயணம்-1, பிரதமருடன் ஒரு பயணம்-II, புதிய சுவடுகள், புதுப்புது அனுபவங்கள், ஹாங்காங் - சீனா – பாங்காக், ஆஹா! அரபு நாடுகள், சொர்க்கங்களில் சில நாட்கள், ஓலா, ஒலே, உலா, மகாத்மா பிறந்த மண்ணில், வெள்ளி என்றால் வெனிஸ் நகரம் தான் கட்டுரைத் தொகுப்புகள்: என் செல்லங்கள், சின்ன நூல்கண்டா நம்மைச் சிறைப்படுத்துவது?, சில மனிதர்கள் சில அனுபவங்கள், என் கண்ணோட்டத்தில், புதிய கோணங்கள், உரத்த சிந்தனை, கொஞ்சம் யோசிக்கலாமே... சிறுகதைத் தொகுப்புகள்: உண்மைக் கதைகள், டிரங்கால், கழுகு, அணில்கள், புல்தடுக்கி பயில்வான்கள், நட்பு, அரவிந்தர் சொல்கிறார், தெப்பக்குளம், அவர்கள் பேசட்டும், குழப்பங்கள், பட்டாம் பூச்சியும் தூக்கமும் சிறார் நூல்: அம்மா சொன்ன கதைகள் (புத்தகமும் ஒலிநாடாவும் இணைந்தது) இலக்கிய ஆய்வுகள்: இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு (நான்கு பாகங்கள்) மொழிபெயர்ப்புகள்: கடவுள் என் சிறந்த நண்பர் (சுவாமி சுத்தானந்தா உரைகள்), எண்ணம் வசப்படும் (சுவாமி சுத்தானந்தா உரைகள்), ராவி நதியில் குல்ஸார் (சிறுகதைகள்), சாய்பாபா இன்னும் வாழ்கிறார் (மூலம்: ஜெயவாஹி (கட்டுரைநூல்), தீர்க்கதரிசி (டாக்டர் பி.சி. ரெட்டி வாழ்க்கை வரலாறு), ஸ்ரீ சாயி சரித்திர தரிசனம் ஆங்கில நூல்கள்: The Betrayal and Other Stories, Portable Roots, Deception, Bridges, The Trip to Nowhere, Tyagu
எழுத்துப் பயணம் இந்தக் காலகட்டத்தில்தான் எழுத்துலகில் நுழைந்தார் சிவசங்கரி. முதல் சிறுகதை, 'அவர்கள் பேசட்டும்'. மே, 12, 1968 தேதியிட்ட கல்கி இதழில் 'சிவசங்கரி சந்திரசேகரன்' என்ற பெயரில் வெளியானது. கதையால் கவரப்பட்ட கல்கி இதழ் ஆசிரியர் கி. ராஜேந்திரன், "உங்களால் மன உணர்வுகளை அழகாக வெளிப்படுத்த முடிகிறது. எனவே, அதையே முக்கிய அம்சமாகக் கொண்டு எழுதுங்கள்" என்று சிவசங்கரியை ஊக்குவித்தார். சிவசங்கரியின் இரண்டாவது சிறுகதை 'உனக்குத் தெரியுமா?' ஆனந்த விகடனில் வெளியானது. ஆசிரியர் மணியன், சிவசங்கரியைத் தொடர்ந்து எழுத ஊக்குவித்தார். முதல் நாவல் 'எதற்காக?' ஆனந்த விகடனில் தொடராக 1970-ல் வெளிவந்தது. சிவசங்கரி எழுதிய சிறுகதைகளையும், தொடர்கதைகளையும் சேர்த்து 'காத்திருக்கிறேன்' என்ற தலைப்பில் வானதி பதிப்பகம் 1970-ல் நூலாக வெளியிட்டது. கிருபானந்த வாரியார் தலைமையில் நூல் வெளியீட்டு விழா நடந்தது. அதுதான் சிவசங்கரியின் முதல் நூல். தொடர்ந்து பல்வேறு இதழ்களில் பல படைப்புகளை எழுதினார். சிறுகதைகள், கட்டுரைகள், பேட்டிகள், தொடர்கள், நாவல்கள் மூலம் நாடறிந்த எழுத்தாளரானார்.

விழுப்புரம் வாழ்க்கை இந்நிலையில், குடும்பச் சூழலால் கணவன், மனைவி இருவரும் சென்னையில் பார்த்து வந்த வேலைகளை விட்டுவிட்டு, கணவரது சொந்த ஊரான விழுப்புரத்திற்குச் சென்று வசிக்க நேர்ந்தது. அங்கு கணவர் சந்திரசேகரன் குடும்பத்தினருக்குச் சொந்தமாக 'ஸ்பன்பைப் கம்பெனி' என்னும் சிமென்ட் பைப் தொழிற்சாலை ஒன்று இருந்தது. அதை அவர்கள் நிர்வகித்தனர்.
மேலும் படைப்பாக்க முயற்சிகள் சிவசங்கரிக்கு, கிராமத்துச் சூழல் மாறுபட்ட பல அனுபவங்களைத் தந்தது. அவரது எழுத்து முயற்சி தீவிரப்பட்டது. எழுத நேரமும் கிடைத்தது. கணவர் மனைவியின் முயற்சிகளைப் பலவிதங்களில் ஊக்குவித்தார். விதவிதமான கருப்பொருள்களில் நாவல், குறுநாவல், சிறுகதை, கட்டுரை என்று நிறைய எழுதத் தொடங்கினார் சிவசங்கரி. பெண்கள் மட்டுமல்லாமல் ஆண் வாசகர்களாலும் சிவசங்கரியின் படைப்புகள் வரவேற்கப்பட்டன. தினமணி கதிர் இதழ், ஒரு விழா ஏற்பாடு செய்து சிவசங்கரியை மேடையேற்றி வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தது. 1980ம் ஆண்டு ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த 'ஒரு மனிதனின் கதை' வாசகர்களால் வெகுவாக வரவேற்கப்பட்டது. ஆனந்த விகடனில் வெளியான 'பாலங்கள்' தொடர் சிவசங்கரிக்கு மேலும் புகழைச் சேர்த்தது. மாறிவரும் கலாசாரப் பின்னணிகளை, நவீன சூழல்களை, பிராமண சமூகம் எப்படி எதிர்கொண்டது என்பதைப் பேசும் நவீனப் படைப்பாகவும், நூறாண்டுகளுக்கு முந்தைய பிராமண வாழ்க்கையைச் சித்திரிக்கும் நாவலாகவும் மூன்று பகுதிகளாக 'பாலங்கள்' வந்து மிகுந்த வாசக வரவேற்பைப் பெற்றது. சிவசங்கரியின் முதல் சிறுகதைத் தொகுதிக்கு ஜெயகாந்தன் முன்னுரை வழங்கியிருந்தார்.

திரிவேணி சங்கமம், 47 நாட்கள், தப்புக்கணக்கு, ஒரு சிங்கம் முயலாகிறது, ஒரு பகல் ஒரு நிலவு, வளர்த்தகடா, வெட்கம் கெட்டவர்கள், விடியலை நோக்கி, ஆயுள் தண்டனை, கருணைக் கொலை, மலையின் அடுத்த பக்கம் போன்ற சிவசங்கரியின் புதினங்கள் குறிப்பிடத்தகுந்தன. 'அவன்' என்ற நாவல் உக்ரேனிய, ஆங்கில மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டது. 'ஒரு மனிதனின் கதை' நாவல் 'தியாகு' என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டது.
முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, ஜி.டி.நாயுடு, ஜி.கே. மூப்பனார் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளை எழுதியுள்ளார் சிவசங்கரி. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, அன்னை தெரசா போன்றோரை நேர்காணல் செய்துள்ளார். சிவசங்கரியின் பயண நூல்களான புதுப்புது அனுபவங்கள், பிரதமருடன் பயணங்கள், பாரத தரிசனம் போன்றவை முக்கியமானவை. மேனாள் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் இருமுறை சோகம் (CHOGM) வெளிநாட்டுப் பயணங்களின் போது உடன் சென்ற ஒரே பெண் எழுத்தாளர் சிவசங்கரிதான். அவரது அந்தப் பயணக் கதைகள் ஜப்பானிய மொழியில் பெயர்க்கப்பட்டு, ஜப்பானின் முதல் மொழி பெயர்ப்புப் பயணக் கதையாக 1995 மே மாதத்தில் வெளியிடப்பட்டது
சிவசங்கரி, சிறார் படைப்புகளையும் தந்துள்ளார். 'அம்மா சொன்ன கதைகள்' என்ற தலைப்பில் அவற்றைத் தானே தன் குரலில் பேசி ஒலிப்பேழையாகவும் வெளியிட்டுள்ளார்.
சிவசங்கரி, 1986-ல் கணவனை இழந்தார். அதன் பிறகு விழுப்புரத்திலிருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்தார். தொடர்ந்து படைப்பிலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டார்.

இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு சிவசங்கரியின் பணிகளில் குறிப்பிடத்தகுந்தது, 'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு' (Knit India Through Literature) என்ற தலைப்பில், தினமணி கதிர் இதழில் அவர் தொடங்கிய எழுத்து முயற்சி. இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட 18 மொழிகளில் எழுதும் வெவ்வேறு தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் நேர்காணல் செய்து அவர்களின் படைப்பு ஒன்றையும் மொழியாக்கம் செய்து வெளியிட்டார். இதன் முதல் தென்னிந்திய மொழித் தொகுப்பு 1998 ஜனவரியில் வெளியானது. இது பின்னர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்னும் நான்கு தொகுதிகளாக வெளிவந்தது. இந்திய இலக்கியத்தின் மிகப் பெரிய முன்னெடுப்பாக இம்முயற்சி கருதப்பட்டது.
சிவசங்கரி, நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், குறுநாவல்கள், 35 நாவல்கள், 13 பயணக்கட்டுரைத் தொகுப்புகள், ஏழு கட்டுரைத் தொகுப்புகள், இரண்டு வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். இவரது தன் வரலாற்று நூலான 'சூரியவம்சம்' குறிப்பிடத்தகுந்த ஒன்று. ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்டத்துக்காக சிவசங்கரியின் கதைகளை ஆய்வு செய்துள்ளனர்.

தொடர்களும் திரைப்படங்களும் சிவசங்கரியின் படைப்புகளுக்கு இருந்த வரவேற்பைத் தொடர்ந்து அவை திரைப்படங்களாகவும், தொலைக்காட்சித் தொடர்களாகவும் வெளிவந்தன. ஆறு நாவல்கள் தமிழிலும், கன்னடத்தில் ஒன்றும், தெலுங்கில் ஒன்றுமாகத் திரைப்படங்களாகின. போதைமருந்துப் பழக்கம் குறித்த நாவலும், மதுவுக்கும் அடிமையாதல், முதியோர் இல்லம் ஆகியவற்றைப் பற்றிய நாவல்களும், வேறு பல கதைகளும் தொலைக்காட்சித் தொடர்களாக வெளிவந்தன. 'ஒரு மனிதனின் கதை' தமிழ்த் தொடர் இருமுறை தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பானது. 'சுபா' இந்தித் தொடர் பரவலான வரவேற்பைப் பெற்றது. 'ஒரு பெண்ணின் கதை' தொடரும் நல்ல வரவேற்பைப் பெற்றது. 'திரிவேணி சங்கமம்' என்ற நாவல் 'நிம்மதி உங்கள் சாய்ஸ்' தொடராகவும், 'மெள்ள மெள்ள...' என்ற நாவல் 'சொந்தம்' என்ற நெடுந்தொடராகவும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின. 'நேற்று, இன்று, நாளை?' என்ற தலைப்பில் சன் டி.வி.-யில் ஒவ்வொரு வாரமும் பல தலைப்புகளில் இவர் நடத்திய கருத்தரங்குகள் மிகவும் புகழ்பெற்றன.

சமூகப் பணிகள் 'கண்தானம்' குறித்த சிவசங்கரியின் கட்டுரை வாசகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. பலரும் தங்கள் கண்களைத் தானம் செய்வதாக அறிவிக்க வைத்தது. ஊனமுற்றோர், முதியோர், மனவளர்ச்சி குன்றியோர், திருநங்கைககள் எனச் சமூகத்தின் பல்வேறு வகை மனிதர்களைப் பற்றிய சிவசங்கரியின் கட்டுரைகள், சமுதாய விழிப்புணர்வைத் தூண்டின.
சிவசங்கரி, அக்னி (AGNI - Awakened Group for National Integration) என்ற அமைப்பின் நிறுவனராக இருந்து பல சமூகப் பணிகளை முன்னெடுத்தார். அடையாறு தரமணியில் உள்ள வி.எச்.எஸ். மருத்துவமனையில், போதைமருந்து மற்றும் மது அடிமைகளுக்குச் சிகிச்சையளிக்கும் 'ராஜாஜி புனர்வாழ்வு மையம்' என்ற சிகிச்சைப் பிரிவு, இந்தியன் வங்கியின் பொருளுதவியுடன் தொடங்கப்பட சிவசங்கரி முக்கியக் காரணமாக அமைந்தார்.
மத்திய சமூக வாரியம், போதை மருந்தைத் தடுக்கவும், ஒழிக்கவும் உருவாக்கிய மத்திய அரசுக் குழுவிலும், அகில இந்திய வானொலி போன்ற பல அமைப்புகளிலும் உறுப்பினராகப் பணிபுரிந்தார்.
சிவசங்கரியின் இணையதளம்: www.sivasankari.in
சிவசங்கரியின் நூல்களை வாசிக்க/வாங்க/ ஒலி வடிவில் கேட்க: www.pustaka.co.in
அரவிந்த்
விருதுகள் * சிவசங்கரி, ஆனந்த விகடன், கல்கி, அமுதசுரபி போன்ற இதழ்களில் வெளியான பல சிறுகதைகளுக்காக இலக்கியச் சிந்தனை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பரிசுகளைப் பெற்றார் * 'பாலங்கள்' நாவலுக்கு 'கஸ்தூரி சீனிவாசன்' விருது * 'சின்ன நூல்கண்டா நம்மைச் சிறைப்படுத்துவது?' தொகுப்புக்கு 'ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார்' பரிசு * 'வேரில்லாத மரங்கள்' நாவலுக்கு கல்கத்தாவின் பாரதீய பாஷா பரிஷத் விருது * தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கம், சென்னை ரோட்டரி சங்கம் அளித்த 'For the Sake of Honour' விருது * தமிழகக் காங்கிரஸ் கமிட்டியின் ராஜீவ் விருது * தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழன்னை விருது * அரிமா சங்கத்தினரின் மெல்வின் ஜோன்ஸ் விருது * சென்னை தெலுங்கு ஆர்ட்ஸ் அகாடமி விருது * ஃபெமீனா ஆங்கில இதழால் ஆகஸ்ட் 15, 1997 சுதந்திரப் பொன்விழாவின்போது, இந்தியாவை உருவாக்கிய ஐம்பது பெண்மணிகளுள் ஒருவராகச் சிவசங்கரி கௌரவிக்கப்பட்டார். * 'அம்மா சொன்ன கதைகள்' நூலுக்கு திருப்பூர் தமிழ்ச்சங்கம் அளித்த 1998ன் சிறந்த சிறுவர் நூலுக்கான விருது * திருச்சி மகளிர் சங்கங்கள் இணைந்து அளித்த 'சிந்தனைச் செல்வி விருது (1998) * பாரதீய வித்யா பவன் சென்னைக் கேந்திரமும், டைரக்டர் கே.சுப்ரமணியம் நினைவு அறக்கட்டளையும் இணைந்தளித்த, 'ஸ்திரீ ரத்னா' விருது (1998) * பெங்களூரிலுள்ள அத்திமப்பே ஃபவுண்டேஷன் அமைப்பு, தேசிய அளவில் சிறந்த பெண்மணியாக சிவசங்கரியைத் தேர்ந்தெடுத்து மனுஸ்ரீ விருதை ஏப்ரல் 1998-இல் வழங்கியது. * அமெரிக்காவின் டென்னஸ்ஸி மாகாணத்திலுள்ள ஓக் ரட்ஜ் நகரின் மேயர், 1999 ஜூலையில், சிவசங்கரிக்கு ஓக் ரிட்ஜ் நகரின் கௌரவப் பிரஜை விருது வழங்கிச் சிறப்பித்தார். (இவ்விருதைப் பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் சிவசங்கரி) * சர்வதேச மகளிர் சங்கத்தின் 1999ம் ஆண்டுக்கான சிறந்த பெண்மணி விருது * சென்னை தெலுங்கு ஆர்ட்ஸ் அகாடமி விருது * சென்னை மயிலாப்பூர் அகாடமி அளித்த ROLL OF HONOUR விருது (2000) * ராஷ்ட்ரீய ஹிந்தி அகாடமியின் பிரேம்சந்த் ராஷ்ட்ரீய சாஹித்திய சம்மன் விருது (2001) * சென்னை, வானவில் பண்பாட்டு மையம் அளித்த பாரதி விருது (2002) * நல்லி திசையெட்டும் மொழியாக்க விருது (2007) * ஆந்திர மாநிலத்தின் யுவகலாவாஹினி இலக்கியக் கலைக் குழு வழங்கிய 'கோபிசந்த் இலக்கிய தேசிய விருது' (2008) * சென்னை கம்பன் கழகம் அளித்த கே. சுவாமிநாதன் நினைவு விருது (2009) * ஜஸ்டிஸ் பஷீர் அகமது சையத் கல்லூரி வழங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கான விருது (2010) * பெங்களூர் இந்தியா டெவலெப்மெண்ட் ஃபவுண்டேஷன் அளித்த தேச ஸ்னேஹி விருது (2012) * பொற்றாமரை கலைய இலக்கிய கழகம் வழங்கிய பொற்றாமரை விருது (2013) * சென்னை விடியல் அறக்கட்டளை வழங்கிய பாரதி விருது (2015) * கோவை உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம் வழங்கிய சிறந்த படைப்பாளர் விருது (2016) * சென்னை பாரதியார் சங்கம் அளித்த பாரதியார் விருது (2017) * சென்னை வா.செ. குலோத்துங்கன் தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை விருது (2017) * 'தமிழ் நாட்டின் பெருமை' 'Pride of Tamil Nadu' ரவுண்டு டேபிள் – இந்தியாவினால் வழங்கப்பட்டது (2018) * தமிழக அரசு வழங்கிய அகில இந்திய 'பாரதி விருது' (2019) * அறிவைத் தூண்டும் எழுத்தாற்றலுக்காக பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அளித்த கௌரவம் * 'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு' நூலுக்காக கனடா தமிழ் இலக்கியத்தோட்டம் அளித்த விருது (2023) * விஸ்வம்பரா சி.நாராயண ரெட்டி விருது (2024) * இலங்கைக் கம்பன் கழக விருது (2024) * இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது (2026)
சிவசங்கரி - சில குறிப்புகள் சிவசங்கரி, 1986-ல் செப்டம்பரிலிருந்து நான்கு மாதங்கள் அமெரிக்காவிலுள்ள அயோவா (IOWA) நகரில் சர்வதேச எழுத்தாளர் மாநாட்டில் பங்கெடுத்தார்.
மத்தியத் திரைப்படத் தணிக்கைக்குழுவின் நியமன உறுப்பினராக மூன்று ஆண்டுகள் பணியாற்றினார்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் செனட் உறுப்பினராகவும், கோவை அவிநாசிலிங்கம் கலைக் கல்லூரி, காந்திகிராமம் பல்கலைக்கழகம் போன்றவற்றில் ஆலோசனைக்குழு உறுப்பினராகவும் பணியாற்றினார்.
சென்னை வானொலியின் செயல் விளக்க கமிட்டியிலும், பாண்டிச்சேரி கலாசார இலாகாவிலும் உயர்மட்டக் குழுவின் உறுப்பினராகப் பொறுப்பேற்றுச் செயல்பட்டார்.
போதை மருந்துக்கு அடிமையாகி உள்ளவர்களுக்கு சிகிச்சை அளித்து மறுவாழ்வு பெற உதவும் வகையில் அப்போலோ, மருத்தவமனையில் இயங்கிய 'அடாப்ட்' என்ற மையத்தின் ஆலோசனைக் குழு அங்கத்தினராகப் பணியாற்றினார்.
அந்த நாள் ஞாபகம்! என்னுடைய முதல் நினைவுகள் என்ன என்று யோசிக்கும்போது, எனக்கே ரொம்பவும் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. அதை நான் சொன்னால் சில பேருக்கு நம்புவதுகூடக் கஷ்டமாக இருக்கும். எனக்கு ஒன்றரை வயது இருக்கும் என்று நினைக்கிறேன். அப்போதெல்லாம் என் அப்பா கார் ஓட்டும்போது என்னைத் தனது இடது தொடை மீது உட்கார வைத்துக்கொண்டுதான் ஓட்டுவார். காரின் ஸ்டியரிங் வீல், அப்பாவின் கைகள், அவரது மடியில் நான் உட்கார்ந்திருந்தது போன்றவை, பனிமூட்டத்தினூடே ஒரு பொருளைப் பார்ப்பது போல் இன்றும் நினைவில் இருக்கின்றன.
இதேபோல, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவு எட்டு மணிக்கு மேல், எத்தனை வேலையிருந்தாலும் அதையெல்லாம் முடித்துக்கொண்டு வந்து, அப்பா எங்களைக் குடும்பத்தோடு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு அழைத்துப் போவார். எனக்கு மூன்று நான்கு வயது இருக்கலாம். இப்போது இருப்பதுபோல அப்போது கபாலீஸ்வரர் கோவிலில் சிமென்ட் தளமெல்லாம் இல்லை. பிராகாரத்தைச் சுற்றிலும் மணல்தான். அப்பாவின் இடது கை ஆள்காட்டி விரலைப் பிடித்துக்கொண்டு, மணலில் கால் புதையப்புதைய அவரது நடை வேகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் அவரது கூடவே ஓடியது ஞாபகமிருக்கிறது. அப்போது நான் அப்பாவின் தொடை அளவுக்குத்தான் உயரமாக இருப்பேன்.
வண்டியில் அப்பாவின் மடியில் அமர்ந்து பயணம் செய்தபோதும் சரி, அப்பாவின் விரலைப் பிடித்துக்கொண்டு கோவிலில் நடந்தபோதும் சரி, அப்பாவின் கை விரல்கள், அந்த விரலில் போடப்பட்டிருந்த மோதிரம், அதில் பதிக்கப்பட்ட வைரக் கற்கள் இரவு நேரத்தில் பளபளத்தது என்று எல்லாமே இப்போதும் நினைவில் பதிந்திருக்கின்றன.
கோவிலைச் சுற்றிக்கொண்டு சனீஸ்வரன் சன்னிதிக்கு வரும்போது, உண்டியலில் போட அப்பா பணம் கொடுப்பார். ஆனால் உண்டியல் எனக்கு எட்டாது. அந்த அளவுக்கு சின்னப் பெண்ணாக, குள்ளமாக இருந்தேன். என்னைத் தூக்கிப் பிடித்து உண்டியலில் பணம் போட அப்பா உதவுவார். இதுபோல் சில நினைவுகள்... ஆணியடித்தது போல, செதுக்கியது போல இல்லை என்றாலும், புகைமூட்டத்துக்கிடையே மின்னலாகத் தெரிகிற பிம்பங்கள்!
சிவசங்கரி (நன்றி: சூரிய வம்சம் - தன் வரலாறு) |