ஒலியினும் அதிக வேகத்தில் பறந்து சென்று, ஊசிமுனைத் துல்லியத்தில் தாக்கி, மிகப்பெரும் அழிவை ஏற்படுத்தும் உயராற்றல் ஏவுகணைகளும், வான்வெளியிலிருந்து எங்கும் எதையும் கண்காணித்துத் தகவல் தரும் செயற்கைக் கோள்களும் இன்றைய போர்களை முற்றிலும் மாற்றியமைத்து விட்டன. முதலீடு செய்யப் பணமும், அவற்றைத் தமக்கேற்ப மாற்றியமைத்துக் கையாள அறிவும் இருக்கும் எந்த நாடும் இவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும். இந்த எண்ணமே அச்சம் தருகிறது. ஐக்கிய நாடுகள் சபை பல் பிடுங்கப்பட்ட நிலையில் இத்தகைய ஆயுதங்களை வாங்குவதும் விற்பதும் கோதுமை, அரிசியைக் கொள்முதல் செய்வதைவிட எளிதாக இருக்கிறது. மூன்றாம் உலகப் போர் என்று ஒன்று மூளுமேயாகில், உலகம் முழுவதுமே ஹிரோஷிமாவைவிட மோசமான நியூக்ளியர் பனிமூட்டத்தில் (nuclear winter) அமிழ்ந்துவிடுமோ என்கிற எண்ணமே அச்சம் தருவதாக இருக்கிறது.
ஒரு நாட்டின் தலைவர் இரவோடிரவாகக் கடத்தப் படுகிறார். மற்றொரு நாடு தாறுமாறாக, சுற்றியிருக்கும் எல்லா நாடுகள் மீதும் சரமாரியாகக் குண்டு வீசுகிறது. அந்த நாட்டின் தலைவர் அவரது இருப்பிடத்தோடு சேர்த்து தொலைதூரக் குண்டுவீச்சால் அழிக்கப்படுகிறார். இதற்குக் காரணம் ஒரே ஒரு நாட்டின் அதிபர் தன் கையில் எல்லா அதிகாரங்களை எடுத்துக்கொண்டு, நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று கிளம்பியதுதான். நல்லவேளையாக அமெரிக்க உச்ச நீதிமன்றம் US காங்கிரஸின் அனுமதியோடுதான் பிற நாடுகள் மீதான இறக்குமதி வரிகளை மாற்ற முடியும் என்று கூறியிருப்பது நல்லது. ‘சுங்கவரி’தான் பிற நாடுகள் மீது இந்த அதிபர் தொடங்கிய முதல் போர் என்று சொல்ல முடியும்.
உலக அளவில் எல்லா நாடுகளும் கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகள், அவற்றை நிர்வகிக்கும் அமைப்புகள் போன்றவை அவசியம். நாடுகளின் தலைவர்கள் அவற்றை ஏற்று, மனச்சாட்சி, சுயகட்டுப்பாடு இவற்றோடு அந்த நெறிகளைக் கடைப்பிடிப்பது இன்னும் அவசியம். வேண்டாம் இன்னொரு உலகப் போர்! சிறிதாகவும் பெரிதாகவும் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கும் சண்டைகள் நம்மைப் பிளவுபடுத்தி பேரழிவை நோக்கி அழைத்துச் செல்லவேண்டாம். கூடாது. இதுவே நமது பிரார்த்தனை.
★★★★★
பிரபலம் என்ற சொல்லுக்குப் பொருளாக இருக்கும் எழுத்தாளர் சிவசங்கரியின் வாழ்க்கை மலைக்க வைப்பது. அயல்நாட்டில் இருந்து வந்து இந்தியப் பெண்களின் வாழ்க்கையை உயர்த்தப் பாடுபட்ட சகோதரி நிவேதிதாவின் வாழ்க்கையும் மிக உன்னதமானது. சிறுகதை, எழுத்தாளர் என்று பல சுவையான அம்சங்களோடு இந்த இதழை வாசகர்களுக்குச் சமர்ப்பிக்கிறோம்.
தென்றல் மார்ச் 2026 |