2025 மார்கழித் திருவிழா: ஸ்னிக்தா ஐயர் நிகழ்ச்சிகள்
அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த 15 வயதான, பத்தாம் வகுப்பு மாணவி ஸ்னிக்தா ஐயர், அமெரிக்காவில் வளர்ந்திருந்தாலும், பரதநாட்டியம் மூலம் இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்துடன் ஆழமாக இணைந்துள்ளார். ஸ்னிக்தாவின் வளர்ச்சிக்கு ஆதாரமாக உள்ளது ஸ்ரீக்ருபா டான்ஸ் கம்பெனியின் குரு திருமதி விஷால் ரமணி அவர்களின் வழிகாட்டுதல்.

இவர் நான்கு வயதில் பரதநாட்டியம் பயிலத் தொடங்கினார், பதினொரு வயதில் அரங்கேற்றம் கண்டார். அப்போதிருந்து, நடனமும் பக்தியும் சங்கமிக்கும் இடங்களில் ஸ்னிக்தா நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறார். தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில், சிதம்பரம் நடராஜர் கோயில், மதுரை மீனாட்சி கோயில் உள்ளிட்ட புகழ்பெற்ற தென்னிந்தியக் கோயில்களில் நடந்த அவரது நடன நிகழ்ச்சிகள் குறிப்பிடத்தக்க சாதனைகள் ஆகும்.

அவரது திறமை சர்வதேச தளங்களிலும் அவருக்கு அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளது. இத்தாலியில் நடந்த ஒரு சர்வதேச நடனப் போட்டியில் தனது நடனப் பள்ளியின் பிரதிநிதியாகச் சென்ற ஸ்னிக்தா, அவரது நிகழ்ச்சிகளுக்காக விருதுகள் மற்றும் பாராட்டுகளைப் பெற்றார். 2024ஆம் ஆண்டில், அவர் கலிஃபோர்னியாவின் கவர்னர் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டார், இது கலை ரீதியாக திறமையான மாணவர்களுக்கு அரசு வழங்கும் மிக உயர்ந்த அங்கீகாரம். அவரது வளர்ச்சியை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், அவர் யுனெஸ்கோவின் சர்வதேச நடன கவுன்சிலால் நிலை-6 கலைஞராக அங்கீகரிக்கப்பட்டார்.



2025 மார்கழி கலை விழாக்களில், சென்னையில் தனி நிகழ்ச்சிகளை வழங்கியதன் மூலம் ஸ்னிக்தா மற்றொரு முக்கியமான மைல்கல்லை எட்டினார். 2025 டிசம்பர் 29 அன்று, நங்கநல்லூர் மார்கழி கலா சங்கமத்தில் நிகழ்ச்சி நடத்தினார். தொடர்ந்து 2026 ஜனவரி 1 அன்று வரலாற்றுச் சிறப்புமிக்க கர்நாடக சங்க உயர்நிலைப் பள்ளியில் அனுஷம் ஆர்ட்ஸ் அகாடமியின் வருடாந்திர இசை, நடன விழா 2025-2026 இல் ஒரு நடன நிகழ்ச்சியை வழங்கினார்.

அவர் மார்கழி விழாவில் வழங்கிய நடனங்கள், கலைநுட்பம், உணர்ச்சி ஆழம் இரண்டையும் பிரதிபலித்தன. ராமரின் கருணை மற்றும் தெய்வீகத் தன்மையைக் கொண்டாடும் தியாகராஜ கிருதி "கனகன ருச்சிரா" வின் வியத்தகு விளக்கம்; ராமப்ரிய ராக வர்ணமான "பாரே ரகுவம்ஸா" ஆகியவை இதில் அடங்கும். ஸ்னிக்தா சிக்கலான ஜதிகள் மற்றும் சஞ்சாரிகளை லாகவமாகக் கையாண்டார். "பிபரே ராமரசம்" என்ற நெஞ்சைத் தொடும் சம்ஸ்கிருத கிருதியுடன் நிகழ்ச்சி தொடர்ந்தது, துடிப்பான ரேவதி தில்லானாவுடன் நிறைவடைந்தது, இது சிக்கலான நிருத்தம் மற்றும் தாள துல்லியத்தின் மீதான அவரது ஆளுமையை வெளிப்படுத்தியது.

இவை ஸ்னிக்தாவுக்கு ரசிகர்களின் பெருத்த பாராட்டைப் பெற்றுத் தந்தன. வரும் ஆண்டுகளில் பிற மதிப்புமிக்க சபைகள் மற்றும் இடங்களில் நிகழ்ச்சி நடத்த ஆர்வமாக இருக்கிறார் ஸ்னிக்தா.

செய்திக் குறிப்பிலிருந்து

© TamilOnline.com