காசி யாத்திரை
ஆயுளில் ஒரு முறையாவது காசிக்குப் போய்க் கங்கையில் ஸ்நானம்செய்து விசுவநாதரைத் தரிசிப்பதில் நமக்கெல்லாம் எவ்வளவோ மகிழ்ச்சி ஏற்படுகிறது. 1908-ல் என் பெற்றோர் ஒருமுறை காசியாத்திரைக்குப் புறப்பட்டார்கள். நானும் அவர்களோடு சென்றேன். வைதிக முறைப்படி புரோகிதர்களை அழைத்து யாத்திரா தானமெல்லாம் செய்துவிட்டுக் கிளம்பினோம்.

இடையிலே புண்ணிய நதியாகிய கிருஷ்ணாநதியில் நீராட வேண்டுமென்ற எண்ணம் எழுந்தது. பெஜவாடாவில் இறங்கினோம். அங்கே ஒரு சத்திரம். அதில் ஒரு பெரிய முற்றம். அதன் நடுவில் ஒரு கிணறும், சுற்றி நாற்புறமும் தாழ்வாரங்களும், பிரயாணிகள் தங்குவதற்கான அறைகளும் இருந்தன.

தெலுங்குப் பிராமணர் ஒருவர் நீராட வந்தார். கிணற்றடியில் நின்று அவர் ஸ்நானம் செய்தது நிரம்ப வேடிக்கையாய் இருந்தது. ஒரு சிறு செம்பினால் நாலு செம்பு தண்ணீரைக் கிணற்றிலிருந்து இழுத்தார். இரண்டு செம்பு நீரில் தம் இடுப்பிலிருந்த அழுக்கு வேஷ்டியை நனைத்துக் கொண்டார். மற்ற இரண்டு செம்பு நீரைத் தலையில் கொட்டிக் கொண்டார். அவ்வளவுதான்: ஸ்நானம் முடிந்தது. ஒரு மடிசஞ்சியிலிருந்து தண்ணீரே கண்டறியாத அழுக்குப் படிந்த பட்டு மடி ஒன்றை எடுத்துக் கட்டிக்கொண்டார். ஏதோ மந்திரத்தைச் சொல்லி முணுமுணுத்துக்கொண்டே போய்விட்டார். சமீபத்திலிருந்த அழகான கிருஷ்ணாநதியில் அமிழ்ந்து நீராடித் துணிகளைச் சுத்தமாய்த் துவைத்துச் சுசியாக இருக்க வேண்டுமென்ற எண்ணம், பாவம், உள்ளூர் வாசிகளுக்கு இருப்பதில்லை. ஆனால் நாங்கள் ஆனந்தமாய்க் கிருஷ்ணா நதியில் நீராடி, பின் அந்த ஊரைச் சுற்றிப்பார்த்து விட்டு மறுநாள் ராஜமகேந்திரபுரம் சென்றோம்.

அங்கே கோதாவரிக் கரையில் ஓரிடத்தில் கூழாங்கற்கள் சிறியதும் பெரியதுமாக ஏராளமாய்க் குவிந்து கிடக்கின்றன. இது காரணமாகத்தான் போலும் அந்த இடத்துக்கு கோடி லிங்கத்துறை என்று பெயர். அந்தத் துறையிலே நாங்கள் ஸ்நானம் செய்தோம். பிறகு கல்கத்தா சென்று அங்கே ஒரு வாரம் தங்கி அங்குள்ள ஜைனர் கோயில், மல்லிக் அரண்மனை முதலிய காட்சிகளையெல்லாம் பார்த்தோம். ஒருநாள் இரவிலே அங்கிருந்து மீண்டும் கிளம்பி மறுநாள் பகல் பன்னிரண்டு மணிக்குக் காசி க்ஷேத்திரத்தை அடைந்து அங்குள்ள ஹனுமான் மடத்தில் தங்கினோம்.

காசிக்கு வாரணாசி என்றும் பெயர். வாரணை, அசி என்ற இரண்டு உபநதிகள் அங்கு வந்து கங்கையில் சேருவதால் காசிக்கு இந்தப் பெயர் வந்தது. கங்கையிலே ஸ்நானம் செய்வதற்குரிய படித்துறைக்குக் கட்டம் என்ற பெயர் வழங்கும். காசியிலே அனேக கட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு கட்டத்திலும் சிறிய கோயில்கள் உள்ளன. இவற்றுள் முக்கியமானவை விசுவேசுவர கட்டமும், விசுவநாதர் கோயிலும்.

தென்னிந்தியாவிலே மனத்தைக் கவரும் அழகான பெரிய கோபுரங்களுடன் கூடிய கோயில்களைவிட, புகழ்பெற்ற அந்தக் காசிக் கோயில் எவ்வளவோ சிறப்பாய் இருக்கும் என்று நாங்கள் நினைத்திருந்தோம். ஆனால் அதன் சிறிய கோபுரத்தையும் வீடுபோலிருந்த அந்தக் கோயிலையும் பார்த்தபோது எங்களுக்கு மிகுந்த ஏமாற்றமுண்டாயிற்று. உள்ளே நான்கு தாழ்வாரம். பின்புறத்தில் கர்ப்பகிரகம் அமைந்திருந்தது. அதில் ஐந்து ஆறு அடி சதுரமும் ஒன்றிரண்டடி ஆழமுமுள்ள ஒரு சிறு தொட்டி முற்றம் இருந்தது. இதன் நடுவில் சிறியதொரு சிவலிங்கம். இதுவே விசுவநாதர் உருவம். தாழ்வாரத்தில் ஒரு பக்கமாக விசாலாக்ஷி அம்மையின் திருவுருவம் இருந்தது.

பக்தர்களும் யாத்திரையாக வந்தோரும் கங்கையில் நீராடி விட்டுச் செம்பில் ஜலமெடுத்து வந்து அதை அவர்களே லிங்கத்திற்கு அபிஷேகம்செய்து சில மலர்களால் அருச்சித்துக் கற்பூர ஆரத்தி எடுக்கிறார்கள். பிறகு தங்களுக்கு ஏதோ இஷ்டமான காணிக்கையை அந்த முற்றத்தில் போட்டுவிட்டு விசுவநாதரை வலம்செய்து திரும்புகிறார்கள். பகல் பன்னிரண்டு மணிக்குள் முற்றமானது அபிஷேக நீரினால் நிறைந்து சிவலிங்கம்கூடத் தெரியாமல் மூடி விடும். அங்கே அருகில் உட்கார்ந்திருக்கும் அர்ச்சகர்கள் அப்போது கோயில் கதவை மூடிவிட்டு முற்றத்து நீரை வடியச்செய்து அதிலுள்ள காணிக்கைப் பணத்தைச் சேர்த்து எடுத்துக் கொள்கிறார்கள். இந்த அர்ச்சகர்களுக்குப் பண்டாக்கள் என்ற பெயர் வழங்குகிறது.

நாங்கள் போன சமயம், கங்கையில் வெள்ளம் அதிகமாக இல்லை. அரை ஆறுதான் நீர் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் அங்கு நடந்த சில விஷயங்கள் மனத்துக்கு மிக்க அருவருப்பாயிருந்தன. விசுவேசுவர கட்டத்தில் படித்துறைக்குப் பக்கத்தில் உயர்ந்த அகன்ற மேடையில் பிணங்களை எரிக்கிறார்கள். முக்கால் பாகம் எரிந்தவுடனேயே அவற்றையெல்லாம் அப்படியே கங்கையில் தள்ளிவிட்டு அடுத்த பிணத்தை எரிப்பதற்குச் சிதை தயாராக்குகிறார்கள்! சில சமயம் இரண்டு பிணங்கள்கூட அடுத்தடுத்து இரண்டு சிதையில் எரிந்து கொண்டிருக்கின்றன. இந்த இடத்திலும் அனுமந்த கட்டம் என்ற கட்டத்திலும் பிணங்களை எரிப்பது மிகப் புண்ணியமென்று மக்கள் கருதுகிறார்கள். இறந்துபோன இளங்குழந்தைகளைத் துணியில் மூடிப் படகில் நடு ஆற்றுக்குக் கொண்டுபோய் நீரில் போட்டு விடுகிறார்கள். கரையில் எத்தனையோ நாவிதர்கள் குப்பைகளையெல்லாம் நதியில் போடுகிறார்கள். இறந்து போன நாய், எலி எல்லாம் நதியில்தான். ஊரிலுள்ள சாக்கடைகளெல்லாம் ஆங்காங்கு நதியில் வந்து சேருகின்றன. புனிதமான கங்காதேவி இவற்றையெல்லாம் ஏற்றுக்கொண்டும் தன் புனிதத் தன்மை கெடாமலிருக்கிறாள். லக்ஷக்கணக்கான யாத்திரிகர்களுக்கிடையில் காலரா முதலிய வியாதிகள் அதிகமாய்ப் பரவாமற் செய்கிறாள். இதற்குக் காரணம், கங்கா ஜலத்தில் நோய்க் கிருமிகளைக் கொல்லக்கூடிய ஒருவிதக் கிருமிகள் இருப்பதுதான் என்று ஜலத்தைப் பரிசோதித்துப் பார்த்த டாக்டர்கள் சொல்கிறார்கள்.



அந்தக் காலத்தில் கங்காதேவியிடம் ஒரு பெரிய மகத்துவம் இருந்ததாகப் பேதை ஜனங்கள் நம்பினார்கள். அதாவது, புண்ணியம் செய்துள்ள சுமங்கலிகளைக் கங்காதேவி தனக்குள் ஐக்கியம் செய்துகொண்டு, அவர்களைச் சுவர்க்கத்துக்கே நேரில் அழைத்துச் செல்கிறாளாம்! நல்ல ஆபரணங்களணிந்து கொண்டு கங்கையில் ஸ்நானஞ்செய்ய இறங்கின அனேகப் பெண்மணிகள் மாயமாய் மறைந்தனர். இவ்விதம் அருமையான மனைவிகளையும் பெண்களையும் இழந்தோர் அனேகர். இந்த மாயத்தின் மர்மம் விளங்காமல், மேற்படி கதையை நம்பிக்கொண்டு ஒன்றும் செய்ய இல்லாதவர்களாய் ஊர் திரும்பினர்.

பிறகு ஒரு சமயம் ஹிந்து சமஸ்தானத்தின் அரசர் ஒருவர் அங்கே சென்றிருந்தபோது, இக்கதையை நம்பாமல், அதன் உண்மையைக் கண்டுபிடிக்கத் தீர்மானித்தார். பல ஆட்களை ஸ்நானக் கட்டங்களிலிருந்து கவனிக்கும்படி செய்து, வெகுநாளாக நடந்து வந்த சூதைக் கண்டுபிடித்தார். திருட்டுக் கூட்டத்தார் சிலர் நீரில் நன்றாய் நீந்தவும், ஜலத்துக்குள்ளேயே சிறிது நேரம் மூச்சையடக்கிக்கொண்டு இருக்கவும் பழக்கஞ் செய்துகொண்டு, பிரவாக காலத்தில் நிரம்ப ஆபரணங்களுடன் பெண்கள் ஸ்நானஞ் செய்யுமிடத்தில் மறைந்திருந்து ஜலத்துக்குள்ளேயே நீந்தி வந்து இரண்டிரண்டு துறைகளுக்கிடையிலுள்ள நீண்ட சுவர்களின் பக்கமாக இழுத்துச் சென்று தனியான இடத்திலோ அல்லது ஜலத்துக்குள்ளேயோ அமிழ்த்தி, நகைகளைக் கழற்றிக்கொண்டு பிணத்தை நடு வெள்ளத்தில் விட்டுவிடுவார்கள். இந்தச் சூதைக் கண்டுபிடித்து விளம்பரப்படுத்திய பிறகு, ஜனங்கள் ஜாக்கிரதையாயிருக்க ஆரம்பித்தனர்.

இரண்டாம் முறை நாங்கள் காசிக்குச் சென்றபோது எங்களுக்கே இந்தச் சூது நேரில் தெரியவந்தது. ஒருநாள் நாங்கள் ஜலத்தில் அமிழ்ந்து ஸ்நானம் செய்து கொண்டிருந்த போது, என் தங்கை படியில் நின்றுகொண்டு வெள்ளத்தின் அழகைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது பக்கத்துத் துறையிலிருந்து நீந்திக்கொண்டு வந்தவனொருவன் நீரினுள் முழுகி மேலே வராமலிருந்ததைக் கவனித்து, எங்களை உரக்கக் கூவி, உடனே கரையேறச் சொன்னாள். நாங்கள் பயந்துகொண்டு கரையேறியபின், அந்த மனிதன் சற்றுத் தூரம் சென்று, தலையை மேலே தூக்கி எங்களை ஒருமுறை பார்த்துவிட்டு நடுச்சுவரைத் தாண்டி அடுத்த படித்துறையில் மறைந்துவிட்டான்!

கங்கைக்கரையை யடுத்துள்ள தெருக்களெல்லாம் மிகக் குறுகலானவை. பல தெருக்களில் படித்துறைக்குப் போகும் வழியில் சிமெண்டுக் கற்கள் போட்டிருக்கிறார்கள். நதியில் ஸ்நானஞ் செய்து ஈரத்துடன் ஜனங்கள் நடப்பதால், அந்தத் தெருக்களில் சேறும் களியும் கலந்த ஜலத்தின் மேல்தான் நடக்கவேண்டும். ஆரம்பத்தில் எனக்கு அது சற்று அருவருப்பாயிருந்தது. ஆனால், அப்படி நடந்ததில் நாலைந்து நாட்களுக்குப் பிறகு என் உள்ளங்கால்களிலிருந்த வெடிப்புக்களெல்லாம் மறைந்துபோய், கால் மிருதுவாக ஆகிவிட்டது. கங்கையில் கலந்துவரும் நுண்ணிய களிக்கு இந்தச் சக்தியிருந்ததைக் கண்டு வியந்தோம்.

பிற்காலத்தில் பிரான்சு தேசத்துக் களிமண் ஸ்நானத்தைப் பற்றிப் படித்தபோது கங்கை மண்ணின் நன்மை ஞாபகத்துக்கு வந்தது. நம் பெரியோர் காலத்தில் கை, கால்களை மண்ணினால் சுத்தஞ் செய்துகொள்வதைப்பற்றிக் கேட்டிருக்கிறேன். ஆனால் அந்த மண்ணும் சுத்தமாயிருக்க வேண்டுமென்பதை உணரவேண்டும். சில வியாதிகளுக்கு உபயோகப்படுத்தும் 'அன்டிபிளாஜிஸ்டன்' என்பது, ஒருவித வெள்ளைக் களிதான். உடம்புப் பொடியுடன் சுத்தமான வெள்ளைக் களிமண்ணையுஞ் சேர்த்து உபயோகித்தால் தோல் மிருதுவாகும். காசி, பிரயாகை முதலான இடங்களில் கங்கையில் ஸ்நானம் செய்யவரும் அந்நாட்டுப் பெண்கள் பலர் சிறு சிறு சட்டிகளில் விற்கும் கெட்டியான தயிரைத் தலையில் தேய்த்துக் கொண்டு கடலைமா அல்லது களிமண்ணை நீரில் கரைத்துத் தேய்த்து முழுகுகிறார்கள்.

காசியில் ஒருவாரந் தங்கி, ஹிந்துக் கல்லூரி முதலான பல இடங்களையும் பார்த்துவிட்டுப் பிறகு பிரயாகைக்குச் சென்று அங்குள்ள சிவமடத்தில் தங்கினோம்.

தென்னிந்தியாவிலிருந்து வரும் யாத்திரிகர்களின் உதவிக்காகத் தென்னிந்தியப் பிராமண வைதிகர்கள் அனேகர் காசி, பிரயாகை, கயை, ஹரித்துவாரம் முதலிய இடங்களிலிருக்கிறார்கள். அந்தத் தேசத்துப் பண்டாக்கள் அனேகரும் வைதிக விஷயங்களைக் கவனிக்கின்றனர். அவ்விடத்துப் பாஷை தெரியாத நம்மவர்களுக்கு, நம் நாட்டு வைதிகர்கள் மிக்க உதவியாயிருக்கின்றனர்.

அலகாபாத்துத்தான் பிரயாகை; திரிவேணி என்ற பெயரும் இதற்கு உண்டு. கங்கை யமுனை என்ற இரண்டு நதிகள் இங்கே கூடுகின்றன. அந்தர்வாஹினியான சரசுவதி நதியும் கங்கை யமுனையுடன் இங்கே கலப்பதாக ஐதிகம். ஆகவே இந்த மூன்று நதிகளும் சேருமிடம் திரிவேணி எனப்படும். கங்கை நீர் சற்று வெளுப்பாயும், யமுனை நீர் கறுப்பாயு மிருக்கிறது. ஆற்றின் நடுவில் இவை கூடுமிடத்துக்குப் படகுகளில் சென்று ஸ்நானம் செய்வதுமுண்டு.

ஆடவர் க்ஷவரம் செய்துகொண்டு சங்கல்பம் செய்துவிட்டு, ஸ்நானம் செய்கிறார்கள். சுமங்கலிகள் அந்த க்ஷேத்திரத்தில் 'வேணிதானம் செய்வது (அதாவது கூந்தலைத் தானம் செய்வது) மிகவும் புண்ணியமாம். கங்கைக் கரையில் மனைவியின் தலைமயிரைப் பின்னி மேளதாளத்துடன் அந்தப் பின்னலிலிருந்து இரண்டு மூன்று அங்குலம் கத்தரித்து அதைத் தட்சிணையுடன் ஒரு பிராமணனுக்குக் கொடுக்க வேண்டும். குறைந்த தட்சிணை பதினைந்து ரூபாய். பக்தியும் நம்பிக்கையும் பூர்ணமாயுள்ள சில சுமங்கலிகள் திருப்பதி மொட்டைபோல வேணி முழுவதையுமே களைந்து மிகுந்த தட்சிணையுடன் தானஞ் செய்கிறார்கள்.

என் தகப்பனாருக்கு இதில் நம்பிக்கையே யில்லையாதலால், என் தாயார் வேணிதானம் செய்யவேண்டியதில்லை யென்று தீர்மானித்து விட்டார். இந்தத் தீர்மானத்தைத் தெரிந்து கொண்ட சிவமடத்து வைதிகர், தம் வரும்படி குறைந்து போகும் என்ற வருத்தத்தினால், வேணிதானம் செய்யாமற் போனால் மிகுந்த பாவம் சம்பவிக்கும் என்றும், பலவித கஷ்டங்கள் உண்டாகும் என்றும் சொல்லி, என் தாயார் மனத்தைச் சஞ்சலத்துக்குள்ளாக்கினார். அங்கு வந்த ஒரு குடும்பத்தினர், வேணிதானஞ் செய்யாமல் கயைக்குப் போனவுடனே, ஒரு குழந்தை இறந்து போய், குடும்பத் தலைவருக்கும் தேக அசௌக்கியம் ஏற்பட்டதாம்! உடனே அவர்கள் பயந்துகொண்டு, திரும்பிப் பிரயாகைக்கு வந்து, வேணிதானம் செய்துவிட்டுப் போனார்களாம்.

மற்றொரு குடும்பத்தினர், வேணிதானஞ் செய்யாமலும் அதைப்பற்றி ஏளனமாகப் பேசிவிட்டும் போனார்களாம். கோதாவரி ஸ்டேஷனுக்குப் போவதற்குள், குடும்பத் தலைவர் திடீரென்று மாரடைப்பினால் இறந்து போனாராம்! அதற்கு முன்பே ரயிலில் தூங்கிக்கொண்டிருந்த அவர் மனைவியின் கனவில் கோதாவரி தேவி பிரசன்னமாகி, என் தங்கையாகிய கங்கா தேவிக்கு உன் வேணியைக் கொஞ்சமும் கொடுக்காமல் வந்தாய். ஆதலால் அதை முழுவதும் நான் வாங்கிக்கொள்ளப் போகிறேன்" என்று சொன்னாளாம்! அந்த அம்மாள், பாவம், கோதாவரியிலிறங்கி, இறந்துபோன கணவனுக்கு வேண்டிய அபரக்கிரியைகளைச் செய்துவிட்டுப் பதினொராம் நாள் தன் கூந்தல் முழுவதையும் களைந்துவிட்டு வெள்ளைப் புடவையுடுத்தி ஊர்போய்ச் சேர்ந்தாளாம். இதைப்போன்ற இன்னும் சில பயங்கரமான உதாரணங்கள்.

"நீங்கள் பெரிய சுமங்கலியா யிருக்கிறீர்கள். உங்கள் கணவரோ பிடிவாதமான நாஸ்திகராயிருக்கிறார். உங்களுக்கு வேண்டி மூன்று ரூபாய் தட்சிணை மாத்திரம் வாங்கிக்கொள்கிறேன் நீங்கள் வேணிதானம் செய்துவிட்டுத்தான் போக வேண்டும்" என்று அவ்வைதிகர் சொன்னார். என் தாயாருக்கும், முதலில் அவ்வுதாரணக் கதைகளையெல்லாம் கேட்டுச் சற்றுச் சபலம் உண்டானாலும், பிறகு கடவுள் பக்திக்கும் வேணி கொடுப்பதற்கும் சம்பந்தமில்லை, இதெல்லாம் பணம் பறிப்பதற்கான வழி என்று மனத்தைச் சமாதானம் செய்துகொண்டார்.

ஸ்நான கட்டத்தில் விற்கும் புஷ்பம் பால் இவற்றை வாங்கி கங்கா மாஜிக்கு அபிஷேக அர்ச்சனை செய்து படகில் சென்று திரிவேணி சங்கமத்தில் ஸ்நானம் செய்தோம். கங்கைக் கரையில் ஓரிடத்தில் நிலப் பரப்புக்குக் கீழ் ஒரு நீண்ட பெரிய நிலவறை. அங்கு அந்த க்ஷேத்திர சம்பந்தமான புத்தகங்கள், படங்கள் முதலிய வியாபாரம். ஒரு பெரிய மரத்தின் அடிமரம் காய்ந்திருந்தது. அதன் மேற்பாகந்தான் கயையிலுள்ள கிளைகளும் இலைகளும் கூடிய வட விருக்ஷமாம். (அதன் வேர் எங்கோ இருப்பதாகச் சொன்னார்கள், ஞாபகமில்லை.) அந்த அடிமரத்தின் எதிரில் துணியை விரித்து இருவர் அதன் பக்கத்தில் உட்கார்ந்து காசுபோடச் சொல்லிக் கேட்கின்றனர். இப்படிக் காசு சம்பாதிப்பதற்கு வேண்டிப் பற்பல ஏற்பாடுகள். வெளியில் வந்து பழைய காலத்துக் கோட்டை ஒன்றைப் பார்த்தோம். நாலைந்து நாள் அங்கிருந்துவிட்டுப் பிறகு கயைக்குப் போனோம்.

கயையில் செல்வவந்தரான ஒரு கயாவாசிக்குக் கடிதம் எழுதியிருந்தோம். அவர் ஸ்டேஷனுக்கு அனுப்பியிருந்த ஒரு வைதிகருடன், நம்மூர் ஜட்கா குதிரைகளைப் போன்ற பலவீனமான இரண்டு குதிரைகள் கட்டிய கோச்சு வண்டி யொன்றில் ஏறிக்கொண்டு, எங்களுக்காக ஒழித்து வைத்திருந்த ஒரு வீட்டில் போய்த் தங்கினோம். அந்த ஊருக்குப் போகும் யாத்திரிகர்கள் பதினைந்து இரவு அல்லது ஒன்பது இரவு அல்லது மூன்று இரவாவது தங்கி, கோயிலிலுள்ள விஷ்ணு பாதம், நதிக்கரை, வட விருக்ஷம் இந்த மூன்று இடங்களிலும் பிதிர்க்களுக்குத் தர்ப்பணம், சிரார்த்தம் செய்து பிண்டம் போடவேண்டும். எங்களுக்கு அவகாசமில்லாமையால் ஒரே இரவுதான் அங்கு தங்க முடிந்தது. முதல் நாள் பிற்பகல் அங்குப்போய் மறுநாள் இரவு புறப்பட்டுவிட்டோம்.

அந்த ஊர்த் தெருக்களும் காசியைப்போலக் குறுகலானவை. அசுத்தமோ சொல்லமுடியாது. நாங்கள் அங்கே போன மறுநாள், தென்தேசத்து அம்மாள் ஒருத்தியைச் சிராத்த சமையல் செய்ய ஏற்படுத்திவிட்டு, நாங்கள் ஆற்றுக்குச் சென்று ஸ்நானம் செய்து, கோயிலில் விஷ்ணு பாத தரிசனம் செய்துகொண்டு வடவிருக்ஷம் பார்க்கப் போனோம்.

விருக்ஷத்தைச்சுற்றி உயர்ந்த சதுரமான பெரிய மேடை. விருக்ஷத்தின் நிழலில் சுமார் முப்பது நாற்பது பேர் உட்கார்ந்து எதிரில் வாழை இலையில் வடித்த அன்னமும் எள்ளும் வைத்துக்கொண்டு, மூதாதைகளுக்குப் பிண்டம் வைத்துக் கொண்டிருந்தார்கள். இரண்டு மூன்று பேருக்கு ஒரு வைதிகராக எதிரில் உட்கார்ந்து, மந்திரம் சொல்லி வைக்கிறார். "உம், இன்னும் யார் யாருக்குப் பிண்டம், ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்" என்றார் வைதிகர். பெற்றோர், கூடப்பிறந்தவர்கள், வயிற்றிற் பிறந்தவர்கள், இன்னும் கிட்டின பந்துக்கள், யார் யார் இறந்து போனவர்களோ அவர்கள் பெயரை ஒவ்வொன்றாகச் சொல்லி ஒவ்வொரு பிண்டமாக எடுத்து வைத்து எள்ளும் தண்ணீரும் அதன்மேல் போடுகிறார்கள். இந்த வைதிகர் யாவரும் தென் இந்தியப் பிராமணர்களே.

அந்த ஊரில், சிதம்பரம் தீக்ஷிதர்களைப்போல நூற்றுக்கணக்கான கயாவாசிகள் இருக்கிறார்கள். பரம்பரையாக இவர்களுக்கு வைதிகத் தொழில்தான். இவர்கள் பிரம்ம புத்திரர்களாம். இவர்களுக்கு இந்த ஒரே ஜன்மந்தானாம். பிரம்மாவே இவர்களைக் கயாவில் வந்து அவதரிக்கச்செய்து அங்கு வரும் யாத்திரிகர்களது பாவத்தைப் போக்கி. 'சுபஸ்வீகரணம்' சொல்லி முத்தியளிப்பதற்காக ஏற்படுத்தி யிருக்கிறாராம். இவர்களே நேரில் வந்து வைதிகக் காரியங்களைச் செய்துவைப்பது கிடையாது. சிராத்த ஓம அக்கினிக்கு எதிரில் வந்து உட்கார்ந்தால், தென்னாட்டு வைதிகர் ஒருவர்தான் மந்திரம் சொல்கிறார். கயாவாசிகள் பிராமணார்த்த போஜனம் செய்கிறார்கள். பிறகு வட விருக்ஷத்தின் கீழ் யாத்திரிகர்களுக்குச் சுபஸ்வீகரணம் சொல்லி ஆசீர்வதிக்கிறார்கள். பெருந் தொகையாக தட்சிணை வாங்கிக்கொண்டு, தங்களிடம் வேலை செய்யும் தென் தேச வைதிகர்களுக்குச் சம்பளம் கொடுக்கிறார்கள்.

நாங்கள் வடவிருக்ஷம் பார்க்கப் போனபோது, அந்த ஊரில் பதினைந்து நாளிருந்து செய்யவேண்டிய கர்மங்கள் யாவும் முறையாகச் செய்து முடித்த தென்தேசத்து வயோதிக அந்தணர் ஒருவர் அங்கே காத்திருந்தார். சுமார் பதினெட்டு வயதுள்ள ஒரு கயாவாசிச் சிறுவன், பட்டுச் சரிகையாலான நிஜார், நீண்ட சட்டை, தலையணி, கழுத்து ஆபரணங்களுடன் ஒரு பல்லக்கில் வந்திறங்கிக் கம்பீரமாக இந்த அந்தணருக்கெதிரில் வந்து நின்றான். இவர்களுக்கிடையில் மொழிபெயர்த்துச் சொன்ன தென்னாட்டு வைதிகர் ஒருவர், சுபஸ்வீகரணம் சொல்வதற்கு இருபத்தைந்து ரூபாய் கொடுக்க வேண்டுமென்று சொன்னார். (இந்தத் தொகை அவரவர்களுக்குள்ள சொத்தின் மேல்தான் கணக்கிடப்படுகிறது.) அந்த ஏழை அந்தணர், பாவம், தம்மால் அத்தனை கொடுக்க இயலாதென்றும், கொண்டுவந்த பணம் ரூ.5 யாவும் செலவாகிவிட்டதென்றும், திரும்பி ஊர் போய்ச் சேர்வதற்கே பணம் போதாதென்றும் மன்றாடினார். கடைசியில் பேரம் பேசி, பதினைந்து ரூபாய் கொடுப்பதாக முடிவாயிற்று. அதுவரைக்கும் அலட்சியமாய் எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்த கயாவாசி, பேரம் முடிந்தவுடன் புன்சிரிப்போடு அந்த ஏழை அந்தணரைக் கடாட்சித்து, வாடிப்போன ஒரு மாலையை அவர் கழுத்தில் போட்டு, முதுகில் தட்டிக் கொடுத்து, 'உன் பிதிர்க்கள் யாவரும் கரையேறி விட்டார்கள்' என்று சுபஸ்வீகரணம் சொல்லிவிட்டுப் பிறகு பல்லக்கிலேறிப் போய்விட்டான். அந்தணரும் சந்தோஷமாய் வைதிகர் சொற்படி வட விருக்ஷத்தின் கீழிருந்து கொண்டு ஓர் இலை, ஒரு காய், ஒரு பழம் இவற்றை விட்டுவிடுவதாய்ச் சபதம் செய்துவிட்டுப் போனார்.

பத்து மணிக்கு வீடு திரும்பினோம். சிரார்த்த சமையல் தயாராயிருந்தது. வைதிகப் பிராமணர் உதவியுடன் என் தகப்பனார் சிராத்தம் செய்து முடித்து, கோயிலில் விஷ்ணு பாதத்தில் பிண்டம் வைத்துவிட்டு வந்தார். ஆல விருக்ஷத்தின் கீழ் பார்த்த அதே கயாவாசிப் பையன் சிரார்த்தச் சாப்பாட்டுக்கு வந்தான். இலையில் சிறிதளவு அன்னம், அதன்மேல் நிறைய நெய், பருப்பு இவற்றைக் கலந்து மிகக் குறைவாகவே சாப்பிட்டு, மற்றக் கறி வகைகளையெல்லாம் சிறிது ருசி பார்த்துவிட்டு, எழுந்து தாம்பூலம் வாங்கிக்கொண்டு போய்விட்டான். விசாரித்ததில், இவன் இன்னும் நாலைந்து இடங்களில் சிரார்த்த சாப்பாடு உண்ண வேண்டுமென்றும், ஒவ்வோர் இடத்திலும் இந்தமாதிரிச் சிறிதளவே சாப்பிடுவதுதான் வழக்கமென்றும் தெரிந்தது. இவன் தகப்பனார் வைதிகத்திலேயே சம்பாதித்த லட்சப் பிரபு. அவர்தான் எங்களுக்கு இடவசதியெல்லாம் செய்திருந்தவர்!

அன்று நாங்கள் சாப்பாடாகி இளைப்பாறிக் கொண்டிருந்த போது, அவர் என் தகப்பனாரைத் தம்மிடம் வரும்படி ஆளனுப்பினார். என் தகப்பனார் அவர் வீட்டுக்குப் போனவுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுத் தாமாகவே என் தகப்பனாருக்கு சுபஸ்வீகரணம் சொல்லி ஒரு வெள்ளி விஷ்ணு பாதமும், சிறிதளவு அட்சதையும் கொடுத்தனுப்பினார். எங்களைச் சேர்ந்தவர்கள் யார் வந்தாலும் அவருடைய விலாசத்துக்கு அனுப்பும்படி கேட்டுக்கொண்டு, தகப்பனார் விலாசத்தையும் வாங்கி வைத்துக் கொண்டார். என் தாயார் அந்த அட்சதை அரிசியை வாங்கி, ஜாக்கிரதையாக வைத்துக்கொண்டிருந்து, பட்டணம் திரும்பினதும் வீட்டிலிருந்த அரிசியுடன் அதைச் சேர்த்துவிட்டார். அரிசிக் கஷ்டமின்றி அட்சயமாயிருக்குமென்பது நம்பிக்கை!

அன்றிரவு ரயிலுக்குப் போவதற்கு அந்த கயாவாசி தம் வண்டியில் எங்களை ஸ்டேஷனுக்கனுப்பினார். அந்தப் பக்கத்து ஸ்டேஷன்களில் டிக்கட்டு விற்கும் கிளார்க்குகளோ மகா மோசம். மூன்று டிக்கட்டு வேண்டுமென்று கேட்டோம். அரைமணி நேரம் கணக்குப் பார்த்து விட்டுக் கடைசியில் மூன்று அரை டிக்கட்டுக்கள் கொடுத்துச் சில்லரையும் கொடுத்தான்.

அதுவரைக்கும் பொறுமையுடன் காத்துக்கொண்டிருந்த எங்களுக்கு எப்படியிருக்கும்? சிரிப்பு ஒரு பக்கம். ரயில் தவறிவிடப் போகிறதே என்னும் அவசரம் ஒரு பக்கம். பிறகு நாங்கள் முழு டிக்கட்டு என்பதை அந்த முழு முட்டாளுக்கு எடுத்துச் சொல்லி டிக்கட்டுக்குள்ள தொகையையும் கணக்கிட்டுக் கொடுத்துவிட்டு, டிக்கட்டைப் பெற்று வந்துசேர்ந்தோம்.

நன்றி: குமரிமலர்

ஆர்.எஸ். சுபலக்ஷ்மியம்மாள்

© TamilOnline.com