கரும்பூனை காணவில்லை
பிள்ளைவாளின் பூஜை பட்டணப் பிரசித்தி. அவருக்கு வயது அறுபதுக்குமேல் இருக்கும். இதுவரை அவர் கடவுள் பாதாரவிந்தங்களில் சேர்ப்பித்த புஷ்பங்களைக் குவித்தால் கைலாசத்தையே எட்டி நிற்கும். ஆனால் ஏனோ கைலாயபதி இவர்பால் கருணை காட்டவில்லை. பணம், பாக்கியம் பதவிக்காக அவர் கடவுளைத் துதித்துப் பூஜை செய்து வந்தார் என்று எண்ணி விடாதீர்கள். நல்ல சொத்து, உயர்ந்த உத்தியோகம், மேலும் மனத்துக்குகந்த மனையாள் பிள்ளைவாளுக்கு வாய்த்திருந்த போதிலும் அவருக்குத் தீராக் குறையொன்று இருந்து வந்தது. இதற்காகத்தான் அவர் அல்லும் பகலும் பூஜை செய்து வந்தார்.

பாவம், அவருக்குப் புத்திரப்பேறு கிடையாது. பிள்ளைவாள் பழைய காலத்து மனிதர். பிள்ளையில்லாத காரணத்தால் 'புத்' என்னும் நரகத்திலிருந்து தப்ப முடியாது என்று நம்பி நடுநடுங்கி வந்தார். அந்திமகாலம் நெருங்க நெருங்கப் பூஜை புனஸ்காரங்களின் மும்முரம் அதிகரித்துக் கொண்டே வந்தது. பிள்ளைவாளின் பக்தி ரதம் தங்குதடையின்றி உருண்டு ஓடிச்சென்று கொண்டிருக்கும் பொழுது ஒருநாள் ஒரு முடுக்கு குறுக்கிட்டு இடுக்கு செய்யத் தலைப்பட்டது. இவரின் நியம நிஷ்டைகளுக்குத் தடை செய்வது போல் மூலைமுடுக்காக முனைந்தது யார் என்று நினைக்கிறீர்கள்? சாக்ஷாத் வருண பகவானே. பிள்ளைவாள் பூஜைகளில் வருண பகவான் பிரீதியில் ஏதாவது பங்கம் விளைந்ததோ என்னமோ? யார் கண்டது? வருண பகவானே இவர் பக்தி மார்க்கத்துக்கு முட்டுக்கட்டையாக வந்து முளைத்து விட்டார்!

கொட்டியது மழை. அற்ப சொற்ப மழையல்ல. கடலே பொங்கிக் கரைபுரண்டு வருவது போல் வானத்திலிருந்து மழை அளவு கடந்து கொட்டியது. ஊர் முழுவதும் வெள்ளக் காடு. பிள்ளைவாளின் மனைவி வேலையில்லாத காரணத்தால் வாயிலில் போய் நீர் ஓட்டத்தை வேடிக்கை பார்க்கச் சென்றாள். வந்தது வினை.

வெள்ளத்தில் குத்துயிர் கொலை உயிராக ஒரு ஜீவன் அடித்துக் கொண்டு வந்தது. பிள்ளைவாளின் மனைவி வடிவாம்பாள் அந்த ஜீவனை மீட்டாள்.

"வடிவம்! வடிவம்! நைவேத்தியத்துக்குப் பால் கொண்டு வா" என்று பிள்ளைவாளின் குரல் கேட்கவே ஒரு கையில் உயிருக்கு மன்றாடி வந்த ஜீவனையும் மற்றொரு கையில் நைவேத்தியத்துக்குப் பாலையும் எடுத்த வண்ணம் வடிவாம்பாள் பூஜை அறையில் பிரசன்னமாகியிருந்தாள்.

"சிவ! சிவ" என்று பிள்ளைவாள் தலையில் படபடவென்று அடித்துக்கொண்டு, "ஐயோ, கடவுளே! உனக்கென்ன புத்தி கெட்டு விட்டதா?" என்று கத்தினார்.

"ஒன்றுமில்லே, குத்துயிரும் கொலை உயிருமாக மழைத் தண்ணீரில் அடித்துக் கொண்டு போயிற்று, நான் இதைக் காப்பாற்றாவிட்டால் இது செத்துப் போயிருக்கும். ஐயோ, பாவம்" என்று பாலைக் கீழே வைத்தாள்.

உயிர்ப்பிச்சை அளித்த அம்மா சொல்வது உண்மையென்று ஆமோதிப்பது போல் வடிவாம்பாளின் கையில் ஒண்டிக் கிடந்த ஜீவன் 'மியாவ்' 'மியாவ்' என்று மெல்லிய குரலில் ஓலமிட்டது.

பிள்ளைவாளுக்குக் கோபம் தலைக்கேறியது. அது கபால வழியாகப் பொங்காதபடி தடுக்கவோ என்னவோ, அவர் தலையில் அடித்துக் கொண்டு, "குட்டிச்சுவருக்கு ஆகிற மாதிரி வயசு ஆச்சு. பூனைக்குட்டியை வாரி அணைத்துக் கொண்டு நைவேத்தியத்துக்குப் பால் கொண்டு வரியே? இது எந்தத் தெய்வத்துக்கு அடுக்கும்? போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தாயோ, குழந்தைகுட்டி இல்லாமல் அவதிப்படுகிறாய். இன்னும் ஏழு ஜென்மங்களுக்கு ஏன் பாவத்தைத் தேடிக் கொள்கிறாய்? சிவ, சிவ, சிவ" என்று மேலும் தலையில் அடித்துக் கொண்டார்.

மலைகளை உடைத்து உருட்டுவது மழைநீர், இரும்பையே உருக்கும் தீயை அணைப்பது தண்ணீர். வடிவாம்பாளின் கண்களிலிருந்து கண்ணீர்த் துளிகள் உதிர ஆரம்பித்தன வென்றால், பிள்ளைவாளின் கோபம் தணியாமலா போகும்?

"அம்மா பரதேவதே! தயவுசெய்து நீ அழாதே. உன் இஷ்டப்படி செய், பூனையைத் தொட்டால் பாவம் வருமே என்று உன்னுடைய நல்லத்துக்காகச் சொன்னேன்" என்றார் பிள்ளைவாள்.

வடிவாம்பாள் இந்த நல்ல சந்தர்ப்பத்தை நழுவ விடாமல், "குழந்தை குட்டி இல்லாமல் எனக்குப் பொழுதே போகவில்லை, பொழுது போக்குக்காக இந்தப் பூனைக் குட்டியை நான் வளர்க்கப் போகிறேன்" என்று சொல்லி முடித்தாள்.

"உன் இஷ்டப்படி செய். ஆனால் தயவுசெய்து என் பூஜை சாமான்களை மட்டும் தொடாதே" என்றார்.

அன்று முதல் பிள்ளைவாள், பூஜைக் கென்று தனி அறை ஒன்றை ஏற்பாடு செய்து கொண்டு பூஜைக்கான சாமக்கிரியைகளைத் தாமே எடுத்துக் கொள்வது என்று தீர்மானித்தார். வடிவாம்பாளோ வருஷக்கணக்கில் செலவிடப் பாத்திரமில்லாமல் சேகரித்து வந்த தாயன்பைப் பூனைக்குட்டி மேல் கொட்டி வந்தாள். கேட்பானேன். பாலேடு ஊட்டப்பட்டு, பட்டு மெத்தையில் படுத்து வந்ததன் பயனாக உயிருக்கு மன்றாடிய பூனைக்குட்டி உருத்தெரியாமல் வளர்ந்துவிட்டது. அதற்குச் "சில்லி" என்று செல்லப் பெயர் வடிவாம்பாள் சூட்டியிருந்தாள்.



ஒருநாள் பிள்ளைவாள் பூஜை செய்து கொண்டிருந்த பொழுது "சில்லி" பூஜை அறையில் பூனைபோல் புகுந்து நைவேத்தியத்துக்கு வைத்திருந்த பாலில் சொல்லாமல் கொள்ளாமல் வாயை வைத்து விட்டது. பிள்ளைவாள் ஜபத்தை முடித்துக் கொண்டு கண்ணைத் திறந்து பார்த்தால் கடவுள் காட்சி அளிக்க வேண்டிய இடத்தில் கரும் பூனையைக் கண்டார். அலறாமல் என்ன செய்வார்?

பிள்ளைவாளின் அலறலைக் கேட்டு "என்ன...? என்ன...?" என்று வடிவாம்பாள் ஓடிவந்தாள். விஷயத்தை அறிந்த வடிவாம்பாள், "உம், இதற்காகவா இவ்வளவு கூச்சல்? என்ன முழுகிப் போய்விட்டது? வேறு பால் எடுத்து நைவேத்தியம் செய்தால் போகிறது" என்று பூனையை எடுத்து மார்புடன் அணைத்து முத்தமிட்ட வண்ணம் மறைந்தாள் சகதர்மிணி.

பிள்ளைவாளுக்கு வந்த கோபத்துக்கு அளவில்லை. திரும்பவும் குளித்துவிட்டு மேலும் ஒருமுறை பூஜையைத் தொடங்கினார். இவருக்கு இருந்த கோபத்தில் இவர் மனம் கடவுள் நாமத்தைப் பூஜிக்க மறுத்துப் பூனையை ஒழித்துக்கட்டும் சதியில் ஈடுபட்டது. ஜெபித்தார், ஜெபித்தார். கடைசியில் ஒரு முடிவுக்கும் வந்தார். இந்தச் சனியனைப் பல மைல்களுக்கப்பால் கொண்டு விட்டு விடுவது என்று தீர்மானித்தார். அதற்கான சந்தர்ப்பத்தையும் எதிர்பார்த்திருந்தார்.

ஒருநாள் பிள்ளைவாளுக்கு, நல்லதொரு, வாய்ப்பு கிடைத்தது. வடிவாம்பாள். திருமணம் ஒன்றுக்கு வெளியூருக்குப் போகும் படி நேர்ந்தது. வடிவாம்பாள் தன் அருமைச் 'சில்லி'யை எடுத்துச்செல்ல வழியில்லாமல் தோட்டக்கார முனியனிடம் அதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்துவிட்டுச் சென்றிருந்தாள். மனையாளின் தலை மறைந்ததும் பிள்ளைவாள் முனியனைக் கூப்பிட்டார்.

"பூனையைக் கூடையில் வைத்து இந்த நிமிஷமே தாம்பரத்தில் கொண்டு போய் விட்டுவிட்டு வா" என்று உத்தரவிட்டார்.

முனியன் கையைப் பிசைந்து கொண்டே, "அம்மா ஏதாச்சும்... ..." என்று இழுத்தான்.

"அம்மாவாவது? அடுப்புக் கரியாவது? அம்மா இந்த வீட்டுக்கு அதிகாரியா..., நான் அதிகாரியா...?" என்று அதட்டினார்.

"அதுக்குச் சொல்லலீங்க, எசமான்! அம்மா வந்ததும் வராததுமாகச் 'சில்லி' எங்கே என்று கேட்பாங்களே? அதுக்கு ஏதாச்சும் சாக்கு போக்கு சொல்லணும்னு சொன்னேன்" என்று கனைத்தான்.

"ஆமாம், ஆமாம்! பார்த்தியா. அதைப் பற்றி நான் யோசிக்கவே இல்லையே?" என்று ஆழ்ந்த சிந்தனையில் பிள்ளைவாள் முழுகினார்.

"எசமான், நான் ஒரு யோசனை..." என்று மென்று விழுங்கினான் முனியன்.

"சொல்லு... சொல்லு..." என்று பரபரப்புடன் கேட்டார் பிள்ளைவாள்.

"அம்மாவைக் காணாமல், 'சில்லி' முழுதுக்கும் தேடித்தேடி அலைந்திச்சு. பாவம் 'சில்லி', 'மியாவ் மியாவ்'ன்னு வாய்விடாமல் கத்திக்கிட்டே இருந்துக்கிட்டு, அன்ன ஆகாரமே தொடமாட்டேன்னிச்சு. காலையில் பார்த்தால் காணல்லே. அது உங்களைத் தேடிக்கிட்டுத்தான் எங்கேயாச்சும் போயிடுச்சோ என்னமோன்னு சொல்லிப்பிடறேனுங்க. எசமான்" என்றான், பிள்ளைவாளுக்குப் பொங்கி எழுந்த சந்தோஷத்தில் "பலே பேஷ்! பலே பேஷ்!" என்று, முனியனைத் தோட்டக்காரன் என்பதைக் கூடக் கவனியாமல் தட்டிக் கொடுத்தார்.

சதி நிறைவேறியது. ஆனால் கதை முடியவில்லை. அன்றிரவு பிள்ளைவாள் தூங்கச் சென்றார். "ஐயோ, பாவி! இப்படியும் செய்யலாமா?" என்று நூற்றுக்கணக்கான பூனைக் கண்கள் தூற்றுவதுபோல் கனவு கண்டார். பூனைகள் கட்டிலைச் சுற்றி அலைவது போல் தோன்றியது. திடுக்கிட்டு எழுத்தார். கண்ணைக் கசக்கிப் பார்த்தார். கண்டது கனவென்று உணர்ந்தார். கனவின் நினைவில் இவர் மூளையில் ஒரு சஞ்சலம் உதயமாயிற்று. ஒருவேளை சில்லி இறந்து விட்டதா? 'சில்லி'யின் உயிருக்கு உலைவைத்த பாவம் தம்மைச் சுற்றப் போகிறதோ என்ற பயம் அவரைப் பிடித்துக் கொண்டது.

வடிவாம்பாள் வந்ததும் வராததுமாக, 'சில்லி... சில்லி...' என்று கூப்பிட்ட வண்ணம் வீட்டுக்குள் நுழைந்தாள். தன் அருமைச் 'சில்லி'யைக் காணாமல் ஏக்கமுற்றாள். அன்ன ஆகாரமின்றிக் கிடந்தாள். பிள்ளைவாள் தலைவிதியை நொந்து கொண்டு பூனையைத் தேட முனியனுடன் தாம்பரம் சென்றார். தாம்பரம் முழுவதையும் தேடிப் பார்த்தனர். வழியில் கண்டவர்களைப் பூனையின் அடையாளத்தைச் சொல்லி, "அந்தப் பூனையைப் பார்த்தீர்களா?" என்று கேட்டும் வந்தனர்.

அதன் விளைவாக 'விபரீதப் பார்வைக்கும், ஏளனச் சிரிப்புக்கும்' ஆளானார்களே யொழிய 'சில்லி' கிடைத்தபாடில்லை.

இதற்குள் வடிவாம்பாளின் அருமைச் சில்லி காணாமற் போன செய்தி அண்டை அயலார்க்கு எவ்விதமோ காட்டுத்தீயைப் போல் பரவி விட்டது. அண்டை அயல் வீட்டுப் பெண்மணிகள் 'சில்லி'யின் மாய மறைவைப் பற்றித் துக்கம் விசாரிக்கக் கூட்டம் கூடிவிட்டனர். ஒரு பெண்மணி ஒரு நல்ல யோசனையைக் கொடுத்தாள். வடிவாம்பாளுக்குப் போன உயிர் திரும்பியது. கணவன் பூனையுடன் வந்தால் நல்லது. வராவிட்டாலும் எப்படியும் 'சில்லி' கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் குதூகலம் அடைந்து விட்டாள்.

பிள்ளைவாள் தம் மனைவிக்கு என்ன சொல்வது? அவளை எவ்விதம் ஆறுதல் சொல்லிச் சாப்பிடச் செய்வது என்று ஏங்கிய மனத்துடன் வீடு திரும்பினார். அவர் எதிர்பார்த்ததற்கு விரோதமாக முகமலர்ச்சியுடன் மனைவியாள் அவரை எதிர்கொண்டு அழைத்தாள். அவருக்குத் தூக்கி வாரிப்போட்டது. "சில்லி திரும்பி விட்டதா?" என்று கேட்டார்.

"இல்லை, இல்லை... நீங்கள் தேடிப் போனீர்களே, உங்களுக்குக் கிடைக்கவில்லையா?" என்று வடிவாம்பாள் கேட்டாள்.

"அப்பப்பா, போதும், போதும்! என் உயிரே போய்விட்டது" என்று தம் இரு முட்டிகளின் மேலும் இரு கைகளை வைத்துச் சோபாவில் சாய்ந்தார்.

"பூனையை நீங்கள் தேட வேண்டியதில்லை. தினசரிப் பத்திரிகையில் நம் 'சில்லி'யைக் கொண்டு வந்து நம்மிடம் சேர்ப்பவர்களுக்கு நூறு ரூபாய் இனாம் என்று விளம்பரம் போட்டால் அந்தச் சிரமம் உங்களுக்கு இல்லாமல், யாராவது தேடி அலைந்து நம் பூனையைக் கண்டுபிடித்து விடுவார்கள். நல்ல காலம்! எதிர் வீட்டு ருக்கு இந்த யோசனையைச் சொன்னாள். மகராசி நன்றாக இருக்க வேணும்" என்று முடித்தாள் வடிவாம்பாள்.

மறுநாள் காலை 'காணவில்லை' என்ற தலைப்பில், 'கரும்பூனை காணவில்லை. உயரம் பத்து அங்குலம். உடலில் பல பாகங்களில் வெள்ளை, பழுப்புத் திட்டுகள் காணும். வயது ஆறு மாதம். 'சில்லி' என்று அழைத்தால் தெரிந்து கொள்ளும். கண்டுபிடிப்பவர்களுக்கு ரூபாய் நூறு இனாம்... கீழ்க்கண்ட விலாசத்துக்குத் தெரியப்படுத்துங்கள்... விலாசம்...'

பிள்ளைவாள் அன்றிரவு நிம்மதியாகத் தூங்கினார். எட்டு மணிக்குத் திடுக்கிட்டு எழுந்து பல் துலக்கத் தண்ணீர் கேட்க, "வடிவம், வடிவம்" என்று குரல் கொடுத்தார். பலமுறை குரல் கொடுத்தும் வடிவாம்பாள் வந்தபாடில்லை. வடிவாம்பாளின் குரல் வாசற் பக்கத்தில் கேட்கவே, அங்கு தம் மனைவி என்ன செய்கிறாள் என்று பார்க்கப் போனார்.

பிள்ளைவாள் பங்களாவின் வாசலில் ஒரு பெரும் கூட்டம். கூட்டத்தார் ஒவ்வொருவர் கையிலும் ஒரு பூனை. பிள்ளைவாள் அன்று காலை எழுந்ததும் எழுந்திருக்காததுமாக நூறு 'சில்லி'களின் முகத்தில் விழிக்கும் பாக்கியம் கிடைத்தது. நூறு ரூபாய் அற்ப சொல்பத் தொகையா? சுற்று வட்டாரத்தில் காணப்பட்ட பூனைக் குட்டிகள் பிள்ளைவாளின் வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டன. பூனைகளில் ஒன்றாவது வடிவாம்பாளின் அருமைச் 'சில்லி'யல்ல. இருந்தாலும் வந்த பூனைகளின் ஓலம் உள்ளத்தில் அடங்கியிருந்த தாயன்பைப் பொங்கி வழியச் செய்தது. வடிவாம்பாள் வந்த பூனைகளுக்குத் தாராளமாகப் பால் வழங்கினாள்.

வந்தவர்கள், வழியில் கிடைத்த பூனை அதிர்ஷ்டவசமாக விளம்பரதாரருடையதாக இருந்தால் கொடுத்துவிட்டு, நூறு ரூபாயைப் பெற்றுச் செல்லலாம் என்று வந்தார்களே ஒழிய, கொண்டுவந்த பூனையைத் திரும்ப எடுத்துச் செல்லும் எண்ணத்துடன் வரவில்லை.

வந்ததும் வராததுமாக வடிவாம்பாள் பூனைகளுக்குப் 'பால்' வார்க்கவே, வந்த பூனைகளும் வடிவாம்பாளை விட்டுப் போவதற்கு மறுத்தன. பிள்ளைவாள் ஒரு 'சில்லி'யை ஒழித்துக் கட்டினார். ஆனால் அந்தப் பாழும் பூனை ஆயிரம் ஆயிரம் 'சில்லி'களைத் தனக்குப் பதிலாக அனுப்பி வைக்கும் என்று அவர் சிறிதும் எதிர்பார்க்கவில்லை!

'கல்வி' கோபாலகிருஷ்ணன்

© TamilOnline.com