தென்றல் பேசுகிறது...
ஒரு நாட்டின் தலைவரை விரட்ட நினைத்தால், அவருக்குச் 'சர்வாதிகாரி', 'கொடுங்கோலன்' என்றெல்லாம் பட்டம் சூட்டி, மக்களிடையே கலவரத்தைத் தூண்டி விடுவது, உலக அரசியலில் புதிதல்ல. ஆனால் நள்ளிரவில் வெனிசுவெலா அதிபர் மாளிகையில் புகுந்து, அவரை மனைவியோடு சேர்த்துக் கடத்திக் கொண்டு வந்தது போன்றதொரு செயல்பாடு, இதுதான் முதல்முறை. கிரீன்லாந்தில் அமெரிக்க ராணுவ பலம் அதிகரிக்கப் பட்டுள்ளது. கியூபா மிரட்டப்பட்டுள்ளது. கனடா அதிபரை 'கவர்னர்' என்று கூறியாகிவிட்டது! 66 ஐக்கிய நாடுகள் (UN) அமைப்புகளிலிருந்து, "அமெரிக்க நலன் கருதி" விலகி ஆயிற்று. அப்படி விலகியவற்றில் WHO, மனித உரிமைகள் கவுன்சில், UNESCO, பாரிஸ் காலநிலை ஒப்பந்தம் போன்ற முக்கியமானவை அடங்கும். ஐரோப்பிய யூனியன் நாடுகளைத் திட்டி அவர்களை எதிரிகளாக்கிக் கொண்டாயிற்று. உள்நாட்டிலும் ICE வெள்ளையரல்லாதவரைச் சித்திரவதை செய்ய ஏவப்பட்டுள்ளது. ஏன், மின்னசோட்டாவில் ICE சுட்டதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இது அங்கு மட்டுமல்லாமல், பிற மாநிலங்களிலும் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. குடியரசுக் கட்சியினர் பலரும் அதிபரின் எதேச்சாதிகாரச் செயல்பாடுகளைக் கண்டிக்கத் தொடங்கியுள்ளனர். கற்றோரும், அறிவியலாளரும், தொழில் வல்லுநரும், படைப்பாற்றல் மிக்கோரும், உழைப்பை நல்கத் துடித்தோரும் இங்கு வந்து குவிய வேண்டுமென்று கண்ட 'அமெரிக்கக் கனவு' எங்கே போனது?

★★★★★


அதிபர் ட்ரம்ப்பின் அரசியல் நாகரீகமற்ற பேச்சுக்களையும், இந்தியப் பொருட்கள் மீதான வரி விதிப்பையும் விமர்சிக்காமல் அமைதியாகச் செயல்பட்டுள்ளார் இந்தியப் பிரதமர். ஜனவரி 27 அன்று 'Mother of all Deals' என்று தற்போது அழைக்கப்படுகிற, ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் அருமையான வர்த்தக ஒப்பந்தம் புதுதில்லியில் கையெழுத்தானது. அவ்வளவுதான், ட்ரம்ப்புக்கு வேறு வழியே இல்லை. பல மாதங்களாக இழுபறியில் இருந்த இந்திய-அமெரிக்க ஒப்பந்தம் பிப்ரவரி 2ஆம் தேதியன்று கையெழுத்தாயிற்று.

★★★★★


எளிய குடும்பத்தில் பிறந்து, கல்வி, தொழில், செல்வத்தில் உயரங்களைத் தொட்ட திரு ஏ. வேலுமணி அவர்களைப் பற்றிய கட்டுரை வாசிக்கச் சுவையானது. எழுத்தாளர் கல்வி. கோபாலகிருஷ்ணன், குன்றக்குடி அடிகளார் ஆகியோர் வாழ்க்கை சிந்தித்துப் பாராட்ட வேண்டியவை. அருமையானதொரு சிறுகதையும் உண்டு. நீங்கள் நேசிக்கும் தென்றலின் எல்லா அம்சங்களும் உங்களுக்காகக் காத்திருக்கின்றன.

வாசகர்களுக்கு வேலன்டைன் நாள் வாழ்த்துகள்.

தென்றல்
பிப்ரவரி 2026

© TamilOnline.com