தென்றல் பேசுகிறது...
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (Shanghai Cooperation Organisation - SCO) உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி. ரஷ்ய அதிபர் புட்டின், சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகிய மூவரும் நெடுநாள் பழகிய நண்பர்கள் போலச் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கும் படங்களைப் பார்த்து அதிபர் ட்ரம்ப்புக்கு வயிற்றில் புளியைக் கரைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அவரது வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவாரோ இந்தியாவின் மீது வசை பொழிய "இந்தியாவின் உக்ரைன் போர்" என்றும், "ரஷ்ய எண்ணெய் வர்த்தகத்தில் பிராமணர்கள் லாபம் பார்க்கிறார்கள்" என்றும் புதிது புதிதாக மலிவான கற்பனைகளை அவிழ்த்து விடுகிறார். நட்பு நாடுகளை எதிரிகளாக்கிக் கொண்டு, இறக்குமதி வரி (tariff) என்ற பெயரில் அமெரிக்க மக்களுக்கே எட்டாத உயரத்துக்கு விலைவாசியை ஏற்றிக் கொண்டு, எள்ளலும் இகழலும் மிரட்டலுமாக ட்ரம்ப் நடத்துவது 'ராஜதந்திரம்' என்ற சொல்லுக்கே ஒத்துவராத நடவடிக்கை ஆகும். அஞ்சல் வழியே குறைந்தவிலைப் பொருட்களைக்கூட அனுப்ப முடியாத நிலை உலக நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது.

சுயமரியாதை உள்ள நாடுகள் அனைத்தும் அமெரிக்க அதிபரின் அன்றாட வசவுகளுக்கு அடிபணிய மறுத்து, மோதியின் நிமிர்ந்த நெஞ்சு கொண்ட நடவடிக்கைகளைப் பின்பற்றி நடப்பதையும், இந்தியாவோடு கைகோப்பதையும் பார்க்க முடிகிறது. அமெரிக்க நீதிமன்றங்கள் ட்ரம்ப்பின் அதிகார வரம்பு மீறல்களுக்கு எதிரான தீர்ப்புகளை வழங்கி வருகின்றன. "பாகிஸ்தானில் அதிபருக்குப் பெரிய வணிக முதலீடு உள்ளது. தனது குடும்பத்தின் செல்வத்தைப் பெருக்குவதற்காக அவர் இந்தியாவோடான உறவைச் சிதைக்கிறார்" என்பதையும் அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வறுமை, வீடின்மை. பணியிழப்பு, விலைவாசி ஏற்றம் இவற்றை அமெரிக்கக் குடிமக்கள் முன்னெப்போதும் காணாத அளவில் எதிர்கொள்கிறார்கள். அமெரிக்கக் கல்லூரிகளில் வெளிநாட்டு மாணவர் சேர்க்கை மிகவும் குறைந்து அவற்றின் பொருளாதாரமும் பாதிக்கப் பட்டுள்ளது. சட்டரீதியாக அமெரிக்காவில் வசிப்போரும் தற்போது நிலவும் மிரட்டலான சூழலால் அவநம்பிக்கை, எதிர்காலம் குறித்த நிச்சயமின்மை, அச்சம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். "காலம் மாறும், காத்திருப்போம்" என்று சொல்லித்தான் ஆறுதல் பட்டுக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

★★★★★


'யுவபுரஸ்கார்' பெற்றுள்ள எழுத்தாளர் ராம் தங்கம் பற்றிய சிறப்புப் பார்வை, ஆன்மிகச் செல்வர் கிருபானந்த வாரியார் வாழ்க்கையின் இறுதிப் பகுதி, முன்னோடி மு. சதாசிவம் பற்றிய அரிய தகவல்கள், பூர்ணம் சோமசுந்தரம் குறித்த எழுத்தாளர் பகுதி, சிறுகதை எனப் பல்சுவை அம்சங்களோடு தென்றல் உங்களை வந்தடைகிறது.

வாசகர்களுக்கு ஓணம், நவராத்திரி, மிலாதுன் நபி வாழ்த்துகள்.

தென்றல்
செப்டம்பர் 2025

© TamilOnline.com