விக்ரம் – வேதாளத்தின் கடைசிக் கதை
தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் மரத்திலேறி வேதாளத்தைப் பிடித்துத் தோளில் போட்டுக்கொண்டு காளி கோவிலை நோக்கி நடைபோட, வேதாளம் பேசலாயிற்று.

"ஓய் விக்கிரமாதித்தரே! இப்போது….!"

"என்ன, எப்போதும் போல கண்றாவிக் கதைதானே! சொல்லித்தொலை!"

"இல்லை இல்லை. அதற்கு முன்பு ஒரு ஆச்சரியம்!"

"மட வேதாளமே உனக்கு என்ன ஆச்சரியம்?"

"இப்படி விடாம தினமும் என்னைத் தூக்கிக்கொண்டு கோவிலுக்குப் போகிறாயே உனக்கு அலுக்கவே இல்லையா?"

"என்ன செய்வது! உன் மனைவிக்கு வாக்குக் கொடுத்துவிட்டேனே! நீயாக என்னுடன் வரும்வரை நான் உன்னைக் காளி கோவிலுக்குக் கொண்டு சென்றுதான் ஆகவேண்டும்! அதை விடு! இன்னிக்குக் கதை என்ன சொல்லு!"

"திராவிட மாடலின் மேன்மையான அரசு அமைந்த சென்னை மாநகரில்….!"

"அடச்சீ! நீ கெட்ட கேட்டுக்கு அரசியல் வேறயா? கதை சொல்லு, போதும்!"

"சுகன்யாவின் முப்பத்தி ரெண்டாம் பிறந்தநாளில் அது நிகழ்ந்தது.

அரவிந்த் அவளை க்ரீம் சென்டருக்கு கூட்டிப்போய் ரொமான்டிக் டின்னர் வாங்கிக்கொடுத்தான். இரவு காரில் வரும்போது இருவரும் எதிராஜ் காலேஜ் எதிரில் அந்த ஐஸ்கிரீம் கடையில் ஆளுக்கொரு டபிள் சண்டே சாப்பிட்டுவிட்டு ஒருவித திருப்தியுடன் ஸ்டெர்லிங் ரோடு வீட்டில் நுழைந்து உடை மாற்றிக்கொள்ளும்போது சுகன்யாவுக்கு இடுப்பில் பளீரென மின்னல் வெட்டியது. கண்ணில் ஒளி வெளிச்சம் ஒரு செகண்ட் அடித்து அப்படியே சாய்ந்தாள். வாயில் இருந்து குளறின வார்த்தைகள் மாற்றிப்போட்ட சப்தம்."

அரவிந்துக்கு முதலில் புரியவில்லை. சுகன்யா அப்படியே துணிபோல நழுவி விழுந்து கிடந்த ஸ்திதியில் அவளுக்கு என்ன என்பது உறைக்காமல், உடனே ஆம்புலன்ஸ், ஆஸ்பத்திரி என்று செயல்பட்டான்.

எமர்ஜென்ஸியில் பார்த்து ஸ்ட்ரோக் என்பது புரிந்து ட்ரீட்மெண்ட் ஆரம்பிப்பதற்குள் சுகன்யா நீண்ட மயக்கத்தில் விழுந்துவிட்டாள்.

டாக்டர்கள் இது ஒருவிதமான ஹெமர்ரேஜிக் ஸ்ட்ரோக் என்றார்கள். மூளையைச் சுற்றியுள்ள ரத்தநாளம் ஒன்று வெடித்து ரத்தம் கசிந்துவிட்டிருக்கிறது. அதனால் மூளைக்கு வரவேண்டிய ஆக்ஸிஜன் போதிய அளவு வராமல் அல்லது ரத்தக் கசிவினால் மூளைக்குள் பிரஷர் உண்டாகி அது மூளைத் திசுக்களை அழுத்தி…

ஏதேதோ சொன்னார்கள். சர்ஜரி செய்து ரத்தக்கசிவை நீக்கி ரத்தக் குழாய்களின் டேமேஜை சரி செய்தார்கள். ஆனால் சுகன்யாவுக்குக் கோமா தொடர்ந்தது.

மூன்றாவது நாள் மெயின் வார்டுக்கு வந்தாள்.

டாக்டர்களைக் கேட்டபோது அவர்கள் இன்ஃப்ரடென்டோரியல், மெடபாலிக் அண்ட் புவர் ரெஸ்பான்ஸ் என்றெல்லாம் புரியாத வார்த்தைகளில் சொல்லி மீண்டு வரலாம் அல்லது வராமலும் போகலாம் என்று மையமாகச் சொல்லி விட்டார்கள்.

சுகன்யா ஆஸ்பத்திரிக்கு வந்தபோது அவளை அட்மிட் செய்த சீஃப் நர்ஸ் ரம்யாவே சுகன்யாவை கவனித்துக்கொள்ள அனுப்பப் பட்டாள்.

சுகன்யாவை அக்கறையாக கவனித்தாள் ரம்யா. தினமும் அரவிந்த் வந்து அவளுடன் உட்கார்ந்திருந்தான். ஒவ்வொரு மாலையும் அரவிந்த் வருவதற்கு முன் சுகன்யாவை முழுவதுமாகத் துடைத்து ஸ்பாஞ்ச் பாத் கொடுத்து, பவுடர் போட்டு, உடை மாற்றி, பூப்போல வைப்பாள். அரவிந்த் சுகன்யாவைப் பார்த்து மகிழ்வான்.

"ரொம்ப தாங்க்ஸ் ரம்யா!"

"என்னோட ட்யூட்டி! இதுக்கு ஏன் தாங்க்ஸ்!"

அரவிந்த் தினமும் நாள் தவறாமல் ஆஃபீசிலிருந்து நேராக ஆஸ்பத்திரிக்கு வந்துவிடுவான். ஆறு மணி முதல் ஒன்பது மணிவரை சுகன்யாவுடன் அமர்ந்து மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருப்பான். தங்களது அனுபவங்களை மெல்லிய குரலில் சுகன்யாவின் காதுக்கருகில் பேசுவான். ரம்யாவுக்கும் கேட்கும். இந்த ஜோடிகளின் நட்பு நிறைந்த காதல் ரம்யாவுக்கு அதிசயமாக இருக்க, அவளும் ஒரு ஓரமாக நின்று அரவிந்தின் பேச்சைக் கவனிப்பாள்.

"சுகன்யா! உன்னை முதல்ல எப்ப பார்த்தேன்னு நினைவு இருக்கா?"

எழிலகத்துல ஏதோ ரேஷன் கார்டு கரெக்‌ஷனுக்காக நீ வந்திருந்தே! நானும் அன்னிக்கு அங்க வந்தது விதிதானே!

சிவில் சப்ளை கமிஷனர் எனக்கு ஃப்ரெண்டுங்கறதால அவர் பிஏ எங்கிட்ட மரியாதையா பேசினதைப் பார்த்து நீ நாந்தான் கமிஷனர்னு நெனைச்சு உன் பிராப்ளம் சொல்ல ஆரமிச்சே. நானும் உன்னிப்பா கேட்டுட்டு கடைசியில நா கமிஷனர் இல்லேன்னதும் என்னமா கோவப்பட்டு பேசின!

என்ன சொன்னே என்ன சொன்னே யூ இடியட்! முழுசா கேட்டுட்டு இப்ப சொல்றீங்களா! என்னையப் பார்த்தா உங்களுக்கு காமெடியா இருக்கா?

அப்பா! எப்படி பொரிஞ்சு தள்ளிட்டே!

சினிமால மாதிரி நம்ம காதலும் மோதல்லதானே ஆரமிச்சுது, இல்ல?

நாம ரெகுலரா பீச்சுல மீட் பண்ணினபோது நா கட்டுப்படுத்த முடியாம உன் முதுகுல தொட்டதுக்கு எப்படி கோவம் வந்துது உனக்கு!

இதுக்குதான் காதல்ங்கற பேர்ல எங்கிட்ட பழகறீங்களான்னு.. அடேயப்பா!"

"ஆனா நம்ம ஹனிமூன்ல……..

கேட்டுக்கொண்டிருந்த ரம்யாவுக்கே வெட்கமானது.

இன்னும் இன்னும் அரவிந்த் பேசிக்கொண்டே போனான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனுபவக் கதை.

ஒரு வாரமில்லை, ஒரு மாதமில்லை அதற்கும் மேலான பின்பும் சுகன்யாவுக்கு நினைவு வரவில்லை. ஆனால் அவளின் மற்ற பாராமீட்டர்கள் ஸ்டெடியாகி விட்டன. ஹார்ட் ரேட் நல்லபடி ஆயிற்று, பிளட் பிரஷர் நார்மலுக்கு வந்துவிட்டது. நினைவு மட்டும் வரவில்லை.

ஒரு நாள் தவறாமல் அரவிந்து வருவது கண்டு ரம்யாவே அவனிடம் பேசினாள்.

"நீங்க ஏன் தினமும் வந்து அல்லல் படறீங்க! நான் பாத்துக்கறேன்!"

இல்ல இல்ல! சுகன்யாவைப் பாக்காம என்னால இருக்கவே முடியாது. நான் நிச்சயம் வருவேன்!"

ரம்யா கூட அவளின் ட்யூட்டி மாற்றப்பட்டபோது தானே கேட்டு அந்த மாலை நேரங்கள் ட்யூட்டி வரும்படி செய்தாள்.

"ரம்யா! ஹவ் லாங் இதே பேஷண்டை கவனிப்பே? டெய்லி வீட்டுக்குப் பதினோரு மணிக்குத்தானே போக முடியுது? அடுத்து மாசம் வேணா டே டியூட்டி மாத்தட்டுமா?"

வேணாம் டாக்டர்! ரம்யாவை கவனிச்சுக்கறது எனக்கு பிடிச்சிருக்கு! என்ன ஒரு லவிங் ஜோடி அவங்க! வாழ்க்கையில பிடிப்பு வர்ற மாதிரி அரவிந்த் நடந்துக்கறாரு!"

"கரெக்ட்! மனுஷன் ஒரு நாள் விடாம வந்து ஒய்ஃபோட உட்கார்ந்து பேசி... ரியலி எ கிரேட் ஹஸ்பண்ட்!"

ரம்யாவுக்கே சில சமயம் அலுப்பாக இருக்கும், ஆனால் அரவிந்த் ஒவ்வொரு நாளும் உற்சாகமாகவே வருவான்.

"ஹாய் ரம்யா! ஹவ் ஈஸ் மை லவ்லி ஒய்ஃப் டுடே?" இரண்டு வார்த்தை பேசிவிட்டு சுகன்யா அருகில் உட்கார்ந்துகொண்டு மறுபடி பழைய அனுபவம் பேசத் தொடங்குவான்.

இப்படியும் ஒரு டெடிகேட்டட் புருஷனா! தனக்கு இப்படி ஒருவன் அமைவானா என்று பல சமயம் ரம்யா யோசித்திருக்கிறாள்.

"ஏய் வேதாளமே! என்னதான் ஆச்சு சுகன்யாவுக்கு? சொல்லித் தொலையேன்! சஸ்பென்ஸ் வெச்சு கதை சொல்ற அளவுக்கு வளர்ந்திட்டியா நீ?"

"இரு விக்கிரமா! சொல்லத்தானே போறேன்!"

"சொல்லு சொல்லு!"

"ரம்யா, சுகன்யாவுக்கு ஸ்பாஞ்ச் கொடுத்துக்கொண்டிருந்த ஒரு மாலை வேளை சுகன்யாவின் உடம்பு உதறிப்போட்டது. வாயிலிருந்து ஒரு பெரிய கேவல் எழுந்து அடங்கிய அந்தக் கணம் மூச்சு நின்றுவிட்டது. அப்படியே ரம்யாவின் கைகளில் சுகன்யாவின் உயிர் பிரிந்துவிட்டது. அரவிந்த் வந்து பார்த்து திடுக்கிட்டான். முகத்தில் வருத்தம் தொனிக்க அமைதியாக உட்கார்ந்தான்.



சுகன்யாவின் கன்னத்தைத் தடவி "போய் வா சுகன்யா!" என்று சொல்லிவிட்டு அமைதியானான்.

ரம்யாவும் டாக்டரும்கூட அவளின் இறுதிச் சடங்குக்குப் போய்விட்டு வந்தார்கள்.

"என்னமோ சுகன்யா எங்க வீட்டுப் பெண் மாதிரி ஒரு உணர்வை உண்டாக்கிவிட்டாள்" என்று அரவிந்திடம் அனுதாபம் சொன்னார்கள்.

வேதாளம் கிக்கிக் என்று சிரித்தது.

"இப்போது என் கேள்விக்கு பதில் சொல்லு விக்கிரமா? பல மாதங்களானாலும் சுகன்யாவை அக்கறையாக கவனித்த ரம்யாவின் கருணையும் சேவையும் பெருசா? இல்லை ஆழ்ந்த மயக்கத்தில் பல நாள் கிடந்த தன் மனைவியை காதலுடன் பேணிய அரவிந்தின் அன்பு பெருசா?"

இப்போது விக்கிரமாதித்தன் சிரித்தான்.

"சிரிக்காதே விக்கிரமா? பதில் தெரியலை என்றால் நான் மறுபடி முருங்கை மரம் ஏறிவிடுவேன்!"

"முட்டாள் வேதாளமே! இன்னிக்கு ந்யூஸ் தெரியாதா உனக்கு?"

"இன்னிக்கு ந்யூசா?"

"இன்னிக்கு கார்த்தால அரவிந்துக்கும் ரம்யாவுக்கும் கல்யாணம் ஆச்சு, தெரியுமா?"

என்னது? எப்படி? இது எப்படி நடந்தது?

அரவிந்தன் ஃப்ரெண்டிடம் சொன்னது – "நா தினமும் ஹாஸ்பிடலுக்குப் போனதே ரம்யாவைப் பாக்கத்தான்!"

"ரம்யா தன் அம்மாவிடம் சொன்னது – "நா ஈவினிங் ட்யூட்டிய மாத்தாம வெச்சுண்டதே அரவிந்தோட பழகத்தான்!"

விக்கிரமன் சொன்ன சரியான பதிலைக் கேட்ட பின்னும் வேதாளம் மீண்டும் எழும்பி முருங்கை மரம் ஏறாமல் அவன் தோளிலேயே கிடந்தது.

"என்ன வேதாளமே! எங்கிட்ட கடைசியாக மாட்டிக்கொண்டுவிட்டாயா? ஏன்?"

"விக்கிரமா! கதையின் தலைப்பை பாரு, உனக்கே புரியும்!"

ஜெ. ரகுநாதன்

© TamilOnline.com