யான் பிரயாணம் செய்தது கோடைகாலமாதலால், ஆதித்தன் விடியற் காலையிலேயே கீழ்த்திசையில் அடிவானத்திலிருந்து சிறிது சிறிதாக மேற்கிளம்புவான். அவ்வமயம் யானையைக் காண்பதற்குமுன் அதன் மணியொலி செவிப்படுதல் போன்றும், மன்னனைப் பார்ப்பதற்குமுன் அரசசின்னங்கள் சில காட்சியளித்தல் போன்றும், ஞாயிறு எழுதற்கு முன்பே சில அழகிய இயற்கைத்தோற்றங்கள் ஆகாயத்தில் தோன்றும். குளிர்ந்த காற்றுடன் இவ்வழகின் பொலிவும் நமக்கு மிகுந்த இன்பத்தை ஊட்டுவதாகும். கடலைத் தொட்டுக்கொண்டிருப்பதுபோலத் தோன்றும் தொடுவானத்தில், ஆங்காங்கே செந்நிறமலர்களைத் தூவியதுபோன்று செந்நிறம் விட்டுவிட்டுத் தோன்றும். சில வினாடிகளுக்குள் வானத்தில் செம்பஞ்சுக்குழம்பை ஊற்றியதுபோன்று ஒரே செந்நிறம் பரந்துவிடும். ஞானியின் ஞானஒளி வெகுதூரம் பரவுதல் போன்று, ஆதித்தன் செம்மைஒளி கீழ்வானம் முற்றும் ஒளிராநிற்கும்; சிறிதுபோது கழிந்ததும், கற்றூணை இருபிளவாகப் பிளந்து வெளித்தோன்றிய மானுடமடங்கல் போன்று, வானத்தையும் கடலையும் பிளந்துகொண்டு ஒரு நெருப்புப்பிழம்பெனச் சிவந்த ஞாயிறு சிறிது சிறிதாக மேற்கிளம்பும்.
அவ்வமயம் கடல் நீரிலும் செந்நிறம் காணலாம். உயரிய பொருள்கள் விரைவில் மறைதல்போன்று இவ்வழகுத்தோற்றம் சில வினாடிகளில் ஓடி ஒளியும். உடனே பகலவன் பல வெள்ளிய கதிர்களை வீசிக்கொண்டு மேல்வானத்தில் வந்துறுவான். அவ்வழகைச் சில வினாடிகளே கண்கூசாமல் காண இயலும். அங்குக் கடலின் பரப்பை நோக்கவேண்டும். என்ன அழகு! என்ன அழகு! கடல் முற்றும் வெள்ளியை உருக்கிவிட்டது போன்று தளதளத்துக் கொண்டிருக்கும். வேறெங்கிருப்பினும் இத்தகைய பரந்த வெள்ளித் தடத்தைக் காண இயலுமோ! இவ்வளவு பெரிய நீர்ப்பாகத்தை ஒரே காலத்தில் பார்த்தற்கு மரக்கலம் தவிர வேறு இடம் உண்டோ? இக்காட்சியைப் பொற்கொல்லன் மூசையில் கொதிக்கும் வெள்ளியுருக்கிற்கு யாங்ஙனம் ஒப்பிடுவது! அளவில் அஃதெங்கே, இக்கடலெங்கே! 'இது மந்தரம் நாட்டிக் கடைந்த பாற்கடலோ!' என்னும் எண்ணமும் தோன்றும்! அடுப்பிலேற்றிய பால்போன்று கொதிக்குங்கால் இஃது 'உப்பு நீர்' என்னும், நினைவு ஏது!
அவ்வாதித்தன் சாயும்போது வானத்தில் அமையும் நிறங்கள் பலவாகும். இவற்றினும் சந்திரன் தோற்றமே மிக்க அழகுடையது. அது மேலெழுங்கால் பொற்கலசமென ஒளிரும். அப்பரந்த மேல்தட்டில் பாலன்ன நிலவின் ஒளி உள்ளத்திற்கு மிக்க உவகையை ஊட்டாநிற்கும். அவண் விட்டு நீங்குதற்குச் சிறிதும் மனமெழுதல் இல்லை. இச் சூரியசந்திரர்களின் வனப்பு மற்ற இடங்களைக்காட்டிலும் பரந்து ஆகாயத்தின் பெரும்பிரிவு நம் கண்ணிற்படக்கூடிய இக் கடற்செலவில் மிகுதியும் நம்மைக் கவராநிற்கின்றது. இவற்றின் சாயல்களினால் கடல் நீர் அப்போதைக்கப்போது நிறவேறுபாட்டைப் பெறுகிறது. தற்சமயம் மின்சார விளக்குகளின் தொடர்பால் நீர்ஊற்றைப் பல நிறமாய்ப் பரவச் செய்யும் செயற்கைமுறை இவ்வியற்கையை நோக்கித்தான் அமைக்கப்பட்டதோ எனக் கருதவும் இடமுள்ளது.
மீன்களின் துள்ளல் எப்போதும் ஓய்தலில்லை. அவற்றின் துள்ளலால் மேற்கிளம்பும் கடல்நீர், ஒரோவொருசமயம் கப்பலின் மேல்தட்டிலும் வந்து தெறிக்கும். மீன்கள் நீந்தும் அழகும் அவற்றின் விளையாட்டும், பரபரப்பும் காண்பாருக்கு வியப்பையும் மகிழ்வையும் நல்காதிருத்தல் யாங்ஙனம்! மீன்காட்சிச் சாலையில் சிறு கண்ணாடிப் பெட்டிகளில் அடைபட்டிருக்கும் மீன்களின் ஊக்கவிளையாட்டு மக்களுக்கு ஆனந்தத்தை அளிக்கிறதன்றோ! ஆயினும், கடலில் அம் மீன்களின் உல்லாசக் குதியாட்டத்தைப் பார்ப்பவர். அவ்விடம் அவற்றிற்கு ஒரு சிறைச்சாலை என்பதையும் தம் நலமும் இடமும் இழந்தார் படுந்துன்பம் இஃதே என்பதையும் உணர்வர். பிற பொருள்கள் கடலை அலைக்குங்கால் அதிலிருந்து எழும் நீர்த்திவலைகள் வானத்திற் சென்று நட்சத்திரங்களைப் போல ஒளிரும் எனக் கவிகள் இயம்பும் உவமை நினைவிற்கு வரும். அவ்வமயம் புலவருக்கு இயற்கையில் இருந்த உயரிய அறிவைக் கொண்டாடாமலிருத்தல் இயலாது. பெரிய மீன்கள் நீரில் நீந்துங்கால் தள்ளப்படும் தண்ணீரின் திரட்சி, பெரிய அலைகள் போன்று கப்பலின்மீது மோதாநிற்கும்.
மரக்கலம் துறைமுகத்திற்கு அருகில் அணையும்போது நிறத்திலும் உருவத்திலும் அமைப்பிலும் மாறுபட்ட பறவைகள் பல காணப்படும். அவைகள் கப்பலைச் சுற்றிச்சுற்றிப் பறந்து ஒலித்துக்கொண்டிருக்கும். சிறுஒலியும் செவிப்படாது இருந்த பிரயாணிகளுக்குத் திடீரென உண்டாகும் இப்பேரோதை வெறுப்புத் தரக்கூடும். அன்றியும், நடுக்கடலிலும் ஒவ்வொரு வகைப் பறவைகள் தனித்தனிக் கூட்டமாய் உரத்த ஒலியின்றிப் பறந்துகொண்டிருக்கும். அவை எங்கு வதிகின்றன, எவற்றை உண்கின்றன என்பனவற்றை அறிதல் அருமை. அருகிலுள்ள கரைகளைச் சார்ந்த ஊர்களிலும் சோலைகளிலும் அவை வதியும்போலும் என ஒருவாறு யூகிக்கலாம். அவற்றின் தீவிரப் பறப்பும் இனிய ஓசையும், அவை யாதொரு பொறுப்பும் கவலையும் இன்றிச் சுயேச்சையாய் இன்பத்திலேயே மூழ்கியிருத்தல் போன்று காணப்படும். காலையில் எழவும் சுறுசுறுப்புடன் செல்லவும் மக்கள் பறவைகளிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும். அவை கூட்டமாய்ப் பறக்கும்போது அவைகளின் சிறகுகள் ஒரே நிலையில் ஒழுங்குடன் அசைதல் மிக்க அழகு வாய்ந்தது. அங்ஙனம் அசைதல், 'இவ்வொழுங்கைக் கண்டுதான் போர்வீரர்கள் (Soldiers) ஒரே அளவாகக் காலடி வைத்து நடக்கக் கற்றுக்கொண்டார்களோ!' என நினைக்கவும் இடந்தரும். பறவைகள் அமர்ந்திருக்கும்போதும் பறக்கும்போதும் அவற்றின் உறுப்புகளும் அழகும் தெளிவாய்த் தோன்றும்.
அவை ஒன்றன்பின் ஒன்றாகப் பல கூட்டங்களாய்ச் சிறிது நேரம் பறந்து கொண்டே இருக்கும். அப்பறப்பு நின்றவுடனே அந்தோ! அக்காட்சி இன்னும் சிறிதுபோது இல்லாமற் போயிற்றே!' என உள்ளம் வருந்தும். அக்காட்சியில் சலிப்பு ஏற்படுதல் இல்லை. சிலபோது அப்பறவைகள் மேல்தட்டில் உள்ளவர்கள் அருகிலேயே பறத்தல் போன்று காணப்படும். அவ்வமயம் அவற்றைத் தொட்டுப் பார்க்க ஆர்வம் மிகும். ஆனால், அவை கைக்கெட்டுதல் இல்லை.
கப்பலும் பிரயாணிகளும்: முற்காலத்தில் மக்கள் கடற்பிரயாணம் செய்தற்குப் பெரிதும் அச்சங்கொள்வார்கள், இப்போதோ, அவ்வச்சம் முக்காற்பங்கு நீங்கிவிட்டது. ஆயினும், இப்போதும் அஞ்சுபவர் சிலருண்டு, கப்பலேறிச் செல்பவர் திரும்பித் தம் ஊர் வருதல் அருமை என்னும் எண்ணம் முற்காலத்தவருக்கு இருந்தது. இக்காலத்தவருக்கு அவ்வெண்ணம் அறவே நீங்கிவிட்டது. இவ்விரண்டிற்கும் பல காரணங்கள் உண்டு. இக்காலத்தும் கப்பலில் செல்கின்றவர்களுள் சிலருக்கு அதில் ஏறும்வரை மிக நடுக்கமாக இருக்கும். பின்பு, அது வீடுபோன்று இருத்தலினாலும், தண்ணீர் கண்ணுக்குக் காணப்படாமையாலும் அந்நடுக்கம் சிறிது சிறிதாக மறைந்துவிடும்.
எவ்வகுப்பில் செல்பவரும் தாம் செல்லும் இடத்திற்கேற்பப் பெறுங் கட்டளைச்சீட்டுடனே உணவுச்செலவையும் செலுத்திவிடுதல் வேண்டும். இச்செலவு வகுப்பிற்குத் தக்கவாறு குறைந்தும் மிகுந்தும் இருக்கும். மூன்றாம் வகுப்புணவு மிகக் குறைந்த நிலையிலும், இரண்டாம் வகுப்புணவு நடுநிலையிலும், முதல்வகுப்புணவு உயர்நிலையிலும் இருக்கும். பிந்திய இருவகுப்புக்களின் உணவு இருபிரிவுகளை உடையது. காய்கறியுணவைப் பிராமண உணவென்றும், மாமிச உணவை ஐரோப்பிய உணவென்றும் கூறுவர். முன்னது நான்கு வேளைகளோடு அமையும். பின்னது ஆறு வேளைகள் நீளும். ஐரோப்பிய உணவிற்கு ஒவ்வொரு வேளையும் உணவுப்பண்டங்கள் இத்தனை எனக் குறித்த அட்டை எல்லாருக்கும் கொடுக்கப்படும். பிரயாணிகள் அதில் தங்களுக்கு வேண்டுவனவற்றைக் குறிப்பிட்டு அனுப்பின், அதன்படியே அவை பரிமாறப்படும். முதல் இரண்டு வகுப்பினரும் பொதுச்சாப்பாட்டறைக்குச் சென்றோ அன்றித் தம் அறையிலே இருந்தோ உணவை உண்ணலாம். அவர்களுக்கு நீராடத் தனித்தனி அறைகள் இருத்தலின், அவரவர் விரும்பியபோது குளித்தலும் ஆடைகளைத் துவைத்தலும் செய்துகொள்ளலாம்; மறு உணவு வருமட்டும் தாங்கள் விரும்பிய இடங்கட்குச் சென்று மகிழலாம்.
அவண் நடைபெறும் களியாட்டங்கள் பலப்பல, அவை அவரவர்கள் அறிவிற்கும் இயல்பிற்கும் போக்கிற்கும் ஏற்ப அமையும். சிலர் சீட்டாடுவர்; சிலர் இன்னிசையில் ஆழ்ந்திருப்பர்; சிலர் பந்தாட்டத்தில் பதிவர்: சிலர் மேல்தட்டில் உட்கார்ந்து இயற்கையழகில் ஈடுபட்டிருப்பர்; சிலர் நூல்களின் நுட்பப்பொருளை நுகர்ந்துகொண்டிருப்பர்; சிலர் பொதுப்பொருள்களைப்பற்றிப் பேசிக்கொண்டிருப்பர்; முன்பே பழக்கமுள்ள நட்பினர் தம் கல்லூரி அனுபவங்களையும் கடற்கரைக் காட்சிகளையும் கூறிக் குலவிக்கொண்டிருப்பர்; சிலர் செய்தித்தாள் படித்துக்கொண்டிருப்பர், சிலரைத் துயில் ஆட்கொள்ளும், வேடிக்கைக்கதைகள் சிலர் காலத்தைக் கவரும், வேளைக்கு வேளை கிடைக்கும் உயர்ந்த உணவும், விசாலமான படுக்கையும், மகிழ்வை யூட்டும் இயற்கைக்காட்சிகளும், ஆனந்தம் நிறைந்த கூட்டுறவும், உட்கார நாற்காலிகளும், சாய்ந்திருக்கச் சாய்வுபலகைகளும், முழுச்சந்திரன் போன்று ஒளிவீசும் மின்சாரவிளக்குக்களும் அளிக்கும் இன்பத்தை இந்திரலோக இன்பம் என்றுதான் கூறல் வேண்டும். குடும்பத்தொல்லையோ, வேலைச்சிரமமோ, பணக்குறைவோ அவண் ஏற்பட வழி இல்லை. சம்பந்திவீட்டில் மருவு உண்ணும் மாப்பிள்ளை வீட்டாரைக்கூடக் கப்பற்பிரயாணிகளுக்கு ஒப்புக்கூறல் இயலாது. அவ் வாழ்க்கையை அவர்கள் வாழ்க்கையிலேயே ஒரு. சிறந்த அனுபவம் எனத்தான் இயம்பல்வேண்டும். ஆனால், கப்பல் நாகப்பட்டினத்தை விட்டவுடன் சிறிது தொலைவுவரையும் கடல் மிகக் கொந்தளிப்பாய் இருத்தலின், ஏறக்குறைய இரண்டு நாட்கள்வரை சிலருக்கு மயக்கம் உண்டாகும். அதுவே மக்களுக்குச் சிறிது துன்பம் தருவதாகும். பலருக்கு மயக்கம் உண்டாதலே இல்லை. மயக்கமுற்றவரும் மூன்றாம் நாள் மிக்க ஊக்கத்துடனும் மகிழ்வுடனும் எழுந்து உலவுவர். "முன்பிருந்தவற்றைவிட எங்களுக்குச் சுறுசுறுப்பும் நலமும் ஏற்பட்டுள்ளன!" என அவர்களே கூற யான் கேட்டுள்ளேன். எங்களுக்கு மயக்கம் சிறிதும் உண்டாகாமையின், அவ்வனுபவத்தைப்பற்றி யாங்கள் அறிந்தோமில்லை.
பெரும்பான்மையாக முதலிரு வகுப்புக்களிலும் உணவுப்பொருள்கள் மிகுதியும் வீணாக்கப்படுகின்றன. யாவரும் சேர்ந்து உண்ணும் இடத்திலும் அவர்கள் உண்ணும் அளவைக்காட்டிலும் மிகுதிப்படும் அளவே விஞ்சியிருக்கும். ஒவ்வொருவருக்கும் தனித் தனியாகக் கொணர்ந்து கொடுக்கும் உணவும் நிரம்ப இருத்தலின், அதுவும் மீதப்பட்டுப் போகிறது. சோறுமட்டுமா? பிரையிட்ட தயிர், கோக்கோ, சுவையுள்ள காய்கறிகள், நெய்யில் செய்த இனிய பண்டங்கள் யாவுமே கடலில் எறியப்படுகின்றன. வேலைக்காரருக்கும் போதிய உணவு கிடைத்தலின், அவர்களும் அவற்றை விரும்புதல் இல்லை. இம்முறையில் ஒவ்வொரு நாளும் வீணாக்கப்படும் உணவு, பலபேர் வயிற்றை நிரப்பக்கூடும். இதைக்குறித்துப் பிரயாணிகளோ, கப்பல் அதிகாரிகளோ, சிறிதும் கவலைகொள்ளுதலே இல்லை. இங்ஙனம் இவ்வகுப்பினர் வாழ்க்கை இன்பத்துடனும் ஆரவாரத்துடனும் கழிகின்றது.
இனி, மூன்றாம் வகுப்பைப்பற்றிச் சிறிது நோக்குவோம்: சிங்கப்பூர்க் கப்பலில் மூன்றாம் வகுப்பு ஒன்றுண்டு என்றும், அவ்வகுப்பில் செல்பவர்கள் பெரும்பாலும் கூலிகளே என்றும் முன்னரே தெரிவித்துள்ளோம். அதில் கூலிகள் அல்லாத நம்மனோரும் சிலர் உண்டு. மேல் இருவகுப்பில் உள்ளவர் எத்துணை இன்பம் துய்க்கின்றனரோ அத்துணைத் துன்பம் மூன்றாம் வகுப்பினரைச் சார்ந்துள்ளது. கூடம் போன்றிருக்கும் ஒரு பெரிய இடத்தில் அவர்கள் இருப்பினும், கூட்டம் அதிகமாதலால், நெருக்கமாய் உள்ளது. அதில் ஒவ்வொருவருக்கு இத்தனை அடிகள் என அளந்து விடப்பட்டிருக்கும். உண்ணல், உறங்கல் யாவும் அங்கேயே நடைபெறும். உலாவவோ, வேறு இடத்திற்குச் செல்லவோ முடியாது. குழந்தைகள் இருப்பின், பெற்றோருக்குப் பெரிதும் துன்பமே. குளித்தற்குத் தண்ணீரும் இடமும் கிடைத்தல் அரிது. அம் மூன்றாம் வகுப்பு நீரில் அமைந்து இருத்தலின், அவர்களுக்கு மயக்கமும் அதிகம். அதனால், பலர் வாந்தி எடுப்பர். சிலபோது அந்த அசுத்தத்திலேயே அவர்கள் கிடக்க நேரும், தங்கள் இடத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ளவும் அவர்களுக்குத் தெரிதலில்லை. நம்மவர்களுள் சிலரும் அம் மூன்றாம் வகுப்பில் இருந்து பெரிதும் துன்பப்படுவர். என் செய்வது! எல்லாப் போகமும் பணத்தைப் பொறுத்தன்றோ உள்ளது! மூன்றாம் வகுப்புக் கட்டணம் முப்பத்தாறு ரூபாய். இரண்டாம் வகுப்புக்கட்டணம் நூற்றிருபது ரூபாய். இவ்விரண்டு வகுப்புக்களுக்கும் இடைப்பட்ட வகுப்பு ஒன்றுளது. அதன் கட்டணம் தொண்ணூறு ரூபாய். இறுதி வகுப்பினரும் இரண்டாம் வகுப்பினரைப் போன்றே சில நலங்களைப் பெறலாம்; ஆயினும், உணவிலும், படுக்கையறையிலும், குளிக்குமிடங்களிலும் சிறிது வேறுபாடு உண்டு. அவை அவர்களுக்கு அத்துணைத் துன்பத்தைத் தருதல் இல்லை. இறுதிவகுப்பினர் பல கஷ்டங்களையும் அடைதற்குக் காரணம், அவர்கள் வறுமையேயாகும். புகைவண்டியிலும் இவ்வேறுபாடும் துன்பங்களும் உண்டல்லவா?
மூன்றாம் வகுப்பினருக்குச் சோறும், காய்கறி கலந்த சாம்பாரும், வாரம் இருமுறை மாமிச உணவும் கொடுக்கப்படுகின்றன. பெரிய பாத்திரங்களில் சோறும் குழம்பும் தனித்தனியே வைத்துக்கொண்டு இருவர் நிற்பர். படுக்கையில் இருக்கும் பிணியாளர் தவிர மற்றவர் யாவரும் தாமே போய் உணவைப் பெற்று வரவேண்டும். இந்தச் சோறு தவிர வேறொன்றும் அவர்கட்குக் கிடைத்தல் இல்லை. புகைவண்டிகளில் பெறுவதைப் போலச் சிற்றுண்டிகளும் அவர்கள் பெற முடியாதன்றோ? இந்நிலையில் அம்மக்களின் துன்பம் பெரிதே! கீழ்த்தட்டில் ஓர் அரிய பண்டமும் கிடைக்காமலிருத்தலையும் மேல்தட்டில் அரிய பண்டங்களும் கடற்கிரையாதலையும் நோக்கின், அவை உலகில் ஏழைகளின் வறுமைத்துன்பத்தையும் செல்வரின் ஆரவாரச் செயலையும் வடித்துக் காட்டுதல் போன்றிருக்கும். முதல் இரண்டு வகுப்பினருக்கும், 'எப்போது கரையைக் காணலாம்!' என்னும் ஆர்வம் இருப்பினும், அக்கப்பலின் செலவு இன்னும் இரண்டு நாட்களுக்கு நீடிப்பினும் அவர்கள் மிக்க கவலை அடைதல் இல்லை. மூன்றாம் வகுப்பினருக்கோ ஒருமணி நேரம் அதிகப்படுவதும் பெருந்துன்பந் தாரா நிற்கும். வீடு சேர்ந்தபின்பும் இரண்டொரு நாட்களுக்கு உடல் ஊஞ்சலாடுவதைப் போன்ற உணர்ச்சியே அவர்களுக்கு உள்ளதாம்.
(நன்றி: எங்கள் தமிழ்க் கோவை: இரண்டாம் புத்தகம், தமிழ் இணைய மின்னூலகம்)
டி. பதுமாவதி அம்மையார் |