குவான்ட்டம் கணினியின் குழப்பம்! (பாகம்-12)
முன்கதை: சிலிக்கான் மின்வில்லைத் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழு நேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் அவரது துப்பறியும் தொழிலில் மிக ஆர்வம் கொண்டு அவருக்கு உதவி புரிகின்றனர். கிரண், வேகமான, தமாஷான இளைஞன்! தன் தொழில் பங்கு வர்த்தகமானாலும், சூர்யாவுடனேயே நிறைய நேரம் செலுத்துகிறான். ஷாலினி ஸ்டான்போர்ட் மருத்துவ மனையில் மருத்துவராகவும், உயிரியல் மருத்துவ நுட்ப (bio-med tech) ஆராய்ச்சி நிபுணராகவும் பணி புரிபவள். மூவரும் சேர்ந்து துப்பறிந்து பலரின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்துள்ளனர்.

இக்கதையில் இதுவரை: ஷாலினிக்குப் பரிச்சயமான பெண்மணி மேரி தன் குவான்ட்டம் ஒளிக் கணினி (Quantum optical computer) தொழில்நுட்ப நிறுவனம் திடீரென ஒருப் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி, கிரண், சூர்யா மூவரும் பெர்க்கலி, கலிஃபோர்னியாவில் உள்ள மேரியின் ஆராய்ச்சிக் கூடத்துக்கு விரைகின்றனர். மேரி குவான்ட்டம் கணினி எப்படி வேலை செய்கிறது, அதன் இடையூறுகள் என்னென்ன, அவற்றை தங்களுடைய தனிச்சிறப்பு நுட்பங்களால் எப்படி நிவர்த்தித்தனர் என்று விவரித்தாள். ஆனால் நுட்பங்களை நன்கு அறிந்த உள்நபர் உதவியால் நுட்ப வன்பொருட்கள் (hardware)திருடப்பட்டன என்றாள். குவான்ட்டம் கணினியின் குழப்பத்தை சூர்யா எப்படி நிவர்த்திக்கிறார் என்பதைத் தொடர்ந்து பார்ப்போம் வாருங்கள்!

★★★★★


குவான்ட்டம் கலையலால் (decoherence) மேன்மை குன்றிச் சில சமயம் குறைவாகிவிட வாய்ப்புள்ளதாக மேரி கூறிவிட்டு, தங்கள் நுட்பத்தின் தனிச்சிறப்புக்களில் ஒன்று மிக தனித்துவமுள்ள அபூர்வ பூமிக் கலவையால் க்யூபிட்கள் உருவாக்குவதால் ஏற்படும் கலையல் குறைப்பு என்றும் கணினிக்குள்ளே வயலட் நிற லேஸர் கதிரை மிகக்குறைந்த சக்தியில் மிக அதிக அளவு வேகத்தில் தகவல் துளிகளை நகர்த்துவது மற்றொரு தனிச்சிறப்பு என்றும் கூறிய மேரி, கடந்த இரண்டு வாரங்களாக அந்தத் தனிச்சிறப்பு நுட்பங்கள் ஏன் சரியாகப் பலனளிக்கவில்லை என்று நிறுவன நுட்ப நிபுணர்கள் ஆராய்ந்து கொண்டிருந்த போது, முந்தைய தினம் திடீரெனத் திருட்டு நடந்து விட்டதால் ஷாலினிக்கு அவசரச் செய்தி அனுப்பியதாகவும் விளக்கினாள்.

சூர்யா திருடியவர்கள் முன்வாயில் வழியாக வரவில்லை, அவசரகால வெளிவாயில் வழியாகத்தான் வந்திருக்க வேண்டும் எனவும், அதன் அபாய மணி ஒலிக்காமல் அந்த உள்நபரே மாற்றியிருக்க வேண்டும் எனவும் யூகித்தார். அந்தக் கதவைத் திறந்து காட்டி, மணி ஒலிக்காமல் இருக்கவே, யூகம் பலித்தது. ஆனால், பாதுகாப்புக் குறிப்பேடுகளில் உள்நபரைப் பற்றிய தகவல் எதுவும் இருக்காது என்பதால் அது துப்பறிவதற்குச் சாதகமில்லை என்று விளக்கிய சூர்யா, நிறுவனத்தின் மேலாண்மைக் குழுவினர் ஒவ்வொருவராகச் சந்தித்து விசாரித்தால்தான் துப்புக் கிடைக்கும் என்று கூறினார்.

நிவாரணம் கிடைக்காது என்று நம்பிக்கை இழந்திருந்த மேரி சற்றே அதிக ஊக்கத்துடன் சுதாரித்துக் கொண்டு குழுவினரைப் பற்றிக் கூறினாள். "லூயிஸ் ஹெர்ரேரா எங்கள் பாதுகாப்பு அதிகாரி. ஹென்றி லாவ் க்யூபிட் நுட்பத் தலைவர். பீட்டர் பார்க்கர் கணினிவலை நுட்பத் தலைவர். ஜென்னிஃபர் தாம்ஸன் முழுக்கணினிச் சாதனத் தலைவர். இவர்களில் யாரை முதலில் விசாரிக்க வேண்டும்?"

சிலநொடி யோசித்த சூர்யா, "லூயிஸ் ஹெர்ரேராவிலிருந்து ஆரம்பிக்கலாம். திருட்டு ஒரு பாதுகாப்புத் தோல்வியல்லவா, அதைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்பது மற்ற விசாரணைகளுக்கு ஒரு பலமான அடிப்படையாக இருக்கும்" என்றார்.

தலையாட்டி ஆமோதித்த மேரி, நம் துப்பறியும் குழுவை லூயிஸின் அலுவலறைக்கு அழைத்துச் சென்று லூயிஸுக்கு அறிமுகம் செய்து வைத்தாள். லூயிஸ் ஆர்வத்தோடு வரவேற்றார். "ரொம்ப நல்லது! நானும் இது எப்படி நடந்திருக்க முடியும் என்று மண்டையை உடைத்துக் கொண்டு விட்டேன். ஒண்ணும் புரியலை. வெளியாரான நீங்கள் புதிய கண்ணோட்டத்தில் பார்த்தால் எதாவது புலப்படலாம்!"

அறையை அந்த சில நொடிகளுக்குள் ஆழ்ந்து கவனித்து அலசிவிட்ட சூர்யா ஓர் அதிர்வேட்டு வீசினார். "விளையாட்டுகள் மேல் பணயம் வைத்து சூதாடும் நீங்கள் என்னதான் நடந்திருக்கலாம் என்பதையும் யூகித்து அதன்மேலும் பணயம் வைத்திருக்கலாமே!"

லூயிஸ் அதிர்ச்சியில் நிலைகுலைந்து போனாலும் சில நொடிகளில் சுதாரித்துக் கொண்டு சீறீனார், "என்ன இது மேரி! இவரை வைத்து எங்கள் சொந்த வாழ்க்கையையும் விசாரணை செய்தீர்களா! இது தாங்கிக்கொள்ள முடியாத அக்கிரமம்."

மேரி விளக்கினாள். "இல்லை லூயிஸ்! ஒரு முன்விசாரணையும் நடக்கவில்லை. சூர்யா ஒரு அதி திறமைசாலியான யூக நிபுணர். என்னையும் இப்படித்தான் முதலில் யூகத்தால் அதிரச் செய்தார். இங்கிருக்கும் தடயங்களை வைத்தே அவர் யூகித்திருக்க வேண்டும். என்ன சரியா சூர்யா?"

சூர்யா தலையாட்டிவிட்டு, விளக்கினார். "ஆமாம். யூகந்தான், ஆனால் அது பலித்துவிட்டது என்பதை லூயிஸின் சீற்றம் காட்டிவிட்டது அல்லவா? லூயிஸ், பல தடயங்களை வெளிப்படையாகவே வைத்திருக்கிறீர்கள். உங்கள் கணினியின் பக்கதிலுள்ள விளையாட்டுப் பத்திரிகை விளையாட்டுக்களின் மேல் பணயம் வைக்கும் பக்கங்களில் திறந்திருக்கிறது. மேலும், கணினித் திரை நான் சற்றே பார்க்கும்படி ஒரு பக்கமாகத் திரும்பியிருந்தாலும், திரையின் மேல் பாதுகாப்புத் திரை போட்டிருந்தாலும் கிரண் நேரடியாகப் பார்க்கும் கோணத்தில் நின்றிருக்கிறான். அவனுக்கு நான் சைகை செய்ததால் அவன் திரையில் என்ன இருக்கிறது என்று உடனே பார்த்து விளையாட்டுப் பணய இணைய தளம் என்பதை எனக்குக் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டான். மேலும், உங்கள் இருக்கையின் பக்கத்தில் சுவரில், பலதரப்பட்ட விளையாட்டுப் போட்டிகளின் தேதிப் பட்டியல் ஒட்டி வைத்திருக்கிறீர்கள்! இதையெல்லாம் வைத்துத்தான் ஒரு யூகத்தை வீசிப் பார்த்தேன், பலித்துவிட்டது, அவ்வளவுதான்!"

லூயிஸ் வாய்விட்டுச் சிரித்தார். "வாவ்! மேரி சொன்ன மாதிரி நீங்கள் யூகத்திறன் வாய்ந்த நிபுணர்தான். என் பாதுகாப்பு தோல்வியுற்று திருட்டுப் போய்விட்டதே என்று மிகக் கவலையாக இருந்தேன். உங்கள் திறனால் நிவாரணம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை துளிர் விட்டிருக்கிறது. நான் உங்களுக்கு எப்படி உதவக்கூடும் சொல்லுங்கள்."

சூர்யா பதிலுக்கு ஓர் அதிர்வேட்டு வினாவை வீசினார்! "ஆராய்ச்சிக் கூடத்தின் அவசர வெளியேறும் வாயிலின் அபாய மணி ஒலிக்காமல் யாரோ மாற்றியிருக்கிறார்கள். அது யாருக்கும் தெரியாமல் எப்படிச் செய்திருக்க முடியும்?"

இந்தக் கேள்வியை எதிர்பார்க்காத லூயிஸ் அதிர்ந்து தடுமாறினார். "என்ன... என்ன? அபாய மணியை ஒலிக்காமல் செய்திருக்கிறார்களா? இது எனக்குத் தெரியாதே? நாங்கள் வழக்கமாக அதைச் சோதிக்கிறோமே!"

மேரி முந்திக் கொண்டு பதிலளித்தாள். "அதை மாதம் ஒருமுறைதான் சோதிக்கிறோம் அல்லவா லூயிஸ். கடைசியாக சோதித்து மூன்று வாரம் ஆகிவிட்டதே!"

லூயிஸ் தலையாட்டினர். "ஓ! ஆமாம்! அது எனக்குத் தோணாமால் போய்விட்டதே! இனிமேல் வாரத்துக்கு ஒருமுறையாவது சோதிக்க வேண்டும் போலிருக்கிறது!"

கிரண் ஷாலினியிடம் முணுமுணுத்தான்! "இது குதிரை ஓடின பிறகு லாயத்தைப் பூட்டறா மாதிரின்னா இருக்கு!" ஷாலினி உதட்டின்மேல் விரலை வைத்து அவனை அடக்கினாள்.

ஆனால் கிரண் கூறியதைக் கேட்டுவிட்ட சூர்யா தலையாட்டி அதை நாசூக்காகக் குறிப்பிட்டார். "இனிமேல் நடப்பது இருக்கட்டும் லூயிஸ், அது நல்லதுதான்! ஆனால் நடந்தது என்ன என்பதைப் புரிந்து கொள்வதுதான் இப்போது முக்கியம். என் கேள்விக்கு என்ன பதில்? யாருக்கும் தெரியாமல் எப்படி மணி ஒலிக்காதபடி மாற்றியிருக்கக் கூடும்?"

அந்தக் கேள்விக்கு லூயிஸ் என்ன பதிலளித்தார் என்றும்

சூர்யா குவான்ட்டம் கணினியின் குழப்பத்தை எவ்வாறு மேற்கொண்டு துப்பறிகிறார் என்பதையும் இனி வரும் பகுதிகளில் காண்போம்.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com