முனைவர் வெ. வேதாசலம்
டாக்டர் இரா. நாகசாமி, தியாக. சத்தியமூர்த்தி, குடவாயில் பாலசுப்பிரமணியன் போன்ற தொல்லியல் மற்றும் வரலாற்றாய்வாளர் வரிசையில் இடம்பெறுபவர், முனைவர் வெ. வேதாசலம். டாக்டர் இரா. நாகசாமியின் சீடர். கல்வெட்டு ஆய்வாளராகவும், அருங்காட்சியகக் காப்பாட்சியராகவும் பணியாற்றியவர். மதுரையைச் சுற்றியுள்ள சமணக் குன்றுகளை விரிவாக ஆய்வு செய்தவர். தமிழகத் தொல்லியல் துறையின் முதுநிலை கல்வெட்டாய்வாளர், அகழாய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓர் ஆய்வாளர் எப்படிச் செயல்பட வேண்டும் என்பது குறித்து இவர், "ஓர் உண்மையான ஆய்வாளர் பரபரப்புக்கு இடம் கொடுக்கக் கூடாது. பரபரப்புகளைப் பரப்பக் கூடாது. உண்மை நோக்கிய பயணமாகவே அவனது பாதையும் பயணமும் இருக்க வேண்டும். வெற்று ஆரவாரங்களுக்கு அங்கே இடமில்லை. எப்போதும் உண்மை அமைதியாகத்தான் இருக்கும். ஆரவாரம் செய்யாது. அறிவார்ந்த செயல் செய்யும்போது உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது." என்று இவர் கூறியிருக்கும் கருத்துக்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இவர் கீழடி முதல்கட்ட ஆய்வில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிறப்பு, கல்வி
முனைவர் வெ. வேதாசலம் 1950 டிசம்பர் 20 அன்று, மதுரையில் உள்ள மதிச்சியத்தில் வெள்ளைச்சாமி, வேலம்மாள் இணையருக்குப் பிறந்தவர். மதுரை ஷெனாய் நகர் முனிசிபல் பள்ளியில் பள்ளியிறுதி வகுப்புவரை படித்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் புகுமுக வகுப்பு கற்றார். மதுரையின் புகழ்பெற்ற தியாகராசர் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். படிப்பை முடித்தவுடன் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் தொல்லியல் கல்வெட்டியல் பட்டயப் படிப்பு பற்றி அறிந்தார். விண்ணப்பித்த பலரில் எண்மரில் ஒருவராகத் தேர்ச்சி பெற்றார். அப்போது தொல்லியல் துறை இயக்குநராக இருந்தவர் பேராசிரியர் டாக்டர் இரா. நாகசாமி. ஓராண்டுக் காலம் அவரது தலைமையில் பயிற்சி பெற்றார். படிப்பை முடித்த பத்தே நாளில் அதே துறையில் வேதாசலத்துக்கு வேலை கிடைத்தது. காரணம் அவரது ஆர்வம், கடுமையான உழைப்பு, ஈடுபாடுதான். 1975-ல் தமிழகத் தொல்லியல் துறையில் கல்வெட்டு ஆய்வாளராக பணியில் சேர்ந்தார். 'பாண்டிய நாட்டு சமுதாயமும் பண்பாடும்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 1975 அக்டோபரில் பணியேற்ற வேதாசலம், 2009வரை பணியாற்றி ஓய்வு பெற்றார்.

ஆய்வுப் பணிகள்
"ஆய்வின் நோக்கம் உண்மையைத் தேடுவதாக இருக்க வேண்டும்; அறிவியல் பூர்வமாக இருக்க வேண்டும். பல்வேறு ஒப்பீடுகளுக்குப் பிறகு அதை முடிவாகத் தெரிவிக்க வேண்டும். ஆய்வுகள் ஒருதலைப் பட்சமாக, இருக்கக் கூடாது. ஆய்வாளர்களுக்கு எந்தப் பக்கச் சார்பும் இருக்கக் கூடாது. பரபரப்பு தேடும் மனநிலையில் ஆய்வு செய்யக்கூடாது. அது அறிவியல் நோக்கில் இருக்க வேண்டும். எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்கும்படியான தெளிவுடன் ஆய்வு இருக்க வேண்டும்." என்பது வேதாசலத்தின் ஆய்வியல் கொள்கை. அப்படியே அவர் இதுவரை செயல்பட்டு வந்திருக்கிறார்.



வெ. வேதாசலம், தனது பணிக்காலத்தில் பல்வேறு ஆய்வுப் பணிகளை முன்னெடுத்தார். கல்வெட்டுகளைப் படியெடுத்துப் பதிப்பிக்கும் பணி, அருங்காட்சிய அமைப்பு பணி ஆகியனவற்றை மேற்கொண்டார். டில்லி தேசிய அருங்காட்சியகத்தில் அருங்காட்சியியல் பற்றிய பயிற்சி பெற்றார். அந்தப் பயிற்சி, ஆய்வில் அவருக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது. அதுவரை தமிழ்நாடு சார்ந்து தொல்லியல் ஆய்வாளராக இருந்தவரின் பார்வை, அதன் பிறகு இந்தியப் பார்வையாக மாறியது. அந்தப் பயிற்சிக்குப் பிறகு தமிழ்நாட்டு அருங்காட்சியகப் பணிகளில் ஈடுபட்டார். பள்ளி, கல்லூரிகளில் தொல்லியல், வரலாற்றுக் கண்காட்சிகளை நடத்தினார். அதிக ஆய்வு வெளிச்சம் படாத பகுதியாகத் தமிழ்நாட்டின் தென்பகுதி இருந்தது. ஆகவே பாண்டிய தேசத்தை தனது ஆய்வுக்களமாகக் கொண்டு பல ஆய்வுகளை நிகழ்த்தினார். குறிப்பாக மதுரையில் மிகவும் செல்வாக்காக இருந்த சமண சமயம் குறித்தும், சமணர்கள் குறித்தும் வேதாசலம் நிகழ்த்திய ஆய்வுகளும், எழுதிய நூல்களும் குறிப்பிடத்தகுந்தவை.

சமணர் பள்ளிகள் இருந்த புனிதக் குன்றங்கள், பாண்டிய நாட்டு சமண சமயம் பற்றி ஆய்வு செய்துள்ளார். கழுகுமலை வழிபாட்டுத் தலத்தைப் பற்றி எழுதியுள்ளார். குறிப்பாக சமணர் கழுவேற்றம் குறித்து அந்தி மழை நேர்காணலில் சதாசிவம் பின்வருமாறு கூறியுள்ளார். "ஒரு காலத்தில் சமணம், சைவம் சார்ந்து பகையுணர்வும் சர்ச்சைகளும் பரபரப்புகளும் இருந்தன. ஆனால் கழுவேற்றம் பற்றிய வரலாற்றுச் சான்றுகள் ஏதுமில்லை.11ஆம் நூற்றாண்டு முதல் இதுபற்றிப் பேசப்படுகிறது. நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார் இதைப் பற்றிப் பேசி இருக்கிறார்கள். ஆனால் ஞானசம்பந்தர் எழுதியதில்லை. சமகாலச் சான்றுகள் எதுவும் இல்லை. ஏழாம் நூற்றாண்டில் சமணம், சைவம் சார்ந்த மோதல்கள் நடந்திருக்கலாம். இது சார்ந்த வாதங்களில் ஈடுபட்டு ஞானசம்பந்தர் அதில் வென்றிருக்கலாம். இதைச் சைவ சமயம் சார்ந்த ஒரு வளர்ச்சியாக எடுத்துக் கொண்டிருக்கலாம். ஆனால், எட்டாம் நூற்றாண்டிலிருந்து மீண்டும் புதிய சமணப் பள்ளிகள் தோன்றியதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கிராமத்திலும் சமணப் பள்ளிகள் இருந்த சான்றுகள் உள்ளன. எட்டாம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டு முடிய இந்தச் சான்றுகள் உள்ளன. ஞானசம்பந்தருக்கு முன்பும் பின்பும் சமணம் வீழ்ந்ததாகக் கூற முடியாது. இது சார்ந்த பரப்புரைகள், தங்கள் சமயங்களைப் பரப்பிக் கொள்வதற்காகச் செய்யப்பட்ட உத்தியாகக்கூட இருக்கலாம். ஆனால் வரலாறுபூர்வமான ஆதாரங்கள் இல்லை என்பதுதான் உண்மை" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வரலாற்றில் பொற்காலம் என்று கூறப்படுவது குறித்து, "வரலாற்றில் பொற்காலம் இருண்டகாலம் என்பது கிடையாது. ஓர் ஆய்வாளனுக்கு அந்தப் பேதம் பார்க்கும் வார்த்தை வரக்கூடாது. எதையும் மிகைப்படுத்திக் கூறுவதோ, பெருமைப்படுத்திக் கூறுவதோ, சிறுமைப்படுத்திக் கூறுவதோ அவனுக்கு இருக்கக்கூடாது. அவனுக்கு எல்லாக் காலமும் முக்கியமான காலம்தான். எல்லா அரசர்களின் வரலாறுகளையும் முக்கியமாக நினைப்பதுதான் ஆய்வாளனுக்கு அழகாகும். எந்தக் கால வரலாற்றையும் பெருமையாகக் கூறுவதும் தாழ்வாகக் கூறுவதும் தவிர்க்கப்பட வேண்டும். இதில் எந்தப் பாகுபாடும் இருக்கக் கூடாது. 'களப்பிரர் காலம் இருண்ட காலம்' என்று ஒரு கருத்து முன்வைக்கப் படுகிறது. ஆனால் அது தவறு என்பதற்கு ஆதரவாக ஏராளமான சான்றுகள் கிடைக்கின்றன. அக்காலத்தில் சமண, பௌத்த ஆதரவு இருந்ததால் அப்படிப் பேசப்படுவதாகவும் சொல்கிறார்கள். ஆனால் சைவம் மறுமலர்ச்சி அடைந்தது அந்தக் களப்பிரர் காலத்தில்தான். அந்தக் காலத்தில்தான் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காவிய நூல்கள் எழுதப்பட்டன. ஏராளமான அற இலக்கியங்கள் தோன்றியதும் அந்தக் காலத்தில்தான்" என்கிறார்.

முனைவர் வேதாசலம் நூல்கள்
பாண்டிய நாட்டு வரலாற்றுமுறை சமூக நிலவியல், பாண்டியன் நின்றசீர் நெடுமாறன், பாண்டிய நாட்டு ஊர்களின் வரலாறு, பாண்டிய நாட்டு சமுதாயமும், பண்பாடும், பாண்டிய நாட்டில் சமண சமயம், பாண்டிய மண்டலத்தில் வாணாதிராயர்கள், பராக்கிரம பாண்டியபுரம், எண்பெருங்குன்றம், கழுகுமலைச் சமணப்பள்ளி, இந்தியக் கலைவரலாற்றில் அறுவகைத் தெய்வ வழிபாடு, பாண்டியநாட்டில் வணிகம் வணிகர் வணிகநகரங்கள், பாண்டியநாட்டு ஊர்களின் வரலாறு மற்றும் பல.

தகவல், படங்கள், நன்றி: தமிழ் விக்கி, அந்திமழை


நூல்கள்
வேதாசலம் ஆய்வு மாணவராக இருந்தபோது எழுதிய ஆய்வுத் தொகுப்பை, 'திருவெள்ளறை' என்ற தலைப்பில் நூலாக்கி வெளியிட்டார் இரா. நாகசாமி. அத்துடன் அதற்குச் சிறந்ததொரு முன்னுரையையும் அளித்திருந்தார். "இதை எழுதியிருக்கும் வேதாசலம் எதிர்காலத்தில் தொல்லியல் ஆய்வில் சிறந்த ஆய்வாளராக வருவார், அதில் ஐயமே இல்லை" என்று எழுதியிருந்தார். அந்த வாக்கு உண்மையானது. தனது ஆசிரியர் நாகசாமி குறித்து அந்திமழை இதழ் நேர்காணலில் பின்வருமாறு கூறியிருக்கிறார் வேதாசலம். "டாக்டர் நாகசாமி பற்றி இங்கே ஒன்றைச் சொல்ல வேண்டும் அவரிடம் பணியாற்றியது ஒரு குருகுல வாசம்போல் தோன்றியது. ராணுவம் மாதிரி கட்டுப்பாடு கொண்டவர். கடுமையாக வேலை வாங்குவார். அதேநேரம் தகுதியானவர்களை உயர்த்தி விடுவதற்கு அவர் எப்போதுமே தயங்க மாட்டார்." உண்மையான வார்த்தைகள்.

பாண்டிய நாட்டில் சமண சமயம், எண் பெருங்குன்றம், கழுகுமலை சமணப்பள்ளி போன்றவை வேதாசலத்தின் முக்கியமான நூல்கள். நூற்றுக்கு மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும், 25க்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியுள்ளார் வேதாசலம்.

விருதுகள்
'பராக்கிரம பாண்டியபுரம்', 'பாண்டிய நாட்டு ஊர்களின் வரலாறு' என்ற இரண்டு நூல்களுக்குத் தமிழ்நாடு அரசின் சிறந்த நூல் விருது பெற்றுள்ளார். 'தமிழ் ஹெரிடேஜ் டிரஸ்ட்' வழங்கும் கல்வெட்டு ஆய்வாளருக்கான புகழ்பெற்ற விருதான 'வி. வெங்கையா விருது', 'பிரண்ட்ஸ் ஆப் ஹெரிடேஜ் சைட்ஸ் விருது' ஆகியன பெற்றுள்ளார்.

பிற பணிகள்
சதாசிவம், தொல்லியல் துறை சார்ந்த வெளிவராத ஆவணங்களைப் பதிப்பிப்பது, புதிய ஆவணங்களை வெளியிடுவது போன்ற பதிவுப் பணிகளை மேற்கொண்ட 'ஆவணம்' இதழின் ஆசிரியராக ஆறாண்டுகள் பணியாற்றியுள்ளார்.

'தானம் அறக்கட்டளை' மூலம் மாணவர்களுக்கு, ஆர்வமுள்ள பொதுமக்களுக்கு மலையைச் சுற்றிக் காட்டும் திட்டம் தொடங்கிப் பல்வேறு திட்டங்களை நடத்தி வருகிறார். பொதுமக்களுடன் இணைந்து 'பாரம்பரிய நடைப் பயணம்' என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறார். மாதந்தோறும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமைகளில் கிராமங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்து தொல்லியல் சார்ந்து பேசி வருகிறார். இதுவரை 300 கூட்டங்களுக்கு மேல் நடத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பெரிய மரத்தடி, மைதானம், ஆலயம் போன்ற பொது இடங்களில் இது சார்ந்த பயிற்சிகள், சந்திப்புகள் நிகழ்கின்றன.

வேதாசலத்தின் மனைவி கலாவதி. இவர், கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு திருநம்பி, திருநங்கை என இரண்டு பிள்ளைகள். அனைவரும் தற்போது குடும்பத்துடன் மதுரையில் வசித்து வருகின்றனர்.

முனைவர் வேதாசலத்தின் சிறகுகளில் ஒரு மகுடமாக. அவருடைய வாழ்நாள் சாதனைப் பணிக்காக விஷ்ணுபுரம் இலக்கிய அமைப்பு, 2025ஆம் ஆண்டுக்கான 'தமிழ் விக்கி தூரன்' விருதை வழங்க இருக்கிறது. ஆய்வாளர் வேதாசலம் மென்மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துவோம்.

தென்றல்

© TamilOnline.com