குறைவிலே நிறைவு
"டும். டும், டும்...."

கொட்டு முழக்கத்துக்கும், வேத கோஷத்துக்கும் நடுவே என் 'சின்னக் குட்டி' பத்மஜாவின் மென்கழுத்தில் மாங்கலியம் ஏறியது. 'குப்' என்று கண்ணீர்ச் சுவரொன்று எழுப்பி வந்து என் பார்வையை மறைத்தது. மிதமிஞ்சிய ஆனந்தத்தின் விளைவால் தோன்றிய அந்தக் கண்ணீர்ப் பெருக்கை யாரும் பார்ப்பதற்கு முன்பே சமாளித்துக் கொண்டேன். ஒரு கணத்துக்குத்தான் எனக்கு இந்த நிலைமை நீடித்திருக்க வேண்டும். ஆனால் ஒரு கணத்துக்குள் இருபது வருஷ காலத்து நிகழ்ச்சிகள் மோதியடித்துக் கொண்டு வந்து என்னுடைய மனத்தை நிரப்பிவிட்டன.

★★★★★


பத்மஜா என் இரண்டாவது பெண். தாயைக் குஷிப்படுத்திக் கொண்டு பிறந்தவள் அவள். அவள் மூலம் சுசீலாவுக்குப் பிரசவ வேதனையே ஏற்படவில்லை. முதல் பெண் உமா பிறந்தபோது சுசீலா மணிக்கணக்காகப் பட்ட சிரமத்தை இப்போது நினைத்தாலும் நடுங்குகிறது. அந்தக் கஷ்டத்துக்கு ஈடு செய்வதுபோல் பத்மஜா பதினைந்தே நிமிஷத்தில் பிறந்தாள். உமா பிறந்தவுடன் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்குக் குரலையே வெளியே காட்டாமல் வம்பு செய்து விட்டாள். நர்ஸ் நெடுநேரம் 'சொடேர் சொடேர்' என்று அடித்து உமாவை அழப்பண்ண முயன்றதும், 'ஐயோ! என் செல்வப் பெண்ணை ஒரு நர்ஸ் இப்படி அடிக்கிறாளே' என்ற வேதனையுடன் நான் அழுததும், என்னை நெடுநேரம் அழவிட்டுப் பிறகு உமா கதறியதும் - என்றைக்கும் பசுமை மங்காத நினைவுகள். ஆனால், பத்மஜா பிறந்த மறு நிமிஷமே தன் குரலின் வன்மையைக் காட்டிவிட்டாள். 'ஓ. இந்த இடத்தில் அழ வேண்டும் போலிருக்கிறதே' என்று நினைவுபடுத்திக் கொண்டு ஒரு நடிகையின் பொறுப்புடன் அவள் அழுவது மாதிரி தோன்றியது. அருமையான பெண்!

நர்ஸ் அவளைக் கொண்டு வந்து காட்டினாள். சரியான 'கட்டுக்குட்டு'. உடம்பின் ஒவ்வோர் அணுவிலும் அழுத்தம் பொதிந்திருந்தது. தலைநிறையக் கருமயிர். இருட்டை வெளுப்பென்று பழித்துக் காட்டும் கருவிழிகள். புது ரோஜாமலர் போன்ற வாய். அப்புறம் மூக்கு...? இங்கே என் கவிதைக் கற்பனை நின்றுபோய், நிஜக் கற்பனை துவங்கியது. மூக்கு எங்கே? அந்த ஒரு குறை என் நெஞ்சில் பெரும் பள்ளமாகத் நோண்டி விட்டது. சுசீலா இரண்டு வாரம் கழித்து, "எப்படியிருக்கிறாள் நம்ம சின்னக் குட்டி?" என்றாள்.

"அருமையான பெண்தான்: ஆனால் அந்த மூக்கு..." என்று இழுத்தேன். சுசீலா 'பக்'கென்று சிரித்தாள். "சரியாய்ப் போயிற்று. பிறந்தவுடனே மூக்கைப் பற்றிக் கவலைப்படுகிறீர்களே! இன்னும் எவ்வளவு மாறுதல்களைக் காணப் போகிறோம்! ஒரே மாதத்தில் மூக்கு வளர்ந்து விடாதா?''

எனக்கு ஒரு மாதிரி குடமிளகாய் மூக்கு: சுசீலாவுக்கும் பெரிய மூக்குத்தான். இரண்டு மூக்குகளுக்கிடையேயுள்ள வித்தியாசத்தின் அளவுக்குக்கூடப் பத்மஜாவின் மூக்கு பெரிதாக இல்லாதது எனக்கு ஏமாற்றமாகவும் வியப்பாகவும் இருந்தது.

சுசீலா 'ஒரு மாதத்தில்' என்று சொன்னாள்? ஒரு வருஷமாகியும் பத்மஜாவின் மூக்கில் எவ்வித மாறுதலையும் - எவ்வித முற்போக்கையும் - காணவில்லை. உண்மையில் அது நாளுக்கு நாள் பின்னே தள்ளிச் செல்வதாகத் தோன்றியது, என் மதிமயக்கம் தானோ என்னவோ தெரியாது. ஆனால் அந்த ஒரே ஆண்டுக்குள் பத்மஜாவின் தலைமயிர் இன்னும் அடர்த்தியாக, இன்னும் கரியதாக வளர்ந்தது. கரிய விழிகளின் கருமையும் ஆழமும் பன்மடங்காயின. அந்த விழிகளில் வார்த்தையால் வர்ணிக்க முடியாத அபூர்வமானதொரு சஞ்சலமும் சேர்ந்து கொண்டது. அந்தச் சஞ்சலப் பார்வை எங்கிருந்து வந்தது? கண்களில் எப்போதும் மெல்லிய நீர்த்திரை ஒன்று படர்ந்திருப்பது போல் இருக்கும். துணியால் துடைத்து அகற்றி விடலாம் என்று தோன்றும்: ஆனால் துடைத்தால் போகவே போகாது. என் ஏக்கத்தின் எதிரொலியை நான் அந்த நீர்த்திரையில் கண்டேன்... அப்புறம், அந்த ரோஜா உதடுகள்; எப்போதும் 'லிப்ஸ்டிக்' போட்டதுபோல் சிவப்பு. ஆனால் எந்த லிப்ஸ்டிக்கிலும் இல்லாத நிறக்கவர்ச்சி. இயற்கை போட்டுவிட்ட 'மேக் அப்' அது. எல்லா அம்சங்களிலும், ஒவ்வொரு நாளும் ஒரு புதுமாதிரி

ஒளியும், அழகும் தோன்றிக்கொண்டிருந்தன. அந்த மூக்கின் வடிவத்திலும், அளவிலும் மட்டும் மாறுதல் ஏதும் இல்லை. என் கவலை நாளுக்கு நாள் அதிகமாயிற்று.

"நீங்கள் என்ன, கவலைப்படுவதற்கென்று தேடித்தேடி இந்தக் காரணத்தைக் கண்டுபிடித்தீர்களா? குழந்தை வளர்ந்தால் மூக்கும் தானாகச் சரியாகிறது. பார்த்துக் கொண்டேயிருங்கள்; அவள் அப்படியே 'டால்' வீசி மயக்கப் போகிறாள்...." - இவ்விதம் என்னென்னவோ பேசிச் சுசீலா தினப்படி எனக்குத் தைரியம் சொல்லி வந்தாள். சதைப் பிடிப்புக்கு எல்லாப் பெண் குழந்தைகளும் பத்மஜாவைப் பார்த்துக்கொள்ள வேண்டும். அவள் உடலில்தான் எவ்வளவு உறுதி? பிறந்த நிமிஷத்திலிருந்தே ஓடியாடி என்னென்னவோ செய்வதற்கு அவள் துடித்துக் கொண்டிருந்ததாகத் தோன்றியது. கையில் தாங்கலாகத் தூக்கிக் கொண்டால் ஒரு துள்ளுத் துள்ளிப் பிடியிலிருந்து நழுவி விடுவாள். அவள் கைக் குழந்தையாயிருந்த போது அவளைத் தூக்குவதற்கே நான் மிகவும் பயப்படுவேன்.

பத்மஜாவுக்குக் 'கால் முளைத்த' நாளிலிருந்து எங்களுடைய கால்களுக்கும் சரியான வேலை. இரவில் அளவற்ற நிம்மதியுடன் தூங்கும் அவள், காலையில் எழுந்திருக்கும்போதே துள்ளிக் கொண்டு எழுந்திருப்பாள். அந்தத் துள்ளலும், துடிப்பும் நாள் முழுதும் நீடிக்கும். உமா ஒரு சாதுப்பெண். அவளுக்கு எதிலும் மிதமான பழக்கங்கள்தான் உண்டு, ஓடுவதற்கும், சாடுவதற்கும் அவள் தன்னையறியாமலே ஒருவித நேரக் கணக்கைப் பின்பற்றி வந்தாள். பாக்கி நேரத்தில் அவள்பாட்டுக்கு ஒரு பக்கம் உட்கார்ந்து பத்மஜாவின் விளையாட்டுக்களைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருப்பாள். பத்மஜா அசல் கோமாளி. இரண்டாவது வயதிலேயே வித்தைக்காரன் குழந்தைகள் மாதிரி, கர்ணம் போட்டுக் காண்பித்தாள். அதில்தான் எவ்வளவு லாகவம்! அவள் உடம்பை எப்போது இவ்வளவு வசக்கி வைத்தாளோ! "இந்தப் பெண்ணை, ஒன்று, ஸர்க்கஸில் சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பட்டாளத்தில்தான் சேர்க்க வேண்டும். இப்போதே கையில் வித்தையை வைத்துக் கொண்டு கொண்டாடுகிறாளே!" என்று நாங்கள் பேசிக் கொள்ளுவோம்.

எனக்கு ஆரம்ப முதலே ஒருவித 'அசட்டு' எண்ணம் இருந்து வந்தது, பத்மஜா படித்துச் சுயேச்சையாக வேலை பார்ப்பாளே தவிர, மண வாழ்க்கையில் புகுந்துகொள்ள மாட்டாளென்று. அதற்கேற்றாற் போல் அவளும் இரண்டு வயது முதலே சொல்வதையெல்லாம் கற்றுக்கொண்டு விடுவாள். மூன்றாவது வயதில் அவளை 'மாண்டிஸோரி ஸ்கூல்' ஒன்றில் உமாவோடு சேர்த்தோம். முதல் நாளன்றே எவ்வளவு உற்சாகத்தோடு குதித்துக் கொண்டு ஓடினாள், தெரியுமா? "இதோ எல்லாவற்றையும் கற்றுக் கொண்டு திரும்பி வந்து விடுகிறேன்'' என்று அவசரமாய் ஓடுவது போலிருந்தது. அந்த முதல் நாளிலிருந்தே ஒவ்வொரு நாளும் புதிது புதிதாய் அவள் கற்று வந்த விஷயங்களுக்குக் கணக்கே கிடையாது. உமா படிப்பில் மிதமான சிறப்போடுதான் முன்னேறி வந்தாள். மட்டம் என்பதில்லையென்றாலும் பத்மஜா மாதிரி வராது. உமா தென்றல் என்றால், பத்மஜா சரியான ஆடிக்காற்று. அவளுடைய உடலில் இருந்த பரபரப்பு மனத்திலும் இருந்தது. பரீட்சைக்குப் படிப்பவள், மணிக்கணக்காகப் புத்தகங்களில் மூழ்கியிருப்பாள்; அந்தச் சமயத்திலெல்லாம் கண்ணோ மனமோ வேறு பக்கம் திரும்பாது.

அடுத்த வீட்டில் சியாமளி என்று ஒரு பெண் வந்து சேர்ந்தாள். உமாவைவிட நாலைந்து வயது பெரியவள். அவளுடைய அப்பா பெரிய உத்தியோகஸ்தர். பெண்ணைக் கான்வெண்டில் படிக்கவைத்திருந்தார். தினமும் காலை ஏழு மணிக்குப் பள்ளிக்கூட பஸ் ஒன்று வந்து வீட்டெதிரே நின்று 'பாம் பாம்' என்று கத்தும். மறு நிமிஷம் சியாமளி 'டிப்டாப்'பான உடையுடன் பந்து போல் துள்ளிக் கொண்டே வந்து ஏறிக் கொள்வாள். உமா-பத்மஜா ஜோடிக்கு ஒன்பது மணிக்குத்தான் பள்ளிக்கூடம். சியாமளி தினமும் பள்ளிக்கூட பஸ்ஸில் ஏறிப் போவதை இருவரும் பொறாமையுடன் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

"எங்களையும் அந்தப் பள்ளிக்கூடத்தில் சேர்த்து விடு அப்பா. நாங்களும் சியாமளி அக்கா மாதிரி...." என்று இருவரும் தங்கள் விருப்பத்தை வெளியிடுவார்கள். சியாமளி பள்ளிக்குப் போகும் ஜோரை நானும் சுசீலாவும்கூட வாசலில் நின்று கவனிப்பதுண்டு.

நாலு நாட்களுக்கப்புறம் மாலையில் நான் ஆபீசிலிருந்து திரும்பியபோது கசீலா அபூர்வமான உற்சாகத்தோடு என்னை வரவேற்றாள்.

''உங்களுக்குத் தெரியுமா ஒரு விஷயம்?"

''என்ன?"

"சியாமளிக்கும் பத்மஜா மாதிரிதான் சப்பை மூக்காக இருந்ததாம். அப்புறம் நாளாக ஆகச் சரியாகிப் பன்னிரண்டாவது வயதில் நேராகி விட்டதாம்."

என் காதுகளையே நம்ப முடியவில்லை.

''ஆ, அப்படியா? ஆச்சரியமாயிருக்கிறதே! அந்த மாதிரி மூக்கு எல்லாக் குழந்தைகளுக்கும் இருந்து விட்டால், அப்புறம் உலகத்தில் மூக்கைப் பற்றின கவலையே கிடையாது. அந்த மாதிரி மூக்கு இருந்து, தினமும் ஜலதோஷம் வந்தால்கூடப் பரவாயில்லை'' என்று கூறிச் சிரித்தேன்.

''அதனால்தான் சொல்கிறேன்; இனிமேலாவது பத்மஜாவைப் பற்றிக் கவலைப்படாமல் உற்சாகமாயிருப்பதற்கு வழி பாருங்கள்.''

மெய்யாகவே எனக்குக் கவலை தீர்ந்து விட்டது. அன்று முதல் புது உற்சாகம் ஒன்று என் மனத்தில் இடம் பெற்றது.

சியாமளிக்குச் சிறுவயது முதலே நாட்டியம் கற்றுக் கொடுத்து வந்தார்கள் என்று ஒரு நாள் தெரிந்தது. அன்றைக்கே உமாவையும், பத்மஜாவையும் நடன வகுப்பில் சேர்த்தேன். இதற்கு முன்பாக, சியாமளியின் 'கான்வெண்'டிலேயே இருவரையும் சேர்த்து விட்டேன். பள்ளிக்கூட பஸ் எங்கள் வீட்டு வாசலிலும் வந்து நிற்க ஆரம்பித்தது. அந்தப் பெருமையே தனிமாதிரிதான்!

அந்த வருஷத்துக் கோடையில், சியாமளியும், அவளுடைய பெற்றோரும் எங்கோ உல்லாசப் பிரயாணம் போனார்கள். போனவர்கள் அடுத்த வீட்டுக்குத் திரும்பி வரவில்லை. சியாமளியின் அப்பாவுக்கு லீவின் போதே வேறு ஊருக்கு மாற்றலாகி விட்டது. அவருடைய உறவுப் பையன் ஒருவன் வந்து அடுத்த வீட்டைக் காலி செய்துகொண்டு திரும்பிப் போனான்.

பத்மஜாவைப் பற்றி என் மனத்தில் நம்பிக்கை ஊட்டத்தான் சியாமளி அடுத்த வீட்டுக்கு வந்து சென்றாளோ? வேறு என்ன விதத்தில் இதற்கு விளக்கம் சொல்ல முடியும்? ஆனால்...

சியாமளியின் பன்னிரண்டாவது வயதை பத்மஜா அடைந்த பின்பும், அவளுடைய மூக்கு விஷயத்தில் எவ்வித முன்னேற்றத்தையும் காணாமல் நான் தவித்துப் போனேன். சியாமளிக்குப் பொருந்தினது பத்மஜாவுக்குப் பொருந்தாமல் போகுமா? உண்மையில் பத்மஜாவின் மூக்கில் ஏற்பட்டிருந்த ஒரு மாறுதல் என் மனத்துன்பத்தை அதிகமாக்கத்தான் செய்தது: இந்தப் பன்னிரண்டு வருஷ காலத்தில் அந்த மூக்கு, என் பிரார்த்தனையைத் தவறாகப் புரிந்துகொண்டு, சற்றே மேல்பக்கம் தூக்கினாற்போல் ஆகிவிட்டது. முன்பிருந்த சப்பை மூக்குத்தான்; ஆனால் நுனிமட்டும் ஒருமாதிரி மேல்நோக்கித் திரும்பிக் கொண்டது. மாறுதலை வேண்டித் தவமிருந்த நான், பத்மஜாவின் பழைய மூக்கே திரும்பி வந்து விடாதா என்று பிரார்த்திக்கத் துவங்கி விட்டேன்.

தாயுள்ளம் விசித்திரமானதுதான். நான் இவ்வளவு தவித்தேனே! சுசீலா கவலையற்றிருந்தாள். பத்மஜாவுக்கு எவ்விதக் குறையும் இருப்பதாக அவள் நினைக்கவில்லை. அவள் கவலைப்படாமலிருந்தது என் கவலையை அதிகமாக்கியது. என் கவலையை வெளியே சொல்லிக் கொண்ட போதெல்லாம் சுசீலா என்னைக் கேலி செய்யவும் ஆரம்பித்தாள். இது காரணமாய் நான் என் வேதனையை மனதுக்குள்ளேயே வைத்து மருக வேண்டியதாயிற்று. பழைய எண்ணம் மட்டும் என் மனத்தில் நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது. பத்மஜா மண வாழ்க்கையில் அகப்படாமல் வேலை பார்க்கத்தான் போகிறாள் என்று நிச்சயமாய் எண்ணினேன்.

உமாவின் கல்யாணம் நடந்தபோது பத்மஜா பட்டப் பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்தாள். ஒரு வருஷம்தான் பாக்கியிருந்தது. "படிப்பு முடிந்தவுடன் நேரடியாய் ஒரு வேலைக்குத்தான் போகப் போகிறேன், அப்பா. உமா அக்கா கல்யாணம் செய்துகொண்டு மணவாழ்க்கை நடத்தப் போகிறாள். இன்னொரு வாழ்க்கையும் இருக்கத்தான் செய்கிறது என்பதை நான் காட்டுகிறேனே!" என்றாள்.

"பட்டம் வாங்கி மணவாழ்க்கை நடத்துவது மேலா, உத்தியோக வாழ்க்கை நடத்துவது மேலா என்பதைப் பார்க்கலாம்'' என்று அவள் சவால் விட்டுக் கொண்டிருந்தாள். என் மனத்தை அறிந்து கொண்டுதான் அப்படிச் சொன்னாளா, இல்லாவிடில் இயல்பாக அவள் திட்டமே அப்படித்தான் இருந்ததா, எனக்குத் தெரியாது. ஆனால் அவளுடைய படிப்பு வேகத்தைக் கொண்டு பார்த்தபோது அது இயல்பான விருப்பம் என்றே எனக்குப் பட்டது. படிப்பில் அவள் பிரகாசித்த விதம், அவளுடைய வருங்காலம் பற்றிப் பலவிதமான கனவுகளை என் மனத்தில் புகுத்திக் கொண்டிருந்தது.

உமா கணவன் வீட்டுக்குச் சென்று தனி வாழ்க்கை நடத்த ஆரம்பித்து ஆறேழு மாதம் ஆகியிருந்தது. பத்மஜா பட்டப் பரீட்சை எழுதி முடித்துவிட்ட மறுநாள்... நன்றாய் ஞாபகம் இருக்கிறது.

அன்று ஞாயிற்றுக்கிழமை. பிற்பகல் வேளை. நான் மாடி அறையில் உட்கார்ந்து புத்தகம் ஒன்றைப் புரட்டிக் கொண்டிருந்தேன். சுசீலா கீழே ஏதோ வேலையாயிருந்தாள். பத்மஜா சாப்பாட்டுக்கப்புறம் வெளியே எங்கேயோ போயிருந்தாள். பரீட்சையெல்லாம் முடிந்ததும், ஒருநாள் முழுதும் தூங்கி, அதுவரை கண் விழித்ததற்கு ஈடு செய்து கொள்ளாமல் பரீட்சை முடித்துவிட்ட உற்சாகத்தைத் தோழிகளுடன் பகிர்ந்துகொள்ள ஓடியிருந்தாள். என் கண்கள் வெறுமனே புத்தகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனவே யன்றி மனம் எப்படி எப்படியோ சுழன்று சுழன்று திரும்பத் திரும்பப் பத்மஜாவைப் பற்றிய எண்ணங்களிலேயே சிக்கிக் கொண்டது. பட்டப் பரீட்சையை அவள் நான் எதிர்பார்த்திருந்த அளவுக்குப் பிரமாதமாக எழுதவில்லை. அவள் என்னிடம் சொல்லித்தான் எனக்கு இது தெரியும். "இப்படிச் செய்துவிட்டாயே, பத்மஜா!'' என்று நான் சொன்னதற்கு, அவள் அலுப்புடன், "என்னப்பா, படிப்பும், பட்டமும்தானா முக்கியம்?" என்று பதில் கொடுத்தது எனக்குப் பெரிதும் ஏமாற்றமாயிருந்தது. என் நெடுநாளைய திட்டம் குலைந்துவிடும் போலிருந்தது.

மாடியறை ஜன்னல் வழியே வீதியைப் பார்த்தேன், பத்மஜா ஒய்யார நடைபோட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்தாள். நாட்டியம் கற்றுக் கொண்டவளல்லவா? நடையில் ஓர் அபூர்வ நளினம் இருந்தது. உடலின் ஒவ்வோர் அசைவிலும் கட்டுக்கடங்காத சக்தி வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. உலகத்தையே அலட்சியம் செய்யும் ஒருவித மிடுக்கும், திமிரும் அவளுடைய பார்வையிலும், செய்கையிலும் பொதிந்திருப்பது போல் எனக்குத் தோன்றியது. அத்தனை சௌந்தரியத்துக்கும் நடுவே அந்த மூக்கு ஒரு பெரிய களங்கமாக என் கண்களுக்குப் பட்டது. அழகான பொம்மை ஒன்றைச் செய்து, வேண்டுமென்றே அந்த அற்புதமான பொம்மையில் ஒரு சிதைவையும் புகுத்திவிட்ட மாதிரி இருந்தது.

மேலே வந்தவள் என்னிடம் ஒன்றும் பேசவில்லை. மொட்டை மாடிப் பக்கம் போவதாகப் போக்குக் காட்டிவிட்டு மறுபடியும் அறைக்குள்ளேயே வந்தாள். மேஜைமேல் ஏற்கெனவே ஒழுங்காக அடுக்கி வைத்திருந்த புத்தகங்களையும், காகிதங்களையும் ஒருதடவை சீர்குலைத்துவிட்டு மறுபடியும் ஒன்றாக அடுக்கி வைக்க ஆரம்பித்தாள். வியப்புடன் நிமிர்ந்து பார்த்தேன்.

அர்த்தமில்லாத காரியம் ஒன்றில் ஈடுபட்டிருந்த அவளிடம் ஒருவிதப் பரபரப்பு தென்பட்டது. அவளுடைய உடம்பு சற்றே நடுங்கிக் கொண்டிருந்ததையும் கண்டேன். பத்மஜாவுக்கு என்ன வந்துவிட்டது? பத்மஜா எனக்கு மிக அருகில் வந்து விட்டவள், திடீரென்று மனசை மாற்றிக்கொண்டு திரும்பிச் சென்று மறுபடியும் ஜன்னல் அருகில் நின்றவாறு வெளியே பார்க்க ஆரம்பித்தாள். நான் தலை நிமிர்ந்தேன். மனம் திக்கென்றது. பத்மஜாவின் உடல் வெடவெடவென்று தெளிவாக நடுங்கிக் கொண்டிருந்தது. உற்றுப் பார்த்தேன். வேறு பக்கம் திரும்பியிருந்த போதிலும், அவள் அழுது கொண்டிருந்தாள் என்பது தெரிந்தது.

ஐயோ, இதென்ன போராட்டம்! அதற்குமேல் எனக்குப் பொறுக்கவில்லை. எழுந்து நின்று "பத்மஜா!" என்று கூப்பிட வாயெடுத்தேன். அந்த வார்த்தை என் வாயிலிருந்து வெளி வந்துவிட்டதா என்பதுகூடத் தெரியாது. பத்மஜா அதற்குள் "அப்பா!" என்று கதறிக்கொண்டு ஓடிவந்து என் கைகள் இரண்டையும் பிடித்து இழுத்து, அவற்றில் முகம் புதைத்துக் கொண்டு 'ஓ'வென்று அழுதாள். எனக்கு ஒன்றுமே புரியாவிட்டாலும் சற்று நேரம் அவளை அப்படியே அழும்படி விட்டேன். பரீட்சை சரியாக எழுதாதது அவள் மனத்தை இவ்வளவு பாதிக்க வேண்டுமா? "வாழ்க்கையில் படிப்பும், பட்டமும் தானா முக்கியம்?" என்று அவளே சொல்லியிருந்தாளே! இப்போது என்ன ஆயிற்று?

"பத்மஜாக் கண்ணு, ஏன் அழுகிறாய்? சொல்ல மாட்டாயா?" என்று பரிதாபமாகத் கேட்டேன், கடைசியில்.

பத்மஜா தலை நிமிர்ந்தாள். உணர்ச்சியை அடக்கி வைத்ததால் முகமெல்லாம் கன்றிப் போயிருந்தது; அந்தக் கொஞ்சநேர அழுகையால் அவளுடைய கண்கள் பொங்கினாற் போலிருந்தன. (இத்தனைக்கு நடுவிலும் அந்த மூக்கு விசித்திரமாகத் தோற்றம் கொடுத்தது.) ''அப்பா! நீங்கள்தான் என்னைக் காப்பாற்ற வேண்டும்" என்று சொல்லிக் கொண்டே அவள் என்னுடைய காலில் விழ வந்தாள். அப்படியே அவளைப் பிடித்து நிறுத்தினேன்.

"பத்மஜா! என்னென்னமோ பேசுகிறாய். என்னென்னமோ செய்கிறாய். உன் மனத்தில் இருப்பது என்ன? சொல்ல மாட்டாயா?'' என்று கேட்டேன்.

சொன்னாள்.... அவள் சொன்ன ஒவ்வொரு தகவலும் என்னைத் திகைக்க வைத்தது. என் சொந்தப் பெண்ணைப் பற்றி எனக்குத் தெரிந்தது இவ்வளவுதானா? எல்லாம் தெரிந்து, பொறுப்பு உணர்ந்தவன் போல் அவளுடைய வருங்காலத்துக்குத் தானாக ஒரு திட்டம் போட்டு வைத்திருந்தேனே, எத்தகைய முட்டாள் நான்! என் திட்டம் கிடக்கிறது!... அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் என் காதில் அமுதமாய் வந்து பாய்ந்தது. விம்மலுக்கு நடுவே அவள் முழு விவரங்களையும் சொல்லி முடித்தவுடன் கட்டுக்கடங்காத மகிழ்ச்சியுடன் துள்ளி எழுந்தேன். "பத்மஜாக்குட்டி! அவன் யாரென்று சொல்லு: நான் இப்போதே போய்ப் பார்க்கிறேன்" என்று சொன்னேன். பத்மஜா இந்தத் தடவை ஆனந்த மிகுதியால் என் காலைத் திடீரென்று கட்டிக்கொண்டு விட்டாள். "உங்களுக்கு அந்தச் சிரமம் வைப்பதற்கு அவர் தயாராயில்லை அப்பா. தெருத் திருப்பத்தில்தான் நிற்கிறார். நான் அழைத்து வருகிறேன்" என்று சொல்லிவிட்டு, என் பதிலைக்கூட எதிர்பாராமல் கதவைத் திறந்து கொண்டு கீழே ஓடினாள்.

இனியும் நின்று கொண்டிருந்தால் திகைப்பு என்னைக் கீழே சாய்த்து விடும்போலிருந்தது. அப்படியே உட்கார்ந்தேன். பத்மஜாவின் வார்த்தைகள் என் காதில் இன்னமும் ஒலித்துக் கொண்டிருந்தன... திடீரென்று சுசீலா என் எதிரே வந்து நின்றாள்.

"என்ன நடந்தது இங்கே? விம்மலும், அலறலும் கேட்டன. திடீரென்று 'சின்னக்குட்டி' வெளியே ஓடுகிறாளே!'' என்றாள்.

பத்மஜா சொன்னதையெல்லாம் சுசீலாவிடம் கூறினேன்; முடிவில் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பெருக, "யார் அது?'' என்று கேட்டாள் சுசீலா.

''அது நம் இருவருக்கும் சேர்ந்தாற் போலத்தான் தெரிய வேண்டும். நீ இங்கேயே இரு, போய்விடாதே" என்றேன்.

'தடதட' வென்று நாலு பாதங்கள் மாடிப்படி ஏறிவரும் சத்தம் கேட்டது. காலடிச் சத்தம் நடுவில் நின்று போயிற்று. திடீரென்று மறுபடியும் இரண்டு பாதங்கள் மட்டும் ஏறி வந்தன. முதலில் பத்மஜா உள்ளே வந்து பின்புறம் திரும்பிப் பார்த்து, "தயக்கம் வேண்டாம், தாராளமாக வரலாம்" என்று சொன்னாள். இரண்டு விநாடி நிசப்தமாயிருந்தது. அந்த இரண்டு விநாடி நேரத்துக்கும் காலவரம்பே கிடையாது; பல வருஷங்கள் சேர்ந்தாற்போல் காத்துக் கிடப்பது போல்தோன்றியது. மறுபடியும் 'தடதடதட' வென்று மூன்று தடவைகள் சத்தம் கேட்டது. மூன்றே எட்டில் ஸ்ரீதரன் ஏறிவந்து பத்மஜாவின் அருகில் நின்றவாறு எங்கள் இருவரையும் பார்த்து வணங்கினான்.

ஸ்ரீதரன்! என் உயிர்த்தோழன் ராமமூர்த்தியின் மகன் ஸ்ரீதரனா பத்மஜாவின் காதலன்? ஊர் இளைஞர்களுக்கே ஆதர்சமாக விளங்கிய ஸ்ரீதரன் என்னும் அழகனா பத்மஜாவின் காதலன்? மேல் படிப்புக்காக அவன் அமெரிக்கா செல்லப் போவதாகக் கேள்விப்பட்டுச் சமீபத்தில் நான் அவனுக்கு வாழ்த்துக் கூறியபோதும் இதைப்பற்றி அவன் ஒரு வார்த்தை

கூடச் சொல்லவில்லையே...!

கல்யாணம் முடிந்தது. நான் பத்மஜாவிடம் கேட்டேன்: "என்ன பத்மஜா! பட்டதாரிப் பெண் ஒருத்தி மணவாழ்க்கை நடத்துவது மேலா? உத்தியோக வாழ்க்கை நடத்துவது மேலா?"

பத்மஜா, பாவம்! அதற்குப் பதில் சொல்லக்கூட அவளுக்கு நேரமில்லை. ஸ்ரீதரனுடன் தானும் அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் செல்வதற்கு ஆயத்தம் செய்வதில் முனைந்திருந்தாள். "என்னுடன் பத்மஜாவும் வந்தால்தான் எனக்குப் படிப்பு ஓடும்" என்று ஸ்ரீதரன் உறுதியாய்ச் சொல்லி விட்டான். பத்மஜாவின் மூக்கு, கல்யாணத்துக்கு அப்புறம் மேலும் விசித்திரமாகி விட்டதாக என் கண்களுக்குப் பட்டது.

ஸ்ரீதரனும், பத்மஜாவும் அமெரிக்கா போய்ச் சேர்ந்த ஒரு வாரத்துக்கெல்லாம் ஒரு கவர் வந்தது; இரண்டு பேரும் ஆளுக்கொரு கடிதம் எழுதி வைத்திருந்தார்கள். நாங்கள் பெற்றோரல்லவா? முதலில் பத்மஜாவின் கடிதத்தைப் படித்துப் பார்த்தோம். அது எவ்வளவு தவறான காரியம்! பத்மஜாவின் கடிதத்தைப் படிக்கும் நேரத்துக்கு ஸ்ரீதரனின் கடிதத்தைக் காக்கப் போட்டது எவ்வளவு பெரிய தவறு!

என் வாழ்க்கையில் எனக்கேற்பட்ட மிகப் பெரிய திகைப்புக்குக் காரணமான சில வார்த்தைகள் ஸ்ரீதரனின் கடிதத்தில் இருந்தன.

... மாமா! பத்மஜா எல்லா அம்சங்களிலுமே ஒரு பெரிய பொக்கிஷம்தான். ஆனால் அவளிடம் எனக்கு மிக அதிகமாய்ப் பிடித்த அம்சம் ஒன்று உண்டென்றால், அது அவளுடைய அருமையான மூக்குத்தான். என் காதலுக்கு அடிப்படை அதுதான். இந்த மாதிரி கவர்ச்சிகரமான மூக்கு வேறு யாருக்குமே கிடையாது என்று சொல்லுவேன். அதுவும், கவிந்தாற்போல் வந்துவிட்டு, நுனியில் இலேசாக மேலே தூக்கியிருக்கிறதே..."

என் மூக்கை அறுத்து விட்டானே, போக்கிரிப் பயல்!... ஹும், எனக்கும், அவனுக்கும் இருபத்தைந்து வயது வித்தியாசம்தான்; இந்தச் சில வருஷங்களுக்குள் மனித மூக்கைப் பற்றின கருத்து இவ்வளவு மாறி விட்டதா? வேடிக்கைதான்!"

பூர்ணம் விஸ்வநாதன்

© TamilOnline.com