கலாஞ்சலி இந்திய நடனப் பள்ளி: 50 ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம்
கலிஃபோர்னியாவில் உள்ள கலாஞ்சலி இந்திய நடனப் பள்ளியின் நிறுவனர்-இயக்குனர்களான கேதரின் குஞ்ஞிராமன் மற்றும் அவருடைய கணவர் திரு. குஞ்ஞிராமன் 1975ஆம் ஆண்டு இந்த நடனப் பள்ளியைத் தொடங்கினர். (அமரர்) திரு. குஞ்ஞிராமன் பிரபல கலாக்ஷேத்ராவில் கதக்களி மற்றும் பரதநாட்டியம் பயிற்றுவிக்கும் கலைஞராக இருந்தார். கலாஞ்சலி இந்திய நடனப் பள்ளி தொடங்கி ஐம்பது ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், இங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர்.

பொன்விழாவைக் கொண்டாட்டங்கள் ஜூன் 22ஆம் தேதி கலிஃபோர்னியாவில் உள்ள சான்ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் நடைபெற்றது. இதில் இசைக் கலைஞர்கள் பி. விஜீஷ் (பாடல்), பாலக்காடு விஸ்வேஷ் சாமிநாதன் (வயலின்), கே.பி. ரமேஷ் பாபு (மிருதங்கம்), அகில் அனில்குமார் (புல்லாங்குழல்), கலாக்ஷேத்ரா கே.பி. எசோதா (நட்டுவாங்கம்) ஆகியோர் பங்கு பெற்று விழாவைச் சிறப்பித்தனர். பாரம்பரிய நடனத்துடன் இந்திய கலாச்சாரத்தை கௌரவிக்கும் வகையில் பள்ளியில் பயிலும் அனைவரும் இவ்விழாவில் பங்கேற்றனர். திருமதி கேதரின் குஞ்ஞிராமன் கலாக்ஷேத்ராவில் பரதம் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை பரத கலாஞ்சலி நடனப்பள்ளி நிறுவனர் திரு. தனஞ்ஜெயன் அவர்கள் கேதரின் குஞ்ஞிராமனுக்கு நாட்டிய ஆச்சாரியராக விளங்கியவர். கலை ஆர்வமிக்க மக்கள் குடும்பத்துடன் திரண்டு வந்து விழாவைக் கண்டுகளித்தனர்.

செய்திக்குறிப்பில் இருந்து

© TamilOnline.com