தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம் சார்பில், கவிஞர், எழுத்தாளர், ஆய்வியல் அறிஞர் பெரியசாமித்தூரன் அவர்களின் நினைவாக, ஆண்டுதோறும் தமிழ்விக்கி தூரன் விருது வழங்கப்படுகிறது. தமிழ் கலைக்களஞ்சியத்தை உருவாக்கிய மேதையான பெரியசாமித்தூரனின் பங்களிப்பைப் போற்றும் வகையில் இவ்விருது உருவாக்கப்பட்டுள்ளது. பண்பாடு, இலக்கியம் ஆகிய தளங்களில் ஒட்டுமொத்த பங்களிப்புகளைச் செய்தவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. விருது, ரூபாய் இரண்டு லட்சமும், சிற்பமும் அடங்கியது.
2022ல் இவ்விருது ஆய்வாளர் கரசூர் பத்மபாரதிக்கு வழங்கப்பட்டது. 2023ம் ஆண்டுக்கான விருது பேராசியர், ஆய்வாளர், முனைவர் மு. இளங்கோவனுக்கு வழங்கப்பட்டது. 2024ம் ஆண்டுக்கான விருதை பேராசியர், ஆய்வாளர், முனைவர் மோ.கோ. கோவைமணி பெற்றார். 2025ம் ஆண்டுக்கான விருது ஆய்வாளர், முனைவர் வெ. வேதாசலம் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
வெ. வேதாசலம் மதுரையில் பிறந்தவர். தொல்லியல் துறையில் முதுநிலை கல்வெட்டு ஆய்வாளராகப் பல ஆண்டுகள் பணியாற்றியவர். கீழடி முதல்கட்ட அகழாய்வில் பங்கேற்றவர். தொடர்ந்து பல அகழ்வாய்வுகளில் பங்களித்தவர். அரிய தொல்லியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர். மதுரையைச் சுற்றியுள்ள சமணக் குன்றுகளை ஆய்வு செய்து 'எண்பெருங்குன்றம்' என்ற நூலை எழுயுள்ளார்.
ஆகஸ்ட் 15, 16 அன்று, ஈரோட்டில் நடக்க இருக்கும் தூரன் விருது விழாவில் இவ்விருது முனைவர் வெ. வேதாசலம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
ஆய்வாளர் வெ. வேதாசலத்திற்குத் தென்றலின் நல்வாழ்த்துக்கள். |