சாகித்ய அகாதமி யுவபுரஸ்கார் விருது - 2025
இந்தியாவின் பன்மொழிப் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில், இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில், ஒவ்வோர் ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பாளிகளுக்கு தேசிய அளவிலான விருதுகளை வழங்கிக் கௌரவித்து வருகிறது சாகித்ய அகாதமி நிறுவனம். 35க்கு வயதுக்குட்பட்ட இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் யுவபுரஸ்கார் விருதை வழங்கி வருகிறது. கடந்த ஆண்டுகளில் இவ்விருதினை ம. தவசி, மலர்வதி, அபிலாஷ் சந்திரன், கதிர்பாரதி, வீரபாண்டியன், லக்ஷ்மி சரவணக்குமார், மனுஷி, சுனீல் கிருஷ்ணன், சபரிநாதன், ஷக்தி, கார்த்திக் பாலசுப்ரமணியன், ப. காளிமுத்து, ராம்தங்கம், லோகேஷ் ரகுராமன் உள்ளிட்டோர் பெற்றுள்ளனர்.

அந்த வகையில் 2025ம் ஆண்டுக்கான யுவபுரஸ்கார் விருது பெறுகிறார், 27 வயதான எழுத்தாளர் லக்ஷ்மி ஹர். இவர் எழுதிய 'கூத்தொன்று கூடிற்று' சிறுகதைத் தொகுப்பு விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனை யாவரும் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. பேராசிரியர் பி. மதிவாணன், ஆர். குருநாதன், எஸ். சண்முகம் ஆகியோர் அடங்கிய நடுவர் குழு இப்படைப்பை விருதுக்காகத் தேர்ந்தெடுத்துள்ளது.

லட்சுமி ஹர் மதுரை மாவட்டத்திலுள்ள கீழச்செம்பட்டியில் பிறந்தவர். பொறியியலில் இளங்கலை பட்டம் பெற்றவர். சென்னை BOFTA-வில் சினிமா தொழில்நுட்பத்தில் பட்டயம் பெற்றார். திரைப்படத் துறையில் பணியாற்றி வருகிறார். முதல் சிறுகதைத் தொகுப்பு 'ஸெல்மா சாண்டாவின் அலமாரிப் பூச்சிகள் & பிற கதைகள்' யாவரும் பதிப்பகத்தின் மூலம் வெளிவந்தது. தொடர்ந்து பல சிறுகதைகள் யாவரும், கணையாழி, காலச்சுவடு, கனலி, வாசகசாலை, பதாகை, உயிர் எழுத்து, உயிர்மை ஆகிய இணைய இதழ்களில் வெளியாகின. 'கிளாஸிக் டச்'; 'டார்லிங் எனப் பெயர்சூட்டப்பட்ட சித்தாந்தம்' ஆகியன இவரது பிற சிறுகதைத் தொகுப்புகள்

யுவபுரஸ்கார் விருது, செப்புப் பட்டயமும் ₹50000 பரிசுத் தொகையும் அடங்கியது. விருது நிகழ்வு டெல்லியில் இவ்வாண்டு இறுதிக்குள் நடைபெறும்.

லக்ஷ்மி ஹர் அவர்களைத் தென்றல் வாழ்த்துகிறது!

© TamilOnline.com