புத்திசாலிக் கிழவி
ஒரு முதிய பெண்மணிக்கு இரண்டு பேத்திகள் இருந்தனர். ஒருத்தி கோபக்காரி, மற்றொருத்தி அடக்கமானவள். திருமணமாகி வீட்டைவிட்டுப் புறப்படுமுன் அவர்கள் அவளது பாதங்களைத் தொட்டு வணங்கினர். கோபக்காரியை அவள், "உன் வீட்டு வாசலில் உள்ள தோரணங்களும், மங்கலமான ரங்கோலிக் கோலங்களும் எப்போதும் புதியனவாக, காலடி படாமல், அழியாமல் இருக்கட்டும். உன் பணப்பை செலவு இல்லாமல் எப்போதும் நிறைந்திருக்கட்டும்" என்று ஆசீர்வதித்தாள். அவளுக்குக் குழந்தை பிறக்கவேண்டாம் எனச் சபிப்பது கிழவியின் நோக்கம்.

நல்லவளைப் பார்த்து, "உன் வீட்டு வாசல் அசுத்தமாயிருக்கட்டும், உன் பணப்பை சீக்கிரம் காலியாகட்டும்" என்று ஆசீர்வதித்தாள். அதாவது, அவளுக்குப் பல மகிழ்ச்சியான, கூக்குரலிடும் குழந்தைகள் பிறக்கட்டும் என்பது உட்பொருள். திருமணமான பெண்களுக்குப் பொதுவாக ஒரு பாட்டி கொடுக்கும் ஆசீர்வாதங்கள் இவை. மேலோட்டமாகப் பார்த்தால் ஒன்று சாபம் போலவும், மற்றது ஆசீர்வாதம் போலவும் தோன்றும். ஆனால், உள் அர்த்தம் வேறு. இந்தப் பாட்டி கேட்காமலேயே ஆசீர்வதித்தாள்.

அடக்கமும் உண்மையும் உள்ள மனிதன் தனது நற்பண்புகளில் உறுதியாக இருந்தால், பகவானின் கிருபையினால் தடையின்றி ஆசீர்வாதங்களைப் பெற முடியும்.

பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா

நன்றி: சனாதன சாரதி, ஜனவரி 2025

© TamilOnline.com