விதியின் பிழை
"ஹனி, இன்னிக்கு பாப்பாவை நீதான் டே கேர்ல விட்டுட்டு ஆஃபீஸ் போகணும் நினைவிருக்குதானே?" என்ற ஶ்ரீதரின் கேள்விக்கு "102" என்று சிரித்தவாறே பதில் சொன்னாள் சுஜாதா.

"அது என்ன 102?"

"நீ இப்ப சொன்னதையும் சேர்த்து 102 தடவை சொல்லியாச்சுன்னு அர்த்தம்."

"நான் சொன்னது இருக்கட்டும், உனக்கு நினைவிருக்கான்னு கேட்டேன்.."

"எல்லாம் நினைவிருக்கு. எதிர்த்தாப்பில் இருக்கிற பார்க்கிங் லாட்டில் நிறுத்திட்டு சிக்னல்ல கிராஸ் பண்ணி டேகேர்ல கொண்டு போய் விடணும். இதுக்கு முன்னாடியும் பலமுறை நான் கொண்டுபோய் விட்டிருக்கேன். ஆனாலும் இதை உனக்குச் சொல்லி ஆகணும். நீதான் தினமும் செய்யறே. நான் எப்பவாவது, அது உன் ஆஃபீஸ் எம்ப்ளாயிஸ்க்கான டே கேர். அதனால நீ கொண்டுபோய் விடற ஆனாலும் இவ்வளவு முறை சொல்றது அநியாயம். அவ என் பொண்ணும்கூட. கவலைப்படாம உன் மீட்டீங்க ஒழுங்கா அட்டென்ட் பண்ணு, உன் ராஜகுமாரிய ஒழுங்கா விட்டுட்டு மெசேஜ் பண்ணிடறேன்" என்று சொன்னவறே எழுந்து சென்றாள் சுஜாதா

மீட்டிங்கிற்குக் கிளம்புமுன் மகளிடமும் ஒருமுறை சென்ற ஶ்ரீதர், "பாப்பா, இன்னிக்கு அம்மா உன்னைக் கொண்டுபோய் விடறாங்க சரியா? சமத்தா ரோட் க்ராஸ் செய்யணும். படுத்தாம போகணும்" என்று சொல்லிவிட்டு, பிரிய மனமில்லாமல் சென்றான்.

காலையில் மகளைக் கொண்டுபோய் விட்டு அலுவலகம் செல்வது அவனுக்குப் பிடித்த வேலை. நியு ஜெர்சி சாலையில் போக்குவரத்துக்கு இடையில் செல்லும் அந்த இருபது நிமிடங்கள் அவனுக்கும் அவன் மகளுக்குமானது. காலையின் பரபரப்பு கவலை எதுவும் இல்லாமல் மகிழ்வாகப் பேசி விளையாடிக்கொண்டு செல்வார்கள்.

நான் இப்போது ஒரு அம்புக்குறி கண்டேன் என்று ஃபெடெக்ஸ் டிரக் போகும் போது சொன்னால், சரியாகக் கண்டுப்பிடிப்பாள். அல்லது கார்களின் லோகோ, வண்ணம் எனப் பலவும் அவர்கள் உரையாடலில் இருக்கும். உரையாடலின் ஊடே அவன் அவளுக்குச் சின்னச் சின்னக் கணக்குகள், கார்களைக் கண்டுப்பிடிப்பது எப்படி? என எல்லாவற்றையும் கூடச் சொல்லிக் கொடுப்பான். இன்றைக்குத் தலைமை அலுவலகத்தில் இருந்து மீட்டிங் அழைப்பு வந்திருப்பதால் சீக்கிரமாகவே செல்ல வேண்டியிருக்கிறது. டே கேர் 8 மணிக்குத்தான் ஆரம்பம்.

★★★★★


"என்ன சாண்டி எழுந்தாச்சா? ஆஃபீஸ் போகணுமா?"

"ஆமாம், இன்னிக்குக் கொஞ்சம் சீக்கிரம் 8 மணிக்கெல்லாம் போகணும். ரோ! போதைக்கு அடிமையான சின்னப் பசங்களுக்குச் சீர்திருத்தக் கல்விக்கு டொனேஷனுக்குப் பணம் கேட்டிருந்தேன். வங்கி மேலதிகாரிகளோட ஒரு ப்ரெக்ஃபாஸ்ட் மீட்டிங். நீயே உனக்கு ஏதானும் பண்ணிக்கோ. அப்புறம் சாயங்காலம் உன் சிஸ்டர் டின்னர் பார்ட்டிக்கு ரெஸ்டாரண்ட் கூட்டிட்டு போகறேன்னு சொல்லியிருக்கா. வரயா?"

"உனக்குச் சமூக சேவைக்காக ஒரு அவார்ட் கொடுத்தாலும் கொடுத்தாங்க, இன்னும் பார்ட்டிகள் ஓயவே இல்லை. ஆனாலும் நீயும் பதினைந்து வருஷங்களா இந்த கம்யுனிட்டிக்காக ஓயாம உழைச்சுக்கிட்டேதான் இருக்கே" என்று மனைவியைப் பெருமையாகவும் பெருமைகலந்த சலிப்புமாகப் பார்த்தார் ரோசலிண்ட்.

"நாமும் அப்படித்தானே அமெரிக்காவில் வாழ்க்கையை ஆரம்பிச்சோம் ரோ! ஒன்னும் தெரியாம. நமக்குச் சொல்லிக்கொடுக்க நிறையப் பேர் இருந்தாங்க. இப்ப ஆங்கிலமும் தெரியாம குடும்பமும் சரியா இல்லாம வரவங்களுக்கு நாம்தான் உதவி பண்ணணும். நம்ம குழந்தைகள் நல்லா இருக்காங்க. ஒண்ணும் இலவசமா செய்யலையே, அதுக்காக சாலரியும் வருதுதானே?" என்றாள் சாண்டி.

"அது சரி, எங்க டின்னர்? என் அக்கா ஏதாவது சொன்னாளா?"

"தெரியலை ரோ! டெக்ஸ்ட் பண்றேன்னு சொல்லியிருக்கா. பாவம் ரொம்ப நாளா கேட்டிட்டுருக்கா. கன்ஃபர்ம் பண்ணிட்டு சொல்றேன்" என்று சொல்லிவிட்டு வெளியே வந்தாள் சாண்டி என்ற அலெக்ஸ்சாண்ட்ரா. கிட்டத்தட்ட பதினைந்து வருஷங்களாக ஒரு சமூக நிறுவனத்துக்குத் தலைமைப் பொறுப்பேற்றுச் சீர்திருத்த பள்ளியில் இருக்கும் மாணவர்கள், வீடிலிகளாக இருக்கும் மாணவர்கள் போன்றோர் கல்விக்காக உதவி செய்கிறாள்.

காரை வெளியே எடுத்து அந்த இருபத்தைந்து மைல் சாலையில் மெல்லத் திரும்பினாள். போன் சப்தம் போட்டது. யாருமில்லா சாலையில் ஸ்டாப் நிறுத்தத்தில் மெல்ல நின்றதும் நிற்காமலும் வலது பக்கம் திரும்பியவாறே போனை எடுத்து யார் செய்தி அனுப்பியது எனப் பார்த்தாள்

"எந்த மாதிரி உணவகத்துக்கு போகலாம்?" என நாத்தனார்தான் மெசெஜ் போட்டிருந்தாள். இத்தாலியனா இல்லை மெக்சிகனா?" என்று கேட்டிருந்தாள்.

மெக்சிகன் என்பதற்காக 'மெக்' என ஆரம்பித்தபோது முன்னால் கார் நிற்பதைக் கடைசி நிமிடத்தில் கண்டு அவசரமாக பிரேக்கில் காலை வைக்க நினைத்துத் தவறாக ஆக்ஸிலரேட்டரில் வைக்க... பூம் என முன்னால் நின்றுகொண்டிருந்த காரில் இடித்து நின்றது அவளது கார்! ஏர்பேக் முகத்தில் இடிக்க அவசர அவசரமாக மெசெஜை முடிக்காமலேயே செல்ஃபோனைப் பைக்குள் போட்டாள் சாண்டி.

★★★★★


"அம்மா இது டெஸ்லா தான?"



"ஆமாம் பாப்பா! கவனமா வரியா?"

"குட்மார்னிங்!" சாலையைக் கடக்க உதவும் கார்ட்டுக்கு வணக்கம் சொல்லியவாறே மகளின் கையைப் பிடித்து மெல்ல நடந்தாள் சுஜாதா!

"என்ன பாப்பா! இன்னிக்கு அப்பா வரலியா?"

"இல்ல ஆண்ட்டி! அப்பாவுக்கு இன்னிக்கு மீட்டிங்! மாலைல கூட்டிட்டுப் போக வந்துடுவாங்க!" சொன்னபடியே அம்மாவின் கையைப் பிடித்துத் துள்ளாட்டாம் போட்டு நடந்தாள் நிவ்யா.

★★★★★


மீட்டிங் ரூம் கதவை அவசரம் எனச் சொல்லித் திறந்துகொண்டு உள்ளே வந்தான் சக அலுவலகரும் நண்பனுமான சேகர்.

"ஏய் ஶ்ரீதர்! செல்லை எடுக்கலையா? போலீஸ் உன்னைக் கூப்பிட்டுக்கிட்டே இருக்காங்களாம்? மெயின் லைனைப் பிடிச்சு ரிசப்பஷனிஸ்ட் என்னைக் கூப்பிட்டா!"

"என்னடா என்ன விஷயம்?" பதறி எழுந்தான் ஶ்ரீதர்.

செல்லை எடுத்துப் பார்த்தால் பல மிஸ்ட் அழைப்புகள்!

"காலைல ஒரு ஃபோர்டு மோதி சுஜாதாவுக்கும் நிவ்யாவுக்கும் சின்ன அடி. ஹாஸ்பிடல்ல இருக்காங்க. வா போகலாம்."

மருத்துவமனைக்குப் பறந்து வந்ததுபோல இருந்தது. சின்ன அடி என்று சொன்னானே! ஆனால் இதென்ன? இத்தனை கூட்டம்! போலீஸ்!

"டாக்டர் ஶ்ரீதர்! உங்களிடம் துயரச் செய்தியைச் சொல்வதற்கு எங்களை மன்னியுங்கள் இன்று காலையில் நடந்த விபத்தில், சாலையிலேயே உங்கள் மகள் இறந்துவிட்டாள். மனைவியை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை! அவர்கள்மீது தவறில்லை! ஃபோர்ட் நின்று கொண்டுதான் இருந்தது. ஆனால் பின்னால் வந்த காரின் ஓட்டுநர் கவனிக்காமல் பிரேக்கை அழுத்துவதற்கு பதிலாக ஆக்ஸிலரேட்டரை அழுத்தி விபத்தாகிவிட்டது. என்ன உதவி வேண்டுமானாலும் நாங்கள் செய்கிறோம்."

★★★★★


இரண்டு பேர் இறந்து போனதால், வாகனம் ஏற்றி இரட்டை நபர் கொலை வழக்காக சாண்டியின் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவளுடைய செல்போன், கார்கள் இரண்டுமே தடயங்களுக்காகப் பறிமுதல் செய்யப்பட்டன.

கவனச் சிதறலுக்கு செல்போன் அழைப்பு டெக்ஸ்ட் காரணமாக இருக்கலாமோ என்ற கோணத்தில் அரசுத்தரப்பு வழக்கறிஞர் தங்கள் சைபர் துறை துப்பறிவாளரை விட்டு விசாரிக்கச் சொன்னார். அவர் ஃபோன் சேவையகத்தில் வாரண்ட்டோடு தொடர்பு கொண்டார்.

வாகனம் ஓட்டும்போது விபத்து நேர்ந்த நேரம் டெக்ஸ்ட் செய்ய ஆரம்பித்து அழித்தது தெரிந்தது.

சாண்டியின் தரப்பில் வழக்கு ஆரம்பித்தது

நிறைய சாட்சிகள் கூண்டிலேறி சாண்டியின் சமூக சேவைகளைப் பட்டியலிட்டார்கள்.

எல்லாமே சரியாகத்தான் இருந்தது. ஶ்ரீதர்கூட மனமொடிந்து போயிருந்தான். எல்லாம் விதி அவரைத் தண்டித்து என்ன பலன்? வழக்குகளால் சுஜாதாவோ நிவ்யாவோ திரும்பி வரப்போகிறார்களா என்ற முடிவுக்கு வந்திருந்தான்.

ஜூரர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள்

★★★★★


அரசுத்தரப்பில் மறுபடி விசாரணை தொடர்ந்தது.

"சாண்டி நீங்கள் சம்பவம் நடந்த அன்று காலை உங்கள் உறவினருக்கு மெசெஜ் அனுப்பினீர்களா?"

"இல்லை!"

"இது உங்கள் ஃபோன்தானே? நன்றாகப் பார்த்துச் சொல்லுங்கள்!"

"ஆமாம்!"

"விபத்து நடந்த அன்று இதை உங்கள் காரில் இருந்து நாங்கள் கைப்பற்றினோம். ஆகையால் இது உங்களுடன்தான் இருந்திருக்கிறது. ஒப்புக்கொள்ளுகிறீர்களா?"

"ஆம்" என்றாள் சாண்டி

"இத்தாலியனா? மெக்சிகனா? என்று வந்த கேள்விக்கு மெக் என்று டைப் அடிக்க ஆரம்பித்தது நீங்கள்தானே?"

தயக்கத்துடன் மெல்ல "ஆம்" என்று முனகினாள் சாண்டி!

"மெக் என எழுத ஆரம்பித்து அழித்திருக்கிறீர்கள். நியுஜெர்சி சட்டப்படி டெக்ஸ்ட் செய்துகொண்டு கார் ஓட்டுவது குற்றமல்லவா? இதனால்தானே கவனக்குறைவு? முன்னால் நின்ற காரை நீங்கள் கவனிக்கவில்லை? குற்றத்தை ஒப்புக்கொண்டால் குறைந்த தண்டனை கிடைக்கலாம்." என்றார் அரசு வழக்கறிஞர்.

விசாரணை முடிந்து இரண்டு தரப்பு வழக்கறிஞர்களும் முடிவு விவாதத்தை எடுத்து வைத்தனர்!

"சாண்டி சமூக சேவகியாக இருக்கலாம், யுவர் ஹானர்! ஆனால் இங்கே இரண்டு உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கின்றன. ஒருவர் விஞ்ஞானியாக இந்தச் சமூகத்திற்கு உழைப்பவர். இன்னொருவர் சின்னக் குழந்தை. நாளை இந்தச் சமூகத்திற்கு மிகப்பெரிய அளவில் பங்களிக்க வல்லவர். சமூகத்திற்கு என்ன செய்தார்? செய்யப் போகிறார்? என்பதுகூட முக்கியம் இல்லை. அவர்கள் வாழ்க்கை தனிமனிதனாக ஶ்ரீதருக்கு முக்கியம்! அவர்கள் உயிரைப் பறிக்க திருமதி அலெக்ஸாண்ட்ரா ரோசலிண்டுக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டும். இது டெக்ஸ்ட் செய்தபடி கவனக்குறைவாகக் கார் ஓட்டும் பலருக்கும் பாடமாக இருக்கும்" என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் தனது இறுதிப் பேச்சை முடித்தார்.

"இது ஒரு சின்னத் தவறு! எதிர்பாராமல் அவர் ஆக்சிலரேட்டரை அழுத்தியதால் நடந்த தவறு. திருமதி அலெக்சாண்ட்ரா ரோசலிண்ட் சிறந்த சமூகப் பொறுப்பு மிக்கவர். சமூகத் தலைவியாக விருதுகள் பெற்றவர்! விளிம்புநிலை மாணவர்களுக்காகப் போராடுபவர். இது அவரின் முதல் குற்றம் எனவே அவரை மன்னித்து விட்டுவிடுங்கள்" சாண்டியின் வழக்கறிஞர் பரிந்துரைத்தார்.

ஜூரர்களுக்கு வழக்கின் சுருக்கத்தையும் முடிவுக்கு வருவதற்கான விதி முறைகளையும் அறிவுறுத்தி அனுப்பி வைத்தார் நீதிபதி.

நீண்ட நேரக் கலந்துரையாடலின் பின்னர் ஜூரர்கள் ஒரு முடிவுக்கு வந்ததும் மீண்டும் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

மயான அமைதி குடிகொண்டிருந்த அந்த நீதிமன்றத்தில் நீதிபதி ஜூரர்களைப் பார்த்து "முடிவுக்கு வந்துவிட்டீர்களா?" எனக் கேட்டார்!

"ஆம்." எனத் தலைமை ஜூரர் சொன்னார்.

"குற்றம் சாட்டப்பட்டுள்ள அலெக்ஸ்சாண்ட்ரா ரோசலிண்ட் முனைவர் சுஜாதா ஶ்ரீதரைக் கொலைசெய்த வழக்கில் குற்றவாளியா? நிரபராதியா?"

"குற்றவாளி."

"குற்றவாளி அலெக்சாண்ட்ரா ரோசலின்ட், சிறுமி நிவ்யா ஶ்ரீதரைக் கொலை செய்த வழக்கில் நிரபராதியா? குற்றவாளியா?" என்ற கேள்விக்கும் "குற்றவாளி" என்று பதில் சொல்லப்பட மெல்ல வெளியே நடந்தான் ஶ்ரீதர்!

பத்மா அரவிந்த்,
நியூ ஜெர்சி

© TamilOnline.com