முன்கதை: சிலிக்கான் மின்வில்லைத் தொழில்நுட்ப நிபுணராக இருந்தவர் சூர்யா. அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழுநேரத் துப்பறிவாளர் ஆகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் அவரது துப்பறியும் தொழிலில் மிகுந்த ஆர்வம் கொண்டு அவருக்கு உதவுகின்றனர். கிரண் வேகமான, தமாஷான இளைஞன்! தொழில் பங்கு வர்த்தகமானாலும், சூர்யாவுடனேயே நிறைய நேரம் செலவிடுகிறான். ஷாலினி ஸ்டான்ஃபோர்ட் மருத்துவ மனையில் மருத்துவராகவும், உயிரியல் மருத்துவ நுட்ப (bio-med tech) ஆராய்ச்சி நிபுணராகவும் பணி புரிபவள். மூவரும் சேர்ந்து துப்பறிந்து பலரின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்துள்ளனர்.
இதுவரை: ஷாலினிக்குப் பரிச்சயமான பெண்மணி மேரி தன் குவான்ட்டம் ஒளிக் கணினி (Quantum optical computer) தொழில்நுட்ப நிறுவனம் திடீரென ஒரு பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி, கிரண், சூர்யா மூவரும் கலிஃபோர்னியாவின் பெர்க்கலியில் உள்ள மேரியின் ஆராய்ச்சிக் கூடத்துக்கு விரைகின்றனர். மேரி குவான்ட்டம் கணினி எப்படி வேலை செய்கிறது, அதற்கான இடையூறுகள் என்னென்ன, அவற்றை தங்களுடைய தனிச்சிறப்பு நுட்பங்களால் எப்படி நிவர்த்தித்தனர் என்பதை விவரிக்கிறாள். குவான்ட்டம் கணினியின் குழப்பத்தை சூர்யா எப்படி நிவர்த்திக்கிறார் என்பதை தொடர்ந்து பார்ப்போம் வாருங்கள்!
★★★★★
குவான்ட்டம் கணினி எவ்வாறு தற்போதைய இரட்டையெண் (binary) கணித்துண்டுக் கணினிகளிலிருந்து வேறுபடுகிறது என்று விளக்குவதற்காக, அடிப்படைக் குவான்ட்டம் கணீனியின் மூன்று அடிப்படைக் கோட்பாடுகளை விளக்க ஆரம்பித்தாள். முதலாவதாக அடிப்படை அலகான க்யூபிட் 0 அல்லது 1 மட்டுமல்லாமல் இரண்டு எண்களையும் ஒரே சமயத்தில் மேல்பதிப்பின் (superposition) மூலம் வெவ்வேறு வாய்ப்பளவுடன் (probability) கொண்டிருக்க முடியும் என்பதை விளக்கினாள். அடுத்து அதைவிட அதிசயமான குவான்ட்டம் அதிபிணைப்பு (entanglement) பற்றி விளக்கிவிட்டுச் சரியான வாய்ப்பளவில் பலனளிக்கும் படியான குவான்ட்டம் வழிமுறைகள் உருவாக்கப் படுவதாகவும், தங்கள் குவான்ட்டம் வன்பொருள் (hardware) நுட்பம் குவான்ட்டம் உயர்வை (Quantum Superiority) அளிக்க உகந்தது என்றும் கூறினாள்.
குவான்ட்டம் கலையலால் (decoherence) உயர்வு இல்லாமற் போய் சிலமுறை குறைவேற்பட வாய்ப்புள்ளதாக மேரி கூற, அவர்களின் நுட்பத்தின் தனிச்சிறப்புக்களில் ஒன்று மிக தனித்துவமுள்ள அபூர்வ பூமிக் கலவையால் க்யூபிட்கள் உருவாக்குவதால் கலையல் குறையும் என்றும் கணினிக்குள்ளேயே வயலட் நிற லேஸர் கதிரை மிகக்குறைந்த சக்தியில் மிக அதிக அளவு வேகத்தில் தகவல் துளிகளை நகர்த்துவது மற்றொரு தனிச்சிறப்பு என்றும் கூறினாள். மற்ற குவான்ட்டம் கணினி முயற்சிகளால் குவான்ட்டம் உயர்வை (quantum superiority) அளிக்க இயலவில்லை என்றும் முன்கூறிய அந்த இரண்டு அதி உயர்வு நுட்பங்களோடு மேலும் பல சிறுசிறு முன்னேற்றங்களைச் சேர்த்ததால்தான் தங்கள் கணினி, சாதாரணக் கணினிகளை விடப் பன்மடங்கு குவான்ட்டம் உயர்வைத் தொடர்ந்து காட்டியதாகக் கூறினாள்.
அதைக் கேட்ட கிரண் குதூகலத்தில் எக்களித்தான். "ஊ ஊ வாவ்! அப்படின்னா உங்க நிறுவனம் உச்சத்துக்குப் போயிடுமே! எப்போ முதல் பொதுப்பங்கு வெளியீடு (IPO)! மறக்காம எங்க நிதி நிறுவனத்துக்கும் ஒரு சிறு பகுதியாவது ஒதுக்கணும், என்ன, சரியா மேரி? வாக்களியுங்க!" என்றான்.
ஷாலினி தலையில் அடித்துக் கொண்டாள். "எப்பவும் இந்தப் பேராசைதானா?! கொஞ்சம் அடக்கி வாசி. இங்க எதுக்கு வந்திருக்கோம்னு மறந்துட்டயா?" என்று கடிந்தாள்.
மேரியும் சோகப் புன்னகையுடன் ஆமோதித்தாள். "ஆமாம் கிரண்! உன் உற்சாகம் எனக்கு நல்லாத்தான் இருக்கு, ஆனா குதிரைக்கு முன்னாடி வண்டியைக் கட்டறயே! தற்போதைக்கு எங்க நிறுவனம் பெரிய பிரச்சனையில இருக்கு. இதுல IPO எப்படி?"
கிரண் ஒரு கையால் தலையில் அடித்துக் கொண்டான். "ஓ! ஸாரி மேரி. ஒரு உற்சாகப் பரபரப்புல மறந்துட்டேன்! ஆனா எங்க சூர்யா நிவர்த்திச்சிடுவாரே. அப்புறம் எங்களுக்கு நிச்சயமா IPO-வில ஒரு பகுதி கொடுத்தே தீரணும்" என்றான்.
மேரி கவலை மொத்தமாக விலகாவிட்டாலும், கிரணின் உற்சாகத்தால் தன்னைச் சற்று தேற்றிக் கொண்டு, "அப்படி நிவர்த்திச்சு வருங்காலத்துல நிறுவனம் IPO போனா நான் நிச்சயமா உங்க நிறுவனத்துக்கும் மற்ற நிதி நிறுவனங்களோடு ஒரு பகுதி ஒதுக்கறேன்! அது மட்டுமா, உங்க மூணு பேருக்கும் IPO விலையிலேயே பல நூறு பங்குகள் வாங்கி வித்து லாபம் பெறவும் வசதியளிக்கிறேன்" என்றாள்.
கிரண் துள்ளினான். "ஹையா! பிரமாதம்! என் நண்பர்களோட மென்பொருள் நிறுவனங்கள் IPO ஆனப்போ சில தடவை எனக்கு அந்த வாய்ப்பு கிடைச்சிருக்கு! சூர்யாவுக்குந்தான்! என்ன சூர்யா நிவர்த்திச்சுடலாமா?"
மேரி கவலை தீராமல், "ஆனா... நிவாரணம் கிடைக்கணுமே..." என்று இழுத்தாள். ஒரு விசும்பலும் அவளை அறியாமல் வெளிப்பட்டது.
ஷாலினி மேரியை மீண்டும் அணைத்து ஆதரவளித்தாள். "நிச்சயமா நிவாரணம் கிடைக்கும் மேரி! நீ வேணும்னா பாரு கூடிய சீக்கிரமே எல்லாம் சரியாயிடும்" என்றாள்.
மேரியும் தலையாட்டிவிட்டு கேட்டாள், "சரி, நம்பறேன். இப்போ அடுத்து என்ன?"
அதுவரை மௌனமாக யோசனையில் ஆழ்ந்து முன்னும் பின்னும் நடை போட்டுக் கொண்டிருந்த சூர்யா நின்று பதிலளித்தார். "உங்க தனிச்சிறப்பு நுட்பங்களையும் அவை எப்படி குவான்ட்டம் உயர்வளிக்குதுன்னும் விவரிச்சீங்க. ஆனா பிரச்சனை என்னன்னு சரியா இன்னும் விளக்கலை. மேலோட்டமாத்தான் தெரியுது. அதைப்பத்திக் கொஞ்சம் விவரமா சொல்லுங்க."
மேரி பலமாக மூச்சை இழுத்துத் தன்னைத் திடப்படுத்திக் கொண்டு விளக்கலானாள். "குவான்ட்டம் உயர்வு நல்லாத்தான் போயிட்டிருந்தது. ஆனா சமீப காலமா கொஞ்சம் தட்டுத் தடுமாறல் ஏற்பட்டது. அப்பப்போ குவான்ட்டம் கலையல் திடீர்னு அதிகரிச்சு உயர்வில்லாம போயிடும். அந்த வயலட் லேஸரும் அப்பப்போ மெல்லிய நேரான கதிரளிக்காம நிறைய சக்தியை இழுத்துக்கிட்டு தெளிவில்லாத கதிரை வெளிவிட்டது."
சூர்யா இடை மறித்துக் கேட்டார், "ஓ! இந்த மாதிரி பிரச்சனை இருக்குன்னே எனக்குத் தெரியாதே! ஷாலினிக்கு நீங்க அவசரச் செய்தியனுப்பினப்போ எதோ நுட்பத் திருட்டு நடந்திருக்கு, போலீஸ் விசாரணையில்லாம முடிக்கணும்னுதானே ஷாலினி சொன்னாள்!"
மேரி தலையாட்டிவிட்டு விளக்கமளித்தாள். "யெஸ், யெஸ்! திருட்டுப் போனது என்னவோ உண்மைதான். போலீஸ் விசாரணை வேண்டான்னும் நான் சொன்னதுலானதான் ஷாலினி உங்கள இங்க அழைச்சுகிட்டு வந்திருக்கா. ஆனா அது நேத்திக்கு நடந்த மோசடிதான். நான் சொன்ன நுட்பப் பிரச்சனைகள் அதுக்கு முன்னாடி ரெண்டு வாரமா நடந்தது."
கிரண் வாய் பிளந்தான்! "என்ன! ரெண்டு வாரமா நுட்பப் பிரச்சனை இருக்கா? அவ்வளவு நாள் என்ன செஞ்சுக்கிட்டிருந்தீங்க? முதல்லயே ஷாலினியைக் கேட்டிருந்தா இதற்குள்ள நிவாரணமே கிடைச்சிருக்குமே! இப்படி அநியாயமா IPO தள்ளிப் போச்சே!"
மேரி சோக முறுவலோடு விளக்கினாள். "அப்படியில்லை கிரண்! நுட்பப் பிரச்சனை எவ்வளவோ முன்னாடி வந்திருக்கு. அதையெல்லாம் சோதிச்சு சமாளிச்சுதானே இந்த அளவுக்கு முன்னேறியிருக்கு. ஆனா ரெண்டு வாரத்துக்கு முந்திவரை ரெண்டு மாசம் இடையூறு இல்லாம மென்பொருள் சோதனை செஞ்சுகிட்டிருந்தோம். நல்ல பலன்கள் கிடைச்சுது. ஆனா இப்ப ரெண்டு வாரமாத்தான் திடீர்னு குளறுபடி! அதனால எதோ நுட்ப ரீதியான பிர்ச்சனையா இருக்கக்கூடும்; இல்லன்னா, இந்த ஆராய்ச்சிக் கூடத்தில் சுறறுச்சூழல் எதோ மாறி அதுனால நுட்பம் பாதிக்கப் பட்டிருக்கலாம்னு நெனச்சோம். எங்க ஆராய்ச்சி நிபுணர்கள் அதைப்பத்திப் பலவிதமா சோதிச்சிக்கிட்டுத்தான் இருக்காங்க. ஆனா நேத்து திடீர்னு இந்தத் திருட்டு. அதுனால அதிர்ந்து போய்த்தான் ஷாலினிக்கு அவசரமா செய்தி அனுப்பினேன்."
மேரி தங்கள் பிரச்சனையை மேற்கொண்டு விவரித்தது என்ன, அதைப்பற்றி சூர்யா எவ்வாறு துப்பறிய ஆரம்பித்தார் என்பவற்றை அடுத்த பகுதியில் காண்போம்!
(தொடரும்)
கதிரவன் எழில்மன்னன் |